வங்கதேசத்தில் தொடங்கியுள்ள 'சாத்தான் வேட்டை' என்றால் என்ன? அங்கு பயமும், நிச்சயமற்ற சூழலும் நிலவுவது ஏன்?

    • எழுதியவர், ஜுகல் புரோகித்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

''சாத்தான்(devil) என்றால் என்ன? எங்களது குறி நாட்டை நிலையில்லாமல் செய்யும் சட்டத்தை பின்பற்றாத சாத்தான். எங்களது குறி தீவிரவாதிகளும், விஷமிகளும்தான்."

'ஆபரேசன் டெவில் ஹன்ட் அல்லது சாத்தான் வேட்டையை' வங்கதேச உள்துறை அமைச்சகத்தின் தலைவர் ஓய்வு பெற்ற லெப்டினண்ட் ஜெனரல் ஜஹாங்கீர் ஆலம் செளத்ரி இப்படித்தான் விளக்கினார்.

அரசின் புள்ளி விவரங்களின்படி இந்த நடவடிக்கை தொடங்கி 18 நாட்களுக்குள்ளாக அதாவது பிப்ரவரி 26ஆம் தேதிக்குள் 9,000-க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், தினமும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆபரேசன் டெவில் ஹன்ட்டின் பின்னணியில் உள்ள கதை என்ன? சாதாரண குடிமக்கள் இப்போது பாதுகாப்பாக உணர்கிறார்களா? சட்டத்தை மீறுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? நோபல் பரிசு பெற்ற யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு சொல்வது என்ன?

சுமார் ஆறு மாதங்களுக்கு முன், தீவிரமடந்து வந்த மாணவர் போராட்டத்தின் காரணமாக அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைய நேர்ந்தது. அவர் ஆன்லைனில் உரையாற்றுவார் என பிப்ரவர் 5ஆம் தேதி ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு பிறகு ஹசீனாவை எதிர்க்கும் சில மாணவர்களும், அரசியல் தலைவர்களும் 32, தன்மாண்டி கட்டடத்தை இடிப்போம் என மிரட்டல் விடுத்தனர். இதுதான் வங்கதேச சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்தி, அந்நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்ற ஷேக் முஜ்பூர் ரஹ்மானின் இல்லமும், அலுவலகமுமாக இருந்தது.

ஷேக் முஜ்பூர் ரஹ்மான்தான் ஷேக் ஹசீனாவின் தந்தை. இந்த கட்டடம் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருந்தது.

ஷேக் ஹசீனாவின் பேச்சு தொடங்குவதற்கு முன்பே ஒரு கும்பல் கட்டடத்திற்கு தீவைத்ததுடன், பாதுகாப்பு படையின் கண்முன்னே புல்டோசர் கொண்டு கட்டடத்தை இடித்தனர். இது பிப்ரவரி 5ஆம் தேதி மாலை தொடங்கி அடுத்த நாள் வரை தொடர்ந்தது.

அதன்பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவாமி லீக் கட்சியின் தலைவர்களுக்கு சொந்தமான சொத்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. டாக்காவிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஸிபூரில் ஒரு தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, தாக்குதல் நடத்தியவர்கள் எதிர்ப்பை சந்தித்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார், பதினேழு பேர் காயமடைந்தனர்.

பாதுகாப்பில்லாதது போல் உணரும் குடிமக்கள்

காஸிபூர் சம்பவத்தை தொடர்ந்து, பிப்ரவரி 8ஆம் தேதி, ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறையினரை இணைத்து நாடு முழுவதும் நடவடிக்கையை வங்கதேசத்தை ஆளும் நிர்வாகம் தொடங்கியது. ஃபிப்ரவரி 26ஆம் தேதிக்குள் 9,000-க்கும் மேற்பட்டவர்கள் ஆபரேசன் டெவில் ஹன்ட் நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இத்தனை கைதுகளுக்கு பிறகு நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை முன்னேற்றம் கண்டிருக்கவேண்டும். ஆனால் டாக்காவில் மக்களிடம் பேசிப் பார்த்ததிலும், தொடரும் போராட்டங்களை பார்க்கும் போதும் பாதுகாப்பின்மையும், பயமும் இருப்பதாக தோன்றுகிறது. எதனால் இந்த நிலை?

