டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து ஈலோன் மஸ்க் வெளியேறியது ஏன்?
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க் அமெரிக்காவின் டோஜ் (DOGE) குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகும் நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார். மஸ்க் இந்த பதவியிலிருந்து விலகியது ஏன்?
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, டொனால்ட் டிரம்புக்கு ஈலோன் மஸ்க் ஆதரவைத் தெரிவித்து வந்தார். அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றபின் மஸ்கை டோஜ் எனப்படும் செலவுக் குறைப்பு பணிக்குழுவை வழிநடத்தும் சிறப்புப் பதவியில் நியமித்தார்.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 130 நாட்கள் அரசு வேலையில் பணியாற்ற மஸ்க் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான அவரது பதவிக்காலம் மே மாதம் இறுதியுடன் நிறைவடைகிறது.
மஸ்கின் பதவி தற்காலிகமானதாகவும், அவரது பதவி விலகல் எதிர்பார்த்ததாகவும் இருந்தது. ஆனால், அவரது பதவி விலகல் முடிவு டிரம்ப் அரசின் மசோதாவை விமர்சித்த பிறகு வந்துள்ளது.
பல டிரில்லியன் டாலர் வரி விலக்குகள் தரும் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் டிரம்பின் பட்ஜெட் மசோதாவால் "ஏமாற்றம்" அடைந்ததாக மஸ்க் அண்மையில் கூறியிருந்தார்.
மஸ்கின் அரசியல் பிரவேசம் அவரை டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராக மாற்றியது. அதேநேரத்தில், அவரின் டெஸ்லா மின்சார கார் நிறுவனம் பின்னடைவைச் சந்தித்தது.
ஈலோன் மஸ்க் கடந்த மாதம் முதலீட்டாளர்களிடம் டோஜுக்கு ஒதுக்கும் நேரம் "கணிசமாகக் குறையும், டெஸ்லாவுக்கு அதிக நேரத்தை ஒதுக்குவேன்" என கூறினார்.
இந்நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது, "ஒரு சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக் காலம் முடிவடையும் நிலையில், வீண் செலவுகளைக் குறைக்க வாய்ப்பளித்த அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என எக்ஸ் தளத்தில் மஸ்க் பதிவிட்டுள்ளார். மேலும் டோஜ் மிஷன் காலப்போக்கில் இன்னும் வலுவடையவே செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



