You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய கோடீஸ்வர குடும்பத்தினருக்கு சுவிட்சர்லாந்தில் 4 ஆண்டு சிறைத் தண்டனை - என்ன காரணம்?
- எழுதியவர், இமோஜென் ஃபாக்ஸ்
- பதவி, பிபிசி ஜெனிவா
வீட்டுப் பணியாளர்களை கொடுமைபடுத்திய குற்றத்திற்காக பிரிட்டனில் வசித்து வரும் பணக்கார 'ஹிந்துஜா’ குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
'ஹிந்துஜா’ குடும்பத்தினர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள தங்களுடைய வீட்டில் பணிபுரிய சில பணியாளர்களை இந்தியாவில் இருந்து அழைத்து வந்துள்ளனர்.
பிரகாஷ் ஹிந்துஜா, கமல் ஹிந்துஜா, மற்றும் அவர்களது மகன் அஜய் மற்றும் மருமகள் நம்ரதா ஆகியோர் சட்டவிரோதமாகப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியது மற்றும் சுரண்டலில் ஈடுபட்டதாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அவர் நான்கு முதல் நான்கரை ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். இருப்பினும், ஆள்கடத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ஹிந்துஜா குடும்பத்தினர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது வழக்கறிஞர் ராபர்ட் அசெல், "இது அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் இறுதிவரை போராடுவோம்," என்றார்.
ஹிந்துஜா குடும்பம் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் வேலை செய்ததற்கு ஏழு பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.740) மட்டுமே வழங்கியதாகக் குற்றம் சாட்டினார் இந்தியாவிலிருந்து அவரால் அழைத்துச்செல்லப்பட்ட மூன்று ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சுவிஸ் சட்டத்தின்படி, ஊழியர்களுக்கு இதற்கு குறைந்தபட்சம் 70 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7400) வரை வழங்கி இருக்க வேண்டும்.
தங்களது பாஸ்போர்டைக் கைப்பற்றி வைத்துக்கொண்டு, சுதந்திரமாக நடமாடுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பணியாளர்களை விட நாய்களுக்கு அதிகம் செலவிட்டனர்
ஜெனிவாவில் உள்ள ஒரு வீட்டில் ஊழியர்களைச் சுரண்டி வேலை வாங்குவது தொடர்பாக ஹிந்துஜா குடும்பத்திற்கெதிராக விசாரணை தொடங்கப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இந்த குடும்பத்தை சுவிஸ் நிர்வாகம் கண்காணித்து வருகிறது.
47 பில்லியன் டாலர் (சுமார் 4 லட்சம் கோடி இந்திய ரூபாய்) வணிக மதிப்பு கொண்ட கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தைக் கொண்ட ஒரு குடும்பம், தங்கள் வேலையாட்களை விட அவர்களின் நாய்க்கு அதிக பணத்தைச் செலவழிப்பதாக வழக்குத் தொடரப்பட்டது.
ப்ளூம்பெர்க் செய்தி அறிக்கையின்படி, அரசாங்க வழக்கறிஞர் யவ்ஸ் பெர்டோசா, நீதிமன்றத்தில், "ஹிந்துஜா குடும்பத்தினர் ஒரு பணியாளரை விட தங்கள் நாய்க்கு அதிகம் செலவழித்துள்ளனர்," என்று கூறினார்.
அந்த வீட்டில் ஒரு முதிர் பணிப்பெண் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் வேலை செய்துள்ளார். அதற்கு அவருக்கு கொடுக்கப்படும் ஊதியம் வெறும் $7.84 (ரூ.655.13) தான். அதே நேரத்தில் அந்த குடும்பம் தங்கள் நாய்க்கான உணவு மற்றும் பராமரிப்பிற்காக ஆண்டுக்கு $10,000 (ரூ.8,35,629.50) செலவழித்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன.
பல வேலையாட்கள் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டியிருந்தது என்றும், அவர்களது சம்பளமும் இந்திய ரூபாயில் தான் இருக்கும் என்றும் பிரான்சு நாணய மதிப்பில் கொடுக்கப்படுவதில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.
ஹிந்துஜா குடும்பத்தினர் தரப்பு வீட்டில் வேலைக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு போதிய வசதிகளைச் செய்து கொடுத்ததாகவும், அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்துக்கள்
பிபிசி ஜெனிவா செய்தியாளர் இமோஜென் ஃபாக்ஸ் (Imogen Fox) அறிக்கையின்படி, 'குறைந்த சம்பளம்’ என்ற குற்றச்சாட்டை ஹிந்துஜா குடும்பத்தின் வழக்கறிஞர்கள் மறுக்கவில்லை, ஆனால் பணியாட்கள் தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்பட்டு கெளரவத்துடன் நடத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.
"சம்பளத்தை குறைக்கக் கூடாது," என்று வழக்கறிஞர் யேல் ஹயாத் கூறினார்.
பணியாட்களிடம் நீண்ட நேரம் வேலை வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் மறுக்கப்பட்டன, அதில் குழந்தைகளுடன் திரைப்படங்களைப் பார்ப்பதை வேலையாகக் கருத முடியாது என்று ஒரு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
ஹிந்துஜா தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், "பாதிக்கப்பட்டோம் எனக் கூறும் பலர் ஹிந்துஜா குடும்பத்திற்காக பல சந்தர்ப்பங்களில் பணிபுரிந்துள்ளனர். பணிச்சூழலில் அனைவரும் திருப்தி அடைந்திருப்பதை இது காட்டுகிறது," என்றனர்.
அக்குடும்பத்துக்காக வாதாடிய வழக்கறிஞர்கள், குடும்பத்திற்காக முன்பு பணியாற்றிய பலரையும் சாட்சியாக அழைத்தனர்.
அவர்கள் நீதிமன்றத்தில் ஹிந்துஜா குடும்பத்தை நன்னடத்தை கொண்டவர்கள் என்றும், அவர்கள் தங்கள் வேலையாட்களை மரியாதையுடன் நடத்தியதாகவும் தெரிவித்தனர்.
ஹிந்துஜா குடும்பத்தின் வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர் மீது அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டினார்.
சர்வதேச கவனம் பெற்றுள்ள ஹிந்துஜா குடும்பம்
இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட ஹிந்துஜா குடும்பம், அதே பெயரில் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருகிறது.
கட்டுமானம், ஆடை, ஆட்டோமொபைல், எண்ணெய், வங்கி மற்றும் நிதி போன்ற துறைகளில் ஹிந்துஜா குழுமம் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஹிந்துஜா குழுமத்தின் நிறுவனர் பர்மானந்த் தீப்சந்த் ஹிந்துஜா, சுதந்திர இந்தியாவில் நன்கு அறியப்பட்ட சிந்தி நகரமான ஷிகர்பூரில் பிறந்தார்.
1914-இல், அவர் இந்தியாவின் வர்த்தக மற்றும் நிதியின் தலைநகரான பம்பாய்க்கு (இப்போது மும்பை) பயணம் செய்தார்.
ஹிந்துஜா குழுமத்தின் இணையதளத் தகவலின்படி, அவர் அங்குள்ள வணிகத்தின் நுணுக்கங்களை விரைவாகக் கற்றுக்கொண்டார்.
சிந்துவில் தொடங்கிய அவரது வணிகப் பயணம் 1919-இல் இரானில் ஒரு அலுவலகத்தைத் தொடங்கி சர்வதேச அரங்கில் நுழைந்தார்.
குழுவின் தலைமையகம் 1979 வரை இரானில் இயங்கியது. அதன் பிறகு ஐரோப்பாவிற்கு மாற்றப்பட்டது.
ஆரம்ப ஆண்டுகளில், ஹிந்துஜா குழுமத்தின் செயல்பாடுகளின் இரண்டு முக்கிய அடித்தளங்களாக வணிக வங்கி மற்றும் வர்த்தகம் செயல்பட்டன.
ஹிந்துஜா குழும நிறுவனர் பர்மானந்த் தீப்சந்த் ஹிந்துஜாவின் மூன்று மகன்கள் -- ஸ்ரீசந்த், கோபிசந்த் மற்றும் பிரகாஷ் ஆகியோர் செயல்பாடுகளைக் கையிலெடுத்து, நிறுவனத்தை வெளிநாடுகளில் விரிவுபடுத்தினர்.
2023-ஆம் ஆண்டில் ஸ்ரீசந்த் ஹிந்துஜாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது இளைய சகோதரர் கோபிசந்த் அவருக்குப் பதிலாக குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றார். சுவிட்சர்லாந்தில் மனித கடத்தல் (human trafficking) வழக்கை எதிர்கொண்டிருந்த பிரகாஷ், மொனாக்கோவில் தேக்கமடைந்த ஒரு வணிகத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.
ஹிந்துஜா குடும்பம் பிரிட்டனில் பல மதிப்புமிக்க சொத்துக்களை வாங்கியுள்ளது.
சகோதரர்களுக்கிடையே பிரச்னை
ஹிந்துஜா குழுமம் செப்டம்பர் 2023-இல் லண்டனின் ஓல்ட் வார் அலுவலகமான வைட்ஹாலில் ராஃபிள்ஸ் (Raffles) ஹோட்டலைக் கட்டியது. இது முன்னர் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகமாக இருந்தது. இந்த ஹோட்டலின் தனித்துவமான அம்சம், இது கிரேட் பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் தெருவில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்தக் குழு கார்ல்டன் ஹவுஸின் மாடியில் ஒரு தளத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளது. அதில் பல அலுவலகங்கள், குடியிருப்புகளைக் கொண்டுள்ளது. தவிர, இது பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தங்கள் நிறுவனங்களில் 2 லட்சம் பேர் பணிபுரிவதாக ஹிந்துஜா குழுமம் கூறுகிறது.
ஜூன் 2020-இல் பிரிட்டன் நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வாக்குமூலத்தின்படி, ஹிந்துஜா சகோதரர்களுக்கு இடையேயான உறவில் சில சிக்கல்கள் இருந்தது.
சகோதரர்களில் மூத்தவரான ஸ்ரீசந்த், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள வங்கியின் உரிமையைப் பெறுவதற்காக தனது இளைய சகோதரருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன.
ஜெனிவாவின் இருண்ட பக்கம்
உலக பணக்காரர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் மையமாக இருக்கும் ஜெனிவாவில் பணியாட்களை கொடுமைப்படுத்துவதாக பதிவு செய்யப்படுவது இது முதல் வழக்கு அல்ல.
2008-இல், லிபிய முன்னாள் சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் மகன் ஹன்னிபால் கடாபியும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து அல்பைன் நகர காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஹன்னிபால் கடாபியும் அவரது மனைவியும் தங்கள் வேலைக்காரரை அடித்து கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த வழக்கு முடிக்கப்பட்டது, ஆனால் இதன் காரணமாக லிபியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் ராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டது, பழி வாங்கும் விதமான இரண்டு சுவிஸ் குடிமக்கள் திரிபோலியில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
கடந்த ஆண்டு, நான்கு பிலிப்பைன்ஸ் பணியாளர்கள், பல ஆண்டுகளாக தங்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறி ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)