"நான் இந்த நாட்டில் வசிக்க விரும்புகிறேன், ஆனால் முதலில் எனக்கு இங்கு இதைவிட சிறந்த பாதுகாப்பு வேண்டும். இது எனது கருத்து மட்டுமல்ல, இது அனைத்து மக்களின் எண்ணவோட்டம். பட்டப்பகலில் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. குற்றம் செய்பவர்களுக்கு எந்த அச்சமும் இருப்பதாக தெரியவில்லை." என்கிறார் டாக்காவில் உள்ள மாணவர் தலைவர்களில் ஒருவரான நசிஃபா ஜன்னத்.

டாக்கா பல்கலைக்கழகத்திற்கு அருகே அண்மையில் பிபிசி பார்த்த ஒரு போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்,"எங்களால் முந்தைய அரசை நீக்கிவிட்டு உங்களை அதிகாரத்தில் அமர்த்த முடிந்தால், உங்களை எப்படி அப்புறப்படுத்துவது என்பதும் எங்களுக்கு தெரியும்." என்று கூறினார்.

அண்மையில் மாணவர் அமைப்புகள், நாட்டின் சட்ட அமைப்புகள் குறித்து கேள்விகள் எழுப்பி, டாக்காவில் தலைமைச் செயலகம், ஷாஹீத் மினார் போன்ற இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மாணவர்களைத் தவிர, தொழிலாளர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மருத்துவர்கள் போன்றவர்களும் தங்களுடைய சொந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடும் சில மாணவர்களும், சாமனிய மக்களும், உள்துறை அமைச்சகத்தின் தலைவரான ஜெனரல் ஜஹாங்கீர் செளத்ரி ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

ஆபரேசன் டெவில் நடவடிக்கை தொடங்கி பதினைந்து நாட்களுக்குப் பிறகு, வங்கதேச ராணுவத்தின் தலைவர் ஜெனரல் வகார் உஸ் ஜமான் ஒரு கூட்டத்தில், "மோசமடைந்து வரும் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு பின்னால் சில காரணங்கள் இருக்கின்றன. அவற்றிற்கு எதிராக போராடி வருகிறோம்..." என்றார்.

காவல்துறையினர் பணியாற்றுவதில்லை என அவர் ஏற்றுக்கொண்டார்.

"இன்று காவல்துறையினர் வேலைசெய்வதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அவர்களது அந்தஸ்தை குறைப்பது நாட்டில் அமைதியையும், ஒழுங்கையும் கொண்டு வரும் என நினைத்தீர்களென்றால், அது நடக்கப்போவதில்லை. உங்களால்(அரசியல் கட்சிகள்) சச்சரவு இல்லாமல், ஒருவரை ஒருவர் காயப்படுத்திக்கொள்ளாமலோ, கொலை செய்யாமலோ இருக்க முடியாது. நாட்டின் சுதந்திரமும், இறையாண்மையும் அபாயத்திற்குள்ளாகியுள்ளன," என ஜெனரல் ஜமான் கூறினார்.

'காவல்துறை மீது கோபம்'

"பொதுவெளியில் ஹசீனா அரசோடு அதிகம் தொடர்புபடுத்தப்பட்டது காவல்துறைதான். (ஹசீனாவின் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக) இன்னமும் காவல்துறைக்கு எதிராக கோபம் உள்ளது. காவல்துறையை பயன்படுத்துவது குறித்து இடைக்கால அரசு மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. இந்த காரணிகள் காவல்துறையினரின் செயல்திறனை பாதித்துள்ளன." என்கிறார் தி டெய்லி ஸ்டார் நாளிதழின் ஆசிரியர் மாஹ்ஃபஸ் அனாம்.

சூறையாடுதல் குறித்து மாணவர் தலைவர்கள் கூறுவது என்ன?

