"பெண் போன்ற மார்பகம் இருந்ததால் சபரிமலையில் தடுக்கப்பட்டேன்" - பெண் மார்பக நிலை ஆண்களுக்கு வருவது ஏன்?

கைனகோமாஸ்டியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
    • பதவி, பிபிசி தமிழ்

“நான் இயல்பாகவே அனைவரிடமும் ஜாலியாக பழகுபவன். ஆனால் ‘என் நிலை’ குறித்து நான் புரிந்துகொள்ளத் தொடங்கிய பின்னர் எல்லாமே தலைகீழாக மாறியது. சகஜமாக பழகுவதை குறைத்துக்கொண்டேன். முரட்டுத்தனமாக நடந்துகொள்ளத் தொடங்கினேன்,” என்று கூறுகிறார் மேத்யூ (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

9வது படிக்கும்போது தனது மார்பு இயல்புக்கு மாறாக பெரிதாக இருப்பதாக உணர்ந்த அவர், 10ஆம் வகுப்பு முடித்த பின்னர் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து மார்பை மற்ற நண்பர்களைப் போல் இயல்பாக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார். ஆனால் கடுமையான உடற்பயிற்சி செய்தும் தனது மார்பு பிற ஆண்களைப் போல் இயல்பாக மாறவில்லை என்பதை மேத்யூ உணர்ந்தார்.

சரவணன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது 14 வயதில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்றபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவரது மார்பு ஆண்களுடையது போல் அல்லாமல் பெண்களுடையது போல் இருப்பதாக அதற்குக் காரணம் சொல்லப்பட்டது. பரிசோதனைகளுக்குப் பின்னர் அவர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது சிறு வயது என்பதால் சரவணனுக்கு இதுகுறித்த பெரிய விவரமும் இல்லை. ஆகவே இந்த நிகழ்வு அப்போது அவருக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே தனது மார்பு ஆண்களைப் போல் இல்லை என்பது குறித்து அவர் கவலைகொள்ளத் தொடங்கினார்.

இவர்கள் இருவருமே கைனகோமாஸ்டியா எனப்படும் ஆண் மார்பு வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

கைனகோமாஸ்டியா என்றால் என்ன?

கைனகோமாஸ்டியா என்பது நோயல்ல உடலில் ஏற்படும் மாற்றம் மட்டுமே என்று கூறுகிறார் சென்னை பிளாஸ்டிக் சர்ஜரியின் முதன்மை காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் கார்த்திக் ராம். “ஆண்களுக்கு மார்பு பகுதி வீக்கமாக பெண்களுக்கு இருப்பதைப் போன்று இருப்பதைத்தான் கைனகோமாஸ்டியா என்று கூறுகிறோம். ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாக இந்த நிலை ஏற்படலாம்.

கைனகோமாஸ்டியாவில் 4 நிலைகள் உள்ளன. puffy nipples நிலையில் காம்புகள் மட்டும் வீக்கமாகக் காணப்படும், 2வது நிலையில் காம்புகளுக்குக் கீழ் வீக்கம் காணப்படும். 3வது நிலையில் மார்பகம் பெண்களுக்கு இருப்பதைப் போன்று பெரிதாக இருக்கும், ஆனால் மார்பில் தொய்வு இருக்காது. மார்பகத் தொய்வோடு பெரிதாக இருப்பது 4வது நிலையில் வரும்.

கைனகோமாஸ்டியா

பட மூலாதாரம், Karthick ram

படக்குறிப்பு, மருத்துவர் கார்த்திக் ராம்

குழந்தை பிறக்கும்போது, 10-13 வயது, முதுமை ஆகிய மூன்று வயது குழுக்களில் இந்த நிலை ஏற்படும். வயதானவர்களில் பெரும்பாலானோர் இதுகுறித்துப் பெரிதும் கவலைப்படுவதில்லை. அப்படியே விட்டுவிடுகின்றனர்.

பதின்ம வயதில் ஏற்படும்போது, அதுகுறித்து இளைஞர்கள் கவலைப்படுகின்றனர். அதேபோல், கைனகோமாஸ்டியாவுக்கும் உணவு முறைக்கும் பெரிய அளவில் தொடர்பு இல்லை என்று சொல்ல முடியாது. எங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் கேட்கும்போது, அதிகளவில் துரித உணவுகளைச் சாப்பிடுவோம் என்று பலரும் கூறியிருக்கின்றனர்” என்று அவர் விளக்கினார்.

