You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் நடிகர் சிரஞ்சீவி - நீங்களும் இடம் பெற என்ன செய்ய வேண்டும்?
- எழுதியவர், பி.நவீன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது 46 வருட திரையுலகப் பயணத்தில் 156 திரைப்படங்கள், 537 பாடல்கள், 24 ஆயிரம் நடன அசைவுகள் என ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இதன் மூலம் அவர் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்திருக்கிறார்.
கின்னஸ் புத்தகம் என்றால் என்ன? சாமானியர் முதல் பிரபலங்கள் வரை அனைவராலும் விரும்பப்படுவது ஏன்?
கின்னஸ் புத்தகத்தின் வரலாறு என்ன? இதுபோன்ற சுவாரஸ்யமான விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
`கின்னஸ் உலக சாதனை’ ஐடியா உருவானது எப்படி?
கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, உலக சாதனைகளை பதிவு செய்ய ஒரு புத்தகம் வேண்டும் என்ற எண்ணம் 1950களில் `சர் ஹக் பீவர்’ என்பவருக்கு வந்தது.
ஒரு நாள் அயர்லாந்தில் உள்ள வெக்ஸ்போர்டில் ஒரு பார்ட்டிக்கு சென்றிருந்தார். அங்கு ஐரோப்பாவில் வேகமான game-bird எது? என்ற விவாதம் நடந்தது.
அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் அளித்தனர். சரியான பதிலை எங்கு தேடுவது என்று அவர்களுக்குப் புரியவில்லை.
இதன் மூலம், உலகின் விசித்திரமான விஷயங்கள், சிறப்புகள், பதிவுகள் ஆகியவற்றைப் பார்க்க ஒரு புத்தகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் சர் ஹக் பீவருக்கு ஏற்பட்டது.
லண்டனில் உள்ள லுட்கேட் ஹவுஸுக்கு அருகில் இரண்டு அறைகளுடன் 1954-ஆம் ஆண்டில் நோரிஸ் மற்றும் ரோஸ் மெக்வீர்டர் `கின்னஸ் சூப்பர்லேட்டிவ்ஸ்’ என்னும் வெளியீட்டு நிறுவனத்தை தொடங்கினார்கள்.
வாரத்திற்கு 90 மணி நேரம் உழைத்து, பதின்மூன்றரை வாரங்களில் முதல் கின்னஸ் புத்தகத்தை உருவாக்கினார். 1955-ஆம் ஆண்டில், கின்னஸ் புத்தகம் என்ற தலைப்பில் முதல் புத்தகம் வெளியிடப்பட்டது.
மக்கள் அந்த புத்தகத்தை மிகவும் விரும்பினர். அந்த கின்னஸ் புத்தகம் நான்கு முறை மறுபதிப்பு செய்யப்பட்டது.
இதுவரை சுமார் 1 லட்சத்து 87 ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளதாக கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.
கின்னஸ் உலக சாதனை பதிவின் நோக்கம் என்ன?
உலகத்தை மேலும் சுவாரஸ்யமாக்க முயற்சிப்பதாக கின்னஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“சிலர் சாதனை படைத்திருப்பதை உலகுக்குக் காட்டினால், பலருக்கு அவர்கள் உத்வேகமாக இருப்பார்கள்” என்று அது கூறுகிறது.
கால்கள் இல்லாவிட்டாலும், கைகள் இல்லாவிட்டாலும் ஒருவரால் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க முடியும். வறுமையில் வாடும் போதே கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தவர்களும் உள்ளனர். கல்வியறிவு இல்லாவிட்டாலும் சாதிக்கின்றனர். 60 வயதிலும் சாதித்த பலர் இருக்கின்றனர்.
"கின்னஸ் உலக சாதனைகளின் முக்கிய நோக்கம், உத்வேகம் தரும் கதைகளைத் தெரிந்துகொள்வதன் மூலம் எதையும் சாதிக்க முடியும் என்பதை மக்களை உணர வைப்பதே" என்று 14 கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த `ஸ்க்வாட்ரான் லீடர்’ ஜெயசிம்ஹா பிபிசி தெலுங்கிடம் தெரிவித்தார்.
அவர் இந்தியன் மெமரி ஸ்போர்ட்ஸ் கவுன்சிலின் தலைவராகவும் உள்ளார்.
எத்தனை வகையான பதிவுகள் உள்ளன?
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் பதிவுகள் 5 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதாவது, ஆன்லைன் பதிவுகள், நிறுவனத் தயாரிப்பு சார்ந்த சாதனைகளின் பதிவுகள், வெகுஜன கண்காட்சிகள் தொடர்பான சாதனைகளுக்கான பதிவுகள், சிறிய அல்லது பெரிய அளவிலான தயாரிப்புகள் சார்ந்த சாதனை பதிவுகள், நேரம் சார்ந்த சாதனைப் பதிவுகள் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வைக்கப்படுகின்றன.
கின்னஸ் உலக சாதனை - தரநிலை என்ன?
நாம் ஒரு செயலைச் செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இது துல்லியமாக அளவிடக் கூடியதாக இருக்க வேண்டும். லிட்டர், கிலோமீட்டர், சென்டிமீட்டர் போன்ற சில அளவீடுகள் இருக்க வேண்டும்.
அந்த சாதனையை அடுத்து யாராவது முறியடிக்கலாம். அது சரியாக நிரூபிக்கப்பட வேண்டும். உறுதியான ஆதாரம் வேண்டும். எந்த சாதனையாக இருந்தாலும் அது உலகில் சிறந்ததாக இருக்க வேண்டும்.
மேற்கூறிய அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றினால் மட்டுமே சாதனையாக பதிவு செய்யப்படும் என கின்னஸ் உலக சாதனை அமைப்பு தங்களது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
கின்னஸ் உலக சாதனைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
“கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், 'விண்ணப்பிக்கவும்' என்ற உள்ளீட்டை கிளிக் செய்யவும், அதன் பின்னர் விண்ணப்ப செயல்முறை தொடங்கும். முதலில் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் இருக்கும் பெயர், ஊர், தொலைபேசி எண், அஞ்சல் போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும். அதன் பிறகு எந்த நிகழ்வில் சாதனை படைக்க வேண்டும் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்’’ என்றார் ஜெயசிம்ஹா.
“விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த 3 மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் பதில் வரலாம். ஏனெனில் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன. அவற்றை ஆய்வு செய்ய சிறிது நேரம் ஆகும். விண்ணப்பத்தை விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்றால், 'ஃபாஸ்ட் ட்ராக் அப்ளிகேஷன்' வசதி உள்ளது. அதற்கு கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டும். இதனால், குறைந்த நேரத்தில் பணிகள் முடிவடையும்,'' என ஜெயசிம்ஹா தெரிவித்தார்.
"பதிவுகள் இரண்டு வழிகளில் உள்ளிடப்படுகின்றன. ஒன்றை நாம் ஆவண வடிவில் அனுப்ப வேண்டும். அடுத்தது விளக்கக் காட்சி வடிவத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஆவணப்படுத்தல் என்பது என்ன? உதாரணத்திற்கு சிரஞ்சீவி இதுவரை அவரது படங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன அசைவுகள் (dance moves) செய்திருக்கிறார் எனில் அதற்கான ஆதாரமாக அனைத்து விவரங்களும் விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட வேண்டும். கின்னஸ் உலக சாதனை பிரதிநிதிகள் அவற்றை ஆய்வு செய்து பட்டத்தை வழங்குவார்கள்.
இரண்டாவது முக்கியமான விஷயம், நேரம் சார்ந்த சாதனைகள். எடுத்துக்காட்டாக, ஒரு நிமிடத்தில் 30 ஈட்டிகளை சரியாக எறிந்து சாதனை படைக்க விரும்பினால் அதற்கு பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும் என்றால், அதை பதிவு செய்ய இரண்டு வழிகள் உள்ளன.
ஒன்று, நாம் இருக்கும் இடத்திலேயே சாதனையைப் பதிவு செய்யும் போது, பல கேமராக்கள் பயன்படுத்தப்பட வேண்டும், லைவ் ஸ்ட்ரீம் பயன்படுத்தப்பட வேண்டும், டைமர் பயன்படுத்தப்பட வேண்டும். இதுபோன்ற வழிமுறைகளை கின்னஸ் பரிந்துரைக்கும். அவர்களைத் தொடர்ந்து, உள்ளூர் அதிகாரிகளின் முன்னிலையில் விளக்கக் காட்சியை வழங்க வேண்டும்.
இந்த வீடியோ காட்சிகள் அதிகாரிகளின் சாட்சி கையெழுத்துடன் கின்னஸ் உலக சாதனை அமைப்புக்கு அனுப்பப்பட வேண்டும். அவர்கள் அதைப் பார்த்துவிட்டு பரிசீலித்த பின்னர் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்வர். அதற்கு 3 மாதங்கள் வரை ஆகலாம்,'' என்றார் ஜெயசிம்மா.
“மற்றொரு செயல்முறையில் கின்னஸ் சாதனைப் பிரதிநிதிகள் நேரடியாக வந்து, என்ன சாதனை என்பதை உன்னிப்பாகக் கவனித்து, அதனை பதிவு செய்வார்கள். அப்போதே கின்னஸ் சாதனையாளர் என்ற பட்டமும் கிடைத்துவிடும். இருப்பினும், இதற்கு கொஞ்சம் பணம் செலவாகும். பிரதிநிதிகளுக்கான விமானம், ஹோட்டல் மற்றும் உணவு செலவுகளை செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் 5-6 லட்ச ரூபாய் வரை செலவாகும்” என்றார் ஜெயசிம்ஹா.
கின்னஸ் உலக சாதனை அமைப்பின் அலுவலகம் எங்கே உள்ளது?
1954 இல் லண்டனில் உருவான இந்த அமைப்பு, இப்போது உலகளாவிய அலுவலகங்களை கொண்டுள்ளது. லண்டன், நியூயார்க், பெய்ஜிங், டோக்கியோ மற்றும் துபாய் ஆகிய இடங்களில் சர்வதேச அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
ஒரு காலத்தில் இந்த அமைப்பின் பிராந்திய அலுவலகங்கள் இந்தியாவிலும் இருந்தன. ஆனால், விண்ணப்பப் படிவம் முதல் சான்றிதழ் பெறுவது வரை அனைத்தும் ஆன்லைனில் நடப்பதால் தற்போது இந்தியாவில் அலுவலகங்கள் இல்லை என்று ஜெயசிம்ஹா கூறினார்.
விண்ணப்பிக்கும் முறை குறித்து யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், ஏற்கனவே கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்தவர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
அதிகரிக்கும் புதிய சாதனைகள்
கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களின்படி,
உலகம் முழுவதும் இதுவரை 15 கோடியே 30 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் 40 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டது.
2023ஆம் ஆண்டிலேயே 18 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. ஒவ்வொரு வருடமும் 80 சதவீத புதிய சாதனைகள் பற்றிய பதிவுகள் புத்தகத்தில் பதிவாகி இருக்கிறது. எனவே ஒவ்வொரு வருடமும் புத்தகத்தின் விற்பனையும் அதிகரிக்கிறது.
இந்த அமைப்பு 69 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை பதிவு செய்து வருகிறது. 2023 வரை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதனை தலைப்புகளை வழங்கியுள்ளது.
2023ஆம் ஆண்டில் மட்டும் 215 நாடுகளில் இருந்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 4,900க்கும் மேற்பட்ட சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தற்போது 18 மொழிகளைப் பேசக்கூடிய 17 நாடுகளைச் சேர்ந்த 80 நடுவர்களை கொண்ட குழு உள்ளது. 1999 வரை, இந்த புத்தகம் `கின்னஸ் புத்தகம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
அதன்பிறகு, 2000-ம் ஆண்டு முதல் `கின்னஸ் உலக சாதனை’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்படுகிறது.
இன்றும் கின்னஸ் உலக சாதனை என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. இணையதளம், முகநூல், யூடியூப் என அனைத்து தளங்களும் இந்தப் பெயரில் தான் உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)