You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிபிஐ விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவு - காவல் நிலையத்தில் என்ன நடந்தது?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.
"ஆகஸ்ட் 29ஆம் தேதி மாலை என் மகள் மீது ஒருவித ஒவ்வாத நாற்றம் வீசியது. என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. கழிவறை சென்றுவிட்டு கை, கால்களைக் கழுவி வருமாறு அவளிடம் கூறினேன்.
ஆனாலும், நாற்றம் போகவில்லை. ஒருவேளை சிறுநீர் கழிக்கும் இடத்தில் ஏதேனும் பிரச்னையாக இருக்கலாம் என மருத்துவரிடம் சென்று பார்த்தோம்" என்று பிபிசி தமிழிடம் பேசும்போதே உடைந்து அழுதார் சிறுமியின் தாய்.
பெண் மருத்துவர் 10 வயதான அந்தச் சிறுமியைப் பரிசோதித்தார். அப்போது அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ததாக, சிறுமியின் தாயார் தெரிவித்தார். "குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்” எனக் கூறிவிட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைத்துள்ளார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறுமி அனுமதிக்கப்பட்டார். இதன்பின்னர், விசாரணை என்ற பெயரில் சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் அண்ணாநகர் மகளிர் போலீஸ், சிறுமியின் பெற்றோரை அலைக்கழித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இதை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது. எனினும், காவல்துறை இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
போக்சோ வழக்கில் என்ன நடந்தது?
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி பேசுவதை மருத்துவமனை லிஃப்டின் ஓரம் நின்று மகளிர் போலீசார் வீடியோ எடுத்ததாகவும் அப்போது சிறுமியின் பெற்றோர் அருகில் இல்லை எனவும் பிபிசியால் பார்க்கப்பட்ட நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுமியின் வாக்குமூலம் தொடர்பான ஆடியோவும் இணையதளங்களில் வெளியானது.
"இதற்கு யார் காரணம் என என் மகளிடம் கேட்டேன். பக்கத்து வீட்டைச் சேர்ந்த சதீஷ் எனும் தண்ணீர் கேன் சப்ளை செய்பவர்தான் காரணம் எனக் கூறினாள். அவருக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது. அவர் மீது போலீசார் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை" என்கிறார் சிறுமியின் தாய்.
ஆனால், தங்களை மகளிர் போலீசார் கடுமையாக தாக்கியதாகக் கூறுகிறார் சிறுமியின் தாய். "என் மகளிடம் வாக்குமூலம் வாங்க வந்த பெண் போலீசார், மூன்று வெள்ளைத் தாள்களில் கையெழுத்து கேட்டனர். ஏன் எனக் கேட்டதும் தாளை கிழித்துப் போட்டுவிட்டுச் சென்றனர்" என்கிறார்.
இதன்பிறகு ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு அண்ணா நகர் மகளிர் காவல்நிலையத்துக்கு சிறுமியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர்.
'கையை முறுக்கி அடித்தனர்'
"இரவு 12 மணிக்கு இன்ஸ்பெக்டர் வந்தார். என்னை மகளிர் போலீசார் உள்ளே கூட்டிச் சென்று கையை முறுக்கி அடித்தார்கள். அழுதுகொண்டே வெளிய வந்தேன். 1 மணிக்கு மருத்துவமனைக்குச் சென்றால் ஐ.சி.யு வார்டுக்கு பக்கத்தில் இருக்கும் லிஃப்ட் ஓரத்தில் என் மகளை விசாரித்துக் கொண்டிருந்தார்கள்," என்கிறார்.
"இப்படியெல்லாம் விசாரிக்கலாமா?’ என்று கேட்டேன். அப்போது என்னுடன் வந்த ஒருவருடன் என்னைத் தொடர்புப்படுத்தி தகாத முறையில் பேசினார்கள். மறுநாள் என் கணவரை காவல்நிலையத்திற்கு வரவைத்து அடித்தார்கள்" என்கிறார் சிறுமியின் தாய்.
தான் கொத்தனார் வேலை பார்ப்பதாக சிறுமியின் தந்தை கூறியதால், கையில் அடிக்காமல் பின்பக்கம் நிற்க வைத்து போலீசார் தாக்கியதாகக் கூறுகிறார் சிறுமியின் தாய்.
தன் மகளிடம் தவறாக நடந்துகொண்ட நபருக்கு அரசியல் பின்புலம் இருப்பதால், தங்களை அச்சுறுத்தி புகாரை வாபஸ் பெறும் வகையில் மகளிர் போலீசார் செயல்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
யூட்யூபர் மீது வழக்கு
போலீசாரால் தாக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பேசும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியானதால், கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கைக் கையில் எடுத்தது.
அண்ணாநகர் போலீஸ் துணை ஆணையர் சிநேக பிரியா, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி ஆகியோரை எதிர்மனுதாரர்களாக இந்த வழக்கில் சேர்த்தனர்.
தொடர்ந்து, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சதீஷ் என்பவரை போக்சோ சட்டப்பிரிவின்கீழ் போலீசார் கைது செய்தனர். சிறுமியின் உறவினரான 14 வயது சிறுவன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"நாங்கள் பேசிய வீடியோ வெளியே வந்ததும் இன்ஸ்பெக்டர் ராஜியை பணியிட மாற்றம் செய்துவிட்டனர். அடுத்து வந்த இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரியும் இதேபோல தொல்லை கொடுத்தார்" என்கிறார் சிறுமியின் தாய்.
சிறுமி விவகாரத்தில் ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகள் வெளியான விவகாரத்தில் யூடியூபர் மாரிதாஸ் உள்பட இருவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த செவ்வாய் அன்று (ஆக. 1) சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறுமி பாதிக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
சிறுமியின் வாக்குமூலம் தொடர்பாக இருவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளதாக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்தார்.
'போலீஸ் மீது நம்பிக்கை இல்லை'
சிறுமியின் வாக்குமூலம் வெளியானது குறித்து நீதிபதிகள் சிவஞானம், எஸ்.எம்.சுப்ரமணியம் அமர்வு கேள்வி எழுப்பியது. வாக்குமூலத்தை பெண் காவல் ஆய்வாளர் தனது மொபைல் போனில் பதிவு செய்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னணி குறித்து விசாரணை நடந்து வருவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்தார்.
"புகார் கொடுக்க வந்த பெற்றோரை போலீசார் தாக்கியது; லிஃப்ட் அருகில் வைத்து சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றது ஆகியவற்றின் மூலம் போலீஸ் மீதான நம்பிக்கையை சிறுமியின் பெற்றோர் இழந்துவிட்டதாக" நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதற்குரிய காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் நம்புவதால் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். சிறுமியின் பெற்றோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
'நிம்மதியாக வாழ முடியாது'
மகளிர் போலீசார் மீது புகார் கொடுத்த பின்னரும், காவல் நிலையத்தில் இருந்து அடிக்கடி மகளிர் போலீசார் வந்ததாகக் கூறும் சிறுமியின் தாய், "அங்கிருந்தால் நிம்மதியாக வாழ முடியாது என வீட்டைக் காலி செய்துவிட்டோம்" என்கிறார்.
காவல் நிலையத்தில் தன்னையும் தனது கணவரையும் தாக்கியது தற்போதும் வலிப்பதாகக் கூறும் சிறுமியின் தாய், "15 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் பிறந்தவள் என் மகள். இப்படிச் செய்துவிட்டனர். நீதிமன்றம், காவல்நிலையம், மருத்துவமனை என நிறைய செலவு. இதுவரை படித்த பள்ளியில் படிக்க வைக்க முடியாது என்பதால் வேறு பள்ளி தேடிக்கொண்டு இருக்கிறோம்" என்றும் தெரிவித்தார்.
"சிறுமி பாதிக்கப்பட்ட வழக்கை, தாமாக முன்வந்து விசாரிக்குமாறு நீதிபதிகளிடம் கடிதம் கொடுத்தேன். சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்" எனக் கூறுகிறார் சிறுமி தரப்பு வழக்கறிஞர் சூர்யபிரகாசம்.
சி.பி.ஐ விசாரணை ஏன்?
இந்த வழக்கில் குற்றம் செய்தவர் யார் என்பதைக் கூறியும் ஒன்பது நாள்களாக போலீசார் கைது செய்ய மறுத்ததாகக் கூறும் சூர்யபிரகாசம், "போக்சோ வழக்கில் சிறுமியின் அடையாளம் தெரியும் வகையில் செயல்பட்டதால்தான் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது" என்கிறார்.
இந்த விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளையும் சிறைப்படுத்தவும் போக்சோ சட்டத்தில் இடம் இருக்கிறது என கூறுகிறார் அவர்.
அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக்கிடம் பிபிசி தமிழ் பேசியபோது, இந்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் நிலைக்கு வழக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
சிறுமியின் வாக்குமூலம் வெளியான விவகாரத்தில் இரண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னணி குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
"இந்த வழக்கில் நடந்த ஒரே தவறு, சிறுமியின் வாக்குமூலம் வெளியானதுதான். புலனாய்வு அதிகாரி பதிவு செய்யலாம் என போக்சோ சட்டப் பிரிவு 24(5) கூறுகிறது. எப்படி வெளியானது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது" என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர்.
சிறுமியிடம் 1098 ஹெல்ப்லைன் குழுவினரும் வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் அவர்களிடமும் விசாரணை நடப்பதாகவும் கூறுகிறார் அவர்.
"சிறுமியின் பெற்றோரை போலீசார் தாக்கியதாகக் கூறுவது தவறான தகவல்" எனக் கூறும் காவல்துறை அதிகாரி, "செப்டம்பர் 3ஆம் தேதி காவல் ஆணையருக்கு, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
அதில் அவர்களின் ஒரே கோரிக்கை, 'சதீஷ் என்பவரை ஏன் கைது செய்யவில்லை?' என்பது மட்டும்தான். ஆனால், 7 ஆம் தேதியன்று திடீரென தங்களை போலீசார் அடித்ததாகக் கூறியுள்ளனர்" என்கிறார்.
"குற்றம் செய்த நபர் சிறையில் இருக்கிறார். புலனாய்வு குறைபாட்டுக்காக சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை" என்கிறார் அந்த அதிகாரி.
அண்ணா நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரிடயிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "இந்த வழக்கு குறித்துப் பேச விரும்பவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.
காவல்துறை கூறுவது என்ன?
இதுதொடர்பாக, காவல்துறை கடந்த செப். 9 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், சிறுமி தரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்படவில்லை எனவும் குழந்தை நல ஆலோசகர் ஒதுக்கப்படவில்லை என்றும் செய்தித்தாள் ஒன்றில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை அந்த அறிக்கையில் காவல்துறை மறுத்துள்ளது.
உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும் ஆய்வாளர் தங்களைத் தாக்கியதாக சிறுமியின் பெற்றோர் கூறுவது பொய்யான தகவல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்சோ வழக்குகளில் என்ன நடக்கிறது?
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள்படி, குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர்கள்தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதாகக் கூறுகிறார், குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன்.
"அண்ணா நகர் வழக்கிலும் குழந்தைக்கு நன்கு அறிமுகமான பக்கத்து வீட்டு நபர்தான் ஈடுபட்டுள்ளார்" என்கிறார்.
போக்சோ வழக்குகளில் தமிழகத்தில் தண்டனை விகிதம் என்பது 16 சதவீதத்துக்கும் கீழ் உள்ளதாகக் குறிப்பிடுகிறார் தேவநேயன்.
இதை உறுதி செய்யும் வகையில் மாநில குற்ற ஆவணக் காப்பகத்திடம் இருந்து வழக்கறிஞர் பிரபாகர் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில தரவுகளைப் பெற்றுள்ளர்.
அதில், 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 4,020 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்த ஆண்டில் நிலுவையில் இருந்த வழக்குகளையும் சேர்த்து 9,643 வழக்குகள் விசாரணைக்கு வந்துள்ளன. இவற்றில் 955 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதிலும் 202 வழக்குகளில் மட்டுமே குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். 753 வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆர்.டி.ஐ தகவல் கூறுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டில் விசாரணைக்கு வந்த 13,399 போக்சோ வழக்குகளில் 2,033 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதிலும் 524 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.டி.ஐ தகவல் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் மட்டுமே போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் இருப்பதாகவும் குழந்தைகள் மீதான குற்றங்களின் வடிவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் கூறுகிறார் தேவநேயன்.
"தமிழகத்தில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் என்ற ஒன்று செயல்பாட்டிலேயே இல்லை" எனக் கூறுகிறார் அவர்.
"தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஆணையத்தின் தலைவரை நீக்கியதற்கு எதிராக நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டது. அதனால் தற்போது ஆணையம் செயல்படுவதில்லை" என்கிறார்.
குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், சிறார் நீதிச் சட்டம், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் என நான்கு சட்டங்களைக் கண்காணிக்கும் அமைப்பாக இது உள்ளது. இதன் மீதான தடையை நீக்குவதற்கு தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்கிறார் தேவநேயன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)