பேஜர், வாக்கிடாக்கி வெடிப்பை தொடர்ந்து வான்வழித் தாக்குதல் - ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேலின் உத்தி என்ன?

    • எழுதியவர், பால் ஆடம்ஸ்
    • பதவி, தூதாண்மை செய்தியாளர்

லெபனான் முழுவதும் ஹெஸ்பொலாவின் தகவல் தொடர்பு சாதனங்கள் வெடித்த சம்பவம் நடைபெற்று இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள், இந்த சக்தி வாய்ந்த, இரான் ஆதரவு பெற்ற ஷியா ராணுவக் குழு தொடர்ச்சியான பின்னடைவுகளை சந்தித்து வருகிறது.

அதன் தொலை தொடர்பு கட்டமைப்பு சீர்குலைந்து, போராளிகள் காயமடைந்து, தலைமை படுகொலை செய்யப்பட்டதுடன், அதன் ராணுவ உள்கட்டமைப்பும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. ஹெஸ்பொலா கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இப்போது இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலண்ட் இந்த தாக்குதல் "தீவிரடைகிறது" என்று கூறுகிறார்.

ஆனால் இது ஆபத்து அதிகம் கொண்ட உத்தியாகும். ஹெஸ்பொலாவுக்கு பதிலடி கொடுக்கும் திறன் உள்ளது என்பதை மறந்துவிட முடியாது.

வடக்கு இஸ்ரேல் முழுவதும் தொடர்ந்து எச்சரிக்கை ஒலிகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. யோவ் கலண்ட் இஸ்ரேலியர்களிடம் "அமைதியும், ஒழுக்கமும் கொண்டு உள்நாட்டு முன்கள கட்டளை (Home Front Command எனப்படும் அவசர கால பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவுறுத்தும் ராணுவக் குழு) வழிகாட்டுதல்களுக்கு முழு கீழ்ப்படிதலை வெளிப்படுத்துமாறு" கேட்டுக்கொண்டார். இவை அனைத்தையும், திபேரியாஸுக்கு மேற்கே சிறிது தொலைவில் உள்ள கிவத் அவ்னி என்ற இடத்திற்கு நாங்கள் சென்றபோது காண முடிந்தது.

திங்கட்கிழமை மதியம் டேவிட் இட்சாக்கிற்கு சொந்தமான வீட்டின் கூரையை ஒரு ராக்கெட் கிழித்துச் சென்ற இடத்தை அவர் எங்களுக்குக் காட்டினார்.

சைரன்கள் ஒலிக்கும் போது, தாக்குதல் நடைபெறுவதற்கு சில விநாடிகளுக்கு முன்பு டேவிட் தனது மனைவி மற்றும் ஆறு வயது மகளை வீட்டின் பாதுகாப்பு அறைக்குள் கொண்டு சென்றார்.

"வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே ஒரு மீட்டர் தான் இருந்தது," என்று டேவிட் கூறினார். பாதுகாப்பு அறைக்கும் அவரது மகளின் படுக்கை அறையில் ஏற்பட்ட துளைக்கும் இடையேயான குறுகிய தூரத்தைக் காட்டினார்.

லெபனானின் மக்கள் மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை என்று அவர் கூறினார், ஆனால் ஹெஸ்பொலா காரணமின்றி போரைத் தொடங்கியதாகக் கூறுகிறார்.

"எனவே இப்போது நாங்கள் திருப்பித் தாக்குகிறோம். அது சரியாகிவிடும்." என்கிறார் அவர்.

தொடரும் வான்வழித் தாக்குதல்

ஆனால் கிவத் அவ்னி லெபனான் எல்லையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய மண்டலம் என்று ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு முன்பு அதிகாரிகளால் நிறுவப்பட்ட இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது.

ஒரு மணி நேரம் கழித்து, அருகிலுள்ள கிப்புட்ஸ் லவிக்கு நாங்கள் வந்தடைந்தோம். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு கடந்த ஓராண்டாக இதுவே இருப்பிடமாக உள்ளது. அப்போது அங்கு சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின.

வானத்தில் ராக்கெட்டுகள் தென்பட்டன. நாங்கள் நிலத்துக்கு அடியில் உள்ள மறைவிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அந்த இடம் குழந்தைகள் மற்றும் அவர்களின் கலைப் படைப்புகளால் நிரம்பியிருந்தது. அங்கு சென்ற போது, தொடர்ந்து அதிர்வு ஒலிகளைக் கேட்டோம்.

ஒரு மணி நேரம் கழித்து, மேலும் எச்சரிக்கை ஒலிகள் கேட்டன. மற்றொரு பாதுக்காப்பான அறைக்கு சென்றோம், மீண்டும் அதிர்வு ஒலிகளைக் கேட்டோம்.

நிலைமை சமீபத்தில் தீவிரமடைவதற்கு முன்பே, ஹெஸ்பொலா இஸ்ரேலுக்குள் நெடுந்தொலைவில் ராக்கெட்டுகளை ஏவிக் கொண்டிருந்தது. இப்போது வட இஸ்ரேலின் இன்னும் பெரிய அளவிலான பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.

இவை அனைத்தும் இஸ்ரேல் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒரு அவசர உணர்வை ஏற்படுத்துகின்றன.

லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் அறிவுறுத்தல்

பாதுகாப்புத்துறை தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலின் வடக்கில் அதிகார சமநிலையை மாற்றிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

"நாம் சிக்கலான நாட்களை எதிர்கொள்கிறோம்," என்று அவர் எச்சரித்தார்.

"நாங்கள் அச்சுறுத்தலுக்காக காத்திருக்கவில்லை," என்று அவர் கூறினார். "நாங்கள் அதை முன்கூட்டியே கணிக்கிறோம். எங்கு வேண்டுமானாலும், எந்த அரங்கிலும், எந்த நேரத்திலும். நாங்கள் மூத்த அதிகாரிகளை, பயங்கரவாதிகளை, ஏவுகணைகளை அழிக்கிறோம்." என்றார் அவர்.

இஸ்ரேல் ராணுவம், வடக்கு எல்லையிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீண்டும் அங்கு குடியமர்த்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் நம்பிக்கையில், ஹெஸ்பொலாவை தொடர்ந்து பின்னடையச் செய்ய உறுதிபூண்டுள்ளது.

திங்கட்கிழமை காலை, அது மேலும் தீவிரமடைந்தது. ஹெஸ்பொலா தனது பெரிய ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் இடங்களை விட்டு வெளியேறுமாறு லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

வான்வழித் தாக்குதலில் கவனம் செலுத்தும் இஸ்ரேல்

ஒரு வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, மாற்றியமைக்கப்பட்ட ரஷ்ய க்ரூயிஸ் ஏவுகணையை அழித்ததாக இஸ்ரேல் கூறும் வான்வழித் தாக்குதலின் வீடியோவை பத்திரிகையாளர்களுக்கு ராணுவ அதிகாரிகள் காட்டினர்.

மற்றொரு "விளக்க காட்சியில்", தெற்கு லெபனானில் உள்ள ஒரு கிராமத்தின் முப்பரிமாண மாதிரியைக் காட்டினர். அது மறைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களால் நிறைந்திருந்தது.

இந்த முப்பரிமாண மாதிரி மற்றும் குடிமக்களை வெளியேறுமாறு அறிவுறுத்துவது அனைத்தும் காஸாவில் இஸ்ரேலின் செயல்களை விளக்குவதற்கான முயற்சியின் எதிரொலியாகவே இருந்தன.

இந்த எச்சரிக்கைகள் ராணுவம் தென் லெபனானில் தரை தாக்குதலுக்கு தயாராக இருப்பதைக் குறிக்கவில்லை என்று ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

"நாங்கள் தற்போது வான்வழி தாக்குதலில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்," என்று ஒரு மூத்த அதிகாரி திங்கட்கிழமை கூறினார்.

தற்போதைக்கு, வான்வழியாக என்ன செய்ய முடியும் என்பதில் மட்டுமே இஸ்ரேல் கவனம் செலுத்தும் என்று தெரிகிறது. விமானப்படை இதுவரை தனது திறன்களில் ஒரு பகுதியை மட்டுமே காட்டியுள்ளதாக இஸ்ரேலின் சேனல் 12-ல் பேசிய முன்னாள் தளபதி ஒருவர் கூறினார்.

ஆனால், விமானங்கள் மூலம் முழு கிராமங்களையும் அழிப்பது சாத்தியமாக தோன்றினாலும், வானிலிருந்து இஸ்ரேலால் சாதிக்க முடிவது குறைவே.

ஏதோ ஒரு கட்டத்தில், எவ்வளவு சிறிதாக இருந்தாலும், தரை வழி தாக்குதல் தவிர்க்க முடியாததாகத் தெரிகிறது.

ஆனால் அது புத்திசாலித்தனமானதா?

"அதுதான் ஹெஸ்போலா விரும்புவது," என்று ஜெருசலேம் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார மையத்தின் மூத்த ஆய்வாளர் டாக்டர் ஜாக்ஸ் நேரியா i24 News என்ற ஊடகத்திடம் தெரிவித்தார்.

"தெற்கு லெபனானில் வசிப்பவர்கள் ஹெஸ்போலா வீரர்கள்," என்று அவர் கூறினார். "எனவே நமக்கு தெரியாத சூழல்களில், நமக்குத் தெரியாத ஒரு பெரும் கூட்டத்திற்கு எதிராகப் போராட வேண்டியிருக்கும்." என்றார் அவர்.

கடந்த வாரம் தனது ஆவேசமான உரையில், ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, தெற்கு லெபனானில் நடுநிலை இடையக மண்டலத்தை (buffer zone) உருவாக்க முயற்சிக்குமாறு இஸ்ரேலுக்கு சவால் விட்டார். இதை இஸ்ரேலின் வடக்கு ராணுவக் குழுவின் தலைவர் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அத்தகைய முயற்சி இஸ்ரேலுக்கு "கடுமையான விளைவுகளை" ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.

தற்போது, ராஜதந்திர தீர்வுக்கான அறிகுறி எதுவும் இல்லை. இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் மோதலைத் தணிக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் முடங்கிப் போயுள்ளன. காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துள்ளன.

இது சமமானவர்களின் போராட்டம் அல்ல. இஸ்ரேலால் ஹெஸ்பொலாவை வென்றுவிட முடியும் என்பது தெரியும்.

ஒவ்வொரு தரப்பும் மற்றவர் மீது ஏற்படுத்தக்கூடிய அழிவு மற்றும் துன்புறுத்தலின் அளவில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

ஆனால் இந்த மோதல் எங்கு செல்கிறது, அது முடிவடைவதற்கு முன் எவ்வளவு மோசமாகும் என்பது யாருக்கும் தெரியாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)