You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காந்தா விமர்சனம்: தியாகராஜ பாகவதரின் உண்மை கதையில் துல்கர் நடித்துள்ளாரா?
- எழுதியவர், ஜி.ஆர். மகரிஷி
- பதவி, பிபிசிக்காக
துல்கர் சல்மானின் நடிப்பில் காந்தா திரைப்படம் வெளியாகியுள்ளது. டிரெய்லரைப் பார்த்தபோது இதுவொரு கிளாசிக் டிராமா திரைப்படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
1950களின் மெட்ராஸ் திரைப்படத் துறையில் நடப்பதாக அமைந்திருக்கும் திரைப்படம் தொடங்கியதுமே முகமூடி அணிந்த ஒருவரின் கையில் இருக்கும் ரிவால்வர் வெடிக்கிறது. குற்றத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாக இருக்குமோ என்று நினைத்தால் கதையின் போக்கு மாறுகிறது.
கதை என்ன?
மூத்த திரைப்பட இயக்குனர் அய்யா (சமுத்திரக்கனி), தனது தொழில் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறார்.
பிரபல கதாநாயகன் டி.கே மகாதேவன் (துல்கர் சல்மான்) சிறந்த நடிகராக உயர காரணமானவர் இயக்குநர் அய்யா.
அவரது இயக்கத்தில் தொடங்கப்பட்ட சாந்தா என்ற திரைப்படத்தின் முடிவை மாற்றுமாறு கதாநாயகன் டி.கே மகாதேவன் சொல்ல இருவருக்கும் இடையே மோதல் வெடிக்கிறது.
இருவருக்கும் இடையிலான ஈகோ பிரச்னைகள் காரணமாக படம் கைவிடப்படுகிறது. ஒருகட்டத்தில் மாடர்ன் ஸ்டுடியோ அழுத்தத்தால், அய்யாவும் டி.கே மகாதேவனும் சாந்தா படத்தை தொடர ஒப்புக் கொள்கின்றனர்.
மீண்டும் திரைப்பட படப்பிடிப்பு தொடங்குகிறது, முதல் நாள் படப்பிடிப்பில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. திரைப்படத்தின் பெயரை காந்தா என்று கதாநாயகன் மாற்றுகிறான். இயக்குனரின் வளர்ப்பு மகள் போன்ற புதிய கதாநாயகி குமாரி (பாக்யஸ்ரீ போர்ஸ்) படப்பிடிப்பின் போது கதாநாயகனிடம் நெருக்கமாகிறார்.
குமாரிக்கு ஹீரோ மீது காதல் ஏற்படுகிறது, அய்யாவுக்கு இது பிடிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் படபிடிப்பு நடைபெறும் ஸ்டுடியோவில் குமாரி கொலை செய்யப்படுகிறார்.
இன்ஸ்பெக்டர் பீனிக்ஸ் (ராணா) இந்த வழக்கை எப்படி விசாரித்தார்? உண்மையான கொலையாளி யார்? அதுதான் மீதிக் கதை.
தியாகராஜ பாகவதரின் கதையா?
இந்த திரைப்படம் 1940களின் தமிழ் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்படுகிறது. தியாகராஜ பாகதவரின் ஒரு படம் சென்னையில் 3 ஆண்டுகள் ஓடி, சாதனையைப் படைத்துள்ளது. அந்தப் படத்தின் பெயர் ஹரிதாஸ் (1944).
பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர் மூன்று வருடங்கள் சிறையில் இருந்தார். கத்தியால் குத்தப்பட்ட லட்சுமிகாந்தன், காயங்களுடன் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதே இறந்தார்.
காந்தாவில், நாயகன் சாதாரணமான நிலையில் இருந்து பிரபல நடிகனாக உயர்கிறான். பின்னர், கொலை வழக்கு ஒன்றில் சிக்குகிறார். இதைத் தவிர, எம்.கே. தியாகராஜரின் பாகவதரின் கதைக்கும், காந்தா திரைப்படத்திற்கும் எந்தவித ஒற்றுமையும் இல்லை
துப்பறியும் நாவல் போல சுவாரசியம்
காந்தா திரைப்படம் தொடங்கிய முதல் 15 நிமிடங்கள், அற்புதமான படத்தை திரையில் பார்க்கும் உணர்வைத் தருவதை மறுக்கமுடியாது. பின்னர் உற்சாகம் மெதுவாகக் குறைகிறது. இடைவெளியில் கொடுக்கப்பட்ட திருப்பத்தின் மூலம், இரண்டாம் பாதி நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையை ராணாவின் வருகை பொய்யாக்கவில்லை.
இருப்பினும், நான்கு சுவர்களுக்கு இடையில் நீண்ட நேரம் விசாரணை தொடரும் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகிறது. 2 மணி நேரம் 43 நிமிடங்கள் நீளும் திரைப்படத்தின் நீளம் சற்று தொய்வைக் கொடுக்கிறது.
புதிய இயக்குனர் செல்வமணி செல்வராஜ், திரைப்படத்தை விண்டேஜ் கிளாசிக் படமாக மாற்ற எடுத்த அக்கறையை கதையிலும் திரைக்கதையிலும் காட்டவில்லை.
முக்கிய கதாபாத்திரங்களுக்கு இடையில் ஏற்படும் விரிசலுக்கான காரணம் சரியான முறையில் காட்டப்படவில்லை. தான் வளர்த்துவிட்ட கதாநாயகனை, இயக்குநர் அய்யா எதிரியாக நினைக்கும் அளவிற்கு என்ன காரணம் என்பதும் சரியாகத் தெரியவில்லை.
தனது ஆசானின் இயக்கத்தை எதிர்த்து படப்பிடிப்பின் போது மாற்றங்களைச் செய்த ஹீரோ, நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? கதாநாயகி குமாரி, கதாநாயகனை தனது தந்தையைப் போன்ற அய்யாவுக்கு பிடிக்காது என்று தெரிந்திருந்தும், அவரை காதலிக்கும் காட்சியும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
திரைப்படத்தின் இரண்டாம் பாதியில், கொலையை புலனாய்வு செய்வது பழைய துப்பறியும் நாவல்களை நினைவூட்டுகிறது.
கொலை நடக்கிறது - அதை யாரெல்லாம் செய்திருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுகிறதோ, அவர்கள் அனைவரும் அங்கே இருக்கிறார்கள்.
இறுதியில், யாருக்கும் சந்தேகம் ஏற்பட வாய்ப்பே இல்லாத ஒருவர் குற்றத்தைச் செய்கிறார்.
மனதை உருக்கும் ஒரு காட்சி
படத்தின் நீளத்தைத் தாண்டி, நல்ல உணர்ச்சிபூர்வமான கதையைக் கொண்ட திரைப்படம் என்று சொல்லலாம். துல்கர் சல்மானின் வாழ்க்கையில் இந்த திரைப்படம் முக்கியமான ஒன்றாக தனித்து நிற்கும்.
அதிலும் கண்ணாடி முன்பு அழ முடியாமல் சிரிக்கும் காட்சி ஒன்றே அவர் தேசிய விருதுக்கு தகுதியானவர் என்று நிரூபிக்கிறது.
அந்தக் கதாபாத்திரத்தில் நாம் பார்ப்பது துல்கர் சல்மானை அல்ல, டி.கே மகாதேவன் என்ற கதாநாயகனை என்று சொல்லும் அளவுக்கு கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
தெலுங்கு திரைப்படங்களில் பாக்யஸ்ரீயை பல வேடங்களில் பார்த்திருக்கலாம். இயக்குனரின் திறமை, பாக்யஸ்ரீயின் திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கண்களால் நடிக்கும் பாக்யஸ்ரீ, தனது அசைவுகளிலும் நடிப்பிலும் நடிகை குமாரியாகவே மாறிவிட்டார்.
சமுத்திரக்கனியைப் பற்றி புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. அந்தக் கால நடிகர் குரு தத்தை நினைவூட்டும் அவர், தனது உடல் மொழி மூலம் தனது சீடன் டி.கே மகாதேவன் மீதான அன்பையும் கோபத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தினார்.
கவிதை போன்ற கலைப்படம்
இன்ஸ்பெக்டர் வேடத்தில் சுலபமாக பொருந்தும் ராணா, அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படம் மெதுவாக இருக்கிறது என்று அவர் பேசும் வசனம் வெறும் திரைப்பட வசனமல்ல, திரைப்படத்தை பார்க்க திரையரங்கத்திற்கு வந்த பார்வையாளர்களுக்கும் அப்படியேத் தோன்றியது.
காந்தா திரைப்படத்தில் ஒளிப்பதிவு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. டேனி சான்செஸ் லோபஸின் கடின உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெளிவாகத் தெரிகிறது.
புதிய கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்த இயக்குனரால், கதையின் முக்கிய மோதலை பார்வையாளர்களுக்கு சரியாக புரியவைக்க முடியவில்லை. இருப்பினும், ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநரின் முத்திரை தெரிகிறது. சிறிய கதாபாத்திரங்கள் கூட மிகக் கச்சிதமாக திரைக்கதையில் பொருத்தப்பட்டுள்ளனர்.
திரைப்படத்திற்கு வலு சேர்ப்பது செட். கலை இயக்குனர் நம்மை 1950களுக்கு அழைத்துச் செல்கிறார். பாடல்கள் சுமாராக இருந்தாலும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
காந்தாவைப் பார்த்ததும், இயக்குநர் மணிரத்னத்தின் 'இருவர்' வாழ்க்கை வரலாற்று திரைப்படம் நினைவுக்கு வந்தது. ஒவ்வொரு பிரேமும், கலைநயமிக்கதாகவும், கவிதைநயமிக்கதாகவும் இருக்கிறது. இருப்பினும், கதை மெதுவாக உள்ளது.
'காந்தா' திரைப்படம் எந்த அளவுக்கு வணிக ரீதியாக வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது, ஆனால் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வெளிவருவதில்லை. அனைத்து திரைப்பட ஆர்வலர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் இது.
பாராட்டுக்கள்
- அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கு துல்கர், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ, ராணா
- கேமரா
- செட்
திரைப்படத்தின் நீளம் மற்றும் பலவீனமான கதைக்களம் இரண்டிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். விண்டேஜ் கிளாசிக் திரைப்படமான காந்தா அனைவரின் ரசனைக்கும் ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம்.
(குறிப்பு: இந்த திரைப்பட விமர்சனத்தில் இடம்பெற்றிருக்கும் கருத்துகள் எழுதியவரின் தனிப்பட்ட கருத்துக்கள்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு