மாட்டிறைச்சி சர்ச்சை: 'எனக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது'- ரயிலில் தாக்கப்பட்ட அஷ்ரஃப் கூறியது என்ன?

    • எழுதியவர், தீபாலி ஜக்தாப்
    • பதவி, பிபிசி மராத்தி

“என்னை முகம், மார்பு மற்றும் வயிற்றில் காலால் உதைத்தனர். அந்தரங்க உறுப்பிலும் அடித்தார்கள். எனக்கு 72 வயதாகிறது. நான் தனியாக இருந்தேன், எனக்கு முன்னால் 10-15 இளைஞர்கள் இருந்தனர். நான் என்ன செய்ய முடியும்? நீங்களே நினைத்துப்பாருங்கள்.”

”என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. நடக்க முடியவில்லை. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் யாருக்கும் நடக்கக்கூடாது.”

வடக்கு மகாராஷ்டிராவில் உள்ள சாலிஸ்கானை சேர்ந்த 72 வயதான அஷ்ரஃப் அலி சையத் ஹுசைன், பிபிசி மராத்தியிடம் “இதனால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன்,” என்றார்.

சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அஷ்ரஃப்பின் கண்கள் வீங்கியிருந்தன. கண்களுக்குக் கீழே காயங்கள் இருந்தன. 'அந்த' நாளின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவர் மீளவில்லை.

ஆகஸ்ட் 28-ம் தேதி துலே-மும்பை எக்ஸ்பிரஸ் மூலம் கல்யாணில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது ​​சில இளைஞர்கள் அவரை தாக்கினர்.

அவர் 'மாட்டிறைச்சி' வைத்திருந்ததாக குற்றம் சாட்டிய அந்த இளைஞர்கள் அவரை கடுமையாகத் திட்டி, பின்னர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக குற்றச்சாட்டு

அஷ்ரஃப் அலி கடந்த 15 ஆண்டுகளாக சாலிஸ்கானில் இருந்து மும்பைக்கு பயணம் செய்து வருகிறார். இவரது மகள் மும்பை அருகே உள்ள கல்யாணில் வசித்து வருகிறார். அவரை சந்திக்க அஷ்ரஃப் அவ்வப்போது சென்று வருவார்.

ஆகஸ்ட் 28-ஆம் தேதி அவர் தனது மகளை பார்ப்பதற்காக சாலிஸ்கானில் இருந்து மும்பை எக்ஸ்பிரஸில் ஏறினார். ரயில் நாசிக்கை அடைந்தபோது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த சில இளைஞர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக லோஹ்மார்க் காவல் நிலையத்தில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் போலீஸ் ஆள்சேர்ப்புக்காக துலேவிலிருந்து மும்பைக்கு சென்றுகொண்டிருந்தனர்

போலீசார் முதலில் அடிதடி, முறையற்ற வார்த்தைகளால் திட்டுதல் மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கை பதிவு செய்தனர். இதன் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடனடியாக ஜாமீனும் கிடைத்தது.

ஆனால், செப்டம்பர் 2-ஆம் தேதி, மத உணர்வுகளைத் தூண்டுதல், பொருட்களை திருடுதல், கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளையும் போலீஸார் வழக்கில் சேர்த்தனர்.

இதன் விளைவாக ஜாமீன் பெற்ற மூன்று பேரும் மீண்டும் கைது செய்யப்பட்டனர் என்றும், மூன்று பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்றும் துணை போலீஸ் கமிஷனர் மனோஜ் பாட்டீல் பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.

அஷ்ரஃப்பின் உடல்நிலை எப்படி இருக்கிறது?

செப்டம்பர் 2-ஆம் தேதி அஷ்ரஃப்பின் உடல்நிலை மோசமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பலத்த காயம் ஏற்பட்டதற்கான மருத்துவச் சான்றிதழை பெறுவதற்காக செப்டம்பர் 2 ஆம் தேதியன்று அவர், அரசு மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது என்று அவரது வழக்கறிஞர் சைஃப் ஆலம் கூறுகிறார்.

“செப்டம்பர் 2-ஆம் தேதி சுமார் 12 மணி நேரம் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டோம். சில இடங்களில் எம்ஆர்ஐ இல்லை. சில இடங்களில் கண் பரிசோதனை இல்லை."

"இதனால், ஒரு நாளில் அவரை மூன்று அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிந்தது. இதற்கு நாங்கள் அரசியல் தலைவர்களின் உதவியையும் பெற வேண்டியிருந்தது” என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது அவரது வலது கண்ணில் பார்வை சரியாக இல்லை என்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருப்பதாகவும் சைஃப் ஆலம் பிபிசியிடம் தெரிவித்தார்.

’ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியுங்கள்’ என்று பேசிக் கொண்டார்கள்'

ரயிலில் நடந்த சம்பவம் குறித்து பேசிய அஷ்ரஃப், “எனக்கு முன்னால் 10-15 இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். என் தாடியையும் தொப்பியையும் பார்த்து பையில் என்ன இருக்கிறது என்று கேட்டார்கள். நான் ஒன்றும் சொல்லவில்லை. அதில் இறைச்சி இருக்கிறது என்று நாங்கள் நினைக்கிறோம் என்று சொன்னார்கள். நான் இல்லை என்று சொன்னதும் பையை திறக்கச் சொன்னார்கள். அதைச் சொல்ல நீங்கள் யார் என்று நான் பதிலளித்ததும் அவர்கள் என்னை திட்டி அடிக்க ஆரம்பித்தார்கள்," என்று சொன்னார்.

அஷ்ரஃப் கல்யாண் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டியிருந்தது. ஆனால் அவரை இறங்க விடவில்லை.

“கல்யாணில் இருந்து தானே நிலையம் வரை அவர்கள் என்னை அடித்தார்கள். அவர்களில் ஓரிருவர் 'இவரை வெளியே எறியுங்கள், ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியுங்கள்' என்று சொன்னார்கள். ஆனால் ரயில் பிளாட்பாரத்தை அடைந்துவிட்டதால் என்னை வெளியே வீசவில்லை,” என்று அஷ்ரஃப் குறிப்பிட்டார்.

தனது 72 வருட வாழ்க்கையில் தனக்கு இப்படி நடந்தது இதுவே முதல் முறை என்கிறார் அஷ்ரஃப்.

சில இளைஞர்கள் தனது சட்டையைக் கிழித்து அதிலிருந்த 2,800 ரூபாயை எடுத்துக்கொண்டதாகவும், மொபைல் போனை பிடுங்கி மொபைல் போனின் லாக்கை திறக்க வைத்ததாகவும் அவர் சொன்னார்.

“எனக்கு நேர்ந்தது வேறும் யாருக்கும் நடக்கக்கூடாது. இதுபோன்ற சித்திரவதைக்கு யாரும் ஆளாகக் கூடாது. அடிவாங்கிய பிறகு, என்னால் சரியாகப் பார்க்கவோ நடக்கவோ முடியவில்லை,” என்றார் அவர்.

அஷ்ரஃப் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஜாமீன் பெற்ற மூவர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். மேலும் மூன்று பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

“இந்தியா, இந்திய நீதிமன்றங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று அஷ்ரஃப் கூறினார்.

'ஒட்டுமொத்த குடும்பமும் கவலையில் உள்ளது'

இந்த சம்பவத்தால் அஷ்ரஃப்பின் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

அவரை அடிக்கும் வீடியோ வைரலானது மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாகவும் பலர் வெவ்வேறு காரணங்களை சொல்லிக்கொண்டு வீட்டிற்கு வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அஷ்ரஃப்பின் மகன் அஷ்ஃபாக் அவருடன் இருக்கிறார். மருத்துவ நடைமுறைகள் மற்றும் சட்ட விஷயங்களை முடிக்க அங்கும் இங்கும் அலைகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடனடியாக ஜாமீன் கிடைத்ததற்கும் அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

பிபிசி மராத்தியிடம் பேசிய அஷ்ஃபாக், “என் தந்தை பேசும் நிலையில் இல்லை. மன அழுத்தத்தில் இருக்கிறார். வருங்காலத்தில் இதுபோல யாரும் செய்யாமல் இருக்க, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஜாமீன் கிடைத்தது எப்படி? இது பெரிய அநியாயம். முதியவரை ஈவு இரக்கமின்றி அடித்துள்ளனர். எங்கள் முழு குடும்பமும் மன அழுத்தத்தில் உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு காவல்துறை கடுமையான பிரிவுகளை விதித்தது ஏன்?

