முன்னாள் நீதிபதி சந்திரசூட் பெயரை கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி - நடந்தது என்ன?

    • எழுதியவர், பிரியங்கா ஜக்தாப்
    • பதவி, பிபிசி மராத்தி

இன்றைய காலக்கட்டத்தில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் பலரிடம் பண மோசடி நடக்கும் சம்பவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

இதில் பெரும்பாலும் மூத்த குடிமக்களே குறிவைக்கப்படுகிறார்கள். தாங்கள் காவல்துறை அல்லது சிபிஐ அதிகாரிகள் என்று கூறி, அவர்களின் வாழ்நாள் சேமிப்பை மோசடி நபர்கள் கொள்ளையடிக்கின்றனர்.

மும்பையில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்துள்ளது. இந்த முறை முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பெயரைப் பயன்படுத்தி ஒரு மூதாட்டியிடம் சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்துள்ளனர்.

"உங்கள் வங்கிக் கணக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்காக நீங்கள் கைது செய்யப்படலாம்" என்று அந்தப் பெண்ணை அவர்கள் மிரட்டியுள்ளனர்.

அதன் பின்னர், பயந்துபோயிருந்த அந்த மூதாட்டியிடமிருந்து விசாரணை என்ற பெயரில் சுமார் 3 கோடியே 71 லட்சம் ரூபாயைத் தங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றச் செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் எப்படி நடந்தது? போலீஸ் விசாரணையில் தெரியவந்த உண்மைகள் என்ன?

சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பேச முயன்றோம். ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

குற்றம் நடந்தது எப்படி?

முதல் தகவல் அறிக்கையில் அளிக்கப்பட்ட தகவலின்படி, புகாரளித்த அந்த மூதாட்டி மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் கடந்த 26 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

ஆகஸ்ட் 18 அன்று அவருக்கு ஒரு மர்ம நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. "உங்கள் அழைப்பை கொலாபா காவல் நிலையத்துடன் இணைக்கிறேன்" என்று கூறி அந்த நபர் அழைப்பைத் துண்டித்தார்.

அதன் பிறகு அந்தப் பெண்ணுக்கு ஒரு வாட்ஸ்அப் வீடியோ கால் வந்தது. மறுமுனையில் பேசிய நபர், தான் காவல் நிலையத்திலிருந்து பேசுவதாகக் கூறி, "உங்கள் ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்று அந்த மூதாட்டியிடம் தெரிவித்தார்.

அந்த ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருப்பதாகவும், அது சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுவதாகவும் அவரிடம் கூறப்பட்டது.

இது சட்டவிரோதமான காரியம் என்பதால், உங்கள் பெயரில் பணப் பரிமாற்ற மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியதும் அந்த மூதாட்டி பயந்துவிட்டார். தனக்கு அந்த வங்கியில் கணக்கு எதுவும் இல்லை என்றும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அவர் வாதிட முயன்றார்.

அப்போது அவர்கள் அந்தப் பெண்ணிடம், "இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதில் உங்கள் பெயரும் இருப்பதால் நீங்களும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்" என்று கூறினர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் அது தொடர்பான ஒரு போலி கடிதத்தையும் அவருக்கு அனுப்பினர்.

"நாங்கள் உங்களை விசாரணை செய்வோம், நாங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளியுங்கள். இல்லையெனில் உங்கள் வீட்டிற்கே வந்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கைது செய்வோம்" என்று மிரட்டினர்.

மேலும், இந்த விவகாரத்தைப் பற்றி யாரிடமாவது சொன்னால் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தனர்.

அவர்கள் அந்தப் பெண்ணின் பெயரில் உள்ள அனைத்து வங்கிக் கணக்குகளின் விவரங்களையும் வாங்கிக்கொண்டனர். அதன் பிறகு, இது மிகவும் தீவிரமான வழக்கு என்றும், அந்தப் பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறினர்.

அந்தப் பெண் வசிக்கும் இடம் குறித்த அனைத்து தகவல்களையும் அந்த நபர்கள் அவரிடமிருந்து பெற்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதால், 24 மணிநேரமும் தங்களது கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்றும் அந்தப் பெண்ணிடம் கூறினர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்படும் நபர் தனது பெயரை எஸ். கே. ஜெயஸ்வால் என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்திருந்தார்.

கட்டுரை எழுதச் சொன்னார்கள்

சிறிது நேரம் பேசிய பிறகு, அந்த நபர் அந்த மூதாட்டியிடம் அவரது வாழ்க்கையைப் பற்றி 2 முதல் 3 பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்.

மேலும், "நீங்கள் நிரபராதி என்று எனக்குத் தெரியும், விரைவில் விசாரணை நடந்து உங்களுக்கு ஜாமீன் கிடைக்கும்" என்று அவருக்கு நம்பிக்கை அளித்தார்.

அதன்பின் ஆன்லைன் விசாரணை தொடங்கியது. வீடியோ காலில் வந்த நபர் தன்னை தலைமை நீதிபதி (முன்னாள்) சந்திரசூட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அந்தப் போலி நீதிபதி, மூதாட்டியின் முதலீடுகள் தொடர்பான சில ஆவணங்களைக் கேட்டார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தப் பெண்ணின் கணக்கில் சைபர் அட்டாக் நடந்துள்ளதாகக் கூறி, விசாரணையின் ஒரு பகுதியாக அவரது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் அனைத்தையும் பணமாக்கச் சொன்னார்கள்.

பின்னர், அந்த நிதியில் சுமார் 90 முதல் 95 சதவீதத்தை அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்கிற்குத் தற்காலிகமாக மாற்றச் சொன்னார்கள். பயந்துபோயிருந்த அந்தப் பெண், அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கிற்குப் பணத்தை அனுப்பினார்.

அதன் பிறகு, மீண்டும் மீண்டும் வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புமாறு மிரட்டினர்.

பணம் தராவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர். ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் அந்த மூதாட்டியிடமிருந்து மொத்தம் 3 கோடியே 71 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டது.

தான் அனுப்பிய பணத்தைத் திரும்பக் கேட்டபோது, அவர்கள் புதிய சாக்குகளைச் சொல்லிப் பணத்தைத் தர மறுத்தனர்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், அக்டோபர் 13 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மோசடி தொடர்பான அனைத்து வாட்ஸ்அப் உரையாடல்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் ஸ்கிரீன் ஷாட்களை அவர் காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

இந்த விவகாரத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

இப்படிப்பட்ட அழைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

காவல்துறை ஒருபோதும் வாட்ஸ்அப் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் ஆன்லைன் விசாரணையோ அல்லது கைது நடவடிக்கையையோ மேற்கொள்வதில்லை. யாராவது அப்படிச் செய்தால் அவர்களுக்கு எந்தத் தகவலும் அளிக்காமல் அந்த எண்ணை பிளாக் செய்து விடவும்.

உயர் அதிகாரிகளின் புகைப்படத்தை வாட்ஸ்அப் முகப்புப் படமாக வைத்திருக்கும் மர்ம எண்களைச் சரிபார்த்துவிட்டு மட்டுமே பதில் அளிக்கவும்.

சைபர் மோசடி நடந்தால் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

யாராவது இது போன்ற சைபர் மோசடி வலையில் சிக்கினால், உடனடியாகச் சில நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.

மத்திய அரசு https://cybercrime.gov.in/webform/Crime_NodalGrivanceList.aspx. என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

சைபர் மோசடியில் சிக்கினால் இதில் புகார் அளிக்கலாம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி எண்கள் உள்ளன. எனவே நீங்கள் தொலைபேசி மூலமும் புகார் அளிக்கலாம்.

மோசடி நடந்த பிறகு எவ்வளவு சீக்கிரம் புகார் அளிக்கிறீர்களோ, பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் அவ்வளவு அதிகமாக உள்ளது என்று சைபர் நிபுணர்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு