You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆண்களை 'அந்த கோலத்தில்' புகைப்படம் எடுப்பது ஏன்? பெண் கலைஞர் தரும் புது விளக்கம்
- எழுதியவர், எலனர் வொய்சார்ட், அன்னா ப்ரெஸ்ஸானின்
- பதவி, பிபிசி ரீல்
ஒரு சிறிய அறையில் ஆறு ஆண்கள் படுத்திருக்கின்றனர்.
ஒருவர் அவர்கள்மீது ரோஜா இதழ்களைத் தூவுகிறார்.
ஒரு பெண் காமிரா மூலம் இந்தக் காட்சியைப் பார்த்து, நிர்வாணமாகப் படுத்திருக்கும் ஆண்களின் ‘போஸ்’களில் சில மாற்றங்களைச் செய்யச் சொல்கிறார்.
ஒரு மென்மையான, இணக்கமான ‘ஈரோடிக்’ (erotic) ஃபோட்டோ ஷூட் நடந்துகொண்டிருக்கிறது.
ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம்.
ஆண்கள் நிர்வாணமாக இருக்கின்றனர். ஆடைகளணிந்த பெண் ஒருவர் அவர்களைப் புகைப்படமெடுக்கிறார்.
இந்தப் புகைப்படக் கலைஞரின் பெயர் யூஷி லீ. இவர் சீனாவில் பிறந்தவர். இப்போது லண்டனில் வசிக்கிறார்.
இவர், புகைப்படக் கலையிலும், ‘ஈரோடிக்’ எனப்படும் பாலியல் ஈர்ப்பு சார்ந்த கலையிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புவதாகச் சொல்கிறார்.
‘ஆண் உடலே பாலியல் ஈர்ப்பின் மையம்’
யூஷி லீ, தனது கலைப்படைப்புகள் பாலினம், பாலியல் ஈர்ப்பு, மற்றும் பாலியல் வேட்கை ஆகியவற்றைப் பற்றிப் பேசுவதாகச் சொல்கிறார்.
தனது புகைப்படங்கள் ஆண்களின் உடலை பாலியல் ஈர்ப்பின் மையமாகப் பாவிக்கின்றன என்கிறார் லீ.
“பலகாலமாக சமூகம் ‘பெண்கள் அழகாக இருக்க வேண்டும்’ என்றே சொல்லி வந்திருக்கிறது. அதனால் நாம் இன்றளவும் பெண்களின் உடல்தான் அழகானது என்று சிந்திக்கிறோம். ஆண் உடலைவிட பெண் உடலையே அதிகம் ரசிக்கிறோம்," என்கிறார் லீ.
“ஆனால் விலங்குகளைப் பார்த்தோமெனில், ஆண் விலங்குகளே அழகானவையாக உள்ளன. சிங்கங்கள், மயில்கள் போல," என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், “பாலியல் உணர்வு சார்ந்த ‘ஈரோடிக்’ கலைகளில் ஆண் உடல்கள் மிகக் குறைவாகவே பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது. சமநிலை இல்லாத இந்த நிலையை நான் உணர்ந்தேன். ஆண்களின் நிர்வாண உடல் இன்னும் விலக்கப்பட்டதாகவே இருக்கிறது.”
‘ஆண்கள் கவர்ச்சிகரமாக இருப்பது பற்றிச் சிந்திப்பதில்லை’
பல நூற்றாண்டுகளாக ஆண் ஓவியர்களும் ஆண் புகைப்படக் கலைஞர்களும் பெண்களை நிர்வாணமாக வரைந்தும் புகைப்படமெடுத்தும் வந்துள்ளனர் என்று கூறும் லீ, அந்தப் போக்கை தான் மாற்ற விழைவதாகக் கூறுகிறார்.
“இப்போது நான் தான் காமிராவை இயக்குபவள். நான் என்ன விரும்புகிறேனோ அதை வெளிப்படுத்துகிறேன்,” என்கிறார் லீ.
டிண்டர் போன்ற டேட்டிங் செயலியில் சில ஆண்கள் தங்கள் அரை நிர்வாண செல்ஃபிகளைப் பதிவேற்றம் செய்வது வழக்கம். ஆனால் அவை தன்னை ஈர்க்கவில்லை என்கிறார் லீ. “ஆண்கள் எப்போதும் எப்படி கவர்ச்சிகரமாக இருப்பது என்பதைப்பற்றிச் சிந்திப்பதில்லை போலும்,” என்கிறார் அவர்.
இப்போதும், தன்னுடன் பணியாற்றும் ஆண் மாடல்களுக்குப், பாலியல் இச்சை தோன்றும் வகையில் எப்படிப் போஸ் செய்வது என்று தெரிவதில்லை என்கிறார் லீ. “ஆண்கள் தங்களைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. அவர்கள் தங்களைக் எப்படிக் கவர்ச்சிகரமானவர்களாக வைத்திருப்பது என்று சிந்திப்பதில்லை,” என்கிறார்.
‘எனக்கான அதிகாரத்தை நானே எடுத்துக்கொள்கிறேன்’
தாம் எடுக்கும் புகைப்படங்களில், ஆண்களை இயற்கையாக, மென்மையானவர்களாகக் காட்ட விரும்புவதாகக் கூறுகிறார் லீ.
“எனது புகைப்படங்கள் எனது இச்சைகளுக்குக் காட்சி வடிவம் கொடுக்க ஒரு வழிமுறை,” என்கிறார் அவர்.
ஆனால், இது பாலியல் சார்ந்த இச்சை மட்டுமல்ல என்கிறார் அவர். “இது அதிகாரத்திற்கான வேட்கையும் கூட. நான் அதிகாரம் செலுத்துபவளாக இருக்க விரும்புகிறேன்,” என்கிறார் அவர்.
சில புகைப்படங்களில் யூஷி லீ தன்னையும் இணைத்துக்கொள்கிறார். இது ஒரு புகைப்படத்துக்கும் அதைப் பார்ப்பவர்களுக்கும் உள்ள உறவை மேலும் சிக்கலாக்கும் முயற்சி என்கிறார்.
இது தனது இன அடையாளத்தைப் பற்றிய சமூகக் கட்டமைப்புகளுக்கு தனது எதிர்வினை என்றும் சொல்கிறார் அவர். “நான் சீனாவில் இருந்து வருகிறேன். பொதுவாக மேற்குலகில், ஆசியப் பெண்கள் சிறிய, சாதுவான, ஆனால் கவர்ச்சியானவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்,” என்கிறார் அவர்.
நிர்வாண ஆண் மாடல்கள் என்ன சொல்கிறார்கள்?
பெண்கள் ஆண்களிடம் அவர்களது படத்தை அனுப்பச் சொல்லும் பொது என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது ஆண்களுக்குத் தெரிவதில்லை, என்கிறார் நிர்வாண மாடலான அலாஸ்டர் கிரஹாம்.
“ஒரு பெண் ஆண்களிடம் அவனது புகைப்படம் அனுப்பச்சொல்லிக் கேட்டால், உடனே ஆண்கள் தங்கள் ஆணுறுப்பின் படத்தையே அனுப்புகிறார்கள். எனது கை, கால்களின் படத்தை அனுப்பி என்ன ஆகப்போகிறது?” என்று கேட்கின்றனர்.
மற்றொரு நிர்வாண மாடலான எம்மனுவல் அடெனேயே, தன்னுடைய வெளிப்புறத் தோற்றத்தை தன்னுடைய அழகு என்று எப்பொதும் நினைத்ததில்லை என்கிறார். “நான் எப்போதும் தோற்றத்தைவிடச் செயல்பாடுகளே முக்கியம் எனும் கொள்கை உடையவன்,” என்கிறார்.
“நான் ஒரு காரின் தோற்றமாக இருப்பதைவிடவும் அதன் எஞ்சினாக இருக்கவே விரும்பிகிறேன். ஆண்களின் உடலை ரசனைக்கான கருவியாக அல்லாமல் பயன்பட்டுக்கான கருவியாகவெ பார்த்திருக்கிறேன்,” என்கிறார் அடெனேயே.
தொடர்ந்து பாலியல் இச்சைக்கான பொருளாகவே பார்க்கப்படாமல் இருப்பது ஆண்களை தைரியமானவர்களாக மாற்றுகிறது என்கிறார் கிரஹாம். “ஆனால் ஆண்கள் அப்படிப்பட்ட கவனத்தையும் ஈர்க்க வேண்டும்,” என்கிறார் அவர்.
நீங்கள், உங்கள் உடலைக் குறித்த விழிப்புணர்வோடு இருந்தால், நீங்கள் உங்கள் உடலைக் காதலித்தால், நீங்கள் அழகானவராக உணர்ந்தால், அதை இந்த உலகத்தோடும் பகிர்ந்து கொள்வீர்கள், நீங்கள் ஒரு உணர்வுமிக்க நபராக மாறுவீர்கள் என்கிறார் கிரஹாம்.
ஆண்கள் போகப் பொருள் ஆக்கப்படுகிறார்களா?
யூஷி லீ எடுக்கும் புகைப்படங்கள் ராப் (Rap) இசை வீடியோக்களுக்கு நேர் எதிரானவை என்கிறனர் அவரது ஆண் நிர்வாண மாடல்கள்.
ராப் இசை வீடியோக்களில், ஒரு ஆண் பாடகரைச் சுற்றியும் அரை நிர்வாணப் பெண்கள் நடனமாடுவர். “இங்கு நாம் மறுபக்கத்தில் இருக்கிறோம்,” என்கிறார் அடெனேயே.
அனால் லீயின் படங்கள் ஆண்களை போகப் பொருட்களாகச் சித்தரிக்கின்றனவா எனற கேள்வியும் எழுகிறது.
இதற்கு அவரது ஆண் மாடல்கள், இது தங்கள் சம்மதத்துடனே நடக்கிறது என்கின்றனர். மேலும், லீ தங்களை மிகவும் மரியாதையாக நடத்துவதாகவும் கூறுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்