'வாக்னர்' தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் பலியானது உறுதி - பின்னணி என்ன?

ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராக அண்மையில் கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் கூலிப்படைத் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டதை அந்நாடு உறுதிப்படுத்தியுள்ளது. விமான விபத்தில் கிடைத்த உடல்களை மரபணு ஆய்வு செய்ததில் பிரிகோஜின் உயிரிழந்தது உறுதியானதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த 10 பேரும் உயிரிழந்துவிட்டனர், விபத்து நேரிட்ட இடத்தில் கிடைத்த அனைத்து உடல்களும் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை அனைத்துமே, விமானத்தின் பயணிகள் பட்டியலில் இருந்த 10 பேருடையதுதான்" என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

ஆக.25-ம் தேதி நடந்தது என்ன?

ஆக.25-ம் தேதி வெள்ளியன்று பிரிகோஜினின் தனி விமானம் ரஷ்ய தலைவர் மாஸ்கோவுக்கு வடமேற்கே விபத்தில் சிக்கியது. அதில் இருந்த 10 பேருமே உயிரிழந்தனர்.

தனியார் ஜெட் விமானத்தின் பயணிகள் பட்டியலில் வாக்னர் கூலிப்படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் முக்கிய கூட்டாளியாக திகழ்ந்த அவரது வாக்னர் கூலிப்படை யுக்ரேன் போரில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

ஆனால் ஜூன் மாதம் ரஷ்யாவின் ராணுவத் தலைவர்களுக்கு எதிராக மாஸ்கோவை நோக்கி தனது வாக்னர் படைகளை அணிவகுக்கச் செய்ததால் புதினுக்கும் பிரிகோஜினுக்கும் இடையேயான உறவில் கசப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்தே இந்த விமான விபத்தில் பிரிகோஜின் இறந்துவிட்டதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. இதையடுத்து, இந்த விமான விபத்துக்கு ரஷ்ய அரசே காரணம் என்று எழுந்த குற்றச்சாட்டுகளை அந்நாட்டு அதிபர் மாளிகையான கிரெம்ளின் மறுத்துள்ளது.

விமானத்திற்கு என்ன ஆனது?

புதன்கிழமை மாலை எம்ப்ரேயர் லெகசி என்ற விமானம் மாஸ்கோவிற்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கும் இடையே பறந்து கொண்டிருந்தபோது, மாஸ்கோவிற்கு வடக்கே உள்ள ட்வெர் பகுதியில் விபத்துக்குள்ளானதாக ரஷ்ய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் வாக்னர் கூலிப்படையுடன் தொடர்புடைய டெலிகிராம் சேனலான கிரே சோன் விமானத்தை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்ததது. ஆனால் இதற்கான ஆதாரம் எதுவும் வழங்கப்படவில்லை.

விபத்துக்குள்ளான தனியார் ஜெட் விமானத்தில் ஏழு பயணிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் இருந்தனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்துவிட்டனர். அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரை மணி நேரத்திற்கும் குறைவாக பறந்த பிறகு தரையில் மோதியதால் விமானம் தீப்பிடித்ததாக வாக்னருடன் தொடர்புடைய மற்றொரு செய்தி நிறுவனமான டாஸ் கூறியுள்ளது.

பிபிசியால் சரிபார்க்கப்பட்ட வீடியோ காட்சியில் ரஷ்யாவின் குசென்கினோவில் வானத்தில் இருந்து ஒரு விமானம் விழுவது தெரிகிறது.

அதே நேரத்தில் ப்ரிகோஜினுக்கு சொந்தமான மற்றொரு வணிக ஜெட் விமானம் மாஸ்கோ பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக கிரே சோன் தெரிவித்துள்ளது.

ப்ரிகோஜினின் சமீபத்திய நடவடிக்கைகள் என்னென்ன?

விபத்துக்குள்ளான விமானத்தின் பயணிகள் பட்டியலில் வாக்னர் தலைவர் இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

ரஷ்ய தலைநகருக்கு வடக்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி தனியார் ஜெட் விமானம் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

ரஷ்யாவின் ராணுவத் தளபதிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்த அவர், ஒப்பீட்டளவில் அதிகம் பொதுவெளியில் அறியப்படாதவராகவே இருந்தார். யுக்ரேன் போர் தொடர்பான அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தன.

கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தின் கீழ், அவர் பெலாரூஸுக்கு குடிபெயர்ந்தார் என்ற அடிப்படையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

ஆனால் அவர் பெலாரூஸ் நாட்டிலேயே தங்கியிருந்தாரா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் அவர் பல்வேறு நாடுகளில் இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி வந்தன.

ஜூலை மத்திய வாக்கில் பெலாரஸில் தனது வீரர்களை பிரிகோஜின் வரவேற்கும் காணொளி ஒன்று வெளியானது.

அதே நேரத்தில் ஜூலை பிற்பகுதியில், ஆப்பிரிக்கா-ரஷ்யா உச்சிமாநாட்டின் போது ரஷ்ய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது.

கிளர்ச்சிக்குப் பிறகு அவர் வெளியிட்ட முதல் காணொளியில் அவர் ஆப்பிரிக்காவில் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அந்தக் காணொளி எங்கு படமாக்கப்பட்டது என்பதை பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை.

அவர் இறந்துவிட்டதாக கிரே சோன் தெரிவித்ததை அடுத்து, மாஸ்கோவிற்கு வடக்கே ட்வெர் பகுதியில் விழுந்த விமானத்தில் இருந்தவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலை ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிரிகோஜின் பெயர் அதில் உள்ளது.

இப்போது என்ன நடக்கிறது?

ரஷ்ய சட்டப்படி குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் விசாரணைக் குழுவின் கூறியுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் அவசர கால மீட்புப் பணிகள் முடிந்துவிட்டன.

ட்வெர் பிராந்தியத்தின் ஆளுநர் இகோர் ருடென்யா விசாரணையை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: