வாட்ஸ் ஆப் புரளிகளால் அச்சத்தில் வடமாநில தொழிலாளர்கள்: பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவு

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வட மாநில தொழிலாளர்கள், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய பொய் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின.
இது தொடர்பான செய்திகள், சமூக ஊடக பதிவுகள் வைரலாக பரவிய நிலையில் தமிழ்நாடு காவல்துறை அதை மறுத்து செய்தி வெளியிட்டது.
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இந்தச் செய்திகளை நிராகரித்து ஆங்கிலத்தில் காணொளி ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் பிகார் முதல்வரும் துணை முதல்வரும் இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
கடந்த மார்ச் 2ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தொழில் துறையினருடன் இது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அவர்களுடைய பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பொய் செய்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் காவல் துறை தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் செய்திக் குறிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பணியில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரிகளில் இந்தி பேசக் கூடியவர்கள் இந்தியில் இந்தச் செய்தியை வீடியோவாகப் பதிவிட்டோம் நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தைனிக் பாஸ்கர் இணைய பத்திரிகையின் ஆசிரியர் மீதும் திருப்பூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தன்வீர் போஸ்ட் என்கிற பத்திரிகையின் ஆசிரியர் முகமது தன்வீர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் பிகார் உட்பட வட மாநில தொழிலாளர்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் பலர் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
திருப்பூர் மாநகர் வேலம்பாளையத்தில் வசித்து வருபவர் சனோஜ் குமார். பிகாரை பூர்விகமாகக் கொண்ட இவர் கடந்த 13 ஆண்டுகளாக திருப்பூரில் வசித்து வருகிறார்.
பல வட மாநில தொழிலாளர்களும் அச்சத்தில் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதாகத் தெரிவிக்கிறார் சனோஜ் குமார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கடந்த 4, 5 நாட்களாகவே பல வீடியோக்கள் வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது.
அதில் வட மாநில தொழிலாளரை தாக்கிவிட்டார்கள், பிகாரை சேர்ந்தவர்களை வெட்டிக் கொன்றுவிட்டார்கள் என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
திருப்பூர் ரயில் நிலைய தண்டவாளம் அருகே கொல்லப்பட்ட பிகாரை சேர்ந்தவரை அவினாசி அரசு மருத்துவமனையில் வைத்திருப்பதாக ஒரு செய்தி வருகிறது. மற்றுமொரு செய்தியில் கொல்லப்பட்டவர்களை அனாதை பிணமாகக் கொண்டு போய் மின் மயானதில் வைத்து இருப்பதாக வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
இது உண்மையா பொய்யா என எங்களுக்குத் தெரியவில்லை. பலரும் தொடர்ந்து எனக்கு அழைத்து தங்களுடைய அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கானவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி விட்டனர். பலரும் சொந்த ஊருக்கு அடுத்தடுத்து சென்று கொண்டிருக்கின்றனர்.
நானும் தினசரி அவர்கள் வசிக்கின்ற பகுதிகளுக்குச் சென்று வருகிறேன். இரவு நேரங்களிலும் அவர்களைச் சந்திக்கிறோம். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சொந்த ஊரிலிருந்து அவர்களுடைய குடும்பத்தினர் அழைத்து ஊருக்கே வந்து விடுங்கள் எனக் கூறுகிறார்கள்.
நான் பத்து ஆண்டுகளாக ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை செய்தேன். தற்போது மூன்று ஆண்டுகளாக ஒரு மொபைல் கடை நடத்தி வருகிறேன். இப்போதுதான் இடம் வாங்கி வீடு கட்டி வருகிறேன். இந்தச் செய்திகளை எல்லாம் பார்த்து ஊரில் வசித்து வரும் என்னுடைய அம்மா பதறிப் போய் எனக்கு அழைத்தார்.
வீடு, நிலம் எதுவும் வேண்டாம் அனைத்தையும் விட்டுவிட்டு ஊருக்கு பத்திரமாக வந்துவிடு என என்னிடம் கூறுகிறார். என் அம்மா பதறுவதைப் பார்த்தால் எனக்கே அச்சம் ஏற்படுகிறது.
அதனால் பலர் சொந்த ஊர்களுக்கு ரயில், பேருந்து என எது கிடைக்கிறதோ அதில் கிளம்பிச் செல்கின்றனர். இதைத் தடுப்பதற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
அரசுத் தரப்பில் இருந்து இந்தியில் வருகின்ற அறிக்கைகள் செய்திகளைக் கடந்து சில நாட்களில் 300 பேருக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பியிருப்பேன். ஆனாலும் அவர்களுடைய அச்சத்தைப் போக்க முடியவில்லை.
இன்னொரு வீடியோவில் பிகாருக்கு சென்ற ஒருவர் எங்களுக்கு தமிழ்நாடு வேண்டாம், முதல்வர் நிதீஷ் குமார் பிகாரிலேயே எங்களுக்கு ஏதாவது வேலை கொடுத்தால் போதும் என்று பேசுகிறார். இப்படியும் வீடியோக்கள் வருகின்றன," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
தற்போதைய பதற்றமான சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு மேலும் சில கோரிக்கைகளையும் முன் வைத்தார் சனோஜ் குமார்.
"தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறை தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த அறிக்கைகளையும் வீடியோக்களையும் தொழிலாளர்கள் மத்தியில் பகிர்கிறோம். ஆனால் வன்முறை தொடர்பான செய்திகள் பரவுகின்ற அளவுக்கு இந்தச் செய்திகள் சென்று சேர்வதில்லை. இந்த நிலையை எப்படிச் சமாளிப்பது என்கிற அச்சமும் குழப்பமும் தான் மேலோங்கி உள்ளது.
திருப்பூரில் சில பகுதிகளில் மாநகராட்சி தரப்பில் இருந்து வந்து பேசுவதாகத் தகவல் கிடைத்தது. தொழிலாளர்களிடம் நேரில் சென்று பேசினால் இந்தக் கவலைகள் தீரும்.
ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளும் ஒன்று அல்லது இரண்டு காவலர்கள் எங்களுடன் வந்தால் தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கின்ற இடங்களுக்கு அவர்களை நேரில் அழைத்துச் சென்று பேசினால் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.
காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அதைச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அவர்களுடன் வருவதற்கு என்னைப் போன்ற பலரும் தயாராக இருக்கிறோம்," என்றார்.
“புலம்பெயர் தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்துவதற்கு எதிராகத் தமிழ்நாட்டில் உள்ள உழைக்கும் மக்களின் மனதில் வெறுப்பின் விதைகள் விதைக்கப்படுவதும் தொழில்துறையில் வளர்ந்த தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு ஆபத்தை விளைவிப்பதோடு ஒட்டுமொத்த தொழில்துறையின் செயல்திறனையும் பாதிக்கும்,” என்று இந்திய ஜவுளிக் கூட்டமைப்பின் தலைவர் த.ராஜ்குமார், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர், ரவி சாம் கூட்டாக ஆகியோர் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும், “இந்தப் பிரச்னையை ஆரம்ப நிலையிலேயே தீர்த்து வைக்காதபட்சத்தில், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி பாழாகிவிடும். தமிழ்நாடு அரசு கணிசமான முதலீடுகளை மாநிலத்திற்கு ஈர்க்கும் முயற்சியை மேற்கொண்டுள்ள நிலையில் அதைப் பாதிக்கும்,” என்று கூறியதோடு, இத்தகைய பிரச்னையை ஏற்படுத்துபவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து, தொழில்துறையையும் தொழிலாளர் வர்க்கத்தையும் பாதுகாத்து, மாநிலத்தில் தொழில் அமைதியை நிலைநாட்ட அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார் அபினபு பிபிசி தமிழிடம் பேசுகையில், "திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால் அவர்களின் அச்சத்தைப் போக்க காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
நேற்று திருப்பூர் ரயில் நிலையம் சென்று பார்த்தோம். தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகை போல வட மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும். பெரும்பாலான தொழிலாளர்கள் ஹோலி பண்டிகைக்கு வீட்டுக்குச் செல்வதற்காகத்தான் உள்ளார்கள்.
இந்தச் செய்திகளால் அவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது உண்மை. ஆனால் அதிக அளவில் யாரும் சொந்த ஊருக்குச் செல்லவில்லை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
காவல்துறை தரப்பில் ஆடியோ செய்தியும் துணை ஆணையர் இந்தியில் பேசிய வீடியோ பதிவும் வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஆட்டோ மூலம் அறிவிப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
இன்று நான் உட்பட மொத்த காவல்துறை அதிகாரிகள் தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்த்தோம். அவர்களுக்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லை என்கிற உத்தரவாதத்தை வழங்கினோம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
வட மாநில தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்குச் செல்வதற்கும் தயாராக உள்ளோம். இதற்காக சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு உதவி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்புபவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சைபர் க்ரைம் துணை ஆணையர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு காவல்துறையின் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
உதவி எண்கள்: 0421-2203313, 9498101300, 9498101320
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












