டெல்லியில் 10 லட்சம் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவை மாற்றியமைத்த உச்சநீதிமன்றம்

    • எழுதியவர், செரிலான் மோலன்
    • பதவி, பிபிசி நியூஸ், மும்பை

விலங்குகள் நல ஆர்வலர்களின் பரவலான எதிர்ப்புகளை அடுத்து டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை இந்திய உச்சநீதிமன்றம் மாற்றியமைத்துள்ளது.

தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு கருத்தடை செய்யப்பட்ட பின்னர் அவை விடுவிக்கப்பட வேண்டும் என்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது. ஆனால், ரேபிஸ் நோய் அல்லது ஆக்ரோஷமான நடத்தை கொண்ட நாய்களுக்கு தடுப்பூசி போட்டு காப்பகங்களில் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு, பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிப்பதை நீதிமன்றம் தடை செய்து, இதற்காக பிரத்யேக இடங்களை அமைக்க உத்தரவிட்டிருந்தது.

டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், "நாய்க்கடியால் ரேபிஸ் நோய் பரவல் அதிகரிப்பு" ஏற்படுவது குறித்து ஆகஸ்ட் 11 அன்று, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கவலை தெரிவித்திருந்தது.

டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளான நொய்டா, காசியாபாத், குருகிராம் ஆகியவற்றிலும் இவை அதிகரித்து வருவதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கோடிக்கணக்கான தெரு நாய்கள் உள்ளன, மேலும் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகில் ரேபிஸ் நோயால் ஏற்படும் மொத்த மரணங்களில் 36% இந்தியாவில் நிகழ்கின்றன.

நாய்களின் அச்சுறுத்தலை சமாளிக்க, தலைநகரம் மற்றும் அதன் புறநகர்களில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 11ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்காக எட்டு வாரங்களில் காப்பகங்களை அமைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

தெரு நாய்களுக்கு காப்பகங்களில் கருத்தடை செய்யப்பட்டு, பின்னர் அவை பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடுவிக்கப்பட வேண்டும் என்ற தற்போதைய விதிகளுக்கு மாறாக இந்த உத்தரவு இருந்தது. இதனால், விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சட்டரீதியாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அவர்கள் தடுப்பூசி மற்றும் கருத்தடை போன்ற மனிதநேய தீர்வுகளை வலியுறுத்தினர். காப்பகங்களில் அனைத்து நாய்களையும் அடைப்பது, அதிகப்படியான நெரிசல் மற்றும் கொல்லுதல் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

இந்த எதிர்ப்புகளை அடுத்து, உச்சநீதிமன்றம் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைத்து வழக்கை விசாரித்தது.

உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

வெள்ளிக்கிழமையன்று பிறப்பித்த உத்தரவில், அனைத்து தெரு நாய்களையும் அடைக்கும் முந்தைய உத்தரவை நிறுத்தி வைத்த நீதிமன்றம், ஆக்ரோஷமற்ற மற்றும் நோயற்ற நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, கருத்தடை செய்த பின்னர் அவற்றை பிடிக்கப்பட்ட இடத்தில் விடுவிக்கலாம் என்று உத்தரவிட்டது.

விலங்கு ஆர்வலர்கள் மாநகராட்சிகளில் விண்ணப்பித்து தெரு நாய்களை தத்தெடுக்கலாம், ஆனால் அவை தெருவுக்கு திருப்பி அனுப்பப்படக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது.

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விலங்கு நல அமைப்புகள் நீதிமன்ற உத்தரவுகளில் தலையிடக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது.

மேலும், பல்வேறு மாநிலங்களில் நிலுவையில் உள்ள இதே போன்ற வழக்குகளை விசாரித்து, தெரு நாய்கள் குறித்து தேசிய கொள்கையை உருவாக்குவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த தீர்ப்பை விலங்குகள் நல அமைப்புகள் வரவேற்றுள்ளன.

ஹ்யூமேன் வேர்ல்டு ஃபார் ஆனிமல்ஸ் இந்தியாவின் இயக்குநர் அலோக்பர்னா செங்குப்தா, இது "நியாயமான, கட்டமைக்கப்பட்ட மற்றும் மனிதாபிமான" தீர்ப்பு என்றார்.

இருப்பினும், இந்த உத்தரவு தவறாகப் பயன்படுத்தப்பட்டு, தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாகவோ, நியாயமற்ற முறையிலோ நாய்கள் பிடிக்கப்பட்டு அடைக்கப்படுவதை தடுக்க, "ஆக்ரோஷமான நாய்கள்" என்பதை அறிவியல் அடிப்படையில் வரையறுக்க தெளிவான அளவுகோல்கள் தேவை என்று அவர் கூறினார்,

'வரவேற்கத்தக்க முடிவு'

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சென்னையை சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் சாய் விக்னேஷ், "இது மிகவும் வரவேற்கத்தக்கது. தெரு நாய்களை காப்பகங்களில் அடைப்பது அறிவியல்பூர்வமான தீர்வாக இருக்க முடியாது. எல்லா தெருநாய்களையும் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்பது பகுத்தறிவான முடிவாக இருக்காது. நாய்களின் எண்ணிக்கையை குறைக்க அவற்றுக்கு கருத்தடை செய்வதே தீர்வாக அமையும். ரேபிஸ் தடுப்பூசியும் அவற்றுக்கு செலுத்த வேண்டும்" என்றார்.

குற்றச் செயல்கள் நடக்கும்போது அவற்றை நாய்கள் தடுத்த சம்பவங்களும் உள்ளதாக குறிப்பிடுகிறார் சாய் விக்னேஷ். இவர் 'ஆல்மைட்டி அனிமல் கேர் டிரஸ்ட்' எனும் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.

நாட்டில் நடக்கும் நாய்க்கடி சம்பவங்கள் ஊடகங்களில் மிகைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்ற விதிகளுக்கு மாறாக உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு இருந்ததாகவும் தற்போது அது மாற்றப்பட்டுள்ளது சிறந்த முடிவு என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு