சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் எவ்வாறு தொடங்கியது? அது ஏன் அவசியம்?

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, உலகம் முழுவதும் உள்ள மக்கள் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

உலகளவில் கொண்டாடப்படும் இந்த நாள், பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடுவதுடன், பாலின சமத்துவமின்மை மற்றும் பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது.

ஆனால் இந்த நாள் ஏன் முக்கியமானது?

சர்வதேச மகளிர் தினம் எப்படி தொடங்கியது?

சர்வதேச மகளிர் தினம் (IWD) தொழிலாளர் இயக்கத்தில் இருந்து தொடங்கியது.

இதற்கான விதை 1908 ஆம் ஆண்டில் விதைக்கப்பட்டது. 15,000 பெண்கள் நியூயார்க் நகரம் முழுவதும் பேரணி நடத்தி, வேலைநேர குறைப்பு, சம்பள உயர்வு மற்றும் வாக்குரிமை கோரி போராட்டம் நடத்தினர்.

ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது.

இதை ஒரு சர்வதேச நிகழ்வாக மாற்றுவதற்கான சிந்தனை, ஜெர்மன் கம்யூனிஸ்ட் மற்றும் பெண் உரிமைக்காக வாதிடும் கிளாரா ஜெட்கின் என்பவரிடமிருந்து பிறந்தது.

1910 இல், கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் அவர் இந்த யோசனையை முன்வைத்தார்.

அந்த மாநாட்டில் கலந்துகொண்ட 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் அவரது பரிந்துரையை ஒருமனதாக ஆதரித்தனர்.

அதனைத் தொடர்ந்து, முதல் சர்வதேச மகளிர் தினம் 1911 இல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது.

பின்னர், 1977 இல் ஐக்கிய நாடுகள் சபையால் (UN) இந்த நாள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையால் (1996 இல்) ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் மகளிர் தின கருப்பொருள் "கடந்த காலத்தைக் கொண்டாடுதல், எதிர்காலத்திற்கான திட்டமிடல்" என்பதாகும்.

சர்வதேச மகளிர் தினம் ஏன் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது?

ஜெட்கின் முன்முதலில் முன்மொழிந்த சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் எந்த குறிப்பிட்ட நாளுடன் தொடர்புடையதாக இல்லை.

1917 இல் போர்க்கால வேலைநிறுத்தத்தின் போது ரஷ்ய பெண்கள் "ரொட்டி மற்றும் அமைதி"க்காகப் போராடியதை அடுத்து மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

வேலைநிறுத்தத்தின் நான்கு நாட்களுக்குப் பிறகு, ரஷ்யாவின் ஜார் மன்னர் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது.

ரஷ்யாவில் அப்போது பயன்பாட்டில் இருந்த ஜூலியன் நாட்காட்டியின்படி, பெண்கள் வேலைநிறுத்தம் பிப்ரவரி 23 அன்று தொடங்கியது.

உலகின் பிற பகுதிகளில் பயன்படுத்தப்படும் கிரிகோரியன் நாட்காட்டியில், அந்த தேதி மார்ச் 8 ஆகும்.

சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

சர்வதேச மகளிர் தினம் பல நாடுகளில் தேசிய விடுமுறையாக உள்ளது.

ஊர்வலங்கள், உரையாடல் நிகழ்வுகள், கச்சேரிகள், கண்காட்சிகள் மற்றும் விவாதங்கள் உட்பட ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் அந்நாளில் நடைபெறுகின்றன.

இத்தாலியில், சர்வதேச மகளிர் தினம் 'ஃபெஸ்டா டெல்லா டோனா' என்று அழைக்கப்படுகிறது. மிமோசா பூக்கள், இத்தினத்துக்கான பிரபலமான பரிசாக விளங்குகின்றன.

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ரஷ்யாவில் பூக்களின் விற்பனை இரட்டிப்பாக உயரும்.

உகாண்டாவில், 1984 முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது, அரசு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலைப்புகளில் கவனம் செலுத்தும்.

செர்பியா, அல்பேனியா, மாசிடோனியா மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் அன்னையர் தினம் மற்றும் சர்வதேச மகளிர் தினம் ஆகியவை ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன.

அமெரிக்காவில், மார்ச் மாதம் மகளிர் வரலாற்று மாதமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் அதிபரின் அறிவிப்பானது அமெரிக்க பெண்களின் சாதனைகளைப் போற்றுகிறது.

சர்வதேச மகளிர் தினத்திற்கு மக்கள் ஏன் ஊதா நிறத்தை அணிகிறார்கள்?

சர்வதேச மகளிர் தின இணையதளத்தின் படி, ஊதா, பச்சை மற்றும் வெள்ளை ஆகியவை சர்வதேச மகளிர் தினத்தின் நிறங்கள் என அறியப்படுகின்றன.

"ஊதா நீதி மற்றும் கண்ணியத்தை குறிக்கிறது. பச்சை நம்பிக்கையை குறிக்கிறது. ஒரு சர்ச்சைக்குரிய கருத்தாக இருந்தாலும், வெள்ளை நிறம் தூய்மையை குறிக்கிறது" என சர்வதேச மகளிர் தின இணையதளம் குறிப்பிடுகிறது.

இந்த வண்ணங்களை பெண்களின் சமூக மற்றும் அரசியல் ஒன்றியம் (WSPU) பயன்படுத்தியது. 1903 இல் இங்கிலாந்தில் பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடுவதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டது.

2025 சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் என்ன?

2025 ஆம் ஆண்டிற்கான ஐ.நா.வின் கருப்பொருள் "அனைத்து பெண்களுக்கும் சிறுமிகளுக்கும்: உரிமைகள். சமத்துவம். அதிகாரமளித்தல்," என்பதாகும்.

இது நீடித்த மாற்றத்திற்கான உந்து சக்தியாக செயல்பட்டு, அடுத்த தலைமுறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சர்வதேச மகளிர் தின இணையதளத்தில், #AccelerateAction என்ற கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த, மகளிர் தின கொண்டாட்டத்தைப் பற்றிய நேர்மறையான செய்திகளைப் பகிரும் போது, #IWD2025 மற்றும் #AccelerateAction என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்த உலகம் முழுவதும் உள்ள மக்களை இந்த அமைப்பு ஊக்குவிக்கிறது.

சர்வதேச மகளிர் தினம் தேவை என்று ஏன் வாதிடப்படுகிறது?

பாலின சமத்துவத்தை விரைவுபடுத்தும் நடவடிக்கைக்கான அழைப்பை இந்த நாள் குறிக்கிறது என்று அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

அப்படியென்றால் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் உள்ளதா?

தரவுகள் ஆம் என்ற பதிலை பரிந்துரைக்கும்.

2023 ஆம் ஆண்டில் வன்முறையுடன் தொடர்புடைய 3,688 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியது.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இச்சம்பவங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளன.

மேலும் இதில் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் சிறுமிகளாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யூனிசெஃப் வெளியிட்ட அறிக்கையின்படி, பள்ளிக்குச் செல்லும் வயதுடைய சுமார் 119 மில்லியன் பெண்கள் பள்ளிக்குச் செல்வதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

2024 உலக வங்கிக் குழுமத்தின் அறிக்கை, ஆண்கள் அனுபவிக்கும் சட்ட உரிமைகளில் மூன்றில் இரண்டு பங்கை மட்டுமே பெண்கள் பெறுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

உலக மக்கள் தொகையின் பாதி, அதாவது சுமார் 3.6 பில்லியன் மக்கள் 2024ல் நடைபெற்ற முக்கியத் தேர்தல்களில் பங்கேற்றதாக அறியப்படுகிறது.

ஆனால், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் கடந்த 20 ஆண்டுகளில் மிகவும் மெதுவான வளர்ச்சி மட்டுமே 2024 ஆம் ஆண்டில் காணப்பட்டது என்று பிபிசி 100 பெண்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

ஐநா பெண்கள் அமைப்பின் 2024 ஜெண்டர் ஸ்னாப்ஷாட் (Gender snapshot) அறிக்கையின்படி, அனைத்து பெண்களையும், சிறுமிகளையும் வறுமையிலிருந்து மீட்க 137 ஆண்டுகள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், 20 முதல் 24 வயதுடைய பெண்களில் 5 பேரில் ஒருவருக்கு 18 வயதிற்கு முன் திருமணம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் உலகளவில், 2023 ஆம் ஆண்டில் சுமார் 51,100 பெண்களும் சிறுமிகளும் அவர்களின் நெருங்கிய உறவினர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டனர் என்றும் அறியப்படுகின்றது.

சர்வதேச ஆண்கள் தினம் உள்ளதா?

சர்வதேச ஆண்கள் தினம் 1990 களில் இருந்து நவம்பர் 19 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்வு ஐநாவால் அங்கீகரிக்கப்படவில்லை, ஆனால் பிரிட்டன் உட்பட உலகளவில் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

அந்த நாளின் முக்கியத்துவம் "ஆண்கள், உலகிற்கு, அவர்களது குடும்பங்களுக்கு மற்றும் சமூகங்களுக்கு கொண்டு வரும் நேர்மறை மதிப்பை" சிறப்பிக்கும் வகையில் உள்ளது என்று இந்த நிகழ்வின் அமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.

இது நேர்மறையான முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்துவதையும், ஆண்களின் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் மற்றும் பாலின உறவுகளை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

பல ஆண்டுகளாக, நகைச்சுவை நடிகர் ரிச்சர்ட் ஹெர்ரிங், ஒவ்வொரு சர்வதேச மகளிர் தினத்திலும், "ரெஃப்யூஜ்" எனும் குடும்ப வன்முறை நிவாரண அமைப்புக்காக பத்தாயிரக்கணக்கான பவுண்டுகளை நிதியாகத் திரட்டி வந்தார்.

சமூக ஊடக தளமான எக்ஸில், சர்வதேச ஆண்கள் தினம் இல்லாதது குறித்து கோபமாக இருந்தவர்களுக்கு பதிலளிப்பதன் மூலம் இந்த நிதி திரட்டலை அவர் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)