இன்ஃபோசிஸ், டாடா, விப்ரோ, ஹெச்சிஎல் உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், காலி ஹேஸ்
- பதவி, தொழில்நுட்பச் செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
வெளிநாடுகளைச் சேர்ந்த திறன் வாய்ந்த பணியாளர்களை, விசா திட்டத்தின் மூலம் நிரந்தரமாகப் பணியமர்த்துவதற்கு மைக்ரோசாஃப்ட் மற்றும் இன்ஃபோசிஸ், டாடா, விப்ரோ போன்ற இந்திய நிறுவனங்கள் உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது.
வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான H-1B விசா திட்டத்தையும், அவர்களை அமெரிக்காவில் நிரந்தரக் குடியிருப்பாளர்களாக மாற்றுவதற்கான தொடர்புடைய நடைமுறையையும் பயன்படுத்தி மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுவதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
அமெரிக்காவின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட், அமெரிக்கப் பணியாளர்களுக்குப் பதிலாக வெளிநாட்டுப் பணியாளர்களை அடிமைகளைப் போலப் பணியமர்த்தி வருவதாக வான்ஸ் குற்றஞ்சாட்டினார்.
கடந்த நிதியாண்டில் மைக்ரோசாஃப்ட் விண்ணப்பித்த H-1B விசாக்களில் பெரும்பாலானவை ஏற்கெனவே அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கானவை என்றும், அவர்களுக்கு அமெரிக்கப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அதே அளவிலான ஊதியமே வழங்கப்படுவதாகவும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
"இந்த நடைமுறையை மைக்ரோசாஃப்ட்டைப் போல வேறு எந்த அமெரிக்க நிறுவனமும் தவறாகப் பயன்படுத்தவில்லை" என்று வான்ஸ் கூறினார்.
அடோப், காக்னிசன்ட், இன்ஃபோசிஸ், டாடா, விப்ரோ, ஹெச்சிஎல் மற்றும் கேப்ஜெமினி ஆகிய நிறுவனங்கள் மீதும் அவர் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட இந்த எட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் புதிய அல்லது நிலுவையில் உள்ள நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் திட்ட (பெர்ம்) விண்ணப்பங்களை அமெரிக்க அரசு இனி பரிசீலிக்காது என்று தொழிலாளர் துறைச் செயலர் கீத் சோண்டர்லிங் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான விசாக்களைப் பெருமளவில் வழங்கும் மையங்களாக மாறிவிட்டதாகவும், வெளிநாட்டுப் பணியாளர்கள் அமெரிக்காவுக்குள் அதிக அளவில் வருவதற்கு அவை வழிவகுப்பதாகவும் சோண்டர்லிங் குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவிக்குமாறு பிபிசி அனைத்து நிறுவனங்களையும் தொடர்புகொண்டுள்ளது.
பெர்ம் நடைமுறைக்குச் செல்வதற்கு முன்பாகப் பெறப்படும் H-1B விசாக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 85,000 என வரையறுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றும் மைக்ரோசாஃப்ட் ஊழியர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கர்கள் என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார். உலகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களை மைக்ரோசாஃப்ட் கொண்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் சுமார் 6,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த அதே காலகட்டத்தில், 6,800 H-1B விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பித்ததாக வான்ஸ் வியாழக்கிழமை கூறினார். அமெரிக்கப் பணியாளர்களுக்குப் பதிலாக வெளிநாட்டுப் பணியாளர்களைப் பயன்படுத்துவதற்கும், அமெரிக்கர்களின் ஊதியத்தைக் குறைப்பதற்கும் நிறுவனம் முயல்வதற்கான ஆதாரம் இது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஆனால், கடந்த நிதியாண்டில் மைக்ரோசாஃப்ட் சமர்ப்பித்த H-1B விசா விண்ணப்பங்களில் 80 சதவீதம், புதிதாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கானவை அல்ல; ஏற்கெனவே நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கானவை என்று அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
H-1B விசா திட்டத்தின் கீழ் மைக்ரோசாஃப்ட் பணியமர்த்தும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும், அதே பணியைச் செய்யும் அமெரிக்கப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அளவிலான ஊதியமே வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
வெளிநாடுகளைச் சேர்ந்த திறன் வாய்ந்த பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கான நடைமுறைகளில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவும் எல்லிஸ் நிறுவனத்தின் தகவலின்படி, மைக்ரோசாஃப்ட்டில் H-1B விசா மூலம் பணியாற்றும் ஊழியர்களின் சராசரி ஊதியம் ஆண்டுக்கு 1,55,000 அமெரிக்க டாலர்கள்.
"அமெரிக்க அரசுக்கு கூடுதல் தகவல்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று மைக்ரோசாஃப்ட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நீண்டகாலத் தலைமைச் செயல் அதிகாரியான சத்யா நாதெள்ளா, தொழில்நுட்பப் புத்தாக்கத்துக்கான புதிய விருதைப் பெறுவதற்காக வியாழக்கிழமை வெள்ளை மாளிகைக்குச் சென்றிருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவருக்கு அந்த விருதை வழங்கினார்.

பட மூலாதாரம், Kent NISHIMURA / AFP via Getty Images
நிகழ்ச்சியில் சத்யா நாதெள்ளாவை அறிமுகப்படுத்திப் பேசிய டிரம்ப், அவருக்கு இந்தப் பதக்கத்தை வழங்குவதில் வெள்ளை மாளிகை பெருமை கொள்வதாகவும், இந்த விருதுக்கு அவர் மிகவும் தகுதியானவர் என்றும் கூறினார்.
டிரம்பிடமிருந்து இதேபோன்ற பதக்கங்களைப் பெற்ற தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மற்றவர்களில் ஈலோன் மஸ்க், ஜென்சன் ஹுவாங், லிசா சு, செர்கே பிரின் மற்றும் மைக்கேல் டெல் ஆகியோரும் அடங்குவர்.
நாதெள்ளாவும் மற்ற விருது பெற்றவர்களில் பெரும்பாலானோரும் அண்மையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான மதிய விருந்து, சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்காக நடத்தப்பட்ட அரசு விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருந்தனர்.
இருப்பினும், வியாழக்கிழமை வான்ஸின் விமர்சனத்துக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனமே முக்கிய இலக்காக இருந்தது.
"மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு நாங்கள் சொல்லும் செய்தி மிகவும் எளிமையானது. நீங்கள் சிறந்த அமெரிக்க நிறுவனம். சிறந்த அமெரிக்கப் பணியாளர்களைப் பணியமர்த்த வேண்டும். அமெரிக்கப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக வெளிநாட்டுப் பணியாளர்களை அடிமைகளைப் போலப் பணியமர்த்தக் கூடாது" என்று வான்ஸ் கூறினார்.
வெளிநாட்டுப் பணியாளர்களை இவ்வாறு குறிப்பிடுவதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். விசாவுக்கு ஆதரவளித்த நிறுவனம், அத்தகைய பணியாளர்களைப் பணிநீக்கம் செய்தாலோ அல்லது வேலையிலிருந்து நீக்கினாலோ, அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படலாம் என்று அவர் கூறினார்.
பொதுவாக, இத்தகைய சூழலில் அந்தப் பணியாளர்களுக்கு 60 நாள் சலுகைக் காலம் வழங்கப்படும். இந்தச் சலுகைக் காலத்தை முழுமையாக நீக்குவதற்கான முன்மொழிவை அமெரிக்க அரசு கடந்த மாதம் வெளியிட்டது.
அமேசான், கூகுள், மெட்டா, ஆப்பிள், என்விடியா உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்து முக்கியத் தொழில்நுட்ப நிறுவனங்களும் H-1B விசா திட்டத்தின் மூலம் வெளிநாட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்தி வருகின்றன. இது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
ஆனால், வியாழக்கிழமை வான்ஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் இந்த நிறுவனங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
உள்நாட்டில் கண்டறியவோ அல்லது பணியமர்த்தவோ முடியாத, அதிகத் திறன் அல்லது சிறப்புப் பயிற்சி தேவைப்படும் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்காகவே பல தசாப்தங்களாக இந்த விசா திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெர்ம் திட்டம், இத்தகைய பணியாளர்கள் அமெரிக்காவில் நிரந்தரக் குடியிருப்பாளர்களாக மாறுவதற்கான ஒரு வழியாகும். இதன் மூலம் பொதுவாகக் கிரீன் கார்டு பெற முடியும். அது அவர்களுக்கு அமெரிக்காவில் காலவரையின்றித் தங்கிப் பணியாற்ற அனுமதி அளிக்கிறது.
கடந்த நிதியாண்டில், அமெரிக்கத் தொழிலாளர் துறை பத்து வணிகப் பிரிவுகளில் 1.30 லட்சத்துக்கும் அதிகமான பெர்ம் விண்ணப்பங்களுக்குச் சான்றளித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































