You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீதிபதியாகும் பழங்குடி பெண்: பிரசவித்த மறுநாளே தேர்வு எழுதி 23 வயதில் சாதித்த ஸ்ரீபதி
- எழுதியவர், ச. பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருவண்ணாமலையை அடுத்த ஜவ்வாதுமலையை சேர்ந்த 23 வயதான ஸ்ரீபதி என்ற பழங்குடி பெண் சிவில் நீதிமன்ற நீதிபதிக்கான தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
பிரசவித்த மறுநாள் தேர்வு, வறுமை என பல தடைகளை தகர்த்து அவர் சாதித்தது எப்படி?
தடைகளை தகர்த்து சாதனை!
தமிழகத்தில் சமீபகாலமாக பழங்குடி மக்கள் பல துறைகளில் சாதித்து தடம் பதித்துவருகின்றனர். அந்த வகையில் அடிப்படை வசதிகளற்ற பழங்குடி கிராமத்தில், வறுமையான குடும்பத்தில் பிறந்து, பல போராட்டங்களை கடந்து உரிமையியல் நீதிபதி தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளார் 23 வயதான ஸ்ரீபதி.
திருவண்ணாமலை அடுத்த ஜவ்வாது மலைப்பகுதியில் குறிஞ்சிக்குப்பம் கிராமத்தில் பிறந்து தற்போது புலியூர் பழங்குடி கிராமத்தில் ஸ்ரீபதி தனது கணவர் வெங்கட்ராமனுடன் வசித்து வருகிறார்.
சட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் முடித்துள்ள ஸ்ரீபதி (B.A. B.L), கடந்த ஆண்டு நடந்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வில் வென்று உரிமையியல் நீதிபதி பதவிக்கு தேர்வாகியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் ஸ்ரீபதியை பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது அரசு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை என்று கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன்,’’ என பதிவிட்டு ஸ்ரீபதியை பாராட்டியுள்ளார்.
‘மகிழ்ச்சியாக உள்ளது’ - ஸ்ரீபதி
தேர்வில் வென்றது தொடர்பாக பிபிசி தமிழ் ஸ்ரீபதியை தொடர்பு கொண்டது.
பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபதி, ‘‘தேர்வில் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார். நீதிபதி பொறுப்புக்கான முறையான உத்தரவு வரும் வரை இது குறித்து மேலும் பேச மறுத்துவிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற தேர்வை எழுத நேரில் வந்திருந்தார் ஸ்ரீபதி. தனது கிராமத்திலிருந்து 250 கி.மீ பயணம் செய்து வந்த ஸ்ரீபதி அப்போது, குழந்தை பிரசவம் செய்து இரண்டு நாட்களே ஆகியிருந்தன. மன உறுதியுடன் தேர்வு எழுதிய ஸ்ரீபதி அதில் தேர்ச்சிப் பெற்றார். அதன் பின் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நேர்முகத் தேர்வில் பங்கேற்று அதிலும் தேர்ச்சி பெற்றார்.
மலைக்கிராமத்தில் வாழ்க்கை, ஏழ்மை, பிரசவித்த அடுத்த நாளில் தேர்வு என, பல தடைகளைத் தகர்த்து ஸ்ரீபதி எப்படி சாதித்துள்ளார் என்பதை அந்தக் கிராமத்தினர் பிபிசி தமிழிடம் பகிர்ந்துள்ளனர்.
‘வறுமையிலும் வென்ற ஸ்ரீபதி’
ஸ்ரீபதியின் பெற்றோர் குறிஞ்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள். மலைப்பகுதியான ஏலகிரியில் சிறிது காலம் தங்கிவந்த போது அங்குள்ள ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்து தான் அவரது தாய் அவரை வளர்த்தார்.
ஸ்ரீபதி திருமணத்துக்கு பிறகு புலியூரில் வசித்து வருகிறார். புலியூர் ஊராட்சித் தலைவர் அன்பழகன் பிபிசி தமிழிடம் பேசிய போது,
“ ஏலகிரியில் தங்கி அங்குள்ள அரசுப்பள்ளியில் பிளஸ்2 முடித்து, தொலைதூர கல்வியாக இளங்கலை முடித்து, பின் சென்னையில் தான் இளங்கலை சட்டம் முடித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணமாகி மூன்று ஆண்டுகளாக புலியூரில் தன் கணவருடன் வசித்து வருவதாகவும், அவரது கணவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணி புரிவதாகவும் அன்பழகன் தெரிவித்தார்.
“ஸ்ரீபதி பழங்குடியின மக்களுக்கும், எங்கள் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்,’’ என்றார் மகிழ்ச்சியுடன்.
‘எங்கள் கிராமத்தை உலகறியச் செய்துள்ளார் ஸ்ரீபதி’
ஸ்ரீபதி போல முதல் தலைமுறை பட்டதாரிகள் சிலர் புலியூரில் உள்ளனர். அவர்கள் அனைவருமே தினசரி வாழ்க்கையை இன்னல்களுக்கு இடையில் நடத்திக் கொண்டு தான் படித்து முன்னேறி உள்ளனர்.
புலியூரை சேர்ந்த யுவன்ராஜ் தற்போது சென்னையில் பொறியாளராக பணிபுரிகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய யுவன்ராஜ், ‘ஸ்ரீபதி திருமணமாகி எங்கள் கிராமத்தில் தான் வசித்து வருகிறார். அவரது குடும்பம் பற்றி எனக்குத் தெரியும். தற்போது பெரிய சாதனையை செய்து, தமிழகத்தின் ஒரு மூலையில் இருக்கும் எங்கள் புலியூர் கிராமத்தையும், ஜவ்வாதுமலை பழங்குடியின மக்களையும் உலகறியச் செய்துள்ளார். இதை நினைத்து எங்கள் ஒட்டுமொத்த கிராமமும் பெருமைப்படுகிறது. வறுமைக்கு மத்தியில் பல தடைகளைத்தாண்டி தான் ஸ்ரீபதி பள்ளிப்படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார்,’’ என்கிறார் யுவன்ராஜ்.
மேல்நிலைப் பள்ளிக்கு 25 கி.மீ பயணம்
ஸ்ரீபதி உட்பட புலியூர் கிராமத்தில் படித்த, படிக்கும் அனைவரும் 25 கி.மீ பயணம் மேற்கொண்டே மேல்நிலைப்பள்ளிக்கு செல்கின்றனர். ‘‘புலியூர் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. எங்கள் பகுதி மாணவர்கள் புலியூர் கிராமத்தில் இருந்து 25 கிலோ மீட்டரில் உள்ள ஜமுனாமடத்தூர் சென்று தான் மேல்நிலைப்பள்ளி படிக்கின்றனர்.” என்கிறார் யுவன்ராஜ்.
மேல்நிலைப்பள்ளியை சென்றடைய இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. “இது புலியூரின் நிலை மட்டுமல்ல, ஜவ்வாது மலையில் உள்ள 11 ஊராட்சிகளுக்கும் இதேநிலை தான். ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார், நான் பொறியியல் படித்துள்ளேன், எங்கள் கிராமத்தில் இன்னும் சிலர் படித்துள்ளனர். பழங்குடி மக்களுக்கு அரசு உரிய அடிப்படை வசதி, வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தால் ஸ்ரீபதி போல் பலரும் சாதிப்பார்கள்,’’ என்றார் யுவன்ராஜ்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)