You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெளியானது ரஜினிகாந்தின் ஜெயிலர் - ரசிகர்கள் உற்சாகம்
- எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்தின் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். இதை சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்குகளிலும் காண முடிந்தது.
இதனை மேலும் அதிகரிக்கும் வகையில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரும் நகரங்களில் பல தனியார் நிறுவனங்கள் ”ஜெயிலர்” திரைப்படத்தை முன்னிட்டு, அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் ரோகிணி, காசி உள்ளிட்ட பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “ஜெயிலர்”. கலாநிதி மாறன் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
“ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து மோகன் லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷராஃப், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, தமன்னா பாட்டியா உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
பான் இந்தியா நட்சத்திரங்கள் பலரும் இருப்பதால் இத்திரைப்படம் இயக்குநர் நெல்சன் திலீப் குமாருக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் மிகவும் முக்கியமான திரைப்படமாகக் கருதப்படுகிறது.
டார்க் ஹ்யூமருக்கு பெயர் போன இயக்குநர் நெல்சன் குமார் இயக்கிய விஜய்யின் “பீஸ்ட்” திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், “ஜெயிலர்” திரைப்படம் நெல்சனின் பெயரைக் காப்பாற்றுமா என தொடர்ந்து இணையவாசிகள் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நொடிப்பொழுதில் விற்றுத் தீர்ந்த டிக்கட்டுகள்
வெளிநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னரே “ஜெயிலர்” திரைப்படத்தின் டிக்கட் புக்கிங் தொடங்கியது. புக்கிங் தொடங்கியதுமே ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கட்டை புக் செய்தனர். அதேபோல், இந்தியாவிலும் டிக்கட் புக்கிங் ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே விற்றுத் தீர்த்தன.
பெரும்பாலான ஞாயிறு வரைக்கும் ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டன. எனவே, “ஜெயிலர்” திரைப்படம் வசூலில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தும் என ரசிகர்களும், தியேட்டர் விநியோகஸ்தர்களும் நம்புகின்றனர்.
ட்ரெண்டிங்கான “காவாலா” பாடல்
”ஜெயிலர்” திரைப்படத்திலுள்ள ”காவாலா” பாடல் யூ ட்யூபில் வெளியாகி ட்ரெண்டிங் நம்பர் ஒன் ஆனது. இயக்குநரும், நடிகரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் எழுதிய இப்பாடல் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. ஷில்பா ராவ் இப்பாடலை பாடியுள்ளார்.
பத்து கோடி பார்வையாளர்களை கடந்தபோது நெட்டிசன்கள் காவாலா100 என்ற ஹாஷ்டாகுகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல்களில் எப்பொழுதும் அவருக்கே முக்கியம் கொடுக்கப்படும் நிலையில், வரலாற்றில் முதல்முறையாக அவரைத் தாண்டி தமன்னா அதிக நிமிடங்கள் தோன்றியது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.
சர்ச்சைக்குள்ளான ரஜினியின் பேச்சு
“ஜெயிலர்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, ரஜினி காக்கா, கழுகு கதை ஒன்றினை கூறினார். அதனையடுத்து, ரஜினி காக்கா என்று விஜய்யைத் தான் கூறுகிறார் என சர்ச்சையெழுந்தது. ஆனால், அந்தக் கதைக்குப் பின் நான் காக்கா என்று யாரையும் குறிப்பிடவில்லை, நீங்களாக சமூக வலைதளங்களில் எதையும் கிளப்பி விடாதீர்கள் என்ற கோரிக்கையையும் வைத்தார்.
இமயமலைக்கு யாத்திரை
ரஜினிகாந்த் பல ஆண்டுகாலமாக திரைப்பட வெளியீட்டுக்கு முன்பு இமய மலைக்கு ஆன்மீக யாத்திரை செல்வது வழக்கம். ஆனால், கடந்த நான்கு ஆண்டு காலமாக கொரானா தொற்று காரணமாகவும், அவரது உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தால் மருத்துவரின் அறிவுரைப்படி இமையமலை செல்வதை தவிர்த்திருந்தார்.
”சிறுத்தை” சிவாவின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த “அண்ணாத்த” திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு, அதாவது 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குறுகிய கால ஆன்மீக பயணமாக இமையமலை சென்றார்.
”ஜெயிலர்” திரைப்படம் வெளியாவதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் இமயமலைக்குச் சென்றுவிட்டார்.
விமானநிலையத்தில் செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, பல கேள்விகளைக் கேட்டபோது, அவர் விரிவாக எதற்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்