அமெரிக்காவிடம் பெறும் ராணுவ உதவி மூலம் யுக்ரேனால் ரஷ்யாவை பின்வாங்க செய்ய முடியுமா?

யுக்ரேனில் நடந்து வரும் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. வடகிழக்கு யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கியேவின் புறநகர்ப் பகுதியில் ரஷ்ய ராணுவம் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்திவருகிறது.

இங்குள்ள நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. யுக்ரேன் ராணுவம் தொடர்ந்து ரஷ்ய தாக்குதலின் பிடியின் கீழ் இருக்கிறது. ஆயுதப் பற்றாக்குறையால் தவிக்கும் யுக்ரேன் ராணுவம் இதுவரை எப்படியோ சமாளித்து வருகிறது.

ஏப்ரலில் அமெரிக்க நாடாளுமன்றம் யுக்ரேனுக்கு 60 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்) ராணுவ உதவி வழங்கும் மசோதாவை நிறைவேற்றியது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்த உதவித்தொகுப்பின் ஆயுதங்களுடன் யுக்ரேன் சென்றார்.

அப்போது, வான் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும், கார்கியேவிற்கு இரண்டு 'பேட்ரியாட்கள்’ (அமைப்புகள்) தேவை என்றும் ஜெலென்ஸ்கி பிளின்கனிடம் கூறினார்.

யுக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் நிலைமை சிக்கலானதாக மாறியுள்ளது. யுக்ரேனுக்கு அமெரிக்காவின் ஆயுதங்கள் சரியான நேரத்தில் கிடைத்தால், ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்க யுக்ரேனால் முடியுமா?

ஆயுதக் கிடங்குகள் மீது இலக்கு

கடந்த சில மாதங்களாக ரஷ்ய ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலைத் தடுப்பதில் யுக்ரேன் ராணுவம் பலமுறை தோல்வியடைந்துள்ளது.

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களால் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கியேவ் நகரில் ரயில் போக்குவரத்து உட்பட பல உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

கடந்த சில மாதங்களில் யுக்ரேன் ராணுவம் பலவீனமடைந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு ரஷ்யா மீதான பதிலடித் தாக்குதலின் போது யுக்ரேன் ராணுவம் ரஷ்ய ராணுவத்தின் விநியோகச் சங்கிலியை உடைக்கத் தவறியது. இதன் காரணமாக ரஷ்யா அதிக படைகளையும் ஆயுதங்களையும் அப்பகுதிக்குள் கொண்டு வந்தது.

மேலும் ரஷ்யப் படைகள் யுக்ரேனைத் தாக்க கிளைடு குண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அவற்றைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி, இந்த குண்டுகளைப்போடும் விமானங்களை குறிவைப்பதாகும்.

இதைச் செய்வதற்கான ஆயுதங்கள் யுக்ரேனிடம் குறைந்து வருகின்றன. இதன் காரணமாக யுக்ரேனிய நகரங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களின் அபாயம் அதிகரித்துள்ளது.

பெர்லினைச் சேர்ந்த குஸ்டாவ் கிரெசல், ராணுவச் சிந்தனைக் குழுவான யுரோப்பியன் கவுன்ஸில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸின் மூத்த ஆராய்ச்சியாளர். மிகப்பெரிய ரஷ்ய ராணுவத்தின் திறன்களைக் குறைக்க யுக்ரேனிய ராணுவத்தால் முடியாவிட்டால், அதற்கு பதிலடி கொடுப்பது மிகவும் கடினம் என்று அவர் கருதுகிறார்.

இதைச் செய்ய யுக்ரேன் ராணுவத்திற்கு அடுத்த ஆண்டு வரை ஆயுத இருப்புக்கான உத்தரவாதம் தேவை என்று அவர் கூறுகிறார்.

யுக்ரேனிடம் ஆயுதங்கள் இல்லாதது ரஷ்ய ராணுவத்திற்குப் பெரிதும் பயனளித்திருப்பதாக கிரெசெல் நம்புகிறார். யுக்ரேனின் மன உறுதியை பாதிக்கும் வகையில் சில சிறிய பகுதிகளை கைப்பற்றுவதில் ரஷ்யா வெற்றி பெற்றுள்ளதுடன், யுக்ரேனின் ராணுவ ஆயுத உற்பத்தியை குறிவைப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது.

ரஷ்ய தாக்குதல்களில் இருந்து தனது ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளைப் பாதுகாப்பதற்காகவும், ஆயுத இருப்பை தொடர்ந்து பராமரிக்கவும் யுக்ரேன், பல தொழிற்சாலைகளைச் சிறிய தொழிற்சாலைகளாக மாற்றி, அவற்றைக் குறிவைப்பது கடினமாக இருக்கும் இடங்களுக்கு மாற்றியது என்று குஸ்டாவ் கிரெசல் குறிப்பிட்டார்.

யுக்ரேனின் ஆயுத உற்பத்தி ஆலைகளை அழிக்க முடியாத போது ரஷ்யா, யுக்ரேனின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது. ஏனெனில் மின் உற்பத்தி நிலையங்களைப் பாதுகாக்க தேவையான ஆயுதங்கள் யுக்ரேனிடம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

"துரதிர்ஷ்டவசமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரஷ்யா, பல யுக்ரேனிய மின் உற்பத்தி நிலையங்களைச் சேதப்படுத்தியது. ஏனெனில் யுக்ரேனிடம் போதுமான வான் பாதுகாப்பு ஆயுதங்கள் எஞ்சியிருக்கவில்லை," என்கிறார் கிரெசல்.

மின்சாரம் இல்லாததால் யுக்ரேனின் பொருளாதாரம் மட்டுமின்றி அதன் ஆயுத உற்பத்தித் திறனும் மோசமாக பாதிக்கப்பட்டது. யுக்ரேனை மேலும் மேலும் மேற்கத்திய நாடுகளைச் சார்ந்திருக்கச் செய்வது ரஷ்யாவின் உத்தி.

"இந்தப் போரில் பலவீனமான இணைப்பு யுக்ரேன் அல்ல, மேற்கத்திய நாடுகளே என்று ரஷ்யாவுக்குத் தெரியும். யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகள் தொடர்ந்து தேவைப்படுமானால், ஏதோ வகையிலான ஒப்பந்தம் அல்லது அது சரணடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்," என்றார் குஸ்டாவ் கிரெசல்.

யுக்ரேனின் மிகப்பெரிய ஆதரவாளரான அமெரிக்கா ஆறு மாத நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஏப்ரல் 24-ஆம் தேதி, 60 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதற்கான சட்டத்தை இயற்றியது. இதை யுக்ரேன் நீண்ட காலமாக கோரி வந்தது.

அமெரிக்க ராணுவ உதவி

வாஷிங்டனில் உள்ள செயல் உத்தி மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் ஐரோப்பா ரஷ்யா மற்றும் யுரேசியா திட்டத்தின் இயக்குனரான மேக்ஸ் பெர்க்மென், '60 பில்லியன் டாலர் அமெரிக்க உதவி யுக்ரேன் போரில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்' என்று நம்புகிறார்.

"யுக்ரேனில் போரின் வரைபடம் கணிசமாக மாறும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் யுக்ரேனிய ராணுவத்திடம் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் தீரும் நிலையில் உள்ளன. வான் பாதுகாப்பிற்குத் தேவையான ஆயுதங்கள் இல்லாமல் அது போராடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க உதவியுடன் இந்த குறைபாடு விரைவில் தீரும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

"தொகைக்கான ஒப்புதல் கிடைத்ததும் அமெரிக்க அதிபர் தனது ராணுவத்தின் கையிருப்பில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை எடுத்து அவற்றை விமானம் அல்லது கடல் வழியாக யுக்ரேனுக்கு வழங்க முடியும். யுக்ரேனுக்கு விரைவில் இந்த ஆயுதங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் சொன்னார்.

60 பில்லியன் டாலர் உதவித் தொகுப்பு மிகவும் பெரியது. கடந்த இரண்டு ஆண்டுகளில், யுக்ரேனுக்கு அமெரிக்கா 40 பில்லியன் டாலர் உதவி அளித்துள்ளது. இப்போது இந்த மிகப்பெரிய தொகுப்புக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு அமெரிக்கா, தனது ஆயுத உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஆயுதங்களை நேரடியாக வாங்கி யுக்ரேனிடம் ஒப்படைக்க முடியும்.

"இப்போது யுக்ரேனுக்கான ஆயுதங்களை புதிதாக தயாரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்களிடமிருந்து ஆயுதங்களை வாங்கி யுக்ரேனுக்கு கொடுக்க வேண்டும். இது தன் சொந்த ராணுவ கையிருப்பில் இருந்து ஆயுதங்களை வழங்குவதை விட செலவு பிடிக்கக்கூடியது,” என்று மேக்ஸ் பெர்க்மென் குறிப்பிட்டார்.

"கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் ராணுவக் கையிருப்பில் இருந்து ஆயுதங்களை எடுத்து யுக்ரேனுக்கு வழங்கி வந்தன. ஆனால் இப்போது நாங்கள் குறிப்பாக யுக்ரேனுக்காக ஆயுதங்களை தயாரிப்போம். இது எதிர்காலத்தில் யுக்ரேனின் நிலையை பலப்படுத்தும்," என்று அவர் கூறினார்.

பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் ஹைமர் ராக்கெட்டுகள் ஆகியவை அமெரிக்க உதவித் தொகுப்பில் உள்ளன. கூடவே இப்போது யுக்ரேன் சோவியத் கால ஆயுத தொழில்நுட்பத்திற்கு பதிலாக நேட்டோ நாடுகளால் பயன்படுத்தப்படும் ராணுவத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இந்த உதவித்தொகுப்பு காரணமாகவே இது சாத்தியமாகிறது.

"போர் மேலும் தீவிரமாகும் என்ற பயம் காரணமாக அமெரிக்கா நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட ஆயுதங்களை யுக்ரேனுக்கு வழங்கவில்லை என்று கூறப்பட்டது. அது உண்மையல்ல," என்று மேக்ஸ் பெர்க்மென் விளக்குகிறார்.

இந்த அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்த ஆட்களை தனது ராணுவத்தில் சேர்ப்பதுதான் இப்போது யுக்ரேனின் முன் இருக்கும் சவால்.

இதைக் கருத்தில் கொண்டு ராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச வயது 27 லிருந்து 25 ஆக குறைக்கப்படும் புதிய சட்டத்தின் வரைவுக்கு யுக்ரேன் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஐந்து லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்க முடியும் என யுக்ரேன் நம்புகிறது.

2024-ஆம் ஆண்டில் தன் நிலத்தின் மீது கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்வதும், நவீன ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் புதிய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதும் யுக்ரேனின் இலக்காக இருக்க வேண்டும். இதனால் அடுத்த ஆண்டு தான் இழந்த நிலத்தை மீண்டும் கைப்பற்ற ரஷ்யா மீது பெரிய எதிர் தாக்குதலை தொடுக்க முடியும் என்று மேக்ஸ் பெர்க்மென் கூறுகிறார் .

புதினின் திட்டம் என்ன?

யுக்ரேனுக்கான உதவித்தொகுப்பை அங்கீகரிக்க அமெரிக்கா ஆறு மாதங்கள் எடுத்தது. இந்தத் தாமதத்தால் யுக்ரேனிய ராணுவம் பலவீனமடைந்தது.

இந்தத் தாமதத்தை ரஷ்யா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாக லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் போர் வியூக ஆய்வுகள் துறையின் ஆராய்ச்சியாளர் டாக்டர் மரீனா மிரோன் கூறுகிறார்.

"உதவித்தொகுப்பை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் ரஷ்யா நிச்சயமாக பலனடைந்திருக்கிறது. அமெரிக்கா இந்தத்தொகுப்பை அங்கீகரிக்கும் என்று ஜனவரியில் இருந்தே ரஷ்ய செயல்திட்டவாதிகளுக்குத் தெரியும். அதனால் அவர்கள் தங்கள் ராணுவத்தைத் தயார்படுத்த இந்தத் தாமதத்தைப் பயன்படுத்தினர்," என்று அவர் குறிப்பிட்டார்.

"இந்த உதவித்தொகுப்பால் யுக்ரேனுக்கு அதிக பலன் கிடைக்காத அளவிற்கு அதன் ராணுவத்தை பலவீனப்படுத்தும் திசையில் ரஷ்யா செயல்பட்டது,” என்று மிரோன் கூறுகிறார்.

ரஷ்யாவின் ராணுவ உத்தி என்ன?

யுக்ரேனிய ராணுவத்தைப் பல முனைகளில் சிக்க வைக்க ரஷ்யா விரும்புகிறது என்று டாக்டர் மரீனா மிரோன் குறிப்பிட்டார். தற்போது யுக்ரேன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை ராணுவ வீரர்களின் பற்றாக்குறை ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக மேற்கிலிருந்து பெறப்பட்ட அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்த வீரர்கள் தேவைப்படுவார்கள்.

அதனால்தான் ரஷ்ய ராணுவம் பல முனைகளில் தாக்குதல் நடத்தி வருகிறது என்றார் அவர்.

யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கியேவ் மீது தொடர்ச்சியான வெடிகுண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு ரஷ்ய ராணுவம் அந்த நகரைக் கைப்பற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. இது நடந்தால் இந்தப் போர் தொடர்பாக யுக்ரேனின் ஆதரவு நாடுகள் முன் பல கடினமான கேள்விகள் எழும்.

ரஷ்யா கார்கியேவைக் கைப்பற்றி, மற்ற முனைகளில் யுக்ரேனிய ராணுவத்திற்குச் சேதம் விளைவித்தால், மேற்கத்தியத் துருப்புக்களின் உதவியின்றி யுக்ரேன் மீள முடியாது என்று டாக்டர் மரீனா மிரோன் சுட்டிக்காட்டினார்.

இந்தப் போரில் யுக்ரேன் மற்றும் ரஷ்யாவின் ராணுவ உபகரணங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளதாக அவர் நம்புகிறார். வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்கள் பெறப்படுவதாக வரும் செய்திகளை ரஷ்யா மறுத்து வருகிறது. ஆனால் சீனாவிடம் இருந்து அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்களையும் இரானிடம் இருந்து ஏவுகணைகளையும் அது பெறுகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

"ரஷ்யா வெற்றி பெற்றாலும், கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை அது மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு பணம் தேவைப்படும். ராணுவ வெற்றியை அடைவது அரசியல் வெற்றியிலிருந்து மிகவும் மாறுபட்டது. போரில் வெற்றி பெற்றால் அமைதி கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை,” என்று மிரோன் கூறுகிறார்.

உதவியில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு

பெரும்பாலான ஐரோப்பிய ஆதரவாளர்கள் இந்தக்கருத்தை முழுமையாக புரிந்து கொண்டுள்ளனர் என்று பிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் யுக்ரேன் அரசியல் பேராசிரியர் ஓல்கா ஓனுச் கருதுகிறார்.

யுக்ரேன், ரஷ்யாவின் காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு பலியாகியிருப்பதாக லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகள் நம்புகின்றன என்று பேராசிரியர் ஓல்கா ஓனுச் குறிப்பிட்டார். பிரேசில் மற்றும் இந்தியா, அமெரிக்காவின் நட்பு நாடுகளாக இருந்தாலும், யுக்ரேனை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. ஆனால் இப்போது அவர்களின் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது, இதன் பெருமை யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கிக்குச் செல்கிறது.

போர் காரணமாக யுக்ரேனில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். அத்தகைய சூழ்நிலையில் யுக்ரேன் மக்களின் ஆதரவு அவருக்கு இருக்கிறதா என்று அவரது தலைமையின் சட்டபூர்வத்தன்மை மீது கேள்விகள் எழுகின்றன.

ஜெலென்ஸ்கியின் புகழ் சிறிதே குறைந்துள்ளது, ஆனால் இன்று அதிபர் தேர்தல் நடத்தப்பட்டால், அவர் எளிதாக வெற்றி பெறும் அளவிற்கு அவரது புகழ் உள்ளது என்று பேராசிரியர் ஓல்கா ஓனுச் தெரிவித்தார்.

அமெரிக்க உதவித்தொகுப்பு மூலம் அவருக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும். ஆனால் அமெரிக்காவில் தேர்தலுக்குப் பிறகு குடியரசுக் கட்சி வேட்பாளர் அதிபரானால் எதிர்காலத்தில் அவருக்கு அத்தகைய உதவி கிடைக்காமல் போகலாம்

ஜெலென்ஸ்கி மீதான நம்பிக்கை

யுக்ரேனில் போரை பாதிக்கும் பல காரணிகளை நாம் பார்த்தோம். ஆனால் பரந்த உலக அரசியலின் பின்னணியில் அதைப் பார்ப்பதும் முக்கியம்.

ஏப்ரல் 13-ஆம் தேதி இரான், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்தியது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை விட இந்தத் தாக்குதல் மூன்று மடங்கு பெரியதாக இருந்தது, ஆனால் அமெரிக்கா, பிரிட்டன், ஜோர்டன் மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின் காரணமாக இது கிட்டத்தட்ட முறியடிக்கப்பட்டது.

அமெரிக்காவும் இங்கிலாந்தும் இஸ்ரேலுக்கு உதவியதுபோல, ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள யுக்ரேனுக்கு உதவவில்லை என்று யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியதாக, பேராசிரியர் ஓல்கா ஓனுச் குறிப்பிட்டார்.

"அவர் கூறுவது சரிதான். இஸ்ரேலுக்கு அளிக்கப்பட்ட உதவிக்கும் யுக்ரேனுக்கு அளிக்கப்பட்ட உதவிக்கும் வித்தியாசம் உள்ளது. இதேபோன்ற நடவடிக்கையை 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதியும் எடுத்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. யுக்ரேனின் வான்வெளியைப் பாதுகாக்கும் திறன் தங்களிடம் இல்லை என்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நினைத்திருக்கக்கூடும் அல்லது அந்தத் திசையில் நடவடிக்கை எடுக்க அவை விரும்பாமல் இருந்திருக்கக்கூடும்,” என்றார் அவர்.

"ஒவ்வொரு நாளும் ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் பாதிப்புக்கு உள்ளாகும் யுக்ரேனிய மக்கள், ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளால் தடுக்க முடியும் என்பதை அறிவார்கள்," என்று ஓனுச் கூறுகிறார்.

யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் யுக்ரேனுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் என்று அதிபர் ஜெலென்ஸ்கி வாதிட்டு வருகிறார். யுக்ரேனுக்கான உதவி தொடரும் வகையில் மேற்கத்திய நாடுகளுக்கு இந்த செய்தியை தெரிவிப்பதில் அவர் வெற்றி பெற்றாரா?

போருக்குப் பிறகு அமைதி

இந்தச் சாத்தியகூறு போர் குறித்த ஒப்பந்தத்திற்கு வழிவகுக்குமா?

பேராசிரியர் ஓல்கா ஓனுச், யுக்ரேனைச் சேர்ந்தவர். தங்கள் நிலத்தை வேறொரு நாட்டிற்கு விட்டுக்கொடுக்கும் சாத்தியக்கூறு குறித்து நாட்டின் எந்தவொரு குடிமகனும் எப்படி பதில் அளிப்பாரோ, அவரது பதிலும் அதுபோலவே இருந்தது.

"நிலத்தை இழப்பதன் மூலம் அமைதியை அடையலாம் என்று நினைப்பவர்களின் சிந்தனை தவறு. இரண்டு விஷயங்கள் நடக்கலாம். போர் சிலகாலம் நிற்கலாம், ஆனால் அது முடிவடையாது. ரஷ்யா மீண்டும் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும். முன்பு பலமுறை இதேபோல அது செய்திருக்கிறது,” என்று அவர் சொன்னார்.

"நிலத்திற்கு ஈடாக ஏதேனும் ஒப்பந்தம் யுக்ரேன் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டால், அது நாட்டிற்குள் முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும். ரஷ்ய ஆக்கிரமிப்பு மண்டலத்தில் ஏற்கனவே இதுபோன்ற மோதல்கள் நடந்து வருகின்றன. ஒப்பந்தம் நியாயமானதாக இல்லாவிட்டால், சமாதானம் ஏற்படாது," என்று ஓனுச் தெரிவித்தார்.

எனவே இப்போது நமது முக்கிய கேள்விக்குத் திரும்புவோம் - யுக்ரேனுக்குச் சரியான நேரத்தில் அமெரிக்க ஆயுதங்கள் கிடைத்தால், அது ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்க முடியுமா?

பல வழிகளில் அமெரிக்க உதவி கிடைப்பது தாமதமானது. தொடர்ச்சியான ரஷ்ய தாக்குதல்கள் யுக்ரேனிய மக்களின் மன உறுதியை மோசமாக பாதித்துள்ளது. யுக்ரேனிய ராணுவம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், இந்த ஆயுதங்கள் யுக்ரேனை எவ்வளவு விரைவாக சென்றடைகின்றன மற்றும் போர்க்களத்தில் எவ்வளவு திறம்பட பயன்படுத்தப்படுகின்றன என்பதைப்பொருத்து யுக்ரேனின் வெற்றிவாய்ப்பு இருக்கும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)