You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு - புதிய ஜனாதிபதி பதவியேற்ற மறுநாளே நடவடிக்கை
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற மறுநாளே இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தன்னுடைய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியவை நேற்று தான் அவர் பிரதமராக அறிவித்திருந்தார். நேற்று (செவ்வாய், செப்டம்பர் 24) பிற்பகல் இலங்கையின் புதிய பிரதமராக அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு, நாடாளுமன்றத்தில் மூன்று இடங்கள் மாத்திரமே காணப்பட்டதால் புதிய சட்டங்க்ளை இயற்றுவதில் சிக்கல் இருந்