கடந்த வருடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் அதாவது ஆறு மாதங்களுக்கு ஷேக் ஹசீனா இந்தியாவில் இருகிறார். வங்கதேசத்தில் அவருக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை ஒப்படைக்கும்படி வங்கதேச அரசு முறைப்படி இந்தியாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. வங்கதேசம் கோரிக்கை வைத்திருப்பதை இந்திய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியின் இறுதி நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையின்படி, ஜூலை15 முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை மாணவர் இயக்கத்தின்போது நடைபெற்ற போராட்டங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் பாதுகாப்பு படையினரின் குண்டுகளால் குறிவைக்கப்பட்டனர். பலர் காயமடைந்தனர். குறைந்தது 44 காவல்துறையினரும் கொல்லப்பட்டப்பட்டனர்.

ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் தலைவர் வோல்கர் டர்கின் கூற்றுப்படி, "அப்போதைய அரசியல் தலைமையில் உத்தரவின்படி போராட்டத்தை ஒடுக்க நூற்றுக்கணக்கான கொலைகளும், கொடுங்கோன்மையான கைதுகளும் நடைபெற்றன என்பதற்கு போதிய அடிப்படைகள் உள்ளன."

அந்த நேரத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்து இன்னமும் கோபம் இருக்கிறது. சில மாணவர் தலைவர்கள் அண்மையில் நடைபெற்ற சூறையாடுதலையும், 32 தன்மாண்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் ஆதரிப்பதாக தோன்றுகிறது.

விடுதலைப் போராட்டத்தின் தலைவரான ஷேக் முஜ்புர் ரஹ்மானின் வீடு சட்டத்தை மதிக்காமல் எந்த தடையும் இல்லாமல் இடிக்கப்பட்டது குறித்து மாணவர் இயக்கத்தின் தலைவர்கள் சிலரிடம் கேட்டோம்.

"சூறையாடியது உண்மையில் ஒரு எதிர்வினைதான். 32 தன்மாண்டியை தாக்கவேண்டும் என மக்கள் விரும்பியிருந்தால் அவர்கள் அதை கடந்த ஆறு மாதங்களில் செய்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. மக்கள் காவல்துறையினர் மீது நம்பிக்கை இழந்திருக்கின்றனர். அதனால்தான் அவர்கள் சிலநேரம் சட்டத்தை கையிலெடுத்துக்கொள்கிறார்கள். ஷேக் ஹசீனாவின் தொடர்ச்சியான அறிக்கைகளால்தான் அங்கு அது நடந்தேறியது." என்கிறார் பாகுபாடுக்கு எதிரான மாணவர்கள் அமைப்பின் தலைவர் அரிஃபுல் இஸ்லாம்.

32 தன்மாண்டி இடிப்பு மற்றும் காஸிப்பூர் வனமுறைக்கு பிறகு, ஷேக் ஹசீனா மற்றும் அவருடைய கட்சியுடன் தொடர்புடையவர்கள் உடைமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என இடைக்கால அரசின் தலைவர் முகமது யுனுஸ் பிப்ரவரி 7ஆம் தேதி கூறினார். அதே நேரம் அவாமி லீக் மற்றும் ஹசீனா மீது மக்கள் மத்தியில் கோபம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கைதுகள் குறித்து கேள்விகள், காவல்துறையின் மந்தமான அணுகுமுறை

பிப்ரவரி 7ஆம் தேதி, ஹசீனா அரசில் அமைச்சராக இருந்த ஏகேஎம் மொஸாமெல் ஹக்கின் வீடு காஸிபூரில் தாக்கப்பட்டது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்த கொடூரமான மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் மாணவர்கள்.

காஸிபூரில் நடைபெற்ற வன்முறைக்கு அவாமி லீக்தான் காரணம் என மாணவர்கள் குற்றம்சாட்டினர். 'காஸிபூர் நோக்கி பயணம் போராட்டத்தை அவர்கள் அடுத்த நாள் அறிவித்தனர்.

மாணவர்களின் வலியுறுத்தலின்படி பிப்ரவரி 8ஆம் தேதி ஆபரேசன் டெவில் ஹன்ட்-ஐ இடைக்கால அரசு அறிவித்தது

கைதுகள் தொடங்கின.கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் பயத்தின் பிடியில் பேச தயங்குகின்றனர்.

நீண்ட காத்திருப்புக்கு பிறகு, காஸிபூரை சேர்ந்த 24 வயதான அதிக்கூர் ரஹ்மாநின் குடும்பத்தினரை நாங்கள் சந்தித்தோம் .

அத்திகூர் ரஹ்மான் சிம் கார்டுகளை விற்பனை செய்வதாகவும், அவரது தொழிலை ஒரு கடையில் நடத்துவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

"அவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை," என்கிறார் அவரது மனைவி அஃப்ராசா அக்தர் மீம்.

"செப்டம்பர் 2023-ல் இருசக்கர வாகன விபத்தில் ரஹ்மான் காயமடைந்தார். அவரது தாடை முழுமையக உடைந்துவிட்டது. உலோக பிளேட்கள் பயன்படுத்தி அவரது தாடை சரிசெய்யப்பட்டுள்ளது. உணவை மெல்லுவதில் அவருக்கு சிரமம் உள்ளது. அவர் சிறையில் இருப்பதால் அவருக்கு உரிய நேரதில் மருந்துகள் கிடைப்பதில்லை. அரசு எங்களுக்கு உதவவேண்டும," என்கிறார் ரஹ்மானின் மனைவி.

அவரது தந்தை தனது மகனுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்த பல ஆவணங்களை பிபிசியுடன் பகிர்ந்துகொண்டார். அவாமி லீக் அல்லது வேறு எந்த கட்சியுடனும் ரஹ்மானுக்கு தொடர்பில்லை என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

ஆபரேசன் டெவில் ஹன்ட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில், அவாமி லீக் கட்சியின் உறுப்பினரும் புற்றுநோயாளிமான 75 வயது முகமது மோமெனுதீனும் ஒருவர்.

"அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மிகவும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். அவர் எப்படி வன்முறை அல்லது குற்றத்தின் ஒரு அங்கமாக இருக்கமுடியும்? சொல்லப்போனால் அவரடன் பேச விரும்புவதாக கூறி காவல்துறையினர் அவரை இரவு 1:30 மணிக்கு அழைத்துச் சென்றனர். அவர் திரும்பவராத போது நாங்கள் காவல்நிலையத்திற்கு சென்று அவரை லாக் அப்பில் பார்த்தோம்."என்கிறார் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாத அவரது உறவினர் ஒருவர்.

இந்த நடவடிக்கை பற்றி அவர் என்ன நினைகிறார் என அவரிடம் கேட்டோம்.

அவர் கோபமடைந்தார். அவர் கூறினார், "இது வலி மிகுந்த வேதனையானது. ஒரு நபரை எப்படி சாத்தான் அல்லது பிசாசு என நீங்கள் எப்படி அழைக்கமுடியும்? அவர் அவாமி லீக் கட்சியில் உறுப்பினராக இருந்தார். அது மட்டும்தான் அவர் செய்த குற்றம்."

அவாமி லீக் கட்சியை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஆகஸ்ட் மாதம் முதல் அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போது அந்த கட்சி தடைசெய்யப்படவில்லை, அதில் உறுப்பினராக இருப்பது சட்டவிரோதமும் அல்ல.

இதுபோன்ற வழக்குகள் குறித்து காஸிபூர் காவல் ஆணையர் முகமது நஜ்முல் கரீம் கானிடம் பிபிசி கேட்டபோது, "வலுவான குற்றச்சாட்டுகள் இருப்பவர்கள் மட்டும்தான் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்றார்.

முன்னாள் அமைச்சரின் வீட்டில் வன்முறையையும், சூறையாடுதலை தொடங்கியவர்கள் யாரேனும் கைது செய்யப்பட்டிருக்கிறார்களா என்பதை அறிய பிபிசி விரும்பியது.

"மோதல் மற்றும் சூறையாடுதலின் போது புகார் வந்தால் எங்களால் நடவடிக்கை எடுக்கமுடியும். புகார் இல்லாவிட்டாலும் எங்களால் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கமுடியும்." என்றார் முகமது நஜ்முல் கரீம் கான்

அவர்களை நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுப்பது எதுவென்று பிபிசி அவரிடம் கேட்டது.

"நடவடிக்கை எடுக்க இதுவரை எங்களிடம் எந்த தகவலும் இல்லை."என்கிறார் அவர்

முஜிபின் வீட்டில் நடைபெற்ற சூறையாடல் - யூனுஸ் அரசு செய்தது என்ன?

வன்முறை சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற புகார்கள் குறித்து வங்க தேச இடைக்கால அரசின் ஊடக செயலாளர் சஃபீக்குல் ஆலம் விளக்கமளித்தார்.

"நாங்கள் காவல்துறையினரை எல்லப் பக்கமும் அனுப்பினோம். 32 தன்மாண்டிக்கு நாங்கள் ராணுவத்தை அனுப்பினோம். இந்த சூறையாடல் தவறானது, ஆனால் அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன் பாதுகாப்பு படையினரால் எதுவும் செய்யமுடியவில்லை என்பதுதான் உண்மை." என்கிறார் அவர்

சூறையாடுதல் குற்றம் என்றால் பல்வேறு பகுதிகளில் சூறையாடுதலில் ஈடுபட்டவர்கள் மீது கைதோ, வேறு நடவடிக்கையோ எடுக்கப்படாதது ஏன் என அரசு ஊடக செயலாளரிடம் பிபிசி கேட்டது.

"நாங்கள் விசாரித்துக்கொண்டிருக்கிறோம், அவர்கள் அடையாளம் காணப்பட்டால், சட்டம் தனது கடமையை செய்யும். எங்கள் நிலைப்பாடு தெளிவானது. நாங்கள் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த விரும்புகிறோம். சூறையாடும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக பலர் புகார் அளித்துள்ளனர். சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவது அரசின் கடமை." என அவர் சொல்கிறார்

டாக்கா பல்கலைக்கழக பேராசிரியர் ஜோபைதா நஸ்ரின் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறார்.

"மாணவர்களை திருப்திப்படுத்த ஆபேரேசன் டெவில் ஹன்ட்டை அரசு தொடங்கியுள்ளது. பதிலடி தாக்குதலை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு நியாயம் செய்யப்படவேண்டும் என அரசு பின்னர் தெரிவித்தது. ஆனால் மாணவர்கள் யாரையாவது தாக்கும்போது, அவர்களுக்கும் நியாயம் தேடுவதற்கு உரிமை இருக்கிறது. அவர்களுக்கு இதுவரை நியாயம் வழங்கப்படவில்லை. ஷேக் முஜ்புர் ரஹ்மான் இல்லத்தை நோக்கி மாணவர்கள் தலைமையில் புல்டோசர் பேரணி நடைபெறும் செய்தி சமூக வலைதள பக்கத்தில் இருந்தது. எனவே அது தொடங்குவதற்கு முன்பே அரசுக்கு தெரிந்திருக்கும், ஆனால் அரசு திடமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஒருவேளை அரசு அந்த கும்பலை ஆதரிக்கக் கூடும்."என்கிறார் பேராசிரியர் ஜோபைதா

சமுதாயம் இரண்டுபட்டு இருப்பதாக தெரிகிறது. சிலர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தை தற்போதைய அரசுடன் மெல்லிய குரலில் ஒப்பிடத் தொடங்கியுள்ளனர்.

தி டெய்லி ஸ்டார் நாளிதழின் ஆசிரியர் மாஃபஸ் ஆனம்-மின் கூற்றுப்படி,"பங்கபந்து ஷேக் முஜ்புர் ரஹ்மானின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்னர், அண்மைக்காலத்தில் பெருவாரியான வன்முறை சம்பவங்கள் இல்லை. ஹசீனாவின் பேச்சினால் இது தொடங்கியதாக மாணவர்கள் கூறுகின்றனர். இதுவே கவலையளிப்பதாக இருக்கிறது. எந்த குழுவும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை."

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகமும், அரசுக்கு ஷேக் ஹசீனாவின் ஆட்சியை நினைவுபடுத்தி,''நிர்வாகம் அந்த தவறுகளை திரும்ப செய்யக்கூடாது, மாறாக சட்டத்தை பாகுபாடின்றி அமல்படுத்தவேண்டும்,'' என கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)