You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தராகண்ட்: 'எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அரசு ஏன் தலையிடுகிறது?' லிவ்-இன் உறவில் இருப்பவர்களின் அச்சம் என்ன?
- எழுதியவர், சுமேதா பால்
- பதவி, பிபிசி நிருபர்
ஜனவரி 27, 2025 அன்று, உத்தராகண்ட் மாநில அரசு 'லிவ்-இன்' (திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது) உறவுகளை நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகளை அறிவித்தது.
இந்த நடவடிக்கை மாநிலத்தின் பொது சிவில் சட்டத்தின் (UCC) ஒரு பகுதியாகும்.
மதம், பாலினம் அல்லது பாலியல் ஈர்ப்பைப் பொருட்படுத்தாமல், மாநிலத்தின் அனைத்து மக்களுக்குமான ஒருங்கிணைந்த தனிப்பட்ட சட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதே பொது சிவில் சட்டம்.
பொது சிவில் சட்டத்தை செயல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் உத்தராகண்ட் ஆகும்.
மேலும், பொது சிவில் சட்டம் என்பது நாடு முழுவதும் செயல்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட ஒரு மாதிரியாகும்.
உத்தராகண்ட் மாநில அரசு இதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று விவரிக்கிறது, இது சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் என்றும் கூறுகிறது.
இருப்பினும், பொதுமக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பல தரப்பினர் இந்த விதிகளை வழக்குகளின் மூலம் எதிர்க்கின்றனர்.
- பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற பாஜகவின் திட்டங்கள் என்ன ஆகும்?
- உத்தராகண்டில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம் - திருமணம், விவாகரத்துக்கான விதிகள் என்ன?
- பொது சிவில் சட்டம்: இந்து - முஸ்லிம் சட்டங்கள் வேறுபடுவது எங்கே? சொத்துரிமை இனி யாருக்கு?
- திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: மனைவி உயிரிழந்த வழக்கில் கணவர் விடுவிப்பால் எழும் கேள்விகள்
இது குடிமக்கள் மீதான 'கண்காணிப்பை' அதிகரிக்கும் மற்றும் மாநிலத்தை 'காவல்துறையின் ஆதிக்கத்துக்குள்' கொண்டு செல்லும் என்று வாதிடுகின்றனர்.
புதிய விதிகளின் கீழ், 'லிவ்-இன்' உறவில் இருப்பவர்கள், 30 நாட்களுக்குள் விசாரணை நடத்த அதிகாரம் பெற்ற பதிவாளரிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விசாரணையின் போது, தேவைப்பட்டால் 'கூடுதல் தகவல் அல்லது ஆதாரங்களை வழங்க' அவர்களிடம் கேட்கப்படலாம்.
பதிவாளர் 'லிவ்-இன்' உறவில் இருப்பவர்களின் அறிக்கைகளை உள்ளூர் காவல்துறைக்கு அனுப்புவார்.
'லிவ்-இன்' உறவில் உள்ளவர்களுள் ஒருவர் 21 வயதுக்குட்பட்டவராக இருந்தால் பெற்றோரிடம் தெரிவிக்கப்படுவர்.
பொது சிவில் சட்ட அணுகுமுறை என்பது ஆளும் பாஜக அரசின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
இருப்பினும், புதிய விதிகளுக்கு வழக்கறிஞர்களிடம் இருந்தும் 'லிவ்-இன்' உறவில் வாழ்பவர்களிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
'தனிப்பட்ட உறவுகளைக் கண்காணித்தல்'
20 வயதுகளில் உள்ள மிருணாளினி மற்றும் ஃபைஸ் ஆகிய இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். அவர்களுடைய திருமணத்தை இருவரின் பெற்றோரும் கடுமையாக எதிர்க்கின்றனர்.
எனவே திருமணம் செய்வது அரிதான தேர்வாக இருக்கும் நிலையில், ஃபைஸுடன் ஒன்றாக வாழ்வதிலும் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளார் மிருணாளினி.