இந்த சம்பவம் குறித்து தானே ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அஷ்ரஃப்பின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் மூவரை கைது செய்தனர். ஆனால் 15,000 ரூபாய் பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் குரல் எழுப்பின. கொலை முயற்சி போன்ற பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை (சரத்சந்திர பவார்) சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்திரா அவத் கோரிக்கை விடுத்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டார்.

”வெறுப்பை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி ஆட்சிக்கு வருபவர்கள், நாட்டில் தொடர்ந்து அச்சத்தின் ஆட்சியை ஏற்படுத்தி வருகின்றனர். கும்பலுக்கு பின்னால் மறைந்துகொண்டு சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் வகையில் ஒளிவுமறைவின்றி வன்முறையை பரப்புகின்றனர்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ஆனால், செப்டம்பர் 2ஆம் தேதி, இந்த வழக்கில் மேலும் இரண்டு பிரிவுகளை போலீஸார் புகாரில் சேர்த்தனர். இது குறித்து பேசிய துணை போலீஸ் கமிஷனர் மனோஜ் பாட்டீல், “பிஎன்எஸ் 311 மற்றும் பிஎன்எஸ் 302 ஆகிய பிரிவுகளை புதிதாக சேர்த்துள்ளோம். விசாரணை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவார்கள்,” என்றார்.

தானே லோஹ்மார்க் காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் அர்ச்சனா துசானேவையும் சந்தித்தோம். "எங்கள் விசாரணை நடந்து வருகிறது. நாங்கள் அவரது வீட்டிற்கு போலீஸை அனுப்பி புகார் பதிவு செய்துள்ளோம். மேலும் விசாரித்து வருகிறோம்” என்றார்.

குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நபர் வடக்கு மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் வசிப்பவர். மேலும் அவர் காவல்துறை ஆட்சேர்ப்புக்கான உடல் பரிசோதனைக்காக காட்கோபருக்கு சென்று கொண்டிருந்தார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன

கடந்த சில ஆண்டுகளில் மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கும்பல்களால் மக்கள் தாக்கப்படுவது இது முதல் சம்பவம் அல்ல. கடந்த சில ஆண்டுகளில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

சில நாட்களுக்கு முன்பு (செப்டம்பர் 1), ஹரியானாவில் சமைத்த மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் குப்பை பொறுக்கும் ஒருவர் அடித்தே கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்த நபர் சில பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்டார். அதில் அவர் உயிரிழந்தார்.

2017-ம் ஆண்டு டெல்லி-மதுரா ரயிலில் பயணித்த ஜுனைத் கான் என்ற இளைஞரும் அடித்துக் கொல்லப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் தாத்ரி பகுதியில் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கொல்லப்பட்டார்.

மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பசு வதை தடை செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இதை மீறுவோருக்கு 10,000 ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்க வகைசெய்யப்பட்டுள்ளது.

’இந்தப்போக்கு தொடர்ந்தால் இந்த வன்முறை ஒரு மதத்துடன் நிற்காது’.

இது தொடர்பாக பேசிய சட்ட நிபுணர் அசீம் சரோதே, “புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கலாமா வேண்டாமா என்பதை அதன் பிறகு நீதிமன்றம் முடிவு செய்யும்.”

“ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனைகள் குற்றத்தின் வகைக்கு ஏற்ப மாறுபடும். அவர்களை உடனடியாக மீண்டும் கைது செய்ய வேண்டும். இது மிகவும் முக்கியமானது. மூத்த குடிமக்களைப் பாதுகாக்கும் சட்டத்தின்படி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

"இதுபோன்ற ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். மாறாக நாமே நீதிபதியாக மாறுவதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது. மக்கள் நேரடியாக அடித்து உதைக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். ரயில்வேயிலும் மற்ற எல்லா இடங்களிலும் இது போன்ற சம்பவங்களை பார்க்கமுடிகிறது,” என்று அசீம் சரோதே கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)