You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேற்கு வங்கத்தில் 3 துறவிகளை அடித்து உதைத்த பொதுமக்கள் - சிறுமிகள் பயந்து ஓடியது ஏன்?
மகாராஷ்டிர மாநிலம் பால்காட் மாவட்டத்தில் ‘குழந்தை கடத்தல்காரர்கள்’ என்ற சந்தேகத்தின் பேரில் துறவிகளும், அவர்களது ஓட்டுனரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இப்போது மேற்கு வங்கத்தில் உள்ள புருலியாவிலும் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மகர சங்கராந்தியை முன்னிட்டு கங்காசாகருக்குச் சென்ற 3 துறவிகளை அப்பகுதி மக்கள் அடித்து உதைத்துள்ளனர். சிறு குழந்தைகளை கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு, அவர்களைக் கடுமையாக தாக்கி, அவர்களின் ஆடைகளை கிழித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை அப்பகுதி மக்களிடம் இருந்து மீட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இதுவரை 12 பேரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் ஜனவரி 11-ஆம் தேதி வியாழக்கிழமை நடந்துள்ளது. ஆனால், வெள்ளிக்கிழமை மாலை முதல் இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், சிலர் துறவிகளின் ஆடைகளை கிழித்து அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
இந்தச் சம்பவம் அரசியலாக்கப்பட்டதா?
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் அரசைக் குறிவைத்து பா.ஜ.க கடுமையாக விமர்சித்து வருகிறது. இருப்பினும் பா.ஜ.க.வின் விமர்சனத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிராகரிதுவிட்டது.
“கிராம மக்கள் சந்தேகத்தின் பேரில் துறவிகளை அடித்தனர். இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த விஷயத்தில் பா.ஜ.க மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது," என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான சஷி பஞ்சா கூறினார்.
இது தொடர்பாக எந்த தரப்பினரும் போலீசில் புகார் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, இந்த துறவிகள் ஒரு இடத்திற்குச் செல்வதற்கான வழியை மூன்று சிறுமிகளிடம் கேட்டுள்ளனர். ஆனால், மொழி புரியாமல் அந்தச் சிறுமிகள் பயந்து அலறியடித்து ஓடினர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் துறவிகளை சுற்றி வளைத்து அடித்தனர். சிறிது நேரம் கழித்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை மீட்டனர். அவர்கள் காசிப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு உள்ளூர் கிராமிய மருத்துவமனையில் அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் சரியானவை என கண்டறியப்பட்டன.
போலீசார் என்ன சொன்னார்கள்?
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக புருலியா காவல் கண்காணிப்பாளர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், மற்றவர்களை கைது செய்ய தேடி வருவதாகவும் அபிஜித் பானர்ஜி தெரிவித்தார்.
“கங்காசாகர் செல்லும் வழியில் துறவிகள் நடுவழியில் வழி தவறிவிட்டனர். அவர்கள் ஒரு இடத்தில் நின்று, மூன்று சிறுமிகளிடம் கங்காசாகர் செல்லும் வழியைக் கேட்டார்கள். ஆனால் இந்த பெண்கள் மொழி புரியாததால் பயந்துள்ளளனர். இந்த துறவிகளைப் பார்த்து அவர்கள் பயந்து அலறினர்,'' என்றார்.
"ஆனால் துறவிகள் இந்த சிறுமிகளை துன்புறுத்தியதாக உள்ளூர்வாசிகள் உணர்ந்தனர். அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என நினைத்தனர். அது தான் அவர்கள் தாக்கப்பட்டதற்கான காரணம். இந்நிலையில், மூன்று சிறுமிகளின் பெற்றோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் துறவிகளுக்கு எதிராக எந்த புகாரையும் பதிவு செய்யவில்லை," என்று அந்த காவல் அதிகாரி கூறினார்.
அதன்பிறகு, துறவிகள் பாதுகாப்பாக கங்காசாகருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
பாஜக என்ன சொல்கிறது?
சமீபத்திய ட்வீட்களில், இந்த சம்பவம் தொடர்பாக மம்தா பானர்ஜி அரசாங்கத்தை மாநில பா.ஜ.க விமர்சித்துள்ளது. “இதற்கு முதல்வர் வெட்கப்பட வேண்டும்” என்று இந்த சம்பவம் குறித்து பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான அமித் மாளவியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“பால்காட்டில் நடந்ததைப் போன்ற ஒரு சம்பவம் மேற்கு வங்கத்தின் புருலியாவில் நடந்துள்ளது. வங்காளத்தில் இந்துவாக இருப்பது குற்றமா? மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு துறவிகளும், சாதுக்களும் கங்காசாகர் செல்ல விரும்பினர். ஆனால், அவர்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டனர்.
"மகான்களை தாக்கியவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள். மம்தா பானர்ஜி ஆட்சியில் ஷாஜகான் ஷேக் போன்ற பயங்கரவாதிகளுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், துறவிகள் அடிக்கப்படுகிறார்கள்,” என்றும் மேற்கு வங்கத்தில் இந்துக்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பால்காட் சம்பவத்துடன் ஒப்பீடு
2020-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் பால்காட்டில் உள்ள ஒரு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் கும்பலாகச் சேர்ந்து இரண்டு சாதுக்களையும் அவர்களது ஓட்டுநரையும் தடியால் அடித்துக் கொன்றனர். இது தொடர்பான வழக்கின் விசாரணை ஏப்ரல் 21, 2020 அன்று சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தைகளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த துறவிகள் கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் துறவிகள், மருத்துவர்கள், போலீசார் என்ற பெயரில் ஒரு கும்பல் குழந்தைகளை கடத்துவதாக வதந்தி பரவியது. இந்த காரணத்திற்காகவே, துறவிகளையும் டிரைவரையும் உள்ளூர் மக்கள் அடங்கிய ஒரு கும்பல் தடிகளால் அடித்துக் கொன்றது.
இறந்தவர்களின் எச்சங்களை காரில் சேகரிக்க மூன்று பேர் சூரத் சென்றனர். பால்காட் மாவட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக காசா காவல் நிலையத்தில் மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது. காசா காவல் நிலையத்தில் இருந்து சில காவலர்களை மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், 35க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அரசால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)