"நாங்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். ஏனென்றால், இந்த வாழ்க்கை தான் எங்களுக்கு அதிகாரப்பூர்வ உறவை நெருங்குவதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு. புதிய விதிமுறைகள் என்னை கவலையில் ஆழ்த்தியிருக்கின்றன. பெற்றோரின் ஒப்புதலின்றி வழக்கமான முறையில் திருமணம் செய்ய முடியாது, இப்போது அவருடன் ஒன்றாக வாழ்வதும் கடினமாகலாம்"என்று மிருணாளினி கூறுகிறார்.
தவறினால் என்ன தண்டனை?
லிவ்-இன் உறவைப் பதிவு செய்யத் தவறினால் புதிய விதிமுறைகளின் கீழ் தண்டனையும் விதிக்கப்படுகின்றன.
லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் இரண்டு மாதங்களுக்குள் தங்களது உறவைப் பதிவு செய்யவில்லை என்றால் 10,000 ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டையும் சந்திக்க நேரிடும்.
ஒன்றாக இணைந்து வாழ்பவர்கள், அதிகாரியிடம் அறிக்கையை சமர்ப்பித்து, அதன் நகலை தங்கள் துணைக்கு வழங்குவதன் மூலம் உறவை முறித்துக் கொள்ளலாம்.
இந்த உறவுகளை முறித்துக் கொள்ளும் விவரமும் காவல்துறையிடம் தெரிவிக்கப்படும்.
'லிவ் இன்' உறவுகளை நேரிலோ அல்லது இணையதளத்தின் வழியாகவோ பதிவு செய்யலாம், அதில் மதம், முகவரி, தொழில் தொடர்பான விவரங்களைப் பதிவேற்ற வேண்டும்.
திருமணம் செய்வது தங்களுக்கு எளிதான வழி அல்ல என்கிறார் மிருணாளினி. அவர்கள் தங்கள் உறவை பொது சிவில் சட்ட இணையதளத்தில் பதிவு செய்தால், அவரது குடும்பத்தினர் அதனைக் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற பயம் அவருக்கு இருக்கிறது.
இப்படியான ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது ஏன் என்ற குழப்பமும் அவருக்கு உள்ளது.
மேலும் அவர்களைப் போன்றே 'லிவ்-இன்' உறவில் உள்ள பலருக்கும், தனியுரிமை மீதான தலையீடாகவே இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.
தரவுகள் மற்றும் தனியுரிமை குறித்து அதிகரிக்கும் கவலைகள்
63 வயதான விஸ்வராம், 1990 முதல் தனது வாழ்க்கைத் துணையுடன் திருமணம் செய்துகொள்ளாமல் உத்தராகண்டில் வசித்து வருகிறார்.
அவரும் அவரது துணையும் அப்பகுதிக்கு வந்தபோது, சூழ்நிலை அங்கு அமைதியாக இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் 30 ஆண்டுகள் கழித்து அனைத்தும் மாறி வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.
"எங்களது தனிப்பட்ட வாழ்க்கையில், எங்களது படுக்கையறையில் உத்தராகண்ட் அரசு ஏன் தலையிடுகிறது?" என்று விஸ்வராம் கேட்கிறார்.
தனிநபர் வாழ்க்கையில் தலையீடாகவும், வெகுஜன தரவு சேகரிப்பு மற்றும் தனியுரிமை மீறல் சிக்கல்கள் குறித்த கவலைகளை எழுப்புவதாகவும், இந்த நடவடிக்கை குறித்து விஸ்வராம் கருதுகிறார்.
மேலும் 2017இல், இந்திய உச்ச நீதிமன்றம் தனியுரிமையை அடிப்படை உரிமையாக அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீதல் மற்றும் ரோட்ரிக் ஆகியோரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள்.
உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் வசிக்கும் இவர்கள், கடந்த ஆண்டில் பொது சிவில் சட்ட விதிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பின்னர் திருமணம் செய்துகொண்டனர்.
அவர்களும் இதே கவலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
"நாங்கள் ஒன்றாக வாழும்போது இந்த விதிகள் நடைமுறைக்கு வந்திருந்தால், அது எங்களை பெரும் ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும்.
எங்களின் தரவுகள் வெளிப்படுத்தப்பட்டால், அதன் மூலம், 'லிவ்- இன்' முறையில் வாழும் உறவுகளையோ அல்லது வேறு மதங்களுக்கு இடையேயான உறவுகளையோ ஆதரிக்காத கண்காணிப்புக் குழுக்களால் நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்" என்கிறார் ரோட்ரிக்.
உத்தராகண்டில், இந்து ரக்ஷா தளம் போன்ற வலதுசாரி அமைப்புகள் பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. பெண்களின் பாதுகாப்புக்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பின் உறுப்பினரான ரிம்ஜிம் கம்போஜ், சமீபத்தில் இந்து அல்லாத ஒரு ஆணுக்கு இந்துப் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பி, அந்த ஆணை மதமாற்றம் செய்தார்.
அந்த ஆணின் மதமாற்றத்துக்குப் பிறகு, ரிம்ஜிம் அவர்களின் திருமணத்தைப் பதிவு செய்தார்.
"ஆண்கள் மற்றும் பெண்கள், குறிப்பாக இந்து பெண்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்காமல் ஒன்றாக வாழத் தொடங்கும் பல நிகழ்வுகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். மிகவும் நவீனமாகி, மதம் ஒரு பொருட்டல்ல என்று நினைக்கும் இந்த இந்துப் பெண்கள் ஏமாற்றப்பட்டு தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்" என்கிறார் ரிம்ஜிம் கம்போஜ்.
இதற்கிடையில், "2005 குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் லிவ்-இன் உறவுகள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அத்தகைய உறவுகளில் எந்த விதமான வன்முறையும் தண்டனைக்குரியது. இதன் மூலம் 'லிவ் இன்' முறையில் வாழும் உறவுகளில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது." என்கிறார் சந்திரகலா.
எனவே, பெண்களின் பாதுகாப்பு என்ற பெயரில் பொது சிவில் சட்டத்தின் கீழ் 'லிவ் இன்' உறவுகளை பதிவு செய்ய வாதிடுவது நியாயமற்றதாகத் தெரிகிறது" என்று வழக்கறிஞர் சந்திரகலா கூறுகிறார்.
மேலும், முந்தைய திருமணத்தின் முறையான முடிவு குறித்தும் புதிய பொது சிவில் சட்ட விதிகளில் உள்ள சிக்கல்கள் கவலையளிக்கின்றன.
'லிவ்-இன்' உறவைப் பதிவு செய்ய, தனிநபர்கள் தங்கள் சட்டப்பூர்வ துணையிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்திருக்க வேண்டும்.
"நாங்களும் முன்பு திருமணம் செய்திருக்கிறோம். விவாகரத்து செய்ய அதிக செலவும், நீண்ட காலமும் ஆகும். ஆனால் 'லிவ்-இன்' உறவில் ஒன்றாக வாழ்வதாக பதிவு செய்வதற்கு முன் ஒருவர் அதைச் செய்ய வேண்டும். இந்த செயல்முறை கடினமானது" என்கிறார் ஷீத்தல்.
இருப்பினும், தனிப்பட்ட தரவுகளின் தனியுரிமையை உறுதிப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உத்தராகண்ட் அரசு அறிவித்துள்ளது.
மாநில உள்துறையின் கூடுதல் செயலாளர் நிவேதிதா குக்ரெட்டி பிபிசியிடம் பேசுகையில், "'பதிவு செய்யும் போது பகிரப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பினர் பெற முடியாது, மேலும் அவர்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன" என்றார்.
திருமண உறவுக்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களின் பிரச்னையும் புதிய விதிகளை எதிர்க்கும் வழக்கறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் வழக்கறிஞர் சந்திரகலா, "புதிய விதிகள், பெண்களின் சுயாட்சி மற்றும் அவர்களின் தேர்வு சுதந்திரத்தின் மீதான தாக்குதல் இது" என்கிறார்.
திருமண உறவுக்குள் நடக்கும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் பெரும்பாலும் விவாகரத்து இல்லாமல் நேரடியாக 'லிவ்-இன்' உறவுகளில் நுழைகிறார்கள்.
ஏனெனில் அவர்களின் மனைவி அல்லது மாமியார் விவாகரத்து செயல்முறையைத் தடுக்கிறார்கள்.
பொது சிவில் சட்டத்தின் ஆதரவாளர்கள் சொல்வது என்ன?
பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான தேவேந்திர பாசின், பொது சிவில் சட்ட விதிகளை அமல்படுத்துவதற்கான மாநில அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இருந்தார்.
பாஜகவின் 2022 தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக பொது சிவில் சட்டம் இருந்தது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன், பல்வேறு சமூகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது என்று பாசின் கூறுகிறார்.
"நமது சமூகத்தில், 'லிவ்-இன்' உறவுகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை, ஆனால் நாங்கள் யாரையும் தடுக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம். உறவுகள் முறியும் போது, பெண்கள் பாதிக்கப்படுவதால், பதிவு செய்வது அவசியம். மேலும், என்ன நடக்கிறது என்பதை பெற்றோர்கள் அடிக்கடி தெரிந்துகொள்ள மாட்டார்கள். ஒரு குழந்தை பிறந்தால், நிலைமை மிகவும் சிக்கலானதாகிவிடும்" என்று விளக்குகிறார்.
மேலும், லிவ்-இன் உறவுகளை பதிவு செய்வது குடும்பங்களையும் சமுதாயத்தையும் பாதுகாப்பதற்கான வழியாகும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
"நாகரிக சமுதாயத்தில் வாழ ஒரு வழி இருக்கிறது. சுதந்திரம் அவசியம், ஆனால் எதுவும் முழுமையானதாக இருக்க முடியாது" என்றும் அவர் தெரிவித்தார்.
மாநிலத்தில் பலருக்கும் புதிய விதிகள் குறித்து தெளிவில்லை. அதே சமயம், இந்த புதிய விதிகள் நீதிமன்றத்தில் சவால்களை எதிர்கொள்கின்றன.
இந்த புதிய விதிகளுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் மாநில உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொது சிவில் சட்டத்துக்கு எதிரான சட்ட சவால்கள்
உயர் நீதிமன்றத்தில் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்த கார்த்திக் ஹரி குப்தா, இந்த விதிகள் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவை மீறுவதாக வாதிடுகிறார்.
மேலும் "புதிய சட்டங்களின் கீழ், மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை 'விசாரணை' செய்ய அரசாங்கத்துக்கு இப்போது உரிமை உள்ளது" என்றும் அவர் கூறுகிறார்.
பொது சிவில் சட்டத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் ரசியா பேக், புதிய சட்டம் ஏற்கெனவே உள்ள திருமணம், விவாகரத்து மற்றும் சொத்துச் சட்டங்களை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றிய தெளிவின்மை குறித்து கேள்வி எழுப்பினார்.
அவர் குறிப்பிடுகையில், "அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்தச் சட்டத்தின் கீழ், பெற்றோருக்கு அவர்களின் வயது வந்த குழந்தைகளின் உறவுகள் குறித்து அறிவிக்கப்படும். எந்தப் பெற்றோர் இதற்கு அனுமதி கொடுப்பார்கள்?" என்று கேள்வி எழுப்புகிறார்.
குறிப்பு: அடையாளங்களைப் பாதுகாக்க, லிவ்-இன் உறவில் இருப்பவர்களின் பெயர்கள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)