You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஈஷா யோகா மையம்: காவல்துறை நடவடிக்கைகளை நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
ஈஷா மையத்துக்கு எதிரான தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கைகளை நிறுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈஷா மையம் தொடுத்த அவசர மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரித்த போது, இதைத் தெரிவித்துள்ளனர்.
ஈஷா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இரண்டு பெண்களிடம் பேசிய பிறகு, "அவர்கள் சொந்த விருப்பதிலேயே அங்கு தங்கி வருவதாக தெரிவித்தனர்" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
மேலும், சம்பந்தப்பட்ட இரு பெண்களின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த ஆட்கொணர்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றிக் கொண்டது.
ஒரு நிறுவனத்துக்குள் ராணுவம் அல்லது காவல்துறையினரை இப்படி உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறிப்பிட்டார். சென்னை உயர்நீதிமன்றம் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்த அறிக்கையை காவல்துறை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.
கோவை வெள்ளியங்கிரி மலைடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களாக நடத்தி வந்த சோதனை புதன்கிழமை இரவு முடிவடைந்தது.
ஈஷா யோகா மையத்தின் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட அனைத்து கிரிமினல் வழக்குகள் குறித்தும் விரிவான அறிக்கையை வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இந்தச் சோதனை நடத்தப்பட்டு வந்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் சமூக நலத்துறை, குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தியது. துறவிகள் மட்டுமின்றி ஈஷாவில் இருக்கும் அனைவரிடமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ் தனது இரண்டு மகள்களை ஈஷா மையத்திலிருந்து மீட்டுத் தருமாறு தொடுத்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த போது சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது.
அந்த மையத்தில் தனது மகள்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டுகிறார். எனினும் தங்கள் சொந்த விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் இருந்து வருவதாக அவரது மகள்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
யாரையும் திருமணம் செய்துகொள்ளவோ, துறவறம் மேற்கொள்ளவோ கட்டாயப்படுத்துவதில்லை என்று ஈஷா யோகா மையம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையின் அறிக்கை அக்டோபர் 4ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. தற்போது இந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 18ஆம் தேதி நடைபெறுகிறது.
வழக்கின் பின்னணி என்ன?
ஈஷா யோகா மையம் 1992-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான வெள்ளியங்கிரியில் ஜக்கி வாசுதேவால் நிறுவப்பட்டது.
ஈஷா யோகா மையம் திருமணம் ஆன, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் சிலரின் இருப்பிடமாக இருக்கிறது என்று அந்த மையம் கூறுகிறது.
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது இரண்டு மகள்களை மீட்டு தருமாறு கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழத்தில் வேளாண் பொறியியல் துறையின் முன்னாள் தலைவர். அவருக்கு 42 வயதிலும், 39 வயதிலும் மகள்கள் உள்ளனர்.
அவரது மூத்த மகள் மெகட்ரானிக்ஸ் படிப்பில் இங்கிலாந்தில் உள்ள பிரபல பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். நல்ல சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்த அவர், திருமணம் செய்து பின் 2008-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு அவர் ஈஷா மையத்தில் இணைந்தார்.
மென்பொருள் பொறியாளரான இளைய மகளும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவரும் பின்பு ஈஷா மையத்தில் இணைந்துள்ளார். தற்போது இருவரும் ஈஷா மையத்தில் தங்கியிருக்கின்றனர்.
தனது மகள்களுக்கு “மருந்துகள் கொடுத்து அவர்களது மூளையின் செயல்பாட்டை குறைத்து” விட்டதாகவும் இதனால் குடும்பத்துடன் எந்த உறவையும் அவர்கள் வைத்துக் கொள்ளவில்லை எனவும் காமராஜ் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
ஈஷா மையத்துக்கு வருபவர்கள் சிலரை அவர்கள் மூளைச்சலவை செய்து, சந்நியாசிகளாக மாற்றுகின்றனர் என்றும் பெற்றோர்கள் சந்திக்கக் கூட அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் காமராஜ் தெரிவித்திருந்தார்.
அந்த மையத்தில் பணிபுரியும் மருத்துவர் மீது போக்சோ வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஜூன் 15-ஆம் தேதி மாலை 6 மணியளவில், அவரது மூத்த மகள் அவரை அழைத்து பேசியதாகவும், அப்போது ஈஷா யோகா மையத்தின் மீது தான் தொடுத்திருக்கும் வழக்குகளை பின் வாங்கும் வரை தனது இளைய மகள் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் காமராஜ் குறிப்பிட்டிருந்தார்.
மகள்கள் என்ன கூறுகின்றனர்?
இந்த வழக்கு விசாரிக்கப்படும் போது அவரது மகள்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். தனது மகள்கள் ஈஷா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக காமராஜ் கூறும் நிலையில், தாங்கள் சுய விருப்பத்துடன் அங்கு தங்கி வருவதாகவும் தங்களை யாரும் வற்புறுத்தவில்லை என்றும் மகள்கள் தெரிவித்தனர்.
ஈஷா யோகா மையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கே ராஜேந்திர குமார், வயது வந்தவர்களுக்கு தங்கள் வாழ்க்கை குறித்து, முடிவு எடுக்க உரிமை உண்டு என்று வாதாடினார்.
நீதிமன்றம் அவர்களின் தனிப்பட்ட முடிவுகளில் தலையிடுவது தேவையற்றது என்று தெரிவித்தார். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
தந்தையின் கோரிக்கை என்ன?
தனது இளைய மகள் சென்னையில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் ஜக்கி வாசுதேவ் பேசியதாகவும் அதில் அவர் ஈர்க்கப்பட்டார் என்றும் காமராஜ் தெரிவிக்கிறார்.
கல்லூரி படிப்பு முடித்து வேலைக்கு சென்றவர் ஈஷா மையத்தில் இணைந்துள்ளார். தனது மகளுடன் சேர்ந்து அவரது கல்லூரியில் படித்த 20 பெண்கள் தங்கள் வேலையை விட்டு, ஈஷா மையத்தில் இணைந்ததாக காமராஜ் பிபிசியிடம் தெரிவித்தார்.
“2016-ஆம் ஆண்டு இரு மகள்களும் ஈஷா மையத்தில் இணைந்தனர். அதே ஆண்டில் ஆட்கொணர்வு மனு தொடுத்து, மகள்களை பார்க்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 2017- ஆம் ஆண்டு எனது மகள்களை எனக்கு எதிராக, 'நான் ஈஷா மையத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதாக' மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வைத்தனர். அந்த வழக்கு முடிய ஆறு ஆண்டுகள் ஆனதால் அதுவரை என்னால் அவர்களை காண இயலவில்லை. கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தலையீட்டுக்கு பின் அவர்களை சந்திக்க மீண்டும் அனுமதி கிடைத்தது.” என்றார்.
மேலும், “மூத்த குடிமக்கள் சட்டத்தின் படி, பெற்றோர் பார்த்துக் கொள்ளும் கடமையிலிருந்து தவறுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தேன். வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்ற போது, பெற்றோர்கள் ஈஷா மையத்துக்கு வந்தால் அவர்களை பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துவிட்டனர்” என்றார்.
நீதிமன்றம் என்ன கூறியது?
இந்த வழக்கை விசாரித்தபோது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் வி. சிவஞானம் ஈஷா மையத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், “தனது மகளுக்கு திருமணம் செய்துவிட்டு, பிற பெண்களை மொட்டை அடித்து, சந்நியாசிகளாக” யோகா மையங்களில் வாழ ஏன் ஊக்குவிக்கிறார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பெண்களிடம், “நீங்கள் ஆன்மிகப் பாதையில் செல்வதாக கூறுகிறீர்கள். உங்கள் பெற்றோர்களை புறந்தள்ளுவது பாவம் என்று தோன்றவில்லையா?” என்று நீதிபதிகள் கேட்டனர்.
நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், வழக்கு தொடுத்தவர் மற்றும் ஈஷா மையத்தில் இருக்கும் இரு பெண்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். ஈஷா மையத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் ‘தீவிரத்தன்மையை’ கருத்தில் கொண்டும், காவலில் இருப்பவர்கள் தங்கள் முன் ‘பேசிய விதத்தை’ வைத்துப் பார்க்கும் போதும், ‘குற்றச்சாட்டுகளின் பின் உள்ள உண்மையை கண்டறிய மேலும் ஆராய வேண்டியுள்ளது’ என்று சென்னை உயர்நீதிமன்றம் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை புறநகர் காவல்துறையினர் ஈஷா மையம் மீது இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, நீதிமன்றத்தின் முன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 4-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
ஈஷா மையம் கூறுவது என்ன?
இந்த விவகாரம் குறித்து ஈஷா யோகா மையத்தை பிபிசி தொடர்பு கொண்டது. அப்போது ஈஷா யோகா மையத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் எழுத்துப்பூர்வ விளக்கத்தை பிபிசியிடம் பகிர்ந்தார்.
அதில், “ஈஷா யோகா மையம் எவரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ அல்லது துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதோ, உற்சாகப்படுத்தி உந்தி தள்ளவோ செய்வதில்லை.
"இரண்டு பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர் கடந்த 8 வருடங்களாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். உள்நோக்கம் கொண்ட சிலரின் தூண்டுதலால் போராட்டங்களை நடத்தி தேவையில்லாத சச்சரவுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். மிக சமீபத்தில் காமராஜ் ஈஷா யோகா மையம் சென்று தன்னுடைய மகள்களை சந்தித்த CCTV காட்சிகளும் ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது." என்று கூறப்பட்டுள்ளது
மேலும் "2016-ஆம் ஆண்டு இதே காமராஜ் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தீர விசாரித்த கோவை மாவட்ட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று கோவை ஈஷா யோகா மையத்தில் இருவரையும் (காமராஜின் மகள்கள்) சந்தித்து நீதி விசாரணை நடத்தியது.
அந்த தீர்ப்பில் நீதிபதிகள் 'பெற்றோர் தொடுத்த வழக்கில் உண்மையில்லை, பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் அந்த மையத்தில் தங்களது சுயவிருப்பத்திலேயே தங்கி இருக்கிறார்கள் என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறோம்' என்று கூறியுள்ளார்கள்.” என்று தெரிவித்துள்ளது.
ஈஷா யோகா மையத்தில் விசாரணை
இதையடுத்து செவ்வாய்கிழமை (அக்டோபர் 1), கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலான 150 காவலர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரி அம்பிகா தலைமையிலான 50-க்கும் மேற்பட்டோர், ஈஷா யோகா மையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அங்குள்ள பெண்கள், எந்த மாதிரியான சூழல்களில் இந்த மையத்துக்கு வந்தனர், அங்கு அவர்கள் வாழ்க்கை முறை எவ்வாறாக இருக்கிறது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விரிவான விசாரணையின் அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)