டெல்லி சிஜேபி போராட்டம் முதல் காவல்துறை நடவடிக்கைகள் வரை - இதுவரை நடந்தது என்ன?

பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
சனிக்கிழமை டெல்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இந்தப் போராட்டத்தின்போது பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழ்நிலையில், இன்று (அக்டோபர் 11) காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், "சனிக்கிழமை டெல்லியில் நடந்த போராட்டங்களுக்கு முன்னரும், அவை நடந்தபோதும், போராட்டக்காரர்கள், போராட்டத் தலைவர்கள், பொது மக்கள், சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து கவலை கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளதுடன், அமைதியான முறையில் ஒன்றுகூடிப் போராடுவதற்கான உரிமை முழுமையாக மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுவதையும் அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
சனிக்கிழமை என்ன நடந்தது?
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனக் கோரி, சிஜேபி மற்றும் பல இடதுசாரி அமைப்புகள் சார்பில் அக்டோபர் 10 அன்று டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றன. நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், சில இடங்களில் மோதல்களும் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகின.
கன்னாட் பிளேஸ் என்ற பகுதியில் சிஜேபி ஆதரவாளர்களுக்கும் சிஜேபி எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எதிர்ப்பாளர்கள் கடுமையான வார்த்தைகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் முழக்கங்களைப் பயன்படுத்தியதாக சிஜேபி போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியதுடன் காவல்துறை இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பல சிஜேபி தொண்டர்களை காவல்துறை காவலில் எடுத்தது.
இதற்கிடையில், ஏ.ஐ.எஸ்.எஃப் தேசியத் தலைவர் நேஹா போரா உள்ளிட்ட பலர் சஃப்தர்ஜங் மேம்பாலம் அருகே காவலில் எடுக்கப்பட்டனர். நேஹா உள்ளிட்டோரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இடதுசாரி அமைப்புகள் குற்றம்சாட்டின. காவலில் இருந்தபோதும் போராட்டத்தைத் தொடருமாறு நேஹா போரா தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்ட மூவர் டெல்லி வந்தபோது விமானத்தில் வைத்தே போலீஸ் காவலில் எடுக்கப்பட்டதாகவும், அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது. திப்கேவின் பாட்டி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் வீட்டிற்குச் செல்ல உதவ முன்வந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.

சிஜேபி போராட்டக்காரர்கள் பலருடனும் பிபிசி செய்தியாளர் ராகவேந்திர ராவ் பேசினார். அவர்களில் ஒருவர், "ஞானேஷ் குமார் பதவியில் இருந்து நீக்கப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும்" என்று கூறினார்.
மற்றொரு வயதான பெண், "இன்று நடந்ததைப் போன்ற ஒன்றை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை. குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் துன்புறுத்தப்படுகிறார்கள். எங்கள் வாழ்க்கையுடன் விளையாடுவோருக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக நாங்கள் ஒடுக்கப்படுகிறோம்" என்றார்.
மற்றொரு பெண் போராட்டக்காரர், "எங்கள் தலைவர்களை அனைவரையும் காவலில் எடுத்தாலும் அதனால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. காக்ரோச் ஜனதா கட்சியின் ஒவ்வோர் உறுப்பினரும் தன்னிச்சையாக ஒரு தலைவர்தான். எங்களுடைய பொறுப்பு என்ன என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்; உறுதியாக நிற்போம்" என்றார்.
இதற்கிடையில், சனிக்கிழமை டெல்லி வந்தபோது விமானத்திலேயே காவலில் எடுக்கப்பட்ட சிஜேபி-யின் மூன்று தலைவர்களான அபிஜித் திப்கே, ஆஷுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகியோரின் பாதுகாப்பு குறித்து சிஜேபி கவலை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ், ஆஷுதோஷ் ரங்கா ஆகியோர் சனிக்கிழமை ல்லி வந்தபோது விமானத்திலேயே காவலில் எடுக்கப்பட்டனர். போராட்டம் தொடங்குவதற்கு முன்பே திப்கே காவலில் எடுக்கப்பட்டது இதுவே முதல்முறை. அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா, கோபால் ராய், யூடியூபர் துருவ் ராத்தி உள்ளிட்டோரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
ஜந்தர் மந்தரில் நடைபெறவிருந்த போராட்டத்தைத் தடுக்க 25,000 காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக பிடிஐ தெரிவித்தது. 45 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதுடன், ஜந்தர் மந்தரைச் சுற்றிய பகுதிகளில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன. தில்லி நோக்கி வந்த 245 ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
சிஜேபி, இடதுசாரி மாணவர் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. எஸ்.ஐ.ஆர் நடைமுறையால் 13 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக அவை குற்றம்சாட்டுகின்றன.

பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
ஞாயிற்றுக் கிழமை உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணை
டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு மீறப்பட்டதாகக் கூறி, உள்துறைச் செயலாளர், டெல்லி காவல் ஆணையர் மற்றும் டிஎம்ஆர்சி தலைவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அமர்வில் விசாரிக்கவுள்ளது.
பாதுகாப்புக்காக 120க்கும் மேற்பட்ட காவல் மற்றும் துணை ராணுவப் பிரிவுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, புது டெல்லி 20 கண்காணிப்பு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அக்டோபர் 10 போராட்டத்திற்கான அனுமதி விண்ணப்பம் மூன்று நாட்களுக்கு முன்பே அளிக்கப்பட்டதாகவும், விதிப்படி 10 நாட்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



























