காஸாவில் ஆறு பணயக்கைதிகளின் உடல்கள் மீட்பு- இஸ்ரேல் ராணுவம் கூறுவது என்ன?

 நடவ் பாப்பிள்வெல், அவ்ரஹாம் முண்டர், யாகேவ் புச்ஷ்டாப், அலெக்ஸ் டான்சிக், சைம் பெரி, யோரம் மெட்ஜெர்

பட மூலாதாரம், Hostage families forum

படக்குறிப்பு, மேல் இடமிருந்து வலம்: நடவ் பாப்பிள்வெல், அவ்ரஹாம் முண்டர், யாகேவ் புச்ஷ்டாப், அலெக்ஸ் டான்சிக், சைம் பெரி, யோரம் மெட்ஜெர்
    • எழுதியவர், டாம் பென்னெட்
    • பதவி, பிபிசி செய்திகள்

ஹமாஸால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 6 பேரின் உடல்கள் காஸா முனையில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

கான் யூனிஸ் பகுதியில் இருந்து யாகேவ் புச்ஷ்டாப், அலெக்சாண்டர் டான்சிக், அவ்ரஹாம் முண்டர், யோரம் மெட்ஸ்கர், ஹைம் பெர்ரி மற்றும் பிரிட்டிஷ்-இஸ்ரேலியரான நடவ் பாப்பிள்வெல் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை அன்று வெளியான இஸ்ரேல் பாதுகாப்பு படையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் அவ்ரஹாம் முண்டர் உயிருடன் இருப்பதாக நம்பப்பட்டது. ஆனால் மீதம் இருக்கும் ஐந்து நபர்களும் இறந்துவிட்டதாக இஸ்ரேல் ஏற்கனவே அறிவித்திருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு, இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களின் காரணமாக பணயக்கைதிகளுள் ஒருவரான பாப்பிள்வெல் இறந்ததாக முன்பு ஹமாஸ் ஆயுதக்குழு கூறியிருந்தது.

பாதுகாப்பு நிறுவனமான ஷின் பெட் உடன் இணைந்து இஸ்ரேல் ராணுவப் படை, இந்த மீட்பு நடவடிக்கையை எடுத்து வந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி அன்று ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின் போது இவர்கள் ஆறு பேரும் உயிரோடு கடத்தப்பட்டு, பின்னர் காஸாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக 'பணயக்கைதிகள் குடும்பங்கள் மன்றம்' கூறுகின்றது.

"இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதே, இக்குடும்பங்கள் அனுபவிக்கும் துயரத்திற்கு தீர்வாக இருக்க முடியும். மீதம் உள்ள 109 பணயக்கைதிகளை காஸாவிலிருந்து விடுவித்து அழைத்து வருவது என்பது பேச்சு வார்த்தைகள் மூலம் மட்டுமே சாத்தியம் ஆகும்" என்று அந்த மன்றத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"தற்போது பேச்சு வார்த்தையில் இருக்கும் ஒப்பந்தங்களுக்கு முடிவு காண தன்னால் முடிந்த அனைத்தையும் அரசாங்கம் செய்ய வேண்டும்" என்று அந்த மன்றம் இஸ்ரேலிய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது.

பிபிசி வாட்ஸ் ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காஸா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸாவில் 40,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தங்கள் குறித்த பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இஸ்ரேல்-காஸா இடையே இது குறித்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தி வருகிறார்.

திங்கட்கிழமை அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தம் தொடர்பான "இணைப்பு முன்மொழிவு" (bridging proposal) ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானதாக பிளிங்கன் கூறினார்.

பணயக்கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டதற்கு பிறகு, "இறந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதோடு இந்த துக்கத்தை பகிர்ந்துகொள்கிறோம்" என்று செவ்வாய்கிழமை அன்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கூறினார்.

"அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்து நாட்டிற்கு அழைத்துவரும்வரை நமது முயற்சிகளை ஒரு கணம் கூட நிறுத்தக்கூடாது", என்று இஸ்ரேல் அதிபர் கூறினார்.

கான் யூனிஸ் மற்றும் டெய்ர் அல்-பாலாவின் புறநகர்ப் பகுதிகளில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தி இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது.

மேற்கு கான் யூனிஸில் உள்ள இணைய விநியோக மையம் ஒன்றின் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கான் யூனிஸின் கிழக்கே உள்ள அபாசனில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரி ஒருவர் ஏஃஎப்பி செய்தி முகமையிடம் கூறினார்.

அக்டோபர் 7 ஆம் தேதி அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினர் முன்னறிவிப்பின்றி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தொடங்கியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாக கொண்டுசெல்லப்பட்டனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)