You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தீரஜ் சாஹூ: 5 நாட்களாக எண்ணப்பட்ட பணம் - 285 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது?
- எழுதியவர், சந்தீப் சாஹு
- பதவி, புவனேஸ்வரில் இருந்து
ஒடிசா மாநிலம் பலங்கிரியின் சூட்பாடாவில் உள்ள மதுபான ஆலையில் நடந்த சோதனையின்போது மீட்கப்பட்ட பணத்தை முழுமையாக எண்ணுவதற்கு ஐந்து நாட்கள் ஆனது. மொத்தம் 285 கோடி ரூபாய் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.
பணத்துடன் சேர்த்து திட்லாகரில் உள்ள இரண்டு வங்கி லாக்கர்களில் இருந்து ஏராளமான தங்க நகைகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த லாக்கர்கள் மதுபான வியாபாரி சஞ்சய் சாஹூவுக்கு சொந்தமானது. இந்தத் தகவலை ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் பகத் பெஹாரா தெரிவித்துள்ளார்.
பலங்கிர் மாவட்டத்தில் உள்ள திட்லாகர் மற்றும் சம்பல்பூரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் முறையே ரூபாய் 11 கோடி மற்றும் ரூபாய் 37.50 கோடி ரொக்கம் மீட்கப்பட்டது. இதையடுத்து, ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 333.50 கோடியை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஒடிசா வரலாற்றில் இதுவே மிகப் பெரிய பணம் பறிமுதல் ஆகும். மேலும் நாட்டிலேயே மிகப் பெரிய ரொக்க கையகப்படுத்தல்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது.
பணம் எண்ணும் இயந்திரங்களையே அலற வைத்த சம்பவம்
சூட்பாடா பாட்டியுடன் சேர்த்து, பக்கத்தில் குடியிருக்கும் மேலாளர் பண்டி சாஹு வீட்டிலும் 176 பைகளில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பணம் ரூபாய் 500, ரூபாய் 200 மற்றும் ரூபாய் 100 நோட்டுகளாக உள்ளது. இவற்றில் மிகவும் பழைய சில நோட்டுகளும் அடக்கம்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்டேட் வங்கி ஊழியர்கள் 25 பணம் எண்ணும் இயந்திரங்கள் மூலம் இரவு பகலாக இந்தப் பணத்தை எண்ண வேண்டியிருந்தது. மொத்த தொகையைக் கணக்கிட ஐந்து நாட்கள் ஆனது.
பழைய நோட்டுகளால் இடையிடையே பலமுறை இயந்திரங்கள் அலறியதாக ஸ்டேட் வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். ஆகவே சில பணக் கட்டுகளை கையால் எண்ண வேண்டியிருந்தது என்றும் அவர்கள் கூறினர்.
பண மூட்டைகள் மீதும் அதிக அளவில் தூசி படிந்துள்ளது. இதனால், அவற்றை எண்ணும்போது ஊழியர்கள் முகமூடி அணிந்து காணப்பட்டனர். பணத்தை எண்ணும் பணி இப்போது முடிந்துவிட்டது. இருப்பினும், சோதனைப் பணி இன்னும் முழுமையடையவில்லை.
சூட்பாடா ஆலை மேலாளர் பூந்தி மற்றும் இதர ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்த தகவலின் அடிப்படையில், மற்ற பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பணம் வெளிவர வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
தற்போது ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் எவ்வளவு கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், ஜார்க்கண்ட் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் குமார் சாஹு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் அமைப்புகளில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.
மூன்று மாநிலங்களில் உள்ள 30 பகுதிகளில் ஒரே நேரத்தில் நடத்தப்படும் இந்தச் சோதனையில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
சாஹு குடும்பமும் மது வியாபாரமும்
ஒரே மதுபான ஆலையில் இவ்வளவு பெரிய தொகையைக் கண்டு ஒடிசா மக்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். இருப்பினும் மாநிலத்தில் உள்ள மதுபான தொழில்துறையுடன் தீரஜ் சாஹு குடும்பத்திற்கு வலுவான தொடர்புகள் எப்போதும் உள்ளன.
இங்குள்ள லோஹர்டகா தொழிலதிபர் ராய் சாஹேப் பல்தேவ் சாஹு (தீரஜ் சாஹுவின் தந்தை) பழைய பாலங்கிர் சன்ஸ்தான் ராஜாவுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தார்.
மன்னர் பல்தேவ் தனது ராஜ்ஜியத்தில் மதுபான கடைகளைத் திறக்க அனுமதித்தார். அரச குடும்பத்தின் அனுசரணையுடன், சாஹு குடும்பம் பலங்கிரில் ஒன்றன் பின் ஒன்றாக மதுபான கடைகளைத் திறந்தது. இதனால் சாஹு குடும்ப சாம்ராஜ்ஜியம் விரிவடைந்தது.
தற்போது, பலங்கிர் மாவட்டத்தில் உள்ள 62 மது கடைகளில் 46 கடைகள் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவையே. சுதந்திரத்திற்குப் பிறகு இந்த வணிகம் மேற்கு ஒடிசாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவியது.
கலாஹண்டி, நுவாபாடா, சம்பல்பூர், சுந்தர்கர் எனப் பல இடங்களில் இருந்த மதுபான ஆலைகள் சாஹு குடும்பத்தின் கீழ் வந்தன.
படிப்படியாக, பல்தேவ் மற்றும் அவரது மகன்கள் தேசிய அளவிலான மதுபான விற்பனையிலிருந்து வெளிநாட்டு மதுபான விற்பனைக்கு மாறினார்கள். பௌத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட் (Boudh Distillery Private Limited- BDPL) என்ற மற்றொரு துணை நிறுவனமும் இந்த நோக்கத்திற்காகத் திறக்கப்பட்டது.
மாநிலத்தில் உள்ள ஆங்கில மதுபானம் குறித்த புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது, இந்த நிறுவனம் மதுபானம் தயாரிக்கத் தேவையான 80 சதவீத ஸ்பிரிட்டை 18 இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது ஆலைகளுக்கு (Indian Made Foreign Liquor- IMFL) வழங்குகிறது.
ஒடிசாவில் மட்டுமல்ல வங்காளம் மற்றும் ஜார்கண்ட் உட்பட கிழக்கு இந்தியாவில் உள்ள பல ஆலைகள் ஸ்பிரிட்டுகளுக்கு BDPLஐ நம்பியுள்ளன.
பிடிபிஎல், ஸ்பிரிட்ஸ் தவிர விஸ்கி, ஓட்கா மற்றும் ஜின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 'எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால் (Extra Neutral Alcohol- ENA)' என்பதையும் உற்பத்தி செய்கிறது. வர்ணங்கள், மைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
சாஹூவின் குடும்பம் மேலும் இரண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறது. இவற்றில் ஒன்று 'கிஷோர் பிரசாத், விஜய் பிரசாத் பீவரேஜஸ் பிரைவேட் லிமிடெட்'. இந்த நிறுவனம் பல ஐ.எம்.எஃப்.எல் (IMFL) பிராண்டுகளை தயாரித்து விற்பனை செய்கிறது.
இரண்டாவது நிறுவனத்தின் பெயர் 'குவாலிட்டி பாட்லர்ஸ் பிரைவேட் லிமிடெட்'. இது ஆங்கில மதுபானங்களைத் தயாரிக்கிறது.
இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?
இந்தப் பணம் அனைத்தும் மதுபான வியாபாரத்தில் இருந்து வந்ததாக பிடிபிஎல் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
“இப்போதெல்லாம் நாட்டு சாராயம் தயாரிக்க பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தாவரங்கள் பழங்குடியினரால் வளர்க்கப்படுகின்றன. அவர்களுக்கு டிஜிட்டல் பேமெண்ட் பற்றித் தெரியவில்லை. அவர்கள் காகித பணத்தை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். மறுபுறம், மதுபானம் வாங்குபவர்களும் ஒரு பாட்டிலுக்கு ரூபாய் 60 வீதம் ரொக்கமாகச் செலுத்துகின்றனர்," என்றார்.
இங்கு மொத்த வியாபாரமும் பணத்தில்தான் நடக்கிறது, அதனால் இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததில் ஆச்சரியமில்லை என்றார்.
"கடந்த 2019ஆம் ஆண்டிலும் சாஹூவின் குடும்பத்தினரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் ரூபாய் 35 கோடி ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால், இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று கணக்கு காட்டிய பிறகு, அந்தப் பணம் மீண்டும் கொடுக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
ஆனால், சாஹூ குடும்பம் பெரிய அளவில் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டாலும், அந்தத் தொழிலில் இருந்துதான் இவ்வளவு பெரிய தொகை வந்திருக்கிறது என்பதைப் பலர் நம்பவில்லை.
பல ஆண்டுகளாக பலங்கிரில் மது வியாபாரத்தைக் கவனித்து வரும் ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், “நாட்டில் மது அருந்த வருபவர்கள் ரூபாய் 100 அல்லது ரூபாய் 200 நோட்டுகளை கொண்டு வருகிறார்கள். ஆனால், தற்போது கிடைத்துள்ள நோட்டுகளில் ரூபாய் 500 நோட்டுகள் அதிகம். எனக்குத் தெரிந்த வரையில் இவை அனைத்தும் கறுப்புப் பணம். இந்தப் பணம் வரும் தேர்தலுக்குப் பயன்படுத்த வைத்திருந்த பணமாக இருக்கலாம்,'' என்கிறார்.
சாஹூ பிரதர்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்கொடை அளிக்கிறது. மேலும், வழிபாடு, விளையாட்டு மற்றும் பிற செயல்பாடுகள் என்ற பெயரில் பெரும் தொகை செலவிடப்படுகிறது. இதெல்லாம் தெரிந்தும் யாரும் பேசுவதில்லை. இவை அனைத்தும் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு கொள்கையின் ஒரு பகுதியாகக் கணக்கு காட்டப்படும்," என்று அவர் கூறினார்.
அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ விசாரணைக்கு பாஜக கோரிக்கை
அதிகாரிகள் கைப்பற்றிய பணம் அனைத்தும் கறுப்புப் பணம் என்கிறார் ஜார்க்கண்ட் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷா தேவ்.
அவர் ராஞ்சியில் இருந்து பிபிசியிடம் தொலைபேசியில் பேசினார். “நிறுவனத்தின் இருப்புநிலைக் கணக்கைப் பார்த்தால், வருவாய் ரூபாய் 120 கோடி மட்டுமே. மேலும் இந்தப் பணம் எங்கிருந்து வந்தது?'' என்று கேட்கிறார்.
தீரஜ் சாஹுவின் மூத்த சகோதரர் கோபால் ஜார்கண்ட் காங்கிரஸ் பொருளாளராக பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இருப்பினும், உண்மையில் அதிகாரப்பூர்வமற்ற பொருளாளர் தீரஜ் தான் என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸின் கறுப்புப் பணம் அனைத்தும் தற்போது வெளிவந்துள்ளது.
எனவேதான் இதை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோருகிறோம். இந்தப் பணம் காங்கிரஸ் தலைமைக்குச் செல்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்,’’ என்றார். ஆனால், தீரஜ் சாஹுவின் தொழிலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று காங்கிரஸ் கூறுகிறது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக ஊடகத்தில், “இந்த விவகாரத்தில் தீரஜ் தான் பதில் சொல்ல வேண்டும். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதை அவர்தான் விளக்க வேண்டும்,'' என்று பதிவிட்டுள்ளார்.
அதிக அளவில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதால், இந்த விவகாரத்தில் பாஜக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம், காங்கிரஸ் தற்காப்பு நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் சாஹுவின் குடும்பத்துடன் கட்சிக்குப் பல வருடங்களாக நல்ல உறவு உள்ளது.
காங்கிரஸ்- சாஹு குடும்ப உறவின் பின்னணி
சாஹு குடும்பத்தில் முதல் தலைமுறை மதுபான வியாபாரியான பல்தேவ் சாஹு காங்கிரஸுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தார்.
நாட்டின் முதல் ஜனாதிபதி டாக்டர். ராஜேந்திர பிரசாத் மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோர் லோஹர்டகாவுக்கு வந்தபோது சாஹு குடும்பத்தினர் சிறப்பாக அவர்களை உபசரித்தனர்.
கடந்த 1958இல் ராஜேந்திர பிரசாத் இங்கு வந்தபோது, பல்தேவ் சாஹு தனது காரில் அனைத்து இடங்களையும் அவருக்குச் சுற்றிக் காட்டினார் என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.
அதேபோல் 1984இல் ராஞ்சியில் நடந்த இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டுக்கு இந்திரா காந்தி வந்தபோது சாஹு சகோதரர்களின் பங்களாவில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
தீரஜின் மூத்த சகோதரர் ஷிவ் பிரசாத் சாஹு ராஞ்சியில் இருந்து இரண்டு முறை காங்கிரஸ் சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு சகோதரர்களில் இளையவர் தீரஜ். தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலுக்கு முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்யும்போது தீரஜ் தனது மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 34.83 கோடி என பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார். ரொக்கப் பணம் ரூபாய் 27 லட்சம் என்றும் தெரிய வந்தது.
இப்படி அதிக அளவு பணம் வெளியே வருவதால், பல புதிய கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன. இந்த விவகாரத்தில் விசாரணை முடிந்த பின்னரே எல்லாவற்றுக்கும் முழுமையான பதில் கிடைக்கும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)