திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவு - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் தீபத்தூணில் மகா தீபத்தை ஏற்ற எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை நேற்று (டிசம்பர் 3) தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். தன்னுடன் அவர் 10 பேரை அழைத்துச் செல்லலாம் என்றும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, மதுரை மாவட்ட ஆட்சியர், நகர காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் செயல் அதிகாரி ஆகியோர் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக இன்று (டிசம்பர் 4) விசாரணைக்கு வந்தது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த ராம ரவிக்குமார் தரப்பு மற்றும் சிக்கந்தர் தர்கா தரப்பு என அனைத்துத் தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டனர்.
பின்னர் மாலையில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழக அரசுத் தரப்பின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் என இரு நீதிபதிகள் அமர்வு கூறினர்.
அதைத் தொடர்ந்து அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், "மனுதாரர் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும், அதற்கு காவல் ஆணையர் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
ஆனால், திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதை பகுதியில் மதுரை மாநகர காவல் துறையால் தடுப்புகளை அமைக்கப்பட்டு இருப்பதுடன், அதிக அளவிலான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு முன்வைத்த வாதம்
தமிழக அரசின் சார்பாக இந்த வழக்கில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், "இந்த விவகாரத்தில் நீதிமன்றம் மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டது. சிஐஎஸ்எஃப் வீரர்களை அனுப்ப நீதிபதிக்கு எங்கிருந்து அதிகாரம் கிடைத்தது? சிஐஎஸ்எஃப் என்பது நீதிமன்ற பாதுகாப்பு பணிக்கானது. மாநில காவல்துறை இருக்கும்போது, நீதிபதி ஏன் சிஐஎஸ்எஃப் வீரர்களை போகச் சொன்னார்?" என கேள்வி எழுப்பினார்.
தனி நீதிபதியின் உத்தரவுகள் நீதித்துறையின் சட்ட அதிகாரத்தை மீறும் செயல் என்றும் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் குறிப்பிட்டார்.
"இந்த வழக்கில் தனி நீதிபதி மாலை 5 மணிக்கே, இப்படித்தான் நடக்கும் என்று கணித்துச் செயல்பட்டுள்ளார். 10 பேருடன் சென்று தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவர் ஒரு கும்பலை திரட்டிச் சென்று, பதற்றத்தை ஏற்படுத்தி, அதிகாரிகளைத் தாக்கியுள்ளார்."
"நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவு சட்ட நடைமுறைகளுக்கு முரணானது. நீதிமன்றத்தின் மகத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். நீதிமன்றம் சட்டத்தைத் தனது கையில் எடுத்துக் கொள்ள முடியாது" என்று தனது வாதத்தின்போது தெரிவித்தார் ரவீந்திரன்.

இந்து சமய அறநிலையத் துறை கூறியது என்ன?
இந்த வழக்கில் கோவில் நிர்வாகம் சார்பாக இந்து சமய அறநிலையத் துறை முன்வைத்த வாதத்தில், "இந்த தீபத்தூண் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தது. மனுதாரர்களும் தனி நீதிபதியும் இதை ஏற்றுக்கொண்டனர். 1862 முதல் இது பயன்படுத்தப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டது.
மேலும், "ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இது பயன்படுத்தப்படாமல் இருந்தபோது, தனி நீதிபதி உத்தரவுக்குப் பிறகு, அதுவும் மேல்முறையீடு ஏற்கெனவே நிலுவையில் இருந்தபோது, அங்கு உடனடியாக தீபம் ஏற்ற வேண்டிய அவசரம் என்ன?" என்றும் இந்து சமய அறநிலையத் துறை கூறியது.
இதற்கு மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தீபத்தூண் நீண்ட காலமாக உள்ளது. பிரிட்டிஷ் கால பழக்க வழக்கங்களை பார்க்கக்கூடாது. தீபத்தூணில் விளக்கு ஏற்றுவது பண்டைய தமிழர்களின் பழக்கமாக இருந்தது" என்று கூறினார்.
மேலும், "தனி நீதிபதி உரிய விசாரணை நடத்தித்தான் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார். ஆனால், கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை, நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை. நீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், திடீரென ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தனர்" என்று கூறினார்.
சிக்கந்தர் தர்கா தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்
அப்போது சிக்கந்தர் தர்கா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன், "கோவிலில் மனுதாரர் குறிப்பிட்ட இடத்தில் விளக்கை ஏற்றுமாறு தனி நீதிபதி கேட்டுக் கொண்டார். ஆனால் கோவில் நிர்வாகத்தை அல்லாமல், மனுதாரரை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டார்" என்று குறிப்பிட்டார்.
மேலும், "அங்கே இருப்பது சர்வே கல். அப்படிப்பட்ட 6 கற்கள் உள்ளன. முந்தைய வழக்குகளில்கூட, அப்படிப்பட்ட ஒரு தீபத்தூண் இருப்பது பற்றிப் பேசப்படவில்லை. இந்த வழக்கில் நாங்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளோம்" என்று கூறினார்.

நீதிபதிகள் கூறியது என்ன?
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "ஒரு தரப்பினரின் மதச் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை அடைய முடியாது. ஒற்றுமையின் மூலம் மட்டுமே அதை அடைய முடியும். ஆண்டுக்கு ஒரு முறை, யாரையும் பாதிக்காமல் அவர்கள் விளக்கு ஏற்றினால், அவர்களை அனுமதிப்பதில் ஏதேனும் சிரமம் உள்ளதா?" எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், "100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நடைமுறைகள் வேறு, புரிதல் வேறு. இப்போது இருப்பது வேறு. இப்போது இருப்பது 100 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடருமா என்பதுகூட நமக்குத் தெரியாது" என்று கூறி, தீர்ப்பை மாலைக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கில் இன்று மாலை 4 மணிக்குத் தீர்ப்பளித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 'திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாகத்' தெரிவித்தனர்.

"நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மாற்றியமைப்பதாக இருக்கவில்லை என்று நாங்கள் கருதுகிறோம். தனது முந்தைய உத்தரவு பின்பற்றப்படவில்லை என்பதை தனி நீதிபதி கண்டறிந்தபோது, தீபத்தை பக்தர்களே ஏற்றுமாறு அவர் உத்தரவிட்டார். எனவே உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன்
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் என இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்திருந்த நிலையில், மாலை 5 மணிக்கு இந்த விசாரணையை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தொடங்கினார்.
அப்போது, "மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் கோவிலின் நிர்வாக அதிகாரி ஏன் ஆஜராகவில்லை? இதை இந்த நீதிமன்றம் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது" என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறினார்.
"அதிகாரிகளை 5 நிமிடங்களில் ஆஜராக வேண்டுமென்றால் எப்படி?" என தமிழ்நாடு அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அதற்கு, "கோவில் செயல் அலுவலரின் நடவடிக்கையே அவரை ஆஜராக உத்தரவிடக் காரணம். 5.30 மணிக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் ஆஜராகவில்லை என்றால் கடும் உத்தரவைப் பிறப்பிக்கத் தயங்க மாட்டேன்" என்று நீதிபதி கூறினார்.
இதையடுத்து காணொளி வாயிலாக அதிகாரிகள் ஆஜராகினர். விசாரணைக்குப் பிறகு, "மனுதாரர் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும், அதற்கு காவல் ஆணையர் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், மதுரையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை ரத்து செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை நாளை காலை 10:30 மணிக்கு ஒத்தி வைத்தார்.

ஆனால், திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதை பகுதியில் மதுரை மாநகர காவல் துறையால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருப்பதுடன், அதிக அளவிலான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், "நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல்முறையீடு செல்ல இருப்பதாகவும், அதனால் இந்தப் பகுதியில் கூட்டம் கூடவேண்டாம் என்றும்" ஒலிப்பெருக்கி வாயிலாக அறிவித்த மதுரை மாநகர காவல் துணை ஆணையர் இனிக்கோ திவியன், "அனைவரையும் கலைந்து செல்லுமாறும்" தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் ராம ரவிக்குமார் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா கைது
மேல்முறையீடு செல்லவிருப்பதால், மனுதாரர் உள்ளிட்ட யாரையும் அனுமதிக்க முடியாது என்று துணை ஆணையர் தெரிவித்ததால், ராம ரவிக்குமார் தரப்பு வழக்கறிஞர், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் திருப்பரங்குன்றம் மலை பாதை செல்லும் வழியில் பரபரப்பு நிலவியது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் மனுதாரரை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மலைக்கு அழைத்துச் சென்று தீபம் ஏற்ற வைக்கவேண்டும் எனவும் தீபம் ஏற்றியது தொடர்பான அறிக்கையை டிசம்பர் 5 காலை 10:20 மணிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அங்கு வராத நிலையில், துணை ஆணையர் இனிகோ திவ்யனிடம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும், "மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் வர வேண்டும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்," என்று மனுதாரர் ராம. ரவிக்குமார் தெரிவித்தார்.
மேலும், அவர் நீதிமன்ற உத்தரவுப்படி மலைமீது தீபம் ஏற்ற வந்தபோது மலைப்பாதை அருகே போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தலைவர் எச் ராஜா, அமர் பிரசாத் ரெட்டி, பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. "நூறு ஆண்டுகளாக தீபம் ஏற்றும் இடத்தைவிட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கேட்பதுதான் பிரச்னை" எனவும் "மற்றபடி கார்த்திகை தீபம் ஏற்ற எந்தத் தடையையும் அரசு விதிக்கவில்லை" என்றும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
அதோடு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு மனுவில் தெரிவித்துள்ளது.
(கூடுதல் தகவல்கள்: பிபிசி தமிழுக்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து பிரபுராவ் ஆனந்தன்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












