ஜன நாயகன் தாமதம்: பாஜக, காங்கிரஸ், திமுக மற்றும் திரை உலகம் கூறுவது என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் கடைசி திரைப்படமாக கருதப்படும் ஜன நாயகன் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தணிக்கை தொடர்பான சிக்கல்களால் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் ஜனவரி 7ஆம் தேதி அறிவித்தது.

இதைத் தொடர்ந்து அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் ஜன நாயகன் படம் குறித்தும் விஜய் குறித்தும் தங்களது கருத்துகளையும் ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர்.

யார், யார் என்ன கூறியுள்ளார்கள்? இங்கு விரிவாகக் காண்போம்.

காங்கிரஸ் தலைவர்கள் கூறியது என்ன?

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இப்போது திரைத்துறை குறிவைக்கப்பட்டுள்ளது. அரசமைப்பு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்கிறது.

ஆனால், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் கீழ், இந்த உரிமை சட்டத்தின் மூலமில்லாமல், அச்சத்தின் மூலமாகத் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகிறது.

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவை எதிர்ப்புக் குரல்களை அடக்குவதற்கான முன்னணி அமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. இப்போது தணிக்கை வாரியம்கூட சினிமா மற்றும் கருத்துகளைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாகச் சுருக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பாஜக - ஆர்எஸ்எஸ் பிரசாரம் 'பண்பாடு' என்று சித்தரிக்கப்படுகிறது" என்றும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் தனது எக்ஸ் பக்கத்தில் ஜன நாயகன் திரைப்படம் குறித்துத் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், "நடிகர் விஜயின் ஜன நாயகன் திரைப்படம் தொடர்பான சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் தவறான பயன்பாடு குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.'' என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, "அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்கு தணிக்கை செய்வதை தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும் பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும். அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக விஜயின் திரைப்படம் தாமதங்களை எதிர்கொள்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ''மோதி - உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷார்ட் வீடியோ

திமுக தலைவர்கள் கூறியது என்ன?

ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் நிலவும் சர்ச்சை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, "தணிக்கை செய்து அவர்களுக்கு அனுமதியைக் கொடுப்பது யார் மத்திய அரசா, மாநில அரசா? மத்திய அரசுதானே" என்று கூறினார்.

மேற்கொண்டு பேசிய அவர், "இது கடைசி திரைப்படம் என்பதால் அதற்கு பில்டப் செய்வதற்காக, தொண்டர்களைக் கொதிநிலையில் வைப்பதற்காக இப்படிச் செய்வதாகவும் சொல்லப்படுகிறது" என்றும் குறிப்பிட்டார்.

ஜன நாயகன் திரைப்படத்திற்கு மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளது குறித்து திமுக அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், "மத்திய அரசு தணிக்கை குழுவை வைத்துள்ளது. அதற்கும் மாநில அரசுக்கும் என்ன சம்பந்தம்? காங்கிரஸ் தலைவர்கள் ஏன் குரல் கொடுக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. தெரியாத விஷயத்தில் நான் எதையும் கூற முடியாது," என்று மட்டும் கூறிவிட்டார்.

தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியது என்ன?

ஜன நாயகன் திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள விவாதங்களைத் தொடர்ந்து, அதுகுறித்த தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், "காங்கிரஸ்காரர்கள் ஜன நாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும் பிரதமரையும் குறைகூறி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் நீதிமன்றத்திலேயே தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்திற்கும் மத்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவாக வலியுறுத்தப்பட்டு இருப்பதாகக் கூறியுள்ள தமிழிசை சௌந்தர்ராஜன், "அவசரநிலை பிரகடனத்தின்போது கருத்து சுதந்திரத்தில் கழுத்தை நெரித்த காங்கிரஸ் இன்று ஜனநாயகன் திரைப்படத்திற்காக பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கலையில் இருந்து அரசியலை விலக்கி வைப்போம் என்று காங்கிரஸ் சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை. திரைப்படங்களை நேரடியாகத் தடை செய்த வரலாறு காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு. இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம்" என்று கூறியுள்ளார்.

மேலும், " சட்டரீதியாக தணிக்கைக் குழு செயல்படுகிறது. அதன் நடைமுறையை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வருவது தவறல்ல, ஆனால் அவர் படம் அரசியல் ஆக்கப்படுவதுதான் வேடிக்கையான வேடிக்கை. சட்டரீதியாக சென்சார் சான்றிதழ் கிடைக்காமலே ஒரு வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு, அதன் பிறகு அழுத்தம் கொடுப்பது சரியான நடைமுறையல்ல" என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

விஜய் படத்திற்கு திரை பிரபலங்கள் ஆதரவுக் குரல்

ஜன நாயகன் பட வெளியீடு சர்ச்சையாகியுள்ள நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து, "இது அதிகார துஷ்பிரயோகம். எந்தவொரு படமும் ஒருவரை மட்டுமே சார்ந்தது அல்ல; ஒரு படம் திரைக்கு வருவதில் நூற்றுக்கணக்கான மக்களின் உழைப்பும் பணமும் சம்பந்தப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மன வேதனை அடைந்துள்ளதாகக் கூறியுள்ள நடிகர் ரவி மோகன், "மனவேதனை அடைந்தேன், சகோதரனாக (விஜய்) உங்களுடன் நிற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ஷாந்தனு, "ஜன நாயகன் வெளியீட்டைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் பார்த்து மனமுடைந்துவிட்டேன். உங்களுக்காக (விஜய்) துணை நிற்போம். ஜன நாயகன் வெளியீட்டுடன் தான் பொங்கல் தொடங்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்துத் தனது கருத்துகளை வெளியிட்டுள்ள நடிகர் சிபி சத்யராஜ், "ஜனநாயகன் வெளியீட்டைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் மிகப்பெரிய வெற்றிக்கான சரியான களத்தை அமைத்துக் கொண்டிருப்பதாக" குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "என்ன நடந்தாலும் சரி. இது இந்திய திரையுலகிலேயே மிகப்பெரிய பிரியாவிடை நிகழ்வாக இருக்கப் போகிறது" எனவும் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், "இந்தத் தாமதம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது, இது தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், "ஜனநாயகன் தணிக்கைத் தாமதம், பராசக்தி படத்துக்கு சான்றிதழ் வழங்குவதில் சிக்கல்'. இது சினிமாவுக்குக் கடினமான காலம்" எனப் பதிவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு