பிர்ஸா முண்டா: 25 வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு 'சிம்ம சொப்பனமாக' விளங்கியவர்

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

(பிபிசி கடந்த வாரம் முதல் 'இளம் வயது, உயர்ந்த வாழ்க்கை' என்ற புதிய வாராந்திர தொடரைத் தொடங்கியுள்ளது. அதிக புகழ் சம்பாதித்த, ஆனால் 40 வயதிற்கு முன்பே இந்த உலகிலிருந்து விடைபெற்றவர்களின் கதை இதில் வழங்கப்படுகிறது. இதன் மூன்றாவது அத்தியாயத்தில் பிர்ஸா முண்டாவின் கதை உங்களுக்காக.)

அது 1897ஆம் ஆண்டு நவம்பர் மாதம். 2 ஆண்டுகள் 12 நாட்கள் சிறையில் இருந்த பிர்ஸா முண்டா விடுதலை செய்யப்பட்டார். அவரது இரு தோழர்களான டோங்கா முண்டா மற்றும் மஜியா முண்டாவும் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் மூவரும் சேர்ந்து சிறையின் பிரதான வாயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். சிறை குமாஸ்தா காவலர் விடுதலைப் பத்திரங்களுடன் ஒரு சிறிய துணி மூட்டையை அவர்களிடம் கொடுத்தார்.

பிர்ஸா தனது பழைய பொருட்களைப் பார்த்தார், அதில் தனது செருப்பு மற்றும் தலைப்பாகை இல்லாததைக் கண்டு சிறிது வருத்தப்பட்டார்.

பிர்ஸாவின் செருப்பு மற்றும் தலைப்பாகை எங்கே என்று டோங்காவும் மஜியாவும் கேட்டபோது, பிராமணர்கள், நிலப் பிரபுக்கள் மற்றும் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் மட்டுமே செருப்பு, தலைப்பாகை அணிய வேண்டும் என்பதால், உங்கள் செருப்பு, தலைப்பாகையை உங்களிடம் கொடுக்க வேண்டாம் என்று கமிஷனர் போர்ப்ஸ் உத்தரவிட்டதாக ஜெயிலர் பதிலளித்தார்.

பிர்ஸாவின் கூட்டாளிகள் எதையும் கூறுவதற்கு முன் பிர்ஸா சைகை செய்து அவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். பிர்ஸாவும் அவரது தோழர்களும் வெளியே வந்தபோது சிறை வாசலில் அவர்களை வரவேற்க 25 பேர் நின்று கொண்டிருந்தனர்.

பிர்ஸாவை பார்த்ததும், 'பிர்ஸா பகவான் கி ஜெய்' என்று கோஷம் எழுப்பினார்கள்.

நீங்கள் யாரும் என்னை கடவுள் என்று அழைக்க வேண்டாம் என்றும் இந்தப் போராட்டத்தில் நாம் அனைவரும் சமம் என்றும் பிர்ஸா கூறினார்.

அப்போது பிர்ஸாவின் தோழர் பர்மி, ”நாங்கள் உங்களுக்கு 'தர்தி ஆபா' என்ற மற்றொரு பெயரையும் வைத்துள்ளோம். இனி நாங்கள் உங்களை இந்தப் பெயரால்தான் அழைப்போம்,” என்று கூறினார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் மிகவும் மரியாதைக்குரிய நபர்

பிர்ஸா முண்டா மிக இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியைத் தொடங்கினார். 25 வயதுகூட ஆகாத அந்த இளம் வயதில் இந்தப் போராட்டத்தைத் தொடங்கினார். இவர் 1875 நவம்பர் 15ஆம் தேதி முண்டா பழங்குடி சமூகத்தில் பிறந்தார்.

புல்லாங்குழல் வாசிப்பதில் அவருக்கு விருப்பம் இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு கடும் சவால் விடுத்த பிர்ஸா சாதாரண உயரம் கொண்டவர், அவரது உயரம் 5 அடி 4 அங்குலம் மட்டுமே.

"அவரது கண்கள் புத்திசாலித்தனத்தில் பிரகாசித்தன. மேலும் அவரது நிறம் சாதாரண பழங்குடியினரைவிட கருமை குறைவாக இருந்தது. பிர்ஸா திருமணம் செய்ய விரும்பிய பெண், அவர் சிறைக்குச் சென்றபோது நேர்மையாக இல்லை. அதனால் பிர்ஸா அவளை விட்டு விலகிவிட்டார்," என்று ஜான் ஹாஃப்மேன் தனது 'என்சைக்ளோபீடியா மண்டாரிக்கா' புத்தகத்தில் எழுதினார்,

ஆரம்பத்தில் போஹோண்டா காடுகளில் அவர் ஆடுகளை மேய்த்து வந்தார். 1940ஆம் ஆண்டில், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு அருகிலுள்ள ராம்கரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பிரதான வாயிலுக்கு பிர்ஸா முண்டா கேட் என்று பெயரிடப்பட்டது.

ஜார்கண்ட் மாநிலம் 2000வது ஆண்டு அவரது பிறந்த ஆண்டு தினத்தில் நிறுவப்பட்டது.

கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொண்டார், பின்னர் அதையும் விட்டுவிட்டார்

பிர்ஸா முண்டாவின் ஆரம்பக் கல்வி ஜெய்பால் நாக்கின் மேற்பார்வையில் சால்காவில் தொடங்கியது. ஜெர்மன் மிஷன் பள்ளியில் சேர்வதற்காக பிர்ஸா முண்டா கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்.

ஆனால் ஆங்கிலேயர்கள் பழங்குடியினரை மதம் மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக உணர்ந்த அவர் கிறிஸ்துவத்தை விட்டு வெளியேறினார்.

ஒருமுறை அவருடைய கிறிஸ்தவ ஆசிரியர் வகுப்பில் முண்டாக்களை கேவலமான வார்த்தைகளால் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிர்ஸா தனது வகுப்பைப் புறக்கணித்தார். அதன் பிறகு அவர் மீண்டும் வகுப்பிற்குள் சேர்ந்துக் கொள்ளப்படவில்லை. மேலும் பள்ளியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.

பின்னர் அவர் கிறிஸ்தவத்தைக் கைவிட்டு தனது புதிய மதமான 'பிர்சய்த்' என்ற மதத்தைத் தொடங்கினார். விரைவில் முண்டா மற்றும் உராவ் பழங்குடியின மக்கள் இந்த மதத்தைப் பின்பற்ற ஆரம்பித்தனர். விரைவில், அவர் ஆங்கிலேயர்களின் மதமாற்றக் கொள்கையை ஒருவித சவாலாக எடுத்துக் கொண்டார்.

பிர்ஸா முண்டாவின் தலைக்கு 500 ரூபாய் சன்மானம்

பிர்ஸாவின் போராட்டம் சாய்பாஸாவில் தொடங்கியது. அங்கு அவர் 1886 முதல் 1890 வரை நான்கு ஆண்டுகள் கழித்தார். அங்கிருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஒரு பழங்குடியினர் இயக்கம் தொடங்கியது. இதன்போது அவர் ஒரு கோஷத்தை வெளியிட்டார்.

"அபுயா ராஜ் எதே ஜானா / மகாராணி ராஜ் துடு ஜானா" (இதன் பொருள் எங்கள் (முண்டா) ஆட்சி ஆரம்பித்துவிட்டது, மகாராணியின் ஆட்சி முடிந்துவிட்டது).

அரசுக்கு எந்த வரியும் செலுத்த வேண்டாம் என்று பிர்ஸா முண்டா தனது மக்களுக்குக் கட்டளையிட்டார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்களின் நிலக் கொள்கை பாரம்பரிய பழங்குடி நில அமைப்பைச் சிதைத்தது.

வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் அவர்கள் நிலத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். கூடவே பழங்குடியினர் காட்டின் வளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. முண்டா மக்கள் ஓர் இயக்கத்தைத் தொடங்கினர். அதற்கு அவர்கள் 'உல்குலான்' என்று பெயரிட்டனர்.

அப்போது பிர்ஸா முண்டா ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஆவேசமான உரைகளை ஆற்றி வந்தார். கே.எஸ்.சிங் தனது 'பிர்ஸா முண்டா அண்ட் ஹிஸ் மூவ்மெண்ட்' என்ற புத்தகத்தில், "பயப்படாதீர்கள் என் பேரரசு ஆரம்பித்துவிட்டது. அரசின் ஆட்சி முடிந்துவிட்டது. அவர்களின் துப்பாக்கிகள் மரமாக மாறும். யார் என் ராஜ்யத்திற்குத் தீங்கு விளைவிக்க நினைத்தாலும் அவர்களை வழியிலிருந்து நீக்குங்கள்,” என்று அவர் கூறியதாக எழுதியுள்ளார்.

அவர்கள் காவல் நிலையங்கள், ஜமீன்தார்களின் சொத்துகளைத் தாக்கத் தொடங்கினர். பல இடங்களில் பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கின் இடத்தில் முண்டா ராஜ் சின்னமாக இருந்த வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது.

அப்போது பிரிட்டிஷ் அரசு பிர்ஸாவின் தலைக்கு 500 ரூபாய் சன்மானம் அறிவித்தது. அது அன்றைய காலத்தில் பெரும் தொகையாக இருந்தது.

பிர்ஸா முதல் முறையாக 1895 ஆகஸ்ட் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டபோது அவர் தலைமறைவானார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய தனது மக்களுடன் ரகசிய சந்திப்புகளை நடத்தத் தொடங்கினார்.

சர்தார் இயக்கத்தால் உத்வேகம்

பிர்ஸா முண்டாவிற்கு முன்பே ஆங்கிலேயருக்கு எதிரான சர்தார் இயக்கம் 1858இல் தொடங்கியது. ஜமீன்தார்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறையையும் முடிவுக்குக் கொண்டு வருவதே அதன் நோக்கமாக இருந்தது. அதே நேரத்தில் புத்து பகத் ராஞ்சிக்கு அருகிலுள்ள சிலாகேன் கிராமத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பழங்குடியினரை திரட்டினார்.

அவர் 50 பழங்குடியினரை தனக்கு ஆதரவாக அணி திரட்டினார். அவர்கள் கைகளில் எப்போதும் வில், அம்புகள் இருந்தன.

'அபுவா டிசோம் ரே, அபுவா ராஜ்' அதாவது ’இது எங்கள் நாடு, இதை நாங்கள் ஆள்வோம்’ என்பதுதான் அவர்களது முழக்கம். எந்த ஒரு ஜமீன்தாரோ அல்லது காவல்துறை அதிகாரியோ மக்கள் மீது அத்துமீறி செயல்படுவதைக் கண்டறிந்தால், புத்து தனது குழுவுடன் வந்து அவரது வீட்டைத் தாக்குவது வழக்கம்.

"ஒருமுறை பயணத்திற்குச் செல்வதற்கு முன், புத்துவும் அவரது தோழர்களும் ஒரு சிவன் கோவிலில் வழிபடுவது என்று முடிவு செய்தனர். அவர்கள் கோவிலுக்கு அருகில் சென்றபோது கோவில் உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. என்ன செய்வது என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று கோவிலுக்குள் இருந்து 20 போலீசார் வெளியே வந்தனர்.

மோதல் துவங்கியது. அதில் புத்து உட்பட 12 பழங்குடியினர் கொல்லப்பட்டனர், மீதமுள்ளவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்,” என்று துஹின் சின்ஹாவும் அங்கிதா வர்மாவும் தங்களின் 'தி லெஜண்ட் ஆஃப் பிர்ஸா முண்டா' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளனர்.

பத்து தோட்டாக்கள் உடலில் பாய்ந்திருந்த நிலையில் புத்து இறக்கும்போது, "இன்று நீங்கள் வெற்றி பெற்றீர்கள். ஆனால் இது ஆரம்பம் மட்டுமே. ஒரு நாள் எங்கள் 'உல்குலான்' உங்களை எங்கள் மண்ணிலிருந்து தூக்கி எறிவான்," என்று சொன்னதாகக் கூறப்படுகிறது.

டோம்பாரி மலையில் ராணுவ வீரர்களுடன் மோதல்

1900ஆம் ஆண்டு வாக்கில், பிர்ஸாவின் போராட்டம் சோட்டாநாக்பூரின் 550 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியது. 1899ஆம் ஆண்டில், அவர் தனது போராட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார்.

அதே ஆண்டில் 89 ஜமீந்தார்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பழங்குடியினரின் கிளர்ச்சி மேலும் அதிகரித்தது. ராஞ்சி மாவட்ட ஆட்சியர் ராணுவத்தின் உதவியைக் கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

டோம்பாரி மலையில் ராணுவத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

"பழங்குடியினர் அந்த வீரர்களைப் பார்த்தவுடன் தங்கள் வில், அம்பு, வாள்களுடன் தாக்குவதற்குத் தயாரானார்கள். ஆங்கிலேயர்கள் மொழிபெயர்ப்பாளர் மூலம் முண்டாரி மொழியில் ஆயுதங்களைக் கீழே போடச் சொன்னார்கள். முதல் மூன்று சுற்றுகள் சுடப்பட்டன.

ஆனால் அது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. பிர்ஸாவின் கணிப்பு உண்மையாகிவிட்டதாக பழங்குடியினர் உணர்ந்தனர். ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகள் மரமாகவும், அவர்களின் தோட்டாக்கள் தண்ணீராகவும் மாறிவிட்டன,” என்று கே.எஸ்.சிங் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு பழங்குடியினர் கூச்சலிட்டு பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டனர். இந்த முறை இரண்டு 'பிர்சய்த்'கள் கொல்லப்பட்டனர்.

மூன்றாவது சுற்றில், மூன்று பழங்குடியினர் சரிந்தனர். அவர்கள் விழுந்தவுடன், ஆங்கிலேயர்கள் மலையைத் தாக்கினர். இதற்கு முன்பாக பழங்குடியினர் அங்கிருந்து தப்பிச் செல்வதைத் தடுக்க சில வீரர்களை மலையின் தெற்கே அனுப்பினார்.

"இந்த என்கவுண்டரில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கொல்லப்பட்டனர், மலையில் உடல்கள் குவிந்தன. துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் பழங்குடியினரின் சடலங்களை அகழிகளில் வீசினர், காயமடைந்த பலர் உயிருடன் புதைக்கப்பட்டனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டின்போது பிர்ஸாவும் அங்கு இருந்தார். ஆனால் அவர் எப்படியோ அங்கிருந்து தப்பினார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 400 பழங்குடியினர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பிரிட்டிஷ் காவல்துறை 11 பேர் மட்டுமே இறந்ததாக உறுதிப்படுத்தியது,” என்று கே.எஸ்.சிங் எழுதியுள்ளார்.

சக்ரதர்பூர் அருகே பிர்ஸா பிடிபட்டார்

மார்ச் 3ஆம் தேதி, சக்ரதர்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை ஆங்கிலேய காவல்துறை சுற்றி வளைத்தது. பிர்ஸாவின் நெருங்கிய கூட்டாளிகளான கோம்டா, பர்மி, மௌய்னா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் எங்கு தேடியும் பிர்ஸாவை காணவில்லை.

அப்போதுதான் எஸ்பி ரோஷ் ஒரு குடிசையைப் பார்த்தார். "ரோஷ் அந்தக் குடிசையின் கதவை தன் துப்பாக்கியால் தள்ளித் திறந்தபோது உள்ளே இருந்த காட்சியைப் பார்த்து அவர் அதிர்ந்து போய்விட்டார். குடிசையின் நடுவில் பிர்ஸா முண்டா சம்மணம் போட்டு அமர்ந்திருந்தார்.

அவருடைய முகத்தில் விசித்திரமான புன்னகை இருந்தது. அவர் ஒரு வார்த்தையும் பேசாமல் உடனடியாக எழுந்து நின்று கைவிலங்கு அணியத் தயாராக இருப்பதாக சைகை மூலம் கூறினார்,” என்று துஹின் சின்ஹாவும் அங்கிதா வர்மாவும் எழுதியுள்ளனர்.

பிர்ஸாவுக்கு கைவிலங்கு அணிவிக்குமாறு ரோஷ் தனது சிப்பாய்க்கு உத்தரவிட்டார். இந்தப் பகுதியில் ஆங்கிலேய அரசின் அடித்தளத்தையே அதிர வைத்தவர் இவர்.

பிர்ஸா கைது செய்யப்பட்டதை மக்கள் அறிந்து கொள்ள முடியாதபடி வேறு வழியாக அவர் ராஞ்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் பிர்ஸா ராஞ்சி சிறைச்சாலையை அடைந்தபோது, அவரைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கெனவே அங்கு கூடியிருந்தனர்.

உளவுத் தகவல் மூலம் பிர்ஸா கைது செய்யப்பட்டார்

பிர்ஸா பிடிபட்ட விவரம் சிங்பூம் கமிஷனரால் வங்காளத்தின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டது.

500 ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அருகிலுள்ள மான்மாரு மற்றும் ஜரிகல் கிராமங்களைச் சேர்ந்த 7 பேர் பிர்ஸா முண்டாவை தேடத் தொடங்கினர்.

"பிப்ரவரி 3ஆம் தேதி செந்த்ராவுக்கு மேற்கே காடுகளில் தூரத்தில் இருந்து புகை எழுவதை இவர்கள் பார்த்தார்கள். அவர்கள் அருகில் சென்றபோது பிர்ஸா இரண்டு வாள்கள், மனைவியுடன் அமர்ந்திருப்பதைக் கண்டனர்.

சிறிது நேரத்தில் பிர்ஸா உறங்கியபிறகு அவர்கள் அந்த நிலையிலேயே பிர்ஸாவை பிடித்தனர். அவர் பந்த்காவில் முகாமிட்டிருந்த துணை ஆணையரிடம் கொண்டு வரப்பட்டார்,” என்று ஆணையர் தனது அறிக்கையில் எழுதியுள்ளார்.

பிர்ஸாவை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசாக 500 ரூபாய் வழங்கப்பட்டது. பிர்ஸாவை சாய்பாஸாவுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக ராஞ்சிக்கு அழைத்துச் செல்லுமாறு ஆணையர் உத்தரவிட்டார்.

சங்கிலியால் கட்டி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்

பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை மக்கள் தங்கள் கண்களால் பார்க்கும் வகையில் விசாரணை நாளன்று பிர்ஸாவை சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு சங்கிலியால் கட்டி கொண்டு வருவது என்று கமிஷனர் ஃபோர்ப்ஸ் முடிவு செய்தார்.

நீதிமன்ற அறையில், கமிஷனர் ஃபோர்ப்ஸ், காவல்துறை இயக்குநர் பிரவுனுடன் முன் பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை இருந்தது. பாதிரியார் ஹாஃப்மேனும் தனது ஒரு டஜன் தோழர்களுடன் அங்கு இருந்தார்.

அப்போது வெளியிலிருந்து சத்தம் கேட்டது. பிரவுன் வெளியே ஓடினார். அங்கு பிர்ஸாவை விடுவிக்கக் கோரி பெரும் கூட்டம் அலைமோதியது. பிர்ஸாவுடன் சுமார் 40 ஆயுதம் தாங்கிய போலீசார் நடந்து சென்றனர்.

சிறையில் பிர்ஸா சாட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் பிர்ஸாவுக்கு எந்தவித வலியும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்தக் காட்சியைப் பார்த்ததுமே பிரவுன் தன் தவறை உணர்ந்தார்.

பிர்ஸாவை சங்கிலியால் கட்டிக்கொண்டு வருவது ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியின் விளைவு எவ்வளவு மோசமானதாக இருக்கும் என்ற செய்தியை அனுப்பும் என்று அவர் நினைத்தார்.

ஆனால் அது எதிர் விளைவை ஏற்படுத்தியது. மக்கள் பயப்படுவதற்குப் பதிலாக, பிர்ஸாவுக்கு ஆதரவாகக் களமிறங்கினர். பிர்ஸா மீது கொள்ளை, கலவரம் மற்றும் கொலை ஆகிய 15 வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

சிறையில் மரணம்

பிர்ஸா முண்டா தனிமைச்சிறையில் வைக்கப்பட்டார். மூன்று மாதங்களுக்கு அவர் யாரையும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. சூரிய ஒளியைப் பெறுவதற்காக தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே அவர் அறையிலிருந்து வெளியே அழைத்துவரப்படுவார்.

ஒரு நாள் பிர்ஸா கண்விழித்தபோது அவருக்கு அதிக காய்ச்சலும் உடல் முழுவதும் பயங்கர வலியும் இருந்தது. ஒரு டம்ளர் தண்ணீர்கூட குடிக்க முடியாத அளவுக்கு அவரது தொண்டை மோசமாகிவிட்டது. சில நாட்களில் ரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்தார். 1900ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு பிர்ஸா காலமானார்.

"பிர்ஸாவின் உடல் அறையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டபோது, சிறையில் சலசலப்பு ஏற்பட்டது. எல்லா பிர்சய்த்துகளும் வரவழைக்கப்பட்டு பிர்ஸாவின் உடலை அடையாளம் காணும்படி சொல்லப்பட்டனர்.

ஆனால் பயம் காரணமாக அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார்கள்,” என்று ராஞ்சி சிறைக் கண்காணிப்பாளர் கேப்டன் ஆண்டர்சன், விசாரணைக் குழு முன்பு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 9ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலில் அதிக அளவு தண்ணீர் இருந்தது. அவரது சிறுகுடல் முற்றிலும் சேதமடைந்திருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது மரணத்திற்கு காலராதான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

பிர்ஸாவின் கூட்டாளிகள் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக நம்பினர், சிறை நிர்வாகம் அவருக்கு கடைசி நேரத்தில் மருத்துவ உதவி செய்யவில்லை என்பது இந்த சந்தேகத்திற்கு மேலும் வலுவூட்டியது.

அவரது கடைசி தருணத்தில் பிர்ஸாவுக்கு சில நொடிகளுக்கு சுயநினைவு திரும்பியது. அவர் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வெளிவந்தன, 'நான் வெறும் உடல் மட்டும் அல்ல. எனக்கு இறப்பு கிடையாது. உல்குலான்(இயக்கம்) தொடரும்.’

பிர்ஸாவின் மரணத்துடன் முண்டா இயக்கம் வலுவிழந்தது. ஆனால் அவர் இறந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு 'சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டத்தை' நிறைவேற்றியது, அதில் பழங்குடியினர் அல்லாதவர்கள் பழங்குடியினர் நிலத்தை வாங்க முடியாது என்ற விதி இருந்தது.

(பிபிசியின் புதிய வாராந்திரத் தொடரான 'இளம் வயது, உயர்ந்த வாழ்க்கை’இல் இன்று நீங்கள் பிர்ஸா முண்டாவின் போராட்டம் மற்றும் தைரியத்தின் கதையைப் படித்தீர்கள். இரண்டாவது அத்தியாயத்தில், பகத் சிங்கின் வாழ்க்கையைப் பார்த்தோம். இந்தத் தொடரின் வரும் அத்தியாயங்களில் உங்களுக்கு நாங்கள், அதிக புகழ் சம்பாதித்த, ஆனால் 40 வயதிற்கு முன்பே இந்த உலகிலிருந்து விடைபெற்ற மேலும் பலரது கதைகளைச் சொல்ல இருக்கிறோம்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: