'மெத்தையை தூக்கியதும் வெளியே வந்த லட்சக்கணக்கான மூட்டைப்பூச்சிகள்' - இந்த வீட்டில் கட்டில், மெத்தையை எரிக்கும் நிலை ஏன் ஏற்பட்டது?

சுத்தமான வீடுகளிலும் அழுக்கான வீடுகளிலும் மூட்டைப்பூச்சிகள் இருக்கலாம்.
படக்குறிப்பு, சுத்தமான வீடுகளிலும் அழுக்கான வீடுகளிலும் மூட்டைப்பூச்சிகள் இருக்கலாம்.
    • எழுதியவர், பால் பிகோட்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

''மெத்தையில் இருந்து லட்சக்கணக்கான மூட்டைப்பூச்சிகள் வெளியே ஊர்ந்து வந்தன'' - தனது 38 ஆண்டு அனுபவத்தில் இதுபோன்ற மிக மோசமான பாதிப்பைத் தான் பார்த்ததில்லை என்று பூச்சிக் கட்டுப்பாட்டு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுவர்களிலும் வால்பேப்பருக்குக் கீழேயும் மூட்டைப்பூச்சிகள் காணப்பட்டன. இதனால், பாதிக்கப்பட்ட மெத்தையையும் கட்டில்களையும் எரித்துச் சாம்பலாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பிரிட்டனின் வேல்ஸில் உள்ள கார்டிஃப் நகரின் கேன்டன் பகுதியில் ஏற்பட்ட இந்தப் பாதிப்பைக் கட்டுப்படுத்த, பூச்சிக் கட்டுப்பாட்டு நிபுணர் கேரத் டேவிஸ் முழு உடல் பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டியிருந்தது. அவரது குழுவினர் சிறப்பு வேக்கம் கிளீனர் கருவியைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான மூட்டைப்பூச்சிகளைச் சேகரித்தனர்.

கடந்த மாதம் இதே குழுவினர் பெருமளவில் கரப்பான் பூச்சிகள் பரவிய ஒரு வீட்டை சுத்தம் செய்தனர். அந்தக் காட்சியை ஒரு திகில் திரைப்படத்துக்கு ஒப்பிட்டிருந்தார் டேவிஸ்.

"அந்த வீடு மிகவும் மோசமான நிலையில் இருந்தது," என்று அவர் பிபிசி ரேடியோ வேல்ஸ் பிரேக்ஃபாஸ்ட் நிகழ்ச்சியிடம் தெரிவித்தார்.

"மெத்தையை தூக்கியபோது, லட்சக்கணக்கான மூட்டைப்பூச்சிகள் இருந்தன. வால்பேப்பருக்குக் கீழிருந்து கூட அவை வெளியே வந்தன. அந்தக் காட்சி மிகவும் கொடூரமாக இருந்தது," என்றார் அவர்.

தேசிய சுகாதாரச் சேவையின் தகவலின்படி, உடைகள், பயணப் பைகள் அல்லது பயன்படுத்திய மரச்சாமான்கள் வழியாக மூட்டைப்பூச்சிகள் வீடுகளுக்குள் வரக்கூடும். அவை மெத்தைகளிலும் சுவர்களிலும் மறைந்திருக்கலாம்.

வீட்டில் மூட்டைப்பூச்சிகள் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?

மூட்டைப்பூச்சிகள் கடித்த தடயங்கள்தான் அவை இருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும். பொதுவாக, இந்தக் கடித்த தடயங்கள் தோலில் சற்று வீங்கியபடி, அரிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். அவை ஒரே வரிசையிலோ அல்லது ஒன்றுக்கொன்று நெருக்கமாகவோ காணப்படலாம்.

படுக்கை விரிப்புகளில் ரத்தக் கற்கள் இருப்பதையும் கவனிக்க வேண்டும். மூட்டைப்பூச்சிகள் நசுங்கும்போது இத்தகைய கற்கள் ஏற்படலாம். படுக்கை விரிப்புகள் அல்லது மரச்சாமான்களில் சிறிய பழுப்பு நிறப் புள்ளிகள் தென்பட்டாலும் கவனிக்க வேண்டும். அவை மூட்டைப்பூச்சிகளின் கழிவுகளாக இருக்கலாம்.