கைனகோமாஸ்டியா காரணமாக மற்றவர்களுடன் பழகுவவதை மாற்றிக்கொள்ளத் தொடங்கியதாகக் கூறுகிறார் மேத்யூ.

“நான் சகஜமாக பேசிப் பழகுபவன் என்றாலும், என் மார்பக வீக்கத்தால் கேலிக்கு உள்ளாகக் கூடாது என்பதால் மற்றவர்களுடன் பழகுவதில் இடைவெளியைக் கடைபிடிக்கத் தொடங்கினேன். நீச்சல் குளம் சென்றால் என் நண்பர்கள் தண்ணீரில் இறங்குவதற்கு முன்பே நான் இறங்கிக்கொள்வேன். என்னைத் தொட்டுப் பேச யாரையும் அனுமதிக்கமாட்டேன். அவ்வாறு தொட முயன்றால் மூர்க்கமாக நடந்துகொள்வேன். நிச்சயமாக இது என் இயல்பு இல்லை. ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை,” என்கிறார் மேத்யூ.

உடற்பயிற்சி செய்வது மூலம் கைனகோமாஸ்டியாவை சரி செய்ய முடியுமா?

நம்மிடம் பேசிய சரவணன், “கைனகோமாஸ்டியா காரணமாக, கல்லூரி கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துகொள்வதைத் தவிர்க்கத் தொடங்கினேன். வெளியே செல்வதையும் தவிர்த்தேன்.

நான் இயல்பாகவே சற்று பருமனாக இருப்பேன். உடற்பயிற்சி செய்தால் மார்பக வீக்கத்தை சரி செய்ய முடியும் என்று நினைத்து ஜிம்மில் சேர்ந்தேன். உடற்பயிற்சி செய்தும் வயிறு பகுதி குறைந்ததே தவிர மார்ப வீக்கம் சரியாகவில்லை” என்று கூறுகிறார். உடற்பயிற்சி செய்து தனது மார்ப வீக்கம் சரியாகவில்லை என்ற கூற்றை மேத்யூவும் நம்மிடம் தெரிவித்தார்.

உடற்பயிற்சி செய்தால் கைனகோமாஸ்டியாவை சரி செய்ய முடியும் என்று பலரும் நம்புவது தொடர்பாக மருத்துவர் கார்த்திக் ராமிடம் கேட்டபோது, `உடற்பயிற்சி செய்வது மூலம் கொழுப்பைக் குறைக்க முடியுமே தவிர மார்பில் உருவாகும் சுரப்பியைச் சரி செய்ய முடியாது. உடற்பயிற்சி மூலம் கைனகோமாஸ்டியாவை சரி செய்ய முடியாது. அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருக்கும் என்றார்.

மேத்யூ தற்போது மருத்துவராக உள்ளார். அவரது பெற்றோரில் ஒருவரும் மருத்துவத் துறையில் உள்ளார். இதனால் தனது நிலை குறித்து வீட்டில் தெரிவிப்பதற்கு அவருக்குப் பெரிதாக தயக்கம் இருந்ததில்லை.

“நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் கைனகோமாஸ்டியா குறித்துத் தெரிந்துகொண்டேன். சிகிச்சை மூலம்தான் அதைச் சரி செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொண்டேன். என் பெற்றோரில் ஒருவர் மருத்துவ துறையில் உள்ளார் என்பதால் அவர் புரிந்துகொண்டார்.

மற்றொருவருக்குப் புரிய வைப்பதற்கு சிறிது சிரமமாக இருந்தது. பின்னர் அவரும் புரிந்துகொண்டார்,” என்று தெரிவித்தார். ஆனால், சரவணனோ தனது நிலை குறித்து வீட்டிலும் நண்பர்கள் வட்டத்தில் யாரிடமும் கூறவில்லை. அவர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்பது குறித்த அச்சம் இருந்ததால் இதை யாரிடத்திலும் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறினார்.

பிறப்பால் ஆணாகவும் பின்னர் பெண்ணாகவும் உணர்பவர்கள் திருநங்கைகளாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். கைனகோமாஸ்டியா நிலைக்கு உள்ளாகும் ஆண்களும் இவ்வாறு தங்களை எண்ணிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பது குறித்து மருத்துவர் கார்த்திக்கிடம் கேட்டப்போது, ஒரு சிலருக்கு தாடி, மீசையெல்லாம் வளர்ந்திருக்கும் என்று கூறினார்.

மேலும், "பெண்மைக்குரிய நிலை எதுவும் அவர்களிடம் காணப்படாது. அத்தகையோருக்கு ஹார்மோன் பரிசோதனை செய்வது அவசியமில்லை. கைனகோமாஸ்டியா என்பது மார்பு பகுதியில் சுரப்பி ஏற்படுவதே தவிர இதற்கும் பெண்மைத் தன்மைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை," என்றார்.

கைனகோமாஸ்டியா

பட மூலாதாரம், Getty Images

இயல்பாக உணர்கிறோம்

“கைனகோமாஸ்டியா என்பது நோயில்லை. சாதாரண நிலைதான். அதனால்தான் காப்பீட்டில் இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாது. கைனகோமாஸ்டியாவுடனே இருந்துகொள்வது என்று ஒருவர் முடிவு செய்துகொண்டால், அதனால் அவருக்குப் பெரிய பாதிப்பு இல்லை.

ஒரு சிலருக்கு கிரேட் 1 நிலைதான் இருக்கும். ஆனால், அதற்கே அவர்கள் மனமுடைந்துபோய் விடுவார்கள். ஒருசிலரே பெண்களைப் போன்ற மார்பகம் இருந்தாலும் அதுகுறித்துப் பெரிதாகக் கவலைப்பட மாட்டார்கள். உடலில் ஏற்படும் மாற்றம் என்றபோதிலும், இதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்பது மனம் சார்ந்தது. அறுவை சிகிச்சை செய்துகொள்வது மூலம் சிலர் சௌகரியமாக உணர்கின்றனர்” என்று மருத்துவர் கார்த்தி ராம் தெரிவித்தார்.

மருத்துவராக உள்ளதால் மேத்யூவுக்கு கைனாகோமாஸ்டியா குறித்த போதிய விழிப்புணர்வு கிடைத்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்துகொண்டார். சிகிச்சைக்குப் பின்னர் தனது பழைய குணாதிசயத்தை மீட்டெடுத்துள்ளதாக மேத்ய தெரிவித்தார்.

“சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் நான் அனைவருடனும் இயல்பாக பேசத் தொடங்கினேன். கோபப்படுவதுதான் என் இயல்பு என்று நினைத்திருந்தவர்கள் எனது மாற்றத்தை அதிசயமாகப் பார்க்கிறார்கள்.

9, 10ஆம் வகுப்புகளில் படிக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேனோ தற்போது அப்படி இருக்கிறேன். எனது கைனகோமாஸ்டியா நிலை குறித்து பிறர் அறிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக முன்பெல்லாம் அளவில் பெரியதாக இருக்கும் டி-சர்ட்களை அணிவேன். தற்போது என் அளவுக்கு ஏற்ற டி.சர்ட்களை அணிகிறேன்,” என்றார்.

கைனகோமாஸ்டியாவை சரி செய்வது எப்படி என்று இணையத்தில் தேடியபோது அறுவைச் சிகிச்சை குறித்து அறிந்துகொண்டேன். இதையடுத்து வீட்டில் யாருக்கும் தெரியாமலேயே அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என்றார் சரவணன்.

அவரிடம் கைனகோமாஸ்டியா ஒரு நோய் இல்லை என்றும் அறுவை சிகிச்சை செய்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறிய நிலையில், அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்று தூண்டியது எது என்ற கேள்வியை முன்வைத்தோம்.

அதற்கு அவர், “கைனகோமாஸ்டியா காரணமாக கேலி கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறேன். ஒரு சில கோவில்களுக்குச் செல்லும்போது சட்டையைக் கழற்றச் சொல்வார்கள். அப்போது மிகவும் சங்கடமாக உணர்வேன்.

எனக்குப் பிடித்த மாதிரி இறுக்கமான டி-சர்ட்களை அணிய முடியாது. பொது இடத்தில் இயல்பாக இருக்க முடியாது. இதுபோன்ற காரணங்களால்தான் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். தற்போது, கோயில்களுக்கு சட்டை அணியாமல் செல்வதில் தயக்கம் இல்லை. எனக்குப் பிடித்தவாறு இறுக்கமான டி-சர்ட்களை அணிகிறேன். நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்,” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: