தரைக்கு மேலே ஒரு நாள் என்பது பூமிக்கடியில் 2 நாளுக்கு சமமா? நேரம் பற்றிய ஆய்வு உணர்த்தும் உண்மை

நம்மிடம் செல்போன் அல்லது வாட்ச் இருந்தால், நேரம் என்ன ஆகிறது என்று தெரிந்துகொள்ள ஒரு நாளைக்கு பல முறை அவற்றை நாம் பார்க்கிறோம்.

நம் வாழ்வில் நேரம் என்பது எவ்வளவு முக்கியமான பங்கை வகிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் பழங்காலத்தில் கூட மக்கள் சூரியனை பார்த்து நேரத்தை அறிந்தனர்.

ஆனால் பகலா, இரவா என்பதே நமக்கு தெரியாவிட்டால் என்ன ஆகும்? நம்மிடம் நேரத்தைக் காட்டும் கருவி இல்லையென்றால் என்ன செய்வது?

மிஷேல் சிஃபர் என்ற இளம் பிரெஞ்சு புவியியலாளர் 1960 களில் இந்தக் கேள்வியை தனக்குத் தானே கேட்டுக்கொண்டார்.

அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே விண்வெளி ஆதிக்கப்போட்டி நிலவி வந்த காலகட்டத்தில் சிஃபருக்கு இந்த சந்தேகம் எழுந்தது.

1961 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் யூரி ககாரின் விண்வெளிக்கு பயணம் செய்த முதல் மனிதராக ஆனார். அவர் 108 நிமிடங்கள் விண்வெளியில் இருந்தபடி பூமியைச் சுற்றி வந்தார்.

மனிதர்கள் அதிக நேரம் விண்வெளியில் செலவிட்டால் என்ன நடக்கும்? இது நமது 'தூக்க சுழற்சியை' எவ்வாறு பாதிக்கும்? என்று சிஃபர் யோசித்தார்.

அந்த கேள்விக்கு பதில் காண அவர் பூமிக்கு மேலே விண்வெளிக்கு பயணிக்காமல் நிலத்தடிக்குச் செல்ல முடிவு செய்தார்.

குகை மனிதன்

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது 85 வது வயதில் காலமான சிஃபர், ஒரு ஸ்பெலியாலஜிஸ்ட். அதாவது குகைகளை ஆய்வு செய்யும் விஞ்ஞானி.

1962 ஆம் ஆண்டில் வெறும் 23 வயதில், மனித வரலாற்றில் மிகவும் பிரபலமான சோதனைகளில் ஒன்றை அவர் வடிவமைத்தார். தனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அவர் இயற்கையாகவே உடலில் இருக்கும் கடிகார அமைப்பை (சர்காடியன் ரிதம்) புரிந்து கொள்ள முயன்றார்.

ஒரு பரிசோதனையாக, மேற்பரப்பிலிருந்து 130 மீட்டர் கீழே உள்ள குகையில் இரண்டு மாதங்கள் தனியாகக் கழித்தார். சுரங்கத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஒரே ஒரு விளக்கு மட்டுமே அவரிடம் இருந்தது. சமைப்பதற்கும், டைரிகள் எழுதுவதற்கும், படிப்பதற்கும் அதை அவர் பயன்படுத்தினார்.

2008ஆம் ஆண்டு கேபினட் இதழுக்கு அளித்த பேட்டியில், "கடிகாரம் இல்லாமல், நேரம் தெரியாமல் இருளில் வாழ முடிவு செய்தேன்" என்று அவர் விளக்கினார்.

ஆல்ஃப் மலைப்பகுதியில் உள்ள நிலத்தடி பனிப்பாறை ஆற்றில் சிஃபர் இந்த பரிசோதனையை நடத்தினார்.

"குகை நுழைவாயிலில் என்னுடைய ஒரு குழு இருந்தது. நான் உறங்கி எழுந்திருக்கும்போது, நான் சாப்பிட்ட பிறகு, தூங்குவதற்கு முன்பு அவர்களிடம் அந்த விவரங்களை சொல்வேன். அவர்களால் எனக்கு போன் செய்ய முடியாது. நான் எவ்வளவு காலமாக உள்ளே இருக்கிறேன் என்று அவர்களால் என்னிடம் சொல்ல முடியாது," என்று அவர் விளக்கினார்.

இதன் மூலம் மனிதர்களின் உடலில் "உயிரியல் கடிகாரம்" உண்டு என்பதை நிரூபிப்பதில் அவர் வெற்றி பெற்றார்.

இருப்பினும் இந்த உயிரியல் கடிகாரம் நமது அன்றாட வாழ்வில் இருப்பது போல் 24 மணி நேர சுழற்சியில் செயல்படவில்லை என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மெதுவாக நகர்ந்த நேரம்

குகையில் இருந்த எட்டு வாரங்களில் சிஃபர் தனது உடல் கேட்கும்போது மட்டுமே தூங்கினார் மற்றும் சாப்பிட்டார்.

ஒவ்வொரு முறையும் அவர் இதைச் செய்யும் போது குகைக்கு வெளியில் இருக்கும் தனது குழுவிடம் சொல்வார். இதனுடன் அவர் மற்ற இரண்டு பரிசோதனைகளையும் செய்தார். ஒன்று, தனது நாடித்துடிப்பை எண்ணுதல்; இரண்டாவது, 1 முதல் 120 வரை எண்ணுவது.

இந்த இரண்டாவது பரிசோதனை மிகவும் ஆச்சரியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றை வெளிப்படுத்தியது.

ஒரு விநாடிக்கு ஒரு இலக்கம் என்ற விகிதத்தில் 120 வரை எண்ணுவதே சிஃபரின் குறிக்கோள். ஆனால் அவரது குழுவினர் உண்மையான நேரத்தை வெளியே பதிவு செய்தபோது, சிஃபர் மிக மெதுவாக நேரத்தை எண்ணுவதை அவர்கள் கண்டறிந்தனர்.

"120 வரை எண்ணுவதற்கு எனக்கு ஐந்து நிமிடங்கள் பிடித்தன. வேறுவிதமாக சொன்னால் நான் மனதளவில் ஐந்து நிமிடங்களை இரண்டு நிமிடங்கள் போல உணர்ந்தேன்," என்று அவர் குறிப்பிட்டார்.

சிஃபர் இறுதியாக குகையிலிருந்து வெளிப்பட்ட போது நேரம் மெதுவாகச் செல்வது போன்ற உணர்வு உறுதிப்படுத்தப்பட்டது. இரண்டு மாதங்கள் கடந்திருந்தாலும் ஒரு மாதம்தான் ஆகியுள்ளது என்று சிஃபர் நினைத்தார்.

"என் மனதை பொருத்தவரை நேரம் பாதியாக குறைந்தது," என்று அவர் கூறினார்.

48 மணி நேர உள் கடிகாரம்

நமது உடல் இயங்கும் கடிகார அமைப்பு (சர்காடியன் ரிதம்) 24 மணி நேரமாக இருக்க சூரிய உதயமும், அஸ்தமனமுமே காரணம். அவை இல்லாத சூழலில் இந்த சர்காடியன் ரிதம் சுமார் 48 மணி நேர சுழற்சியில் இயங்குகிறது என்று சிஃபரின் ஆராய்ச்சி காட்டுகிறது.

இந்த பிரெஞ்சு ஸ்பெலியாலஜிஸ்ட் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன் மீதும், மற்றவர்கள் மீதும் நடத்திய பரிசோதனைகளால் இந்த கோட்பாடு உருவானது.

1962-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் சில தன்னார்வலர்களுடன் இதே போன்ற ஐந்து பரிசோதனைகளை நடத்தினார். அவை ஒவ்வொன்றும் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை நீடித்தன.

இந்த 48 மணிநேர சுழற்சியை அனைவரும் அனுபவித்தனர் என்று சிஃபர் குறிப்பிடுகிறார்.

36 மணி நேர தொடர் செயல்பாட்டிற்குப் பிறகு, 12 முதல் 14 மணி நேரம் வரை அவர்கள் உறங்கினர்.

"இந்த கண்டுபிடிப்புக்குப் பிறகு பிரெஞ்சு ராணுவம் எனக்கு நிறைய நிதியுதவி அளித்தது. விழித்திருக்கும் போது ஒரு சிப்பாயின் செயல்பாட்டை எவ்வாறு மேம்படுத்துவது என்று ஆய்வு செய்யும்படி அவர்கள் என்னிடம் கேட்டார்கள்," என்று சிஃபர் கேபினட் பத்திரிகையிடம் தெரிவித்தார்.

மற்றொரு காரணத்திற்காகவும் இந்த பரிசோதனைகளின் மீது பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகம் ஆர்வமாக இருந்தது. அவர்கள் தொடங்கிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில், கப்பலுக்குள் நீண்டகாலம் தங்கும் மாலுமிகளின் ஆரோக்கியத்தின் மீது என்ன தாக்கம் ஏற்படும் என்பதை அவர்கள் அறிய விரும்பினர்.

இதேபோல் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவும் நீண்ட கால விண்வெளி பயணத்தின் விளைவுகளைப் புரிந்து கொள்ள விரும்பியது.

இந்த இரு நாடுகளுமே சிஃபரின் இரண்டாவது திட்டத்திற்கு நிதியளித்தனர். 1972-ஆம் ஆண்டில் அவர் மீண்டும் நிலத்தடிக்குச் சென்றார். ஆனால் இந்த முறை அவர் அமெரிக்காவில் இந்த நீண்ட கால பரிசோதனையை செய்தார்.

டெக்சாஸின் டெல் ரியோவுக்கு அருகிலுள்ள மிட்நைட் குகையில் ஆறு மாதங்கள் கழிப்பதே அவரது பரிசோதனை.

நேரம் என்னவென்று நமக்குத் தெரியுமா?

"என் மூளையானது நேரத்தைப் புரிந்துகொள்ளும் விதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை பார்க்க ஒவ்வொரு பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கும் ஒரு பரிசோதனை மேற்கொள்ள நான் விரும்பினேன்," என்கிறார் சிஃபர்.

"நான் முப்பத்தாறு மணிநேரம் விழித்திருந்தேன். பன்னிரண்டு மணிநேரம் தூங்கினேன். அந்த நீண்ட நாட்களுக்கும், இருபத்தி நான்கு மணிநேர நாட்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை என்னால் சொல்ல முடியவில்லை," என்று சிஃபர் கூறினார்.

"சில நேரங்களில் நான் இரண்டு மணிநேரம் அல்லது சில நேரங்களில் பதினெட்டு மணிநேரம் தூங்குவேன், ஆனால் என்னால் வித்தியாசத்தை சொல்ல முடியாது. இது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அனுபவம் என்று நான் நினைக்கிறேன்," என்றார் அவர்.

"இது ’மன நேரம்’ தொடர்பான விஷயம். இது மனிதர்கள் குறித்த பிரச்னை. நேரம் என்றால் என்ன? அது நமக்குத் தெரியாது," என்று சிஃபர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)