"மூட்டைப்பூச்சிகள் உங்களை கடிக்கும். படுக்கை விரிப்புகளில் ரத்தக் கற்களையும் நீங்கள் பார்க்கலாம்," என்று டேவிஸ் தெரிவித்தார்.

"அவற்றைக் கண்டவுடன் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் அவர்.

தனது 38 ஆண்டு அனுபவத்தில் இதுபோன்ற பாதிப்பைத் தான் பார்த்ததில்லை என்கிறார் பூச்சிக் கட்டுப்பாட்டு நிபுணர்.
படக்குறிப்பு, தனது 38 ஆண்டு அனுபவத்தில் இதுபோன்ற பாதிப்பைத் தான் பார்த்ததில்லை என்கிறார் பூச்சிக் கட்டுப்பாட்டு நிபுணர்.

மூட்டைப்பூச்சிகளை ஒழிப்பது எப்படி?

மூட்டைப்பூச்சிகளை ஒழிப்பது கடினமாக இருக்கலாம். இருப்பினும், அவற்றைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

  • மூட்டைப்பூச்சிகள் உள்ள படுக்கை விரிப்புகள் மற்றும் உடைகளைச் சூடான நீரில் துவைத்து, பின்னர் அதிக வெப்பநிலையில் குறைந்தது 30 நிமிடங்கள் உலர்த்த வேண்டும்.
  • உடைகள் அல்லது படுக்கை விரிப்புகளைப் பிளாஸ்டிக் பையில் அடைத்து, மூன்று முதல் நான்கு நாட்கள் ஃப்ரீசரில் வைக்கலாம்.
  • சுத்தமான வீடுகளிலும் அழுக்கான இடங்களிலும் மூட்டைப்பூச்சிகள் இருக்கலாம். இருப்பினும், வீட்டைத் தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம் அவற்றை முன்கூட்டியே கண்டறிய முடியும்.

சமீபத்தில் மூட்டைப்பூச்சிகள் பெருமளவில் பரவிய வீட்டில், தனது குழுவினர் முதலில் சிறப்புப் பயன்பாட்டுக்கான வேக்கம் கிளீனர் கருவிகளைப் பயன்படுத்தியதாக டேவிஸ் தெரிவித்தார்.

"முடிந்தவரை அதிகமான மூட்டைப்பூச்சிகளை அகற்றுவதற்காக முதலில் சிறப்பு வேக்கம் கிளீனர் கருவிகளைப் பயன்படுத்தினோம்," என்றார் அவர்.

"அதன்பிறகு, பிரத்யேகப் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தினோம். மெத்தை மற்றும் கட்டில் சட்டங்களை பைகளில் அடைத்து, அவற்றை எரித்துச் சாம்பலாக்கினோம்," என்றும் அவர் கூறினார்.

"அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது," என்றார் டேவிஸ்.

மூட்டைப்பூச்சிகள் எதனால் வருகின்றன?

பயணப் பைகள், உடைகள் அல்லது பயன்படுத்திய மரச்சாமான்கள் ஆகியவற்றுடன் ஒட்டிக்கொண்டு மூட்டைப்பூச்சிகள் வீடுகளுக்குள் வருவது பொதுவானது.

வீட்டுக்குள் வந்த பிறகு, நீங்கள் தூங்கும் இடங்களுக்கு அருகில் அவை மறைந்துகொள்கின்றன. குறிப்பாக, மெத்தைகள், கட்டில் சட்டங்கள், மரச்சாமான்கள் மற்றும் சுவர்களில் உள்ள சிறிய விரிசல்கள், இடுக்குகள் ஆகியவற்றில் அவை ஒளிந்திருக்கலாம்.

மோசமான சுகாதாரமே மூட்டைப்பூச்சிகள் பரவுவதற்குக் காரணம் என்று கருதுவது தவறு. தேசிய சுகாதாரச் சேவையின் தகவலின்படி, சுத்தமான வீடுகளிலும் அழுக்கான வீடுகளிலும் மூட்டைப்பூச்சிகள் காணப்படலாம்.

இருப்பினும், வீட்டைத் தொடர்ந்து சுத்தம் செய்வதன் மூலம் அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும் என்றும் தேசிய சுகாதாரச் சேவை அறிவுறுத்துகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு