கனடா: 1984 சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை குறித்து தீர்மானம் நிறைவேற்ற திட்டம் - இதன் விளைவுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், குர்ஜோத் சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
கடந்த 1984ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சி (NDP) வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்த நிகழ்வை ஓர் “இனப்படுகொலை” என அங்கீகரிப்பதற்காக ஒரு தீர்மானத்தைத் தங்கள் கட்சி அறிமுகப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான ராஜ்ஜீய உறவுகளில் கடும் பதற்றம் நிலவி வரும் சூழலில் புதிய ஜனநாயகக் கட்சி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அக்கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட ஓர் அறிக்கையில், “கனடா மண்ணில் சீக்கியர்களுக்கு எதிராக இந்திய அரசின் வன்முறை நடவடிக்கைகள், 1984ஆம் ஆண்டு சீக்கிய இனப்படுகொலையின்போது கொல்லப்பட்டவர்களின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளன,” என்று தெரிவித்திருந்தார்.
- இந்தியா-கனடா உறவு மோசமடைந்தது எப்படி? ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் என்ன?
- நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடா குற்றம்சாட்டும் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவின் முழு பின்னணி
- கனடா: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது - யார் அவர்கள்?
- இந்தியா - கனடா உறவில் விரிசல் சரியாகுமா? ட்ரூடோ அறிக்கையின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதா?

ஆனாலும், கனடா மண்ணில் வன்முறை செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், ‘அடிப்படையற்றது’ என்று இந்திய அரசு பலமுறை விவரித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு, கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் சட்டமன்றத்தில், 1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை ஓர் 'இனப்படுகொலை' என்று அங்கீகாரம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை இந்திய அரசு நிராகரித்து, கனடா அரசுக்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.
ஏற்கெனவே, புதிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் கனடாவில் நடந்த 'சீக்கிய இனப்படுகொலையை' அங்கீகரிப்பது குறித்துப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியுள்ளார்.
ஆனால், தற்போது இந்தியா – கனடா உறவுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில் அவரது நடவடிக்கையின் தாக்கம் என்னவாக இருக்கும்?
இதுகுறித்து, கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் (ஒகானகன்) அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியராக இருக்கும் ஆடம் ஜோன்ஸிடம் பேசினோம். அவர் 'இனப்படுகொலை' என்ற தலைப்பில் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.
கனடாவில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images
நாடாளுமன்றக் கீழவையில் ‘இனப்படுகொலைக்கான’ தீர்மானம் நிறைவேற்றுவது என்பது ஒரு ‘சிறிய படியே’ என்று ஆடம் ஜோன்ஸ் விளக்கினார்.
"இதற்கு உதாரணமாக, 19ஆம் நூற்றாண்டில் கனடாவின் பூர்வகுடிகளின் இனப்படுகொலையுடன், அவர்களின் குழந்தைகளைத் தங்கள் மரபு, மொழி, அடையாளம் ஆகியவற்றில் இருந்து துண்டிக்கப் பயன்படுத்தப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு இருந்த தொடர்பை நாடாளுமன்றம் ஒருமனதாக அங்கீகரித்ததைக் கூறலாம்."
“இதற்கு முன்பு நடந்த இனப்படுகொலைகளை அங்கீகரிப்பது என்பது தற்போது நடக்கும் அல்லது வருங்காலத்தில் நடைபெற இருக்கும் இனப்படுகொலைகளைத் தடுக்கும் ஒரு முயற்சி என்று பொருளல்ல,” என்று அவர் கூறினார்.
சட்டரீதியாக இதுகுறித்து அவர் கூறுகையில், “இதை இனப்படுகொலை என அங்கீகரிக்க மறுப்பவர்களுக்கு எதிராக கனடாவில் எந்தச் சட்டமும் இல்லை. ஆனால் இனப்படுகொலை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டால், அதன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்,” என்று விளக்கினார்.
“அந்தச் சமயத்தில், இந்த நிலைமை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இந்தத் தீர்மானத்தின் நோக்கமாக இருக்கலாம்,” என்று அவர் கூறுகிறார்.
ஜக்மீத் சிங்கின் தரப்பை அறிய பிபிசி அவருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது, ஆனால் அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
'இனப்படுகொலை' குறித்த சர்வதேச விளக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
கடந்த 1984ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை 'இனப்படுகொலை' எனக் குறிப்பிட முடியுமா என்ற கேள்விக்கு, ‘இனப்படுகொலை' குறித்து சர்வதேச விளக்கத்தில் உள்ள அம்சங்கள் பற்றி ஆடம் ஜோன்ஸ் தெரிவித்தார்.
“இப்படியான சூழலில், ‘இனப்படுகொலை’ என்ற சொல்லைப் பயன்படுத்திக் கேள்வி எழுப்புபவர்கள். இந்த வன்முறைச் செயல்கள் அரசின் நேரடி உத்தரவின் பெயரில் நடைபெறவிவல்லை அல்லது இனப்படுகொலை என்ற வரையறையின் அளவுக்கு, அதிகமான எண்ணிக்கையில் இறப்புகள் ஏற்படவில்லை என்று வாதிடுகின்றனர்."
ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டைப் பொறுத்தவரை ஒரு குழு முழுவதையும் முற்றிலுமாக ஒழிப்பதோ அல்லது அதிக எண்ணிக்கையான மக்களை அழிப்பதோ ‘இனப்படுகொலை’ என்பதற்கான பொருளல்ல என்று அவர் விளக்கினார்.
“அக்குழுவைச் சேர்ந்தவர்கள் தங்களது தேசிய, இன அல்லது மத அடிப்பையில் குறிவைக்கப்பட்டனர் என்பதை விளக்குவதே மிகவும் முக்கியம்,” என்கிறார் ஆடம் ஜோன்ஸ்.
இது கனடாவிலும் இந்தியாவிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

பட மூலாதாரம், Getty Images
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக ஆடம், "1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை ஓர் 'இனப்படுகொலை' என்று கனடா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருந்தால், இந்திய அரசு இதைத் தனக்கு எதிரான ஒரு 'ஆத்திரமூட்டும்' நடவடிக்கையாகப் பார்க்கும்" என்று கூறுகிறார்.
"கனடாவில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் இந்திய ஏஜென்டுகள் ஈடுபட்டதாக கனடா ஏற்கெனவே குற்றம் சாட்டி வந்தது. புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஒரு சீக்கியர். எனவே அவரது கட்சியின் இந்த நடவடிக்கையானது காலிஸ்தானின் சீக்கியர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக கனடிய அரசாங்கத்தைப் பயன்படுத்துவதைப் போன்றது,” என்று ஆடம் தெரிவித்தார்.
மேலும் அவர், “கனடா மக்கள் இத்தகைய நடவடிக்கையை எந்தக் கண்ணோட்டத்தில் அணுகுவார்கள் என்று கணிப்பது கடினம்,” என்றார்.
"கனடாவில் சீக்கியர்களுக்கு அனுதாபம் இருப்பதாக நான் கருதுகிறேன். ஆனால் 1984 நிகழ்வைப் பற்றி சீக்கியர்களைத் தவிர, மற்ற கனடா மக்களுக்குக் குறைவாகவே தெரியும்.”
“சிலர் இந்த அங்கீகாரம் வழங்கப்படுவதை சீக்கியர்களை திருப்திப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கலாம்," என்று அவர் கூறுகிறார்.
ஒன்டாரியோவில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானம்

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2017ஆம் ஆண்டில் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் சட்டப் பேரவையில், முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை ஓர் 'இனப்படுகொலை' என்று அங்கீகரிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் ஒரு தனிநபர் மசோதாவாக அறிமுகம் செய்யப்பட்டது.
ஜக்மீத் சிங் இந்தத் தீர்மானத்தை 2016ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் முன்மொழிந்தார். ஆனால் அப்போது அதை நிறைவேற்ற முடியவில்லை என்று சிபிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிபிசியின் முர்ரே ப்ரூஸ்டரின் ஒரு செய்திக் கட்டுரையில், “ஒன்டாரியோவில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அதைத் தொடர்ந்து இந்தியா- கனடா இரு நாடுகளின் பிரதிநிதிகளின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
“ஒன்டாரியோவில் மட்டுமே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண சட்டப் பேரவையிலும் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்று சிபிசியின் செய்திக்கட்டுரை தெரிவிக்கின்றது.
“இந்த ஆண்டு அக்டோபரில், அமெரிக்க காங்கிரஸின் நான்கு உறுப்பினர்கள் 1984 சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை 'சீக்கிய இனப்படுகொலை 1984' என அங்கீகரிக்கும் தீர்மானத்தை அறிமுகப்படுத்தினர். இது அமெரிக்காவின் பல்வேறு அமைப்புகளின் ஆதரவையும் பெற்றது,” என்று பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா – கனடா இடையிலான பதற்றம்

பட மூலாதாரம், FB/VIRSA SINGH VALTOHA
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம், சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
“இந்தக் கொலையில் இந்திய ஏஜென்டுகளின் ஈடுபாடு இருந்தது” என்று 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பேசுகையில் குற்றம் சட்டியிருந்தார்.
இந்த ஆண்டு அக்டோபரில், இந்த வழக்கில் இந்திய தூதரக அதிகாரியான சஞ்சய் குமார் வர்மாவை 'விசாரிக்கப்பட வேண்டிய நபர்' என்று கனடா அறிவித்தது, இதன் பிறகு இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தது.
அதைத் தொடர்ந்து, கனடா நாட்டின் காவல்துறை மற்றும் ஜஸ்டின் ட்ரூடோ, 'சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் இந்திய ஏஜென்டுகள் ஈடுபட்டதற்கான நம்பகமான ஆதாரங்கள்' தங்களிடம் இருப்பதாகக் கூறினர்.
அதே நேரத்தில், கனடா அரசு எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என்று இந்தியா மறுத்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












