You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாய்மைக்கும் வேலைக்கும் நடுவே போராடும் பெண்கள்: குழந்தை பெற்றுக்கொள்ள சரியான வயது எது?
- எழுதியவர், சுசிலா சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஆண்கள் தந்தையாகத் தகுதி பெறும் குறைந்த பட்ச வயது குறித்து எப்போதாவது கேள்விப்பட்டுளோமா? இல்லை.
ஆனால், ஒரு பெண் எந்த வயதில் தாயாக வேண்டும் என்பது குறித்து அதிகம் பேசப்படுகிறது.
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் சமீபத்திய பேச்சு காரணமாக இந்தக் கேள்வி மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.
கௌஹாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், "பெண்கள் தாயாவதற்கு 22 முதல் 30 வயது தான் சிறந்த காலம். இதைப் பெண்கள் பின்பற்றினால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நல்லது" என்றார்.
மாநிலத்தில் தாய் மற்றும் குழந்தையின் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் முயற்சிகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு பேசினார்.
தாய் மற்றும் குழந்தை இறப்பு அதிகரிப்பதற்கு இளம்பருவ திருமணம் மற்றும் கர்ப்பம் ஒரு முக்கிய காரணம் என்கிறார் அவர்.
"மைனர் பெண்களின் கட்டாயத் திருமணம் மற்றும் அவர்களின் இள வயது கர்ப்பம் பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் பெண்கள் தங்கள் திருமணத்தை அதிக காலம் தாமதப்படுத்தக்கூடாது என்பதும் முக்கியம். கடவுள் நம் உடலை, வெவ்வேறு வயதில் வெவ்வேறு விஷயங்களைச் செய்யுமாறு வடிவமைத்துள்ளார்," என்று அவர் கூறினார்.
30 வயதை எட்டும் பெண்கள் கூடிய விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் சர்மா கூறினார்.
இதையடுத்து, ஒரு பெண் எந்த வயதில் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்பது பற்றிய விவாதம் தொடங்கியது.
விவாதம் தொடங்கியது எப்படி?
ஒரு பக்கம், ஒரு பெண்ணுக்கு தன் உடலின் மீது உரிமை உண்டு, அதை முடிவெடுக்க அவளுக்கு முழு உரிமை உண்டு. அதாவது, அவர் எப்போது தாயாக வேண்டும், எப்போது வரை தள்ளிப்போடலாம் என்பதை அவரே முடிவு செய்வார் என்னும் வாதம்.
பெண்ணியவாதிகள் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் இந்தப் பேச்சை விமர்சித்துள்ளனர். எந்தவொரு நபரும், அவர் எந்தப் பதவியில் இருந்தாலும், எந்த வயதில் ஒரு பெண் தாயாக வேண்டும் என்று சொல்ல அவருக்கு உரிமை இல்லை என்று கூறியுள்ளனர்.
இருப்பினும், சில மருத்துவர்கள், ஒரு பெண் தாயாக மாறுவதற்கான சரியான வயது 20 முதல் 30 வயது வரை தான் என்றும் இதற்கான மருத்துவ காரணங்களையும் கூறுகிறார்கள்.
ஒரு பெண் ஒரு குறிப்பிட்ட வயதில் தாயானால், அது அவளுடைய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மகப்பேறு மருத்துவர் ஷாலினி அகர்வால் கூறுகிறார். ஏனெனில் ஒரு வயதுக்குப் பிறகு பெண்ணின் உடலில் கரு முட்டை உற்பத்தி குறைகிறது.
“30 வயதிற்கு உட்பட்ட ஒரு பெண்ணுக்கு கரு முட்டைகளின் எண்ணிக்கை நன்றாக இருக்கிறது. அவரால் கருத்தரிக்க முடிகிறது, ஆனால் 30 வயதிற்குப் பிறகு, பெண்களின் கரு முட்டைகள் குறையத் தொடங்குகின்றன. மேலும் 35 வயதுக்குப் பிறகு, அவற்றின் எண்ணிக்கை குறைகிறது. இவற்றின் தரம் குறைந்து, இதனால் பிறக்கும் குழந்தைக்கு ஏதேனும் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.
இத்தகைய சூழ்நிலையில், ஒரு பெண் தாயாக வேண்டும் என்று கருதினால், அவர் அதிகபட்சமாக 35 வயதுக்குள் தாயாக வேண்டும், ஏனென்றால் அதற்குப் பிறகு குழந்தையின்மை பிரச்னைகள் இருக்கலாம்.
“தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், ஆனால் தாய்மைக்கும் தொழிலுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும்,” என்றும் ஷாலினி அகர்வால் கூறுகிறார்.
தாய்மையா? தொழிலா?
இதுகுறித்து சமூக ஆய்வு மையத்தின் இயக்குநரும், பெண்கள் உரிமை ஆர்வலருமான ரஞ்சனா குமாரி கூறுகையில், இதுகுறித்து எந்த மருத்துவரும், நிபுணரும் ஆலோசனை கூறலாம், ஆனால், இந்த விவகாரத்தில் அரசியல்வாதி பேசுவது கேலிக்கூத்தானது, என்றார்.
அவர், “ஐடி, வங்கி மற்றும் சுற்றுலாத் துறையில் பணிபுரியும் பெண்களைக் கொண்டு நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். அந்தப் பெண்களுக்கு பெரிய பதவிகள் வழங்கப்பட்டாலும், அவர்கள் அதை ஏற்கவில்லை. ஏனென்றால் கூடவே அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் எனில், வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையில் சமநிலையைப் பராமரிப்பது கடினம்,” என்றார்.
அப்படியானால் குடும்பம் மற்றும் சமூகப் பொறுப்புகள் தான் பெண்களுக்கு முதன்மையானதா என்ற கேள்வி எழுகிறது?
இந்தியாவில், ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது ஒரு பெண்ணின் பொறுப்பாகக் கருதப்படுகிறது. சமுதாயத்தில் கூட்டுப் பொறுப்பு எனும் கருத்தே இல்லை.
“தற்காலத்தில் சில பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை அல்லது தாமதமாக திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். இது சமுதாய அங்கீகாரம் பெற வேண்டிய கருத்தாகவே நான் கருதுகிறேன்,” என்று ரஞ்சனா குமாரி கூறுகிறார்.
"ஒருபுறம், எப்போது வேண்டுமானாலும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஏன் அவர்களால் சுதந்திரமாக முடிவெடுக்க முடியாது?" என்ற கருத்து உள்ளது.
மறுபுறம், பருவநிலை மாற்றம், கார்ப்பரேட் துறை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைப் பெண்களின் கண்ணோட்டத்தில் நோக்கும் பத்திரிகையாளர் அதிதி கபூர், ஒரு பெண்ணுக்கு குழந்தையையும் பெற்றுக்கொண்டு தொழிலையும் செய்யும் இரட்டைச் சுமை உள்ளது என்று கூறுகிறார். இவ்வாறான நிலையில் அவர்களுக்கு உதவக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது என்கிறார் அவர்.
“பெண்கள் குழந்தைகளைப் பெறுவதற்கு உயிரியல் ரீதியான ஓர் அழுத்தம் உள்ளது. ஆண்களுக்கான மகப்பேறு விடுப்பு பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் வந்தது. அரசாங்கப் பணிகளில் இது 15 நாட்கள் இருந்தாலும், தனியார் துறையில், அது குறைவாகவோ அல்லது இல்லவே இல்லாமலோ தான் உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், பெண்களின் ஒத்துழைப்பிற்காக சில வசதிகளைப் பலப்படுத்த வேண்டும். இதில் மத்திய, மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்கள், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்களிக்கிறார்கள்.
