You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகிழ்ச்சியான தம்பதி அல்லது ஜோடி மீது காதல் கொள்ளும் 'சிம்பியோசெக்சுவல்' ஈர்ப்பு பற்றி தெரியுமா?
- எழுதியவர், நிதின் சுல்தான்
- பதவி, பிபிசி செய்தியாளர்
சமீப காலமாக மனிதர்களின் பாலின அடையாளத்தைப் பற்றி பல புதிய விஷயங்கள் வெளியாகி வருகின்றன. அப்படியான ஒரு புதிய கண்டுபிடிப்பு ஒரு ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது. அது கூட்டுப் பாலின ஈர்ப்பு (Symbiosexual) பற்றியது.
மகிழ்ச்சியான உறவில் இருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடம் ஒரு நபர் ஒருவித ஈர்ப்பை உணர்கிறார் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இதனை சிம்பியோசெக்சுவல் ஈர்ப்பு என்கின்றனர்.
கலிஃபோர்னியாவில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டக்ரல் ஸ்டடீஸ் கல்வி நிலையத்தில் மனித பாலுறவு துறையைச் சேர்ந்த சாலி ஜான்ஸ்டன் இதுகுறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். இது குறித்த ஆய்வுக் கட்டுரையை ஸ்பிரிங்கர் ஜர்னல் (Springer Journal) அண்மையில் வெளியிட்டது.
இந்த ஆய்வுக் கட்டுரை வெளியான பிறகு இணையத்தில் சிம்பியோசெக்சுவல் ஈர்ப்பு பற்றிய விவாதங்கள் தொடங்கின. "Symbiosexual Attraction” என்ற வார்த்தை தற்போது இணையத்தில் அதிக அளவில் தேடப்பட்டு வருகிறது. இந்த பாலின ஈர்ப்பு உண்மையில் எதை குறிக்கிறது.
இந்த வகையான ஈர்ப்பை பலர் அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாலின அடையாளங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில் இந்த கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆனால், உண்மையில் இந்த ஈர்ப்பு எதை பற்றியது? இந்த ஆராய்ச்சியின் மூலம், உணர்வுகள் அல்லது பிற நிலைகளில் உணரப்பட்ட மாற்றங்கள் என்ன என்பது போன்ற சில கேள்விகளுக்கு விடை காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சிம்பியோசெக்சுவல் ஈர்ப்பு என்றால் என்ன?
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் சிம்பியோசெக்சுவல் ஈர்ப்பு என்பது ஒரு நபருக்கு மற்றொரு நபர் மீது ஈர்ப்பு ஏற்படுவதை காட்டிலும் ஒரு ஜோடி/தம்பதி மீது ஈர்ப்பு ஏற்படுவதாகும்.
டாக்டர். சாகர் முண்டாடா ஒரு மனநல மருத்துவர் மற்றும் பாலியல் நிபுணர் ஆவார். 'சிம்பியோசெக்சுவல் ஈர்ப்பு' பற்றி அவர் கூறுகையில், இது ஒரு ஜோடி மீது ஒருவர் உணரும் ஈர்ப்பு. அதாவது, தம்பதியினருக்கு இடையிலான உறவு, அவர்களின் உறவில் உள்ள ஆற்றல், அவர்களுக்கிடையேயான காதல் உறவைப் பார்த்து ஈர்க்கப்படுவது.
இந்த வகையான ஈர்ப்பு உள்ளவர்கள் தம்பதிகள் அல்லது காதல் ஜோடிகளுக்கு இடையிலான உறவு, ஆற்றல், காதல் உறவைப் பார்த்து உற்சாகமாக உணர்கிறார்கள். அவர்களும் அந்த உறவுக்குள் சேர விரும்புகிறார்கள், என்கிறார் அவர்.
"இவ்வாறு ஈர்க்கப்படும் அந்த நபர் தம்பதியரை முழுமையாக நேசிக்கிறார். இருவரில் ஒருவர் மீது மட்டும் ஈர்ப்பு, ஒருவரை தான் பிடிக்கும் என்று இல்லாமல், இருவரையுமே நேசிக்கின்றனர். அதாவது தம்பதியரில் ஒரு நபருடனும் மட்டும் இணைந்திருக்க விரும்பவில்லை. சிம்பியோசெக்சுவல் ஈர்ப்பு என்பது தம்பதியின் இருவர் மீதும் ஏற்படுவது. அவர்களின் ஆழ்ந்த உறவின் மீது ஈர்க்கப்படுகிறார்கள்" என்று அவர் கூறினார்.
உறவின் ஆழம் ஈர்ப்பின் அளவை பொருத்தது
"இந்த பாலின ஈர்ப்பு பற்றி மக்கள் இப்போது தான் விவாதிக்க தொடங்கியுள்ளனர். ஆனால் இது பல வருடங்களாக சமூகத்தில் இருந்திருக்கலாம். இப்போதுதான் அதற்கு தனி அடையாளம் கிடைத்துள்ளது" என்றும் முண்டாடா கூறினார்.
மிக எளிமையான சொற்களில் சொல்ல வேண்டுமெனில், கொஞ்சும் ஒரு ஜோடியை பார்த்து 'நல்ல ஜோடி’ என்று மக்கள் சொல்வது வழக்கம். அவர்கள் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டு 'நான் அந்த ஜோடியை விரும்புகிறேன்' என்று சொல்லி உச்சகட்டமாக, உறவில் மூன்றாவது நபராக நீங்கள் இணைய வேண்டும் என்று ஒருவர் நினைப்பது கூட்டு பாலின ஈர்ப்பாகும்.
இந்த வகை ஈர்ப்பு உள்ளவர்கள் இருவரையும் சேர்த்து உறவில் உருவாகும் அந்த ஆற்றலை அனுபவிக்க விரும்புகிறார்கள். இந்த உறவு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட நபர்களைப் பொறுத்தது. ஆனால் உறவின் மீது ஈர்ப்பு இருந்தாலும், அதில் சிலருக்கு உடல் ஈர்ப்பும் இருப்பதாக முண்டாடா கூறுகிறார்.
இந்த வார்த்தை முதன் முதலில் உருவான கதை
சிம்பியோசெக்சுவல் ஈர்ப்பு என்ற சொல் அல்லது கருத்து முதன்முதலில் 'பாலியல் அறிவியல் ஆய்வுக்கான சமூகம்' என்ற மாநாட்டில் ஒரு போஸ்டர் விளக்கக் காட்சியில் குறிப்பிடப்பட்டது. அங்கு இந்த வார்த்தை ஏற்கனவே ஒரு உறவில் உள்ள நபர்களிடம் ஏற்படும் காதல் அல்லது பாலியல் ஈர்ப்பு என்ற பொருளில் குறிப்பிடப்பட்டது.
பின்னர் இந்த வார்த்தையை இன்னும் தெளிவாக விளக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இது ஒரு உறவின் மீது ஈர்ப்பை உருவாக்குகிறது. அந்த நபர்களின் உறவில் இருக்கும் ஆற்றல் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த ஈர்ப்பு இருபால் ஈர்ப்பு அல்லது அனைத்துப் பாலின ஈர்ப்பில் இருந்து வேறுபட்டது.
சாலி ஜான்ஸ்டன் தனது ஆராய்ச்சியின் போது, கட்டுரைகள், டேட்டிங் பயன்பாடுகள், விவாதங்கள் ஆகியவற்றில் இருந்து சிம்பியோசெக்சுவல் ஈர்ப்பு தொடர்பான சில ஆதாரங்களைக் கண்டறிந்தார். ஆனால் இந்த ஆய்வு பற்றி போதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்று ஜான்ஸ்டன் தனது ஆராய்ச்சியில் கூறியுள்ளார்.
இந்த ஈர்ப்பை ஆராய்ச்சி செய்யும் போது, ஆசை, பாலுணர்வு போன்றவற்றில் சமூகத்தின் பார்வைகளை அவர் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால் பாலுறவு தொடர்பான இதுபோன்ற தலைப்புகளை ஆராய்வது மிகவும் அவசியம் என்று அவர் தெரிவித்தார். இந்த ஆராய்ச்சிக்காக அவர்கள் தி ப்ளேஷர் ஸ்டடி (The Pleasure Study) என்ற ஆராய்ச்சிக்காக சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்தனர்.
பாலின அடையாளத்திற்கும் பாலியல் இன்பத்திற்கும் இடையிலான உறவு `தி ப்ளேஷர் ஸ்டடி’யில் விவாதிக்கப்பட்டது. இதில், ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களின் அடிப்படையில் ஜான்ஸ்டன் தனது ஆய்வை மேற்கொண்டார்.
ஆராய்ச்சியில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது?
ஆராய்ச்சித் தரவுகளை ஆராய்ந்த பிறகு, சாலி ஜான்ஸ்டன், மக்கள் 'சிம்பியோசெக்சுவல் ஈர்ப்பை' அனுபவிக்கிறார்கள் என்பதற்கான உறுதியான ஆதாரங்களைக் கண்டறிந்தார். The Pleasure Study-க்கான ஆய்வில் பங்கேற்றவர்களுடனான நேர்காணலில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இதை அவர் கணித்தார்.
'தி ப்ளேஷர் ஸ்டடி' ஆய்வில் பங்கேற்ற 373 பேரில், 145 பேர் ஏற்கனவே உறவுகளில் உள்ள மற்றவர்களின் பால் ஈர்க்கப்படுவதாக தெரிவித்தனர். இந்த விகிதம் பங்கேற்பாளர்களில் 38.9 சதவீதமாக இருந்தது. அவர்கள் குறிப்பாக தம்பதிகள் மீது இந்த ஈர்ப்பு இருப்பதை சொன்னார்கள்.
கருத்துக் கணிப்பின் போது தம்பதி/ஜோடி மீது ஈர்ப்பு உண்டானது என்று கூறியவர்கள் அனைவரும் நேர்காணல்களிலும் அதை உறுதிப்படுத்தினர். உலகெங்கிலும் உள்ள வெவ்வேறு புவியியல் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்., வெவ்வேறு வயதினர் (21-40) இத்தகைய ஈர்ப்பை வளர்த்துக் கொண்டதும் தெரிய வந்தது.
நேர்காணல்களில், அவர்கள் அனைவரும் எவ்வாறு ஈர்க்கப்பட்டனர், அந்த நேரத்தில் அவர்களின் மனநிலை, ஈர்ப்பின் போது அவர்கள் பெற்ற அனுபவம் ஆகியவற்றை விவரித்தனர்.
இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் ஒரு நபரின் மீதான ஈர்ப்புக்கும் ஒரு ஜோடியின் மீதுள்ள ஈர்ப்புக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன என்பதையும் சொன்னார்கள்.
தம்பதிகளுக்கு இடையேயான விவாதங்கள், ஒருவரோ ஒருவர் நடந்து கொள்ளும் விதம், ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அக்கறை மற்றும் அவர்கள் வெளிப்படுத்தும் ஆற்றல் ஆகியவை அவர்களின் ஈர்ப்பின் முக்கிய புள்ளிகளாக இருந்தன.
இதை ஆராய்ந்த டாக்டர். முண்டாடா கூறுகையில், "இவ்வாறு, சிம்பியோசெக்சுவல் ஈர்ப்பு உள்ளவர், அந்த குறிப்பிட்ட உறவில் மட்டுமே ஈர்க்கப்படுகிறாரா, அது உடல் அல்லது உணர்ச்சி நிலையை அடைகிறதா என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் ஈர்க்கப்பட்ட தம்பதியருடன் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அதன் பின்னர் அவர்கள் முக்கோண உறவைப் பெற வேண்டும் என்று நினைக்கின்றனர். மிக முக்கியமான விஷயம் அவர்கள் உணர்வை பெற விரும்புகின்றனர்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு