பாகிஸ்தான்: இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை - என்ன காரணம்?
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022இல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏற்கெனவே மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
செவ்வாயன்று அவர் நாட்டின் ரகசியங்களைக் கசியவிட்டதற்காக 10 ஆண்டுகள் தண்டனை பெற்றார். புதன்கிழமையன்றும் ஓர் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்டுகள் வழங்கப்பட்டது.
தனக்கு எதிரான பல வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.
"சைஃபர் வழக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தால் இரண்டு முறை செல்லாது என அறிவிக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட ஒரு வழக்கு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இரண்டு முறையும் இந்த வழக்கு அரசமைப்பு மற்றும் சட்டத்தை மீறி நடத்தப்பட்டது. இந்த வழக்கு பொய், மிரட்டல், சதி, வஞ்சகத்தால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அதனால்தான் உச்சநீதிமன்றமும் எனக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கியது.
இப்போது முக்கிய சாட்சிகளின் வாக்குமூலத்தில் எனக்கும், ஷா மெஹ்மூத்துக்கும் எதிராக எதுவும் வெளிவராததால், இதன் பின்னணியில் உள்ளவர்கள் பீதியடைந்துவிட்டனர்.
மேலும் சட்ட விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் இதை விரைவாக முடித்துவிட நினைக்கிறார்கள்," என இம்ரான் கானின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



