You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ் சினிமாவில் ஓ.டி.டி. தளங்களின் தாக்கம் என்ன? திரையரங்குகளால் தாக்குப்பிடிக்க முடியுமா?
- எழுதியவர், அம்ரிதா பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
வேகமாக மாறிவரும் இந்த டிஜிட்டல் உலகத்தில் பல ஆன்லைன் தளங்கள் மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கியுள்ளன. குறிப்பாக, ஓடிடி(OTT ) தளங்கள் கடந்த சில ஆண்டுகளாக பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா காலகட்டத்திற்கு பின்னர், ஓடிடி தளத்தின் வளர்ச்சி கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட பட்டியலின்படி இந்தியாவில் 57 ஓடிடி தளங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 10.1 கோடி ஓடிடி சந்தாதாரர்கள் உள்ளதாக, மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் ஊடக ஆலோசனை மையத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
திரையரங்கு vs ஓ.டி.டி.
ஒரு படம் பார்க்க மக்களுக்கு பல விதமான தேர்வுகளை ஓடிடி தளங்கள் அளிக்கின்றன. தியேட்டருக்குச் சென்று 200 ரூபாய் செலவு செய்து ஒரு படம் பார்ப்பதை விட வருடம் 1,500 ரூபாய் மட்டுமே செலுத்தி ஆயிரக்கணக்கான திரைப்படங்களை ஓடிடி தளம் மூலம் வீட்டிலிலேயே குடும்பத்துடன் கண்டு மகிழலாம்.
லாக் டவுன் காலத்தில் வாரம் ஒரு புது படம் பார்த்தே ஆக வேண்டும் என்றிருக்கும் சினிமா ரசிகர்களின் பசியை போக்கியது ஓடிடி தளங்களே. சூரரைப் போற்று, சர்பேட்டா பரம்பரை, மூக்குத்தி அம்மன் போன்ற பெரிய படங்களும் ஓடிடி தளத்திலேயே வெளியாயின. லாக்டவுன் காலத்தில் மக்கள் ஓடிடி தளங்களில் படம் பார்ப்பதை வழக்கமாக்கி கொண்டனர்.
இதற்குப்பின் ஓடிடி தளங்களின் வளர்ச்சிப் பாதையில் சறுக்கலே இல்லை. இக்கட்டுரைக்காக திரை துறையினர், விமர்சகர்கள் என்று பேசும்போது அதில் பெரும்பாலானோர் திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதற்கே மக்கள் முன்னுரிமை தருவதாக கூறினார்கள்.
ஏனென்றால், தியேட்டரில் படம் பார்ப்பது ஓர் அனுபவம் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆனாலும், ஓடிடி தளங்களால் திரையரங்குகளுக்கு மக்களின் வருகை குறைந்துள்ளது என்ற கருத்து இன்று வரை பேசுபொருளாகவே நீடிக்கிறது.
"ஓடிடி தளங்கள், சினிமா மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தாலும், அது ஒரு போதும் திரையரங்குகளுக்கு இணையாகாது. இரண்டும் தனித்தனி வியாபாரம்." என்றே திரைத்துறையினர் கூறுகின்றனர்.
தமிழ் சினிமாவில் ஓ.டி.டி. தளங்களின் தாக்கம் என்ன?
ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கும், அதிக பட்ஜெட் படங்களுக்கும் திரையரங்குகளில் ரசிகர் பட்டாளம் குவியும். அப்படங்களுக்கு திரையரங்குகளில் அதிக ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன.
ஆனால் திரையுலகில் அடுத்த வரிசையில் இருக்கும் நடிகர்களின் படங்களுக்கு குறைந்த ஸ்க்ரீன்களே கிடைக்கின்றன. அவர்களின் படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஓடிடி தளங்களே பேருதவி செய்கிறன. கடந்த ஆண்டு வெளியான குட் நைட், டாடா, பார்க்கிங் முதலிய திரைப்படங்கள் திரையரங்கில் வெளியானாலும் ஓடிடி தளங்களில்தான் அதிக கவனத்தை ஈர்த்தன.
ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு திரைப்படம் வெளியான 10 நாட்களிலே ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படம் அமேசான் பிரைம் தளத்தில் அதிக வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த பார்க்கிங் படமும் வெளியான சில நாட்களில் தமிழகத்தின் அநேக இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திரையரங்குகளில் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை. ஆனால், ஓ.டி.டி. தளத்தில் வெளியான பின்னரே சமூக ஊடகங்களில் பார்க்கிங் திரைப்படம் பேசுபொருளானது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண், "ஓடிடி தளங்கள் மூலம் உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களும் எந்த மொழி படமாக இருந்தாலும் பார்க்க முடியும். ரீமேக், டப்பிங் என்று இப்போது தனியாக தேவைப்படுவதில்லை. படம் நன்றாக இருந்தால் தேடி சென்று சப்டைட்டில் உதவியுடன் பார்க்கிறார்கள். இதுவே என் போன்ற இளம் நடிகர்களுக்கு உலகம் முழுவதும் அடையாளம் தருகிறது,"என்றார்
இப்படி இவர் போன்ற வளர்ந்து வரும் கலைஞர்களில் திறமையை புரிந்து கொண்டு அவர்களது அடுத்த படைப்பிற்கு பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் கூடுகின்றன. இதுவே அப்படத்திற்கு மறைமுக விளம்பரமாகவும் அமைகிறது. குட் நைட் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் மணிகண்டனின் வரவிருக்கும் 'லவ்வர்' படம் ரசிகர்களால் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
ஓடிடியில் அங்கீகாரம் பெறும் படங்கள்
ஒவ்வொரு ஓடிடி தளமும் அவர்களுக்கு என்று தனி வகையறையும் பார்வையாளர் வட்டத்தையும் வைத்திருக்கிறார்கள். அதற்கேற்ப படங்களை தேர்வு செய்து வாங்குகிறார்கள். ட்ரெண்டிற்கு ஏற்பவும் இத்தளங்கள் திரைப்பட உரிமங்களை வாங்குகின்றன.
2021-இல் பி. எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'கூழாங்கல்' (ஆங்கிலத்தில் Pebbles) திரைப்படம் பிரத்யேகமாக பல திரைப்பட விழாக்களிலே திரையிடப்பட்டு வந்தது. விருதுகள் வாங்கி குவித்த இப்படம் 2023 ஆண்டில் 'சோனி லிவ்' தளத்தில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்றது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய இயக்குநர் வினோத்ராஜ்,"எங்களுக்கும் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட ஆசை தான். ஆனால் இன்டெர்வல் இல்லாத குறைந்த நேரமே படம் இருப்பதால் தியேட்டரில் வெளியாக படத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது, அது கதைக்கும், பார்வையாளர்களுக்கும் சரி வராததால், ஓடிடி தளத்தில் கூழாங்கல் வெளியாகி எங்களுக்கு பெரிய அங்கீகாரத்தையும், மக்கள் ஆதரவையும் தேடி கொடுத்தது", என்றார்.
எல்லா மொழிகளில் இருந்தும் கடும் போட்டி இருப்பதால், அதிலிருந்து ரசிகர்களை கவர்ந்து ஒரு படத்தைப் பார்க்க வைக்க சுவாரசியமான கதைக்களம், ஸ்டார் நடிகர்கள் போன்ற ஏதாவது இரு காரணி தேவையாக இருக்கிறது.
அறிமுக நடிகரான சக்தி மித்ரன் நடிப்பில் வெளிவந்த 'யாத்திசை', திரையரங்கில் சுமாராக ஓடினாலும் அமேசான் பிரைம் தளத்தில் அதிக பார்வையாளர்களை ஈர்த்து வெற்றி கண்டது. புதிய கலைஞர்களை கொண்டே உருவாக்கப்பட்ட திரைப்படம் நல்ல கதைக்காகவும், புதுமையான ஆக்கத்திற்காகவுமே மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஓடிடி தளத்திலும் கட்டாயமாக பார்வையாளர்கள் அதிகம் இருப்பார்கள். ஆகவே, அதுபோன்ற நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே பிரபல ஓடிடி தளங்கள் அதற்கான உரிமங்களை வாங்கிவிடுகின்றன.
திரையரங்குகளால் தாக்குப்பிடிக்க முடியுமா?
ஓடிடி தளங்களினால் திரையரங்கில் வியாபாரம் குறைந்து விட்டது என்பது சர்ச்சைக்குரிய கருத்தாக இருக்கிறது. திரைப்படங்கள் வராவிட்டாலும் வெப் சீரிஸ், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காக ஓடிடி தளத்திற்கு பார்வையாளர்கள் எப்போதும் இருப்பார்கள்.
சமீபத்தில் கல்ட் கிளாசிக் (cult classic) எனப்படும் பழைய சூப்பர் ஹிட் படங்களின் ரீ ரிலீஸ் (rerelease) கலாசாரம் பெருகி இருக்கிறது. குஷி, முத்து, 3, வாரணம் ஆயிரம், போன்ற படங்கள் முக்கிய திரையரங்கில் மீண்டும் வெளியாயின. என்னதான் வெவ்வேறு ஓடிடி தளங்களில் அப்படங்கள் இருந்தாலும் திரையரங்கு அனுபவத்திற்காக வரும் ரசிகர்கள் பல இருக்கிறார்கள்.
திரையரங்கில் பார்வையாளர்களின் வரவேற்பை பொறுத்தே ஓடிடி-யில் ஒரு படத்திற்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. டிஜிட்டல் தளத்தில் பார்வை நிமிடங்கள் கூடக்கூட படத்தின் மதிப்பு கூடுகிறது.
"ஓடிடி மூலம் வியாபாரம் தற்போது பெருகிவிட்டது. நடிகர்கள், திரை கலைஞர்களின் வருமானம், பட்ஜெட் போன்ற அனைத்துமே அதிகரித்துள்ளன. கமர்ஷியல் படங்களை தாண்டி பரிசோதனை அடிப்படையிலும் படங்களை இயக்கும் வாய்ப்பை ஓ.டி.டி. தளம் உருவாக்கி கொடுத்திருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த சினிமா துறையின் தரமும் மேம்பட்டுள்ளது" என்றார் தயாரிப்பாளர் அருண் விஷ்வா (சாந்தி டாக்கீஸ்)
போஸ்டர், கட்-அவுட், தாண்டி இப்போது மீம்ஸ் எமோஜி போல சமூக வலைத்தளங்களிலும் சரி, விமானங்களில் போஸ்டர் ஓட்டுவது, வெளிநாடுகளில் படத்திற்காக விழா நடத்துவது போன்ற புதுவிதமான உத்திகள் ஒவ்வொரு படத்திற்கும் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் ஈர்ப்பைக் கவர அதுபோன்ற புது முயற்சிகள் தேவைப்படுகின்றன.
இது குறித்து அருண் விஷ்வா பேசுகையில், "படத்தின் பட்ஜெட்டில் விளம்பர செலவும் அடக்கம். விளம்பரம் பிரமாண்டமாக இருந்தால் அப்படம் நன்றாகத் தான் இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. படம், நன்றாக இருந்தால் விளம்பரம் இல்லாமலும் வெற்றி பெரும்" என்றார்.
இப்போது தான் 'டைனமிக் பிரைசிங்' என்பதை திரை விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். அதிக பட்ஜெட் படம் முதல் அறிமுக நடிகர்களின் படம் வரை அனைத்திற்கும் சாதாரண திரையரங்கில் 150 ரூபாயும் மல்டிபிளக்ஸ்களில் 190 ரூபாய் என ஒரே டிக்கெட் விலை தான்.
"ஒரு அறிமுகம் இல்லாத நடிகரின் படத்திற்கு இவ்வளவு ரூபாய் செலவு செய்ய வேண்டுமா என்று மக்கள் யோசிப்பதாலே அது சிறந்த படமாக இருந்தாலும் திரையரங்கிற்கு சென்று பார்க்காமல் ஓடிடி-யில் வெளியாக காத்திருப்பார்கள். இதுவே ஸ்டார் கலைஞர்களின் படம் என்றால் சொல்லாமலே கூட்டம் கூடும்" என்று பத்திரிகை திரை விமர்சகர் அவினாஷ் ராமசந்திரன் கூறினார்.
திரையரங்குகளில் எல்லா திரைப்படங்களுக்கும் ஒரே விலையில் டிக்கெட் வழங்கப்படுவது நியாயமற்றது என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அறிவித்தது. படங்களின் பட்ஜெட், நடிகர்கள், டிமாண்ட், திரையரங்குகளின் கொள்ளளவு போன்றவற்றை பொறுத்து படத்திற்கான விலை நிர்ணயிக்கப்படும் என்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியிருந்த நிலையில், அது இன்றும் முழுமையாக நடைமுறையில் இல்லை.
மேலும் அவினாஷ் பேசுகையில், "எல்லாம் பார்வையாளர்களின் தீர்மானமே, அவர்களை பழி சொல்ல முடியாது. அவர்களின் கவனத்தைப் பெற்று எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் படம் எடுப்பதே ஒவ்வொரு திரை கலைஞரின் நோக்கம்" என்றார்.
இரண்டாவது ரிலீஸ் தரும் ஓடிடி தளங்கள்
தமிழ் சினிமாவில் வாரம் ஒரு புதிய படம் வெளியாகும் நிலையில், திரையரங்குகளில் படங்கள் குறைந்த நாட்களே திரையிடப்படுகின்றன. முன்னர் இருந்தது போல நூறு நாள் கொண்டாட்டம் எல்லாம் இல்லை, இப்போது 2 வாரங்கள் தொடர்ந்து ஓடினாலே அது வெற்றிப்படம் தான். அதனால் ஓடிடி தளங்கள் ஒவ்வொரு படத்திற்கும், இரண்டாவது வெளியீடு போலிருந்து, திரைப்படத்தை நீண்ட நாட்கள் உயிர்த்திருக்க வைக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று இணையாகவே வளர்ச்சி அடைந்து வருகின்றன. அதிக சந்தாதாரர்கள், விளம்பரமில்லாமல் படம் பார்ப்பது என்பன போன்று ஓடிடி தளங்களிலும், லேசர் முறை திரையிடல், QSC ஒலிபெருக்கி, PLF வடிவத்தில் படங்கள் என்று தியேட்டர்களிலும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இரண்டும் வெவ்வேறு வகையான படம் பார்க்கும் அனுபவத்தை திரைப்பட ரசிகர்களுக்கு வழங்குகிறது. முக்கிய நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் சிறிது சிறிதாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா உலக மேடையில் பேசப்படும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இன்றைய காலத்தில் பார்வையாளர்கள் அனைவரும் படத்தை ஆராந்து விமர்சனம் செய்ய பரந்த சினிமா அறிவை கொண்டிருப்பதால் படம் பார்க்க அவர்கள் தேர்வு செய்வதும் கடினமாக உள்ளது.
"எல்லா படங்களை பார்க்கவும் ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள், அவர்களின் பணத்திற்கும், நேரத்திற்கும் ஏற்ற தரமான படங்கள் தயாரிக்கப்படுகிறதா? என்பது தான் முக்கிய கேள்வி. இதை நோக்கியே திரைத்துறையினர் படங்களை படைக்க வேண்டும். அதற்கு பார்வையாளர்களும் பைரஸி செய்யாமல் உரிய தளத்தில் காண வேண்டும்", என்று அவினாஷ் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)