கோல்டன் குளோப் விருது: உலக ஜாம்பவான்களை வென்ற 'நாட்டு நாட்டு' பாடல்

பட மூலாதாரம், TWITTER/ RRR MOVIE
ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றுள்ளது.
பலத்த போட்டிகளுக்கு மத்தியில் நாட்டு நாட்டு பாடலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவில் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. தற்போது அந்த பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்திருப்பதால் இந்தியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கோல்டன் குளோபில் 'ஒரிஜினல் சாங்' பிரிவில் இந்திய பாடல் ஒன்று வெற்றிபெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோதி முதல் நடிகர் ஷாருக்கான் வரை பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நாட்டு நாட்டு பாடல் உங்களுக்கு தெரிந்திருக்கக்கூடும். ஆனால் இந்த பிரிவில் இந்த பாடலுக்கு போட்டியாக இருந்த மற்ற பாடல்கள் எவை தெரியுமா?
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுகள் ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியன் சார்பில் வழங்கப்படுகிறது. இதில் சிறந்த பாடலுக்கான பிரிவில், ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் உட்பட, மொத்தம் 5 பாடல்கள் நாமினேட் ஆகியிருந்தன.
1. அதில், ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான டாம் க்ரூஸ் நடிப்பில் இந்தாண்டு வெளியான `டாப் கன் மேவரிக்` படத்தின், லீட் சிங்கிள் டிராக் பாடலாக வெளியான ஹோல்ட் மை ஹேண்ட் பாடலும் ஒன்று.

பட மூலாதாரம், Getty Images
நடிகர் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் போலவே, 1986ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான டாப் கன் முதல் பாகத்தின் தொடர்ச்சியானது,
36 ஆண்டுகளுக்குப் பிறகு, டாம் க்ரூஸின் அதே பிரம்மிப்பூட்டும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளோடு கடந்த ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
இப்படத்திற்காக, பிரபல அமெரிக்க பாடகி லேடி காகா மற்றும் ப்ளட் பாப் ஆகியோர் இணைந்து எழுதி, தயாரித்த ஹோல்ட் மை ஹேண்ட் பாடலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.
லேடி காகாவின் யூட்யூப் சேனலில் வெளியான இந்த பாடல் சுமார் 13 கோடியே 80 லட்சம் பார்வைகளை பெற்றிருந்தது.
லேடி காகா, கோல்டன் க்ளோப் விருதுகளில், ஏற்கனவே 6 முறை நாமினேட் ஆகி, நடிப்புக்ககாக ஒரு முறையும், பாடலுக்காக ஒரு முறையும் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2. யூட்யூபில் 5 கோடி சப்ஸ்கிரைபர்கள் வைத்திருக்கும் பிரபல அமெரிக்க இசைக்கலைஞரான டெய்லர் ஸ்விஃப்ட் எழுதி, பாடிய பாடல் ஒன்றும், ஆர்.ஆர்.ஆர்-ன் நாட்டு நாட்டு பாடலுடன் விருதுக்காக போட்டிப் போட்டது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு வெளியான Where the Crawdads sing எனும் த்ரில்லர் படத்திற்காக தயாரிக்கப்பட்ட காரோலினா என்று தொடங்கும் இந்தப் பாடல் உட்பட, டெய்லர் ஸ்விஃட்-ன் பாடல்கள் இதுவரை நான்கு முறை இதே கோல்டன் க்ளோப் விருதுக்கு நாமினேட் ஆகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் டெய்லர் ஸ்விப்ட்டின் கோல்டன் குளோப் கனவு இந்த முறையும் கானல் நீரானது.
3. இதேபோல், உள்ளூர் முதல் உலகளவில் 673 விருதுகளை வென்றுள்ள இசைக்கலைஞர் ரிஹானாவின் பாடல் ஒன்றும், இம்முறை கோல்டன் க்ளோப் விருதுகளில் இதே பிரிவுக்கு நாமினேட் ஆகியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
யூட்யூபில் இவரது சில பாடல்கள் 100 கோடிகளுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. உலகளவில் பல்வேறு நாடுகளிலும் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டிருக்கும் ரிஹானா கடந்த ஆண்டு `லிஃப்ட் மி அப்` எனும் பாடலை எழுதி பாடியிருந்தார்.
மார்வெல் ஸ்டூடியோசின் பிரபல சூப்பர் ஹீரோ படங்களில் ஒன்றான பிளாக் பாந்தர் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக உருவாக்கப்பட்ட `லிஃப்ட் மி அப்` என்ற இந்த பாடல் இந்த முறை நாட்டு நாட்டு பாடலிடம் வெற்றியை பறிகொடுத்தது. ரிஹானாவின் இந்த பாடல் இசைத்துறையில் உயரிய விருதான கிராமி விருதுக்கும் நாமினேட் ஆகியுள்ளது.
4. ஒன்பது முறை ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் ஆகி, 2 முறை அந்த விருதை வென்ற ஃப்ரென்ச் இசையமைப்பாளர் அலெக்சாண்ட்ரே டெஸ்ப்ளாட்டின் பாடல் ஒன்றும், இம்முறை கோல்டன் க்ளோப் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
பிரபல மெக்சிகன் திரைக்கலைஞரான Guillermo del Toro-வின் இயக்கத்தில் வெளியான Pinocchio என்ற அனிமேஷன் திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட பாடல் தான் அது.
இத்தனை போட்டிகளுக்கு இடையில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் கோல்டன் க்ளோப் விருதினை வென்றது, இந்திய ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்கச்செய்துள்ளது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலரது நடிப்பில், இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












