பேரழிவின் கோரப்பிடியில் லிபியா: "நிதி ஒதுக்கியும் அணைகளை சரிசெய்யாத அரசே பேரிடருக்கு காரணம்"
ஒரு நகரமே அழிந்து கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் இடிபாடுகள். வீதிகளில் சேறும் சகதியும் நிரம்பி வழிகிறது. மருத்துவமனைகளில் சடலங்கள் நிரம்பி வழிகின்றன. அங்குள்ள மக்களின் முகங்களில் கவலை தோய்ந்துள்ளது.
பேரழிவுக்குத் தள்ளப்பட்ட லிபியாவில் அழுகுரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
கிழக்கு லிபியாவில் ஏற்பட்ட சுனாமியை போன்ற பயங்கர வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18,000 முதல் 20,000 பேர் வரை இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடலில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்ட வண்ணம் உள்ளன. இந்தப் பெரும் வெள்ளத்தால் காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், REUTERS/Esam Omran Al-Fetori
நள்ளிரவில் டேர்னா அருகே அணை இடிந்து விழும் சத்தம் கேட்டதை செங்கல் தொழிற்சாலை தொழிலாளியான வாலி எடின் முகமது நினைவு கூர்ந்தார்.
“நாங்கள் அதிகாலை 3:00, 3:30 மணியளவில் எழுந்தோம். ஒரு பெரிய இடிச்சத்தம் கேட்டுத்தான் கண் விழித்தோம். டேர்னாவில் இருந்த அனைவருமே அதைக் கேட்டிருப்பார்கள்,” என்று அவர் ராட்டர்ஸ் முகமையிடம் கூறியுள்ளார்.
“வெள்ளம் நம்ப முடியாத அளவுக்குப் பெரிதாக இருந்தது. நாங்கள் வெளியே சென்றபோது அங்கு நகரமே இல்லை. தரைமட்டமாகி இருந்தது,” என்று அவர் கூறினார்.
சுனாமி போன்ற வெள்ளம் ஏற்பட்டது எப்படி?

பட மூலாதாரம், Maxar Technologies via Reuters
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (செப்டம்பர் 10) கிழக்கு லிபியாவில் உள்ள டேர்னா நகரை டேனியல் புயல் தாக்கியது. இரவில் கனமழை கொட்டியது.
லிபியாவின் கிழக்கு மலைப்பகுதியில் இருந்து நகருக்குள் ஓடும் வாதி டேர்னா ஆறு டேர்னா நகர் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது.
இது பெரும்பாலும் வறண்ட நிலையிலேயே காணப்படும். ஆனால், வரலாறு காணாத மழையால் இந்த ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் டேர்னா நகரத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் மேல் பகுதியில் அமைந்திருந்த அணை முதலில் உடைந்தது.
அதன் நீரை இரண்டாவது அணையை நோக்கித் திருப்பியதாக நீர் பொறியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். மேல் அணையின் கொள்ளளவு 53 மில்லியன் கன அடி. ஆனால், கீழ் அணை, 795 மில்லியன் கன அடி கொள்ளளவு உடையது.

பட மூலாதாரம், REUTERS/Ayman Al-Sahili
மேல் அணையில் இருந்து தண்ணீர் திருப்பி விடப்பட்டாலும் முறையான பராமரிப்பு இல்லாததால் இரு அணைகளும் உடைய நேர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு அணைகளும் உடைந்து தண்ணீர் கணிக்க முடியாத வேகத்தில் நகருக்குள் சுனாமியைப் போல் சீறிப் பாய்ந்தது.
சுனாமியை போன்ற அந்தப் பெரும் வெள்ளத்தில், நகரம் முழுவதுமாக கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது. அணை உடைந்ததை அறியாமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கானோர் நீரில் மூழ்கினர்.
பேரழிவின் கோரப்பிடியில் லிபியா
“நான் ஆறு பேரை இழந்துவிட்டேன். மூன்று பேரின் உடல்கள் கிடைத்துவிட்டன. மீதி 3 பேரைக் காணவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்,” என்று இந்தப் பேரழிவால் பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் பேசியபோது கூறினார்.
இது மிகப் பெரியதொரு பேரழிவு, உயிரிழந்த அனைவர் மீதும் இறைவன் இரக்கம் காட்டட்டும் என்று பாதிக்கப்பட்ட மக்களிடையே பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு மருத்துவ ஊழியர் வேதனையுடன் கூறினார்.

பட மூலாதாரம், REUTERS/Ayman Al-Sahili
“இந்தப் பேரழிவில் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. எங்கள் குடும்பம், எங்கள் சகோதரர்கள், உயிரிழப்புகள் மிக மிக அதிகம்,” என்று அவர் அழுதுகொண்டே கூறினார்.
டேர்னாவின் வீதிகளில் கட்டட இடிபாடுகளும் உடல்களும் மட்டுமே எஞ்சியுள்ளதாக, அப்பகுதியைச் சேர்ந்த புகைப்பட செய்தியாளரான தாஹா முஃப்தா பிபிசியிடம் தெரிவித்தார்.
பேரழிவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள லிபியாவுக்கு எகிப்து, துருக்கி உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தண்ணீர், உணவு என அத்தியாவசிய பொருட்களைத் தாண்டி உடல்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான பைகளைக் கேட்டு அழைப்பு வருவதாக தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், REUTERS/Ayman Al-Sahili
அத்தகைய பைகளை வைத்திருந்த அப்துல் அசீஸ் என்ற தன்னார்வலர், அந்தப் பைகள் 100 குடும்பங்களுக்கு உதவும் என்று தான் நினைப்பதாகக் கூறினார். “இதை நாங்கள் விநியோகித்து விடுவோம். எதற்குமே இல்லை என நாங்கள் கூறுவதில்லை. மக்கள் எதைக் கேட்டாலும் வழங்க முயல்கிறோம்,” என்று அவர் கூறுகிறார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பெரிய குழி தோண்டப்பட்டு அடக்கம் செய்யப்படுகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பால் நகரம் முழுக்கப் பரவியிருக்கும் சுகாதாரமற்ற நீரிலிருந்து தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
முன்பே எச்சரிக்கப்பட்டதா?
ஐ.நா.வின் சர்வதேச வானிலை அமைப்பு லிபியாவில் வானிலை முன்னறிவிப்பு சேவையை இயல்பாக இயக்கியிருந்தால், பல உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறுகிறது. அதேவேளையில், டேனியல் புயலின் வீரியம் குறித்த தகவல்களைத் தாங்கள் ஏற்கெனவே வழங்கியதாகவும் லிபிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

லிபியாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் இந்த வாரத் தொடக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. வெள்ளம் ஏற்படுவதற்கு 72 மணிநேரத்திற்கு முன்பு மழைப்பொழிவு குறித்து அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையின் அடிப்படையில் கிழக்கு பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்களை மீட்பதற்கே முன்னுரிமை
மேலும் பல உதவிப் பணியாளர்கள் டேர்னாவிற்கு வரத் தொடங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் தேடல் மற்றும் மீட்புப் பணியைவிட, இறந்தவர்களின் உடல்களை மீட்பதே அவர்களின் முன்னுரிமையாக இருக்கிறது.
இந்தப் பேரழிவில் பிழைத்தவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களை இன்னமும் தேடி வருகின்றனர். சடலங்கள் தொடர்ந்து கடலுக்குள் இருந்து கரையில் ஒதுங்கிக்கொண்டே இருக்கின்றன.

பட மூலாதாரம், Reuters
கடற்கரையானது ஆடைகள், பொம்மைகள் மற்றும் பொருட்களால் மூடப்பட்டுள்ளது. இவையனைத்தும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளில் இருந்து சிதறியவை.
ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டிருந்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டு அணைகளில் விரிசல் ஏற்பட்டால், அது உடைந்து விழப் போகிறது என்பது ஏன் மக்களுக்கு எச்சரிக்கப்படவில்லை என்பது குறித்துக் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
லிபியாவை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் பிபிசியிடம் பேசியபோது, நாட்டின் இந்தக் கொடிய பேரழிவு நடக்க “அனைத்துமே” காரணம் என்று கூறினார்.
லிபிய கல்வியாளரும் தக்யீர் கட்சியின் தலைவருமான குமா எல்-காமதி, “அரசின் தோல்வி, பலவீனமான வழிமுறைகள், பலவீனமான அரசுகள், பலவீனமான நிறுவனங்கள் என எல்லாமே இதற்குக் காரணம்,” என்று அவர் விமர்சித்தார்.
கடந்த 12 முதல் 13 ஆண்டுகளில், "அந்த அணைகளை சரிசெய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி செல்லவேண்டிய இடத்திற்குச் செல்லவில்லை," என்று எல்-காமதி கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