இந்தக் கருத்தை முன்னெடுத்துச் செல்லும் டாக்டர் சுசித்ரா தல்வி, "ஒரு தாய் ஒழுங்கமைக்கப்பட்ட அல்லது அமைப்புசாரா துறையில் பணிபுரிந்தாலும், அவருடைய குழந்தையைப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
அதேநேரம் பெண்களுக்கு வேலை பாதுகாப்பு இருக்க வேண்டும். வீட்டில் பொறுப்புகள் கணவன் மனைவியிடையே பகிரப்பட வேண்டும். காரணம் குழந்தைகள் தாய்க்கு மட்டும் குழந்தைகள் அல்லர். மகப்பேறு விடுப்பு காலம் முடிந்த பிறகும் குழந்தையின் பொறுப்பு உள்ளது.
பொருளாதாரத்தில் மகளிரின் பங்கு
இந்தியாவில் பணிபுரியும் பெண்கள் ஒவ்வொரு துறையிலும் தங்கள் திறமை மற்றும் அர்ப்பணிப்புடன் முன்னேறி வருகிறார்கள், மேலும் பொருளாதாரத்தில் தங்கள் பங்களிப்பையும் அதிகரித்து வருகின்றனர்.
இந்திய தொழில் கூட்டமைப்பு, CII இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையின்படி, இந்தியாவில் 432 மில்லியன் பெண்கள் பணிபுரியும் வயதில் உள்ளனர், அவர்களில் 343 மில்லியன் பெண்கள் அமைப்புசாரா துறையில் பணிபுரிகின்றனர்.
பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட்டால், 2025ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 770 பில்லியன் டாலர் அதிகரிக்கும் என மெக்கின்சி குளோபல் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
தற்சமயம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவர்களின் பங்கு 18%. இருப்பினும், அமைப்புசாரா துறையில் பெண்களின் பங்களிப்பையும் சேர்த்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அவர்களின் பங்கு மிக அதிகமாக இருக்கும் என்று பெண் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேநேரத்தில், கிராம அளவிலும் பெண்கள் பொருளாதார ரீதியாகத் திறன் பெற்று வருகிறார்கள். பஞ்சாயத்து அளவில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறாது. பல பெண்கள் ஸ்டார்ட் அப் துறையில் முன்னேறி வந்துள்ளனர்.
சமுதாய மாற்றம்
டாக்டர் சுசித்ரா தல்வி கூறுகையில், சமூகத்தில் ஒரு பெண் திருமணம் செய்துகொள்வது மற்றும் குழந்தைகளைப் பெறுவது கட்டாயமாக கருதப்படுகிறது. மாறாக அது ஒரு விருப்பத் தேர்வாக இருக்க வேண்டும் என்கிறார்.
"ஒவ்வொரு பெண்ணுக்கும் கருப்பை இருப்பதால், அவர் தாயாக வேண்டும் அல்லது தாயாக விரும்புகிறார் என்று பொருளில்லை. அவர் உடல் மற்றும் வாழ்க்கை மீது அவருக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.”
“ஆம், உயிரியல்ரீதியாக, இது சரியானது, ஏனெனில் 20 முதல் 30 வயதில், ஒரு பெண் நல்ல கருவுறுதல் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பாள். 40 வயதுக்குப் பிறகு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் அபாயங்கள் அதிகரிக்கின்றன.”
21ஆம் நூற்றாண்டிலும்கூட, ஒரு பெண்ணை தாயாக, மகளாக, மனைவியாக, பொறுப்பு என்னும் விலங்குகளால் கட்டிவைப்பது வேதனைக்குரியது. அவர் என்ன விரும்புகிறார் என்பது பற்றிச் சிந்திக்காதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்கிறார்கள் நிபுணர்கள்.
இருப்பினும், மாறிவரும் காலத்திற்கு ஏற்ப, சமூகத்தில் தழைத்தோங்கும் இந்தச் சிந்தனையை மாற்றி, பெண்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்