பிரிட்டிஷ் இளவரசரை பாராட்டிய பாரதியார் 2 ஆண்டுகளில் புதுச்சேரியில் புகலிடம் தேடியது ஏன்?

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

1908 முதல் 1918 வரை, பத்து ஆண்டுகள் புதுச்சேரியில் தங்கியிருந்தார் பாரதியார். கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் என அவரது பிரபலமான படைப்புகள் உருவானதும், அரவிந்தர், பாரதிதாசன் ஆகியோரது நட்பு அவருக்கு கிடைத்ததும் இந்த காலகட்டத்தில்தான்.

ஆனால், சென்னையில் (மெட்ராஸ்) இருந்த பாரதியார் ஏன் புதுச்சேரிக்கு சென்று பத்து ஆண்டுகள் தங்கியிருந்தார்? அவர் 1918இல், மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த தமிழக பகுதிக்கு திரும்ப 'மன்னிப்பு' கடிதம் எழுதிக் கொடுத்தாரா? பிரிட்டிஷ் இளவரசரை வாழ்த்திப் பாடல் பாடினாரா என்பன போன்ற கேள்விகளைச் சுற்றி சில விவாதங்கள் உள்ளன.

பாரதியாரின் வாழ்க்கை மற்றும் அவரது படைப்புகளை ஆய்வு செய்தவர்கள் பாரதியார் மீதான விமர்சனங்களை மறுத்து, அவர் எடுத்த முடிவுகளுக்கு பின் உள்ள காரணங்களை விளக்குகிறார்கள்.

இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் டிசம்பர் 11, 1882 அன்று பிறந்த பாரதியார், கல்வியை முடித்துவிட்டு, பனாரஸில் (வாரணாசி) சிறிது காலம் கழித்த பிறகு சென்னை வந்தார். 1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சுதேசமித்திரன் என்ற நாளிதழில் துணை ஆசிரியராக சேர்ந்தார்.

பின்னர் சக்கரவர்த்தினி என்ற மாத இதழிலும் பணிபுரிந்தார். பிறகு, 1906 மே மாதத்தில் 'இந்தியா' எனும் வார இதழின் ஆசிரியராக பொறுப்பேற்கிறார்.

வேல்ஸ் இளவரசரை வாழ்த்திப் பாடல்

"'இந்தியா' இதழுடன் 1907 நவம்பர்‌ முதல்‌ பாலபாரதா என்ற ஆங்கில வாரப்பத்திரிகையின்‌ பொறுப்பாசிரியர்‌ பதவியையும்‌ பாரதியார் ஏற்றிருந்தார்‌. இந்தியத்‌ தேசிய இயக்கம்‌ தீவிரவாதத்‌ திசை வழியில்‌ வேகமாக முன்னேறி வந்த காலக்கட்டத்தில்‌ பாரதி மூன்று பத்திரிகை ஆசிரியர்‌ பொறுப்பையும்‌ ஏற்று முழுமையாகப்‌ பாடுபட்டு வந்தார்"- இவ்வாறு 'பாரதி இந்தியா' என்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (2003) வெளியிட்ட ஒரு ஆய்வு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், பாரதியார் குறித்த ஒரு விமர்சனம், அவர் தீவிர தேசியவாதியாக இருந்தும்கூட, இந்தியாவுக்கு வந்த வேல்ஸ் இளவரசரை வரவேற்று பாடல் இயற்றினார் என்பது.

ஜார்ஜ் பிரெடரிக் என்னும் வேல்ஸ் இளவரசர் (பிரிட்டிஷ் சக்ரவர்த்தியின் பட்டத்து இளவரசர்) தம் மனைவியுடன் 1905-1906 காலகட்டத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். அவர்களை வரவேற்கும்‌ தீர்மானம்‌ காசி காங்கிரஸ்‌ கூட்டத்தில்‌ (1905 டிசம்பர்) கொண்டு வரப்பட்டது. தீவிர தேசியவாத இயக்கத்தைச்‌ சேர்ந்த தலைவர்கள்‌ இத்தீர்மானத்தை எதிர்த்துக்‌ கூட்டத்தில்‌ இருந்து வெளிநடப்புச்‌ செய்தனர்.

ஆனால், மிதவாத காங்கிரஸ்‌ தலைவர்கள் இளவரசரை வரவேற்க முடிவு செய்தனர்.

"1906 ஜனவரி 24 அன்று வேல்ஸ் இளவரசரும், இளவரசியும் சென்னைக்கு வருகை புரிந்தனர். வேல்ஸ் இளவரசரை வாழ்த்தி வரவேற்கும் வகையில், 'வேல்ஸ் இளவரசருக்கு பாரத கண்ட தாய் நல்வரவு கூறுதல் (பாரத மாது தானே பணித்தன்று)' என்று தலைப்பிட்டு, 46 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பா ஒன்றை பாரதி புனைந்திருந்தார். இது 'சுதேசமித்திரன்' 1906 ஜனவரி 29-ஆம் தேதி இதழில் பிரசுரம் ஆனது." என்று தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ஆய்வாளர் சீனி.விஸ்வநாதன்.

'1908'இல் புதுச்சேரிக்கு செல்லுமளவுக்கு பிரிட்டிஷ் அரசால் பாரதியாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது, ஆனால் அதற்கு இரு வருடங்கள் முன்பு வந்த வேல்ஸ் இளவரசரை அவர் வரவேற்றுள்ளார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

"இதற்கு காரணம், பாரதி வேலை பார்த்து வந்த சுதேசமித்திரன்‌ உரிமையாளர்‌ சுப்பிரமணிய அய்யர் மிதவாதி. அதாவது வேல்ஸ்‌ இளவரசருக்கு வரவேற்பு அளிக்கும்‌ தீர்மானத்தை ஆதரித்தவர்‌. ஆனால்‌ துணை அசிரியராக இருந்த பாரதியோ அந்தத்‌ தீர்மானத்தை வெளிப்படையாக இல்லாவிட்டாலும்‌ உள்ளுக்குள்‌ எதிர்த்தவர். அவருடைய வற்புறுத்தலால் தான் பாரதி அந்த பாடலை இயற்றினார்" என 'பாரதி இந்தியா' ஆய்வு நூல் குறிப்பிடுகிறது.

இந்த முரண்பாடே சுதேசமித்திரன்‌ பத்திரிகையிலிருந்து பாரதி வெளியேறக்‌ காரணமான முரண்பாட்டின்‌ தொடக்கம் என்றும் அந்நூல் கூறுகிறது.

இதேபோன்ற ஒரு விளக்கத்தை, ஆய்வாளர் சீனி.விஸ்வநாதனும் முன்வைக்கிறார்.

"அந்த வாழ்த்துப் பாடலை பாரதி முழுமனதோடு தான் இயற்றினாரா என்பது சந்தேகம்தான். தாம் ஏற்றுக் கொண்டிருந்த வேலையினால், ஏற்பட்ட கடமையை நிறைவேற்றவே இவர் இதைச் செய்திருக்கலாம்." என்ற எழுத்தாளர் பெ.தூரனின் கருத்தை அவர் மேற்கோள் காட்டுகிறார்.

தீவிர தேசியவாத அரசியல் மீதான ஆர்வம்

தீவிர தேசியவாத அரசியலில்‌ ஈடுபாடு கொண்டிருந்த பாரதி தம்‌ கருத்துகளை வெளியிடுவதற்கு 'இந்தியா' இதழை முதன்மையான ஊடகமாகப்‌ பயன்படுத்திக்‌ கொண்டார்‌. ('பாரதி இந்தியா' பக்கம் 36)

'இருபதாம்‌ நூற்றாண்டின்‌ முதல்‌ பத்து ஆண்டுகளில்‌ தீவிர தேசியவாதம்‌ வலுப்பெற்றது. தமிழ்நாட்டில்‌ மகாகவி பாரதி, வ.உ.சி, சுப்பிரமணிய சிவா முதலானோர் இத்தகு சிந்தனைப்‌ போக்கு உடையவராகத்‌ திகழ்ந்தனர்‌. தீவிர தேசியவாத கொள்கைகளை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச்‌ சொல்லும்‌ ஒரே ஊடகமாகப்‌ பாரதியின்‌ 'இந்தியா' இதழ்‌ செயல்பட்டது' என்கிறது பாரதி இந்தியா ஆய்வு.

மேலும், 'இவற்றின்‌ எதிர்‌ விளைவுகளாக அன்றைய பிரிட்டிஷ்‌ அரசாங்கத்தின்‌ அடக்குமுறைகளும்‌ தண்டனைகளும்‌ அமைந்தன. 1908-ஆம்‌ அண்டில்‌ இந்தியா முழுவதும்‌ தலைவர்கள்‌ கைது செய்யப்பட்டனர்‌. தமிழகத்தில்‌ வ.உ.சி-யும்‌ சிவாவும்‌ கைது செய்யப்பட்‌டனர்‌. இந்தியா நாளிதழ்‌ அலுவலகம்‌ சோதனை இடப்பட்டது. அதன்‌ ஆசிரியர்‌ கைது செய்யப்பட்டார்‌.' என்கிறது

ஆனால், இங்கு ஆசிரியர் எனக் குறிப்பிடுவது பாரதியார் அல்ல.

"இந்தியா இதழின்‌ சட்டப்படியான ஆசிரியராகப்‌ பதிவு செய்து கொண்டவர்‌ முரப்பாக்கம்‌ சீனிவாசன்‌. ஆனால்‌, அந்த இதழின்‌ அறிவிக்கப்படாத ஆசிரியராக இதழை நடத்தி வந்தவர்‌ பாரதியார்‌. 20ஆம் நூற்றாண்டின்‌ தொடக்க ஆண்டுகளில்‌ நிலவிய கடுமையான அரசியல்‌ சூழல்‌ காரணமாக 'இந்தியா' பத்திரிகையின்‌ ஆசிரியராக பாரதி தம்முடைய பெயரை வெளிப்படுத்திக்‌ கொள்ளவில்லை." இவ்வாறு முனைவர்‌ சிலம்பு நா. செல்வராசுவின் ஆய்வு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, "தான்‌ குற்றவாளி இல்லை" என்று செசன்ஸ்‌ நீதிமன்ற நீதிபதி முன்‌ சீனிவாசன்‌ எழுதிக்‌ கொடுத்த வாக்குமூலம்‌ நீதிபதிகளுக்கு முன்பு படித்துக்காட்டப்‌பட்டது என்றும் அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வாக்குமூலத்தில், "இந்தப்‌ பத்திரிகைக்கு எப்போதும்‌ ஸி.சுப்பிரமணிய பாரதிதான்‌ பத்திராசிரியராக இருந்தார்‌. ஸி. சுப்பிரமணிய பாரதி பத்திராசிரியராக - ரூபாய்‌ 50 மாதச்‌ சம்பளம்‌ வாங்கிக்‌ கொண்டிருந்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார், 26.08.1908-இல்‌ காவலர்களுக்குத்‌ தெரியாமல்‌ புதுச்சேரி சென்றார்‌. பாரதியின்‌ குடும்பம்‌ சொந்த ஊருக்குச்‌ சென்றது. அச்சகத்தைப்‌ புதுச்சேரியில்‌ உள்ள ஒருவருக்கு விற்றதாகக்‌ காட்டிப்‌ புதுச்சேரிக்குக்‌ கொண்டுசென்று அம்பலத்தரு அய்யர்‌ தெருவிலுள்ள 77-ஆம்‌ எண்‌ கட்டடத்தில்‌ நிறுவப்பட்டது. ('பாரதி இந்தியா' ஆய்வு நூல்- பக்கம் 48).

பாரதியார் புதுச்சேரிக்கு சென்றது ஏன்?

"இந்தியா அலுவலகம் மீதான பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாடுகளால், இனி தன்னால் மெட்ராஸிலிருந்து இந்தப் பத்திரிகையை சுதந்திரமாக நடத்த முடியாது என பாரதிக்குப் புரிந்தது. அதனால் தான் அவர் புதுச்சேரிக்கு சென்றார். ஆனால், பாரதியார் தப்பி ஓடவில்லை, அரசியல் அடைக்கலம் தான் புகுந்தார்." என்கிறார் எழுத்தாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம்.

இவர் பாரதியார் குறித்து, 'யாமறிந்த புலவன்', 'பாரதி விஜயம்' போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாரதியார் மீது எந்த கைது வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை. காரணம், 'இந்தியா' பத்திரிகை அவரது பெயரில் இயங்கவில்லை. அவர் புதுச்சேரி சென்றதற்கு காரணம், அங்கு ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனது படைப்புகளை சுதந்திரமாக இயற்ற முடியும் என்பதால் தான். அதனால் தான் சில நாட்களிலேயே புதுச்சேரியில் 'இந்தியா' நாளிதழ் வெளிவரத் தொடங்கியது" என்கிறார்.

"இந்தியா இதழை ஒடுக்குவதற்காகப்‌ பிரிட்டிஷ்‌ இந்திய அரசு பல்வேறு வகைகளில்‌ முயற்சிகளை மேற்கொண்டது. 1908ஆம்‌ ஆண்டில்‌ அன்றைய மெட்ராஸ் ஆளுநர்‌ இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்" என 'பாரதி இந்தியா' ஆய்வு நூல் குறிப்பிடுகிறது.

ஆனால்‌ 'இந்தியா' இதழ்‌ பிரெஞ்சு இந்தியாவில்‌ (புதுச்சேரி) இருந்து வெளிவந்து கொண்டிருந்ததால்‌ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாமல்‌ போயிற்‌று. இருப்பினும், மெட்ராஸ் ஆளுநர்‌ சில குறிப்பிட்ட 'இந்தியா' பிரதிகளை பிரெஞ்சு இந்திய ஆளுநருக்கு அனுப்பி அதை ஒடுக்குவதில்‌ உதவுமாறு வேண்டி '05.0.1909' நாளிட்ட மடலில்‌ வேண்டி உள்ளார்‌.

ஆனால்‌, பிரெஞ்சு இந்திய ஆளுநர்‌ தமது 20.02.1909 நாளிட்ட மடலில்‌ 'தங்கள்‌ நாட்டுச்‌ சட்டப்படி, அச்சுத்துறை உரிமையை இந்த இதழ்‌ மீறவில்லை என்பதால்‌ தண்டிக்க முடியாது' என்று தெரிவித்தார்‌.

அதைத் தொடர்ந்து, "புதுச்சேரியில், 'இந்தியா' இதழ்‌ முகப்பில்‌ 'சுதந்திரம்‌ சமத்துவம்‌ சகோதரத்துவம்‌' என்ற புரட்சிகர வாசகங்களைத்‌ தாங்கி வெளிவரத்‌ தொடங்கியது." என முனைவர் பா. இறையரசன்‌, பாரதியார் குறித்த தனது ஆய்வில் குறிப்பிடுகிறார்.

அதேபோல, "பாரதியார் அந்த 10 ஆண்டுகள், தனது அடையாளத்தை மறைத்து வாழவில்லை. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுமார் 600 பக்கத்திற்கு தன் பெயரிலேயே, முகவரியுடன் படைப்புகளை வெளியிட்டார். இந்த காலத்தில் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற இலக்கிய படைப்புகளில் மட்டும் அவர் கவனம் செலுத்தவில்லை" என்கிறார் கடற்கரய் மத்தவிலாச அங்கதம்.

ஆனால், 'இந்தியா' இதழ் இறுதியாக 1910 செப்டம்பரில் வந்தது. அதன் பின்னர் பாரதியார் மீண்டும் 'இந்தியா' இதழை நடத்த விரும்பியும், அரசின் அடக்குமுறைகள் மற்றும் வேறு சில காரணங்களால் அதை அவரால் தொடர் முடியவில்லை. ('பாரதி இந்தியா' ஆய்வு நூல்- பக்கம் 49).

மீண்டும் திரும்ப முடிவு

"பாரதியார் புதுச்சேரி செல்லும்போது அவர் மீது வழக்குகள் ஏதும் இல்லையென்றாலும், அவர் புதுச்சேரியில் இருந்தவாறு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக வெளியிட்ட படைப்புகள், அவருக்கு பெரும் புகழையும், பிரிட்டிஷ் அரசின் கோபத்தையும் ஈர்த்தது" என்கிறார் சென்னை பல்கலைக்கழக்தின் தமிழ் மொழித் துறை தலைவர், பேராசிரியர் மணிகண்டன்.

ராஜாஜி, வரதராஜுலு நாயுடு போன்ற தலைவர்கள் பாரதியாரை புதுச்சேரி சென்று சந்திக்கும் அளவுக்கு அவர் புகழ்பெற்றவராக இருந்தார் எனக் கூறும் பேராசிரியர் மணிகண்டன், "1918க்கு முன்பே தமிழக பகுதிக்கு திரும்ப பாரதியார் முயற்சி செய்தார். பிரிட்டிஷ் ஆளுநர் உட்பட சிலருக்கு கடிதங்களும் எழுதினார். ஒருகட்டத்தில், அவருக்கு ஆதரவாக மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டது. அவர் தமிழக பகுதிக்கு வந்தால் பிரிட்டிஷ் அரசு கைது செய்யுமா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. இறுதியில் இனியும் புதுச்சேரியில் இருக்க முடியாது என முடிவு செய்து தமிழக பகுதிக்கு செல்ல முடிவு செய்தார். 1918இல், முதலாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டம் என்பதால் தான் கைது செய்யப்பட மாட்டோம் என அவர் நம்பினார்" என்கிறார்.

புதுச்சேரியில் இருந்து மெட்ராஸ் மாகாணத்துக்குள் நுழைய முயன்ற பாரதியாரை கடலூர் அருகே கைது செய்து கேப்பர் மலை சிறைச்சாலையில் அடைத்தது பிரிட்டிஷ் இந்திய காவல்துறை.

சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாரதியார், தம்மை விடுதலை செய்ய வலியுறுத்தி மெட்ராஸ் மாகாண ஆளுநர் பெண்ட்லன்ட் என்பவருக்கு ஒரு கடிதத்தை எழுதினார். 'காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' என்ற பெயரில் தொகுக்கப்பட்ட நூல்களில் இந்த கடிதங்கள் இடம்பெற்றுள்ளன.

பாரதியார் எழுதிய கடிதம்

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த கடிதத்தில், "மாட்சிமைதாங்கிய உங்களுக்கு (பெண்ட்லன்ட்) மீண்டும் ஒரு முறை உறுதி அளிக்கிறேன்- அரசியலின் அனைத்து வடிவங்களில் இருந்தும் விலகிவிட்டேன். பிரிட்டிஷ் அரசுக்கு விஸ்வாசமாகவும், சட்டத்தை மதிப்பவனாகவும் எப்போதும் இருப்பேன். எனவே என்னை உடனடியாக விடுவிக்க உத்தரவிடும்படி மாட்சிமை தாங்கிய தங்களிடம் யாசிக்கிறேன்."

"மாட்சிமை தாங்கிய தங்களுக்கு கடவுள் நீண்ட மகிழ்ச்சியான ஆயுளை வழங்கட்டும். மாட்சிமை தாங்கிய தங்களின் மிகப் பணிவுள்ள வேலைக்காரனாக இருக்க வேண்டுமென யாசிக்கிறேன்." எனக் குறிப்பிட்டிருந்தார் பாரதியார்.

ஆனால், "அதை மன்னிப்பு கடிதம் எனக்கூற முடியாது. அது வேண்டுகோள் கடிதம். பாரதியாருக்கு இருந்த செல்வாக்கு, புகழ் குறித்து பிரிட்டிஷ் அரசுக்கு நன்கு தெரியும். இல்லையென்றால், பாரதியை பிரிட்டிஷ் போலீஸ்‌ அதிகாரி ஹானிங்டன்‌ புதுச்சேரியில் சந்தித்துப்‌ பேசியிருக்க மாட்டார். அப்படியிருக்க அந்த கடிதம் வெறும் பெயரளவுக்கு தான் கோரப்பட்டது" என்கிறார் பேராசிரியர் மணிகண்டன்.

ஹானிங்டனை சந்தித்தது குறித்தும் பாரதியார் மெட்ராஸ் மாகாண ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

"எனது விசுவாசத்தைத் தெரிவித்து பல வாக்குறுதிகள் அளித்த பிறகு என்னை நேரில் சந்தித்து உரையாட மாட்சிமை தாங்கிய பிரபுவின் அரசு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்-டி.ஜ.ஜி. (சி.ஐ.டி.) அவர்களை புதுவைக்கு அனுப்பியது மாட்சிமைதாங்கிய தங்களுக்கு நினைவிருக்கும்."

"அந்த உரையாடலின்போது அரசாங்கம் தொடர்பான எனது அணுகுமுறையில் முழுவதும் திருப்தி அடைந்த டி.ஐ.ஜி. அவர்கள், முற்றிலும் போர்க்காலத்தைக் (முதலாம் உலகப் போர்) கணக்கில் கொண்டு, மெட்ராஸ் மாகாணத்தின் ஏதாவது இரண்டு மாவட்டத்தில் காவலில் இருக்க விருப்பமா என்று என்னிடம் கேட்டார். அந்த யோசனைக்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை."

"ஏனெனில், அரசியலை முற்றிலும் விட்டொழிப்பதாக நான் அறிவித்த பிறகு, போர் நடந்துகொண்டிருக்கும்போதுகூட, என் நகர்வுகளைத் தடுப்பதற்கான காரணம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை."

இவ்வாறு பாரதியார் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாரதியாரின் உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றம்

"சிறையில் இருந்தபோது, பாரதியாரின் உடல்நிலையும் மிக மோசமாக இருந்தது. அதுவும் கூட ஒரு காரணம். ஆனால், கடிதம் அளித்தும் பாரதியார் விடுதலைக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதை ஏற்றுக்கொண்ட பின், பாரதியார் விடுதலை செய்யப்பட்டார்" என்கிறார் பேராசிரியர் மணிகண்டன்.

அந்த நிபந்தனைகள் (குறிப்பிட்ட காலத்திற்கு),

  • தென்காசி, குற்றாலம் இந்த இரண்டு பகுதியில் மட்டுமே வாழ வேண்டும். சென்னைக்குப் போகக்கூடாது.
  • பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கட்டுரைகள், கவிதைகளை எழுதக்கூடாது.
  • எழுதக்கூடிய கட்டுரைகள் அனைத்தையும் காவல் துறை அல்லது மாஜிஸ்திரேட்டிடம் காட்டிவிட்டுத் தான் வெளியிட வேண்டும்.

"ஆனால், நிபந்தனைகள் அமலில் இருந்தபோது மற்றும் அதற்குப் பிறகும் கூட பாரதியார் தொடர்ந்து ஆங்கிலேய அரசுக்கு எதிராக உரைகள் ஆற்றினார், கட்டுரை இயற்றினார். 1918க்குப் பின், பிரிட்டிஷ் அரசுக்கு பயந்து வாழக்கூடிய ஒருவராக அவர் இருந்திருந்தால், 1919இல் காந்தியை சந்தித்து பேசும் அளவுக்கு அவர் செல்வாக்கோடு இருந்திருக்க மாட்டார்" என்கிறார் பேராசிரியர் மணிகண்டன்.

காந்தியும் பாரதியாரும் சந்தித்துக்கொண்ட நிகழ்வு பற்றி 'மகாகவி பாரதியார்' என்ற நூலில், தமிழ் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளருமான வ. ராமசாமி ஐயங்கார் விவரிக்கிறார்.

காந்தி 1919இல் சென்னை வந்தபோது, ராஜாஜியின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது பாரதியார், தான் அன்று நடத்தவிருந்த திருவில்லிக்கேணி கூட்டத்திற்கு தலைமை தாங்க காந்தியை அழைக்க வந்தார். ஆனால், காந்தியால் அதில் கலந்துகொள்ள முடியாத நிலை. இதனை அறிந்துகொண்டு, பாரதியார் அங்கிருந்து விடைபெற்று சென்றுவிட்டார்.

அப்போது காந்தி, ராஜாஜியிடம், பாரதியார் குறித்து விசாரிக்க, அதற்கு ராஜாஜி, "அவர் தமிழ்நாட்டின் கவிஞர்" என காந்தியிடம் கூறியதாகவும், அதற்கு காந்தி, "அவருக்கு கவனிப்பு தேவைப்படுகிறது. அதைச் செய்ய யாரும் இல்லையா?" எனக் கேட்டார் என்றும் வ. ராமசாமி ஐயங்கார் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

1920இல், பாரதியார் மீண்டும் 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் இணைந்தார். அதன் பிறகு, தனது இறுதிக்காலம் வரை திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோயிலுக்கு அருகில் வசித்து வந்தார்.

1921ஆம் ஆண்டு பார்த்தசாரதி பெருமாள் கோவில் யானையால் தாக்கப்பட்டு காயமடைந்தார் பாரதி. பிறகு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஜூன் மாதத்தில் இந்த சம்பவம் நடந்தது.

1921 செப்டம்பர் முதல் தேதி, பாரதிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. விரைவில் அது ரத்தக் கடுப்பாக மாறியது. செப்டம்பர் 11 பாரதியார் உயிரிழந்தார். அப்போது அவருக்கு 39 வயது கூட நிரம்பவில்லை.

"புதுச்சேரியில் அவர் கழித்த அந்த 10 வருடங்கள் தான் பாரதியை உலகுக்கு அடையாளம் காட்டின. புதுச்சேரி சென்று வாழ்ந்தது முதல், வேண்டுகோள் கடிதம் கொடுத்து மெட்ராஸ் வந்தது வரை, தனது சுதந்திரப் போராட்டம் நின்றுவிடக்கூடாது என்பதற்காக தான் அனைத்தையும் பாரதியார் செய்தார்." என்கிறார் பேராசிரியர் மணிகண்டன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு