போரை தொடரும் இஸ்ரேலுக்கு 10 ஆயிரம் பேரை அனுப்பும் ஹரியாணா பாஜக அரசு - எதற்காக தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அபினவ் கோயல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஹரியாணா அரசு, இஸ்ரேலில் இருக்கும் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
ஹரியாணா மாநில அரசு நிறுவனமான 'ஹரியாணா திறன் மற்றும் வேலைவாய்ப்புக் கழகம்’ வெளிநாட்டில் வேலைவாய்ப்பு வழங்குவது இதுவே முதல் முறை.
துபாயில் பாதுகாப்புப் பணியாளர் பணியிடங்கள், இங்கிலாந்தில் செவிலியர்களுக்கான பணியிடங்கள், மற்றும் இஸ்ரேலில் உள்ள பணியிடங்கள் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை இந்த நிறுவனம் தனது இணையதளத்தில் கோரியுள்ளது.
இவற்றுள் இந்த மூன்று நாடுகளில் இஸ்ரேலில் மட்டும் 10,000 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. மீதமுள்ள இரண்டு நாடுகளில் 170 பேர் மட்டுமே வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
போரால் இஸ்ரேலில் தொழிலாளர் பற்றாக்குறை
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு தாக்குதல் நடத்தியதில் இருந்து, காஸா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் நடத்தும் காஸாவின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலின் தாக்குதலில் 18,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் போர் எப்போது நிறுத்தப்படும் என்று யாருக்கும் தெரியாது.
கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது, இதன் தொடக்கத்திலேயே, இஸ்ரேலில் பணிபுரியும் பாலத்தீனர்களின் பணி அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதனால் இஸ்ரேல் தொழிலாளர் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது.
மதிப்பீடுகளின் படி, இஸ்ரேலுக்கு சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் தேவை. அதை ஈடுகட்ட இந்தியாவை நோக்கி இஸ்ரேல் திரும்பியிருக்கிறது.
இந்த வேலைவாய்ப்பு ஒப்பந்தம் எவ்வளவு காலம் நீடிக்கும்? தங்குவதற்கான ஏற்பாடுகள் என்னவாக இருக்கும்? மருத்துவக் காப்பீடு கிடைக்குமா? ஹரியாணாவுக்கு வெளியில் இருந்து ஒருவர் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியுமா?
இதுபோன்ற பல கேள்விகள் உள்ளன, அவற்றுக்கான பதில்கள் தெரிந்து கொள்வது முக்கியம்.
இந்த வேலையில் உங்களுக்கு எவ்வளவு ஊதியம் கிடைக்கும்? இதைப் பற்றி பேசுவதற்கு முன், இஸ்ரேலில் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பேசலாம்.
என்ன வேலைகளுக்கான விண்ணப்பம்?

பட மூலாதாரம், Getty Images
ஹரியாணா திறன் மற்றும் வேலைவாய்ப்புக் கழகத்தின் படி, ஒருவர் நான்கு வகையான வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதில் ‘ஃப்ரேம்வொர்க்’, ஷட்டரிங் கார்பெண்டர்’, ‘இரும்பு வளைவு’, ‘செராமிக் டைல்’ மற்றும் ‘ப்ளாஸ்டெரிங்’ ஆகியவை அடங்கும்.
தச்சர், இரும்பு வளைத்தல், டைல்ஸ், பிளாஸ்டர் ஆகியவை தான் அந்த வேலைகள் ஆகும்.
தச்சர் மற்றும் இரும்பு வளைத்தல் பணிகளுக்கு தலா 3,000 பேரும், டைல் மற்றும் பிளாஸ்டரிங் வேலைகளுக்கு தலா 2,000 பேரும் தேவை என விளம்பரம் தெரிவிக்கிறது.
வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது மூன்று வருட அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும், மற்றும் 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
இந்தப் பணிகளுக்கான வயது வரம்பு 25 முதல் 45 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் இஸ்ரேலில் பணியாற்ற முடியும். அவர்களது பணி விசா ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்படும். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆங்கில மொழி கட்டாயம் கிடையாது.
ஹரியாணா திறன் மற்றும் வேலைவாய்ப்புக் கழகத்தின் செயலாளரான பல்லவி சந்தீர், இக்கழகத்தில் தனியார் மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கான அதிகாரியாக உள்ளார்.
பிபிசியிடம் பேசிய அவர், “வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பங்களைக் கோருவது இதுவே முதல் முறை. இதுவரை இஸ்ரேலில் பணிபுரிய 800 விண்ணப்பங்களும், இங்கிலாந்தில் 300 விண்ணப்பங்களும், துபாயில் காவலர்களாக பணிபுரிய 700 விண்ணப்பங்களும் வந்துள்ளன,” என்றார்.
இஸ்ரேலில் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 20 ஆகும்.

பட மூலாதாரம், HKRNL.ITIHARYANA.GOV.IN
எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
ஹரியாணா திறன் மற்றும் வேலைவாய்ப்புக் கழகத்தின் படி, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் இந்த பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விளம்பரத்தின்படி, இஸ்ரேலில் வேலை பெறும் நபர் ஒரு நாளைக்கு 9 மணி நேரமும், மாதத்தில் 26 நாட்களும் வேலை செய்ய வேண்டும். வேலையிலிருந்து விடுப்பு எடுக்க வேண்டும் என்றால், அது இஸ்ரேலிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் இஸ்ரேலிய நிறுவனத்தால் வழங்கப்படும்.
பணிபுரியும் நபர் ஒவ்வொரு மாதமும் 6,100 இஸ்ரேலிய புதிய ஷெக்கல் தொகையைச் சம்பளமாகப் பெறுவார். இது இந்திய ரூபாயில் தோராயமாக 1 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய்.
இது தவிர, மருத்துவக் காப்பீடு மற்றும் தங்குமிடத்திற்கான ஏற்பாடுகளும் இருக்கும். ஆனால் இவற்றுக்கு அந்த நபர் தனது சொந்தப் பணம் செலுத்த வேண்டும்.
விளம்பரத்தின்படி, ஒருவர் மருத்துவக் காப்பீட்டிற்கு சுமார் 3,000 ரூபாயும், தங்குமிடத்திற்கு மாதம் சுமார் 10,000 ரூபாயும் செலுத்த வேண்டியிருக்கும்.
ஒவ்வொரு மாதமும் சம்பளம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஒப்பந்தம் முடிந்து அவர் இஸ்ரேலை விட்டு வெளியேறும்போது மட்டுமே இந்தப் பணம் அவருக்கு வட்டியுடன் மொத்தமாக வழங்கப்படும்.
அதாவது இஸ்ரேலில் பணிபுரிபவருக்கு மாதந்தோறும் பணம் கிடைக்காது. இது தவிர, வேலை செய்பவர் உணவுக்கான செலவை தானே கவனித்துக் கொள்ள வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
2021-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி ஹரியாணா அரசு நிறுவனங்கள் சட்டம் 2013-இன் கீழ் ஹரியானா திறன் வேலைவாய்ப்புக் கழகத்தை உருவாக்கியது.
இது மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வெளிப்படையான முறையில் பணியாளர்களை வழங்குகிறது.
பல்லவி சந்தீர் கூறும்போது, “ஒரு மாநில அரசு அல்லது தனியார் நிறுவனத்திற்கு 100 கணினி ஆபரேட்டர்கள் அல்லது செக்யூரிட்டிகள் தேவை என்று வைத்துக்கொள்வோம். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் தங்கள் தேவைகளை எங்களிடம் கூறுகிறார்கள், அதன்படி நாங்கள் எங்கள் போர்ட்டலில் ஆட்சேர்ப்பு செய்கிறோம்,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இடையில் ஒப்பந்தக்காரர் யாரும் இல்லை. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து, வெளிப்படையான முறையில் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களின் பெயர்கள் முன்வைக்கப்படுகின்றன,” என்றார்.
இஸ்ரேலில் வேலைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் ஹரியானாவின் 'குடும்ப அடையாள அட்டை' வைத்திருப்பது கட்டாயம் என்று பல்லவி சந்தீர் கூறுகிறார். அதைவைத்து தான் அவர் இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும்.
“தகுதிப் பட்டியல் ஒப்பந்த நபர்களின் வரிசைப்படுத்தல் கொள்கையின் கீழ் தயாரிக்கப்படுகிறது. இதில், ஆண்டு வருமானம், விண்ணப்பதாரரின் வயது, சமூகப் பொருளாதார அளவுகோல், பணி அனுபவம், மாநில அரசுடன் பணிபுரிந்த முன் அனுபவம் போன்றவை கருத்தில் கொள்ளப்படுகின்றன. இதில், ஒவ்வொரு பிரிவுக்கும் வெவ்வேறு எண்கள் உள்ளன. அதன் அடிப்படையில் ஒரு விண்ணப்பதாரர் தகுதிப் பட்டியலில் இடம் பெறுகிறார்,” என்றார்.
ஹரியாணா திறன் வேலைவாய்ப்புக் கழகத்தின் உதவியுடன், மாநில அரசு வேலையின்மையை குறைக்க முயற்சிக்கிறது.

பட மூலாதாரம், ANI
ஹரியாணாவில் வேலையின்மை
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மனோகர் லால் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஹரியாணா முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
ஆகஸ்ட் 2023-இல் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக சட்டமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், வேலையின்மை விகிதம் சுமார் 1.69% ஆக இருக்கும் என்றார். ஹரியாணாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர்.
இது தவிர, இந்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் தொழிலாளர் கணக்கெடுப்பு நடத்துகிறது. இது மாநிலங்களில் வேலையின்மை விகிதத்தை வெளிப்படுத்துகிறது.
ஜனவரி-மார்ச் 2023 காலகட்டத்திற்கான இந்தக் கணக்கெடுப்பின்படி, நாட்டில் வேலையின்மை விகிதம் 6.8% ஆகவும், ஹரியாணாவில் 8.8% ஆகவும் இருந்தது.
ஹரியாணா அரசின் கூற்றுப்படி 2023-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி வரை, 1,36,265 பட்டதாரிகள், 29,988 முதுகலை பட்டதாரிகள் மற்றும் 21,569 தொழில்முறை பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்.
சக்ஷம் யுவ யோஜனா திட்டத்தின் கீழ் ஹரியாணா மாநில அரசு வேலையின்மை உதவித்தொகையையும் வழங்குகிறது. இதன்படி, முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.3,000, பட்டதாரிகளுக்கு ரூ.1500, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.900 வேலையில்லா உதவித்தொகை வழங்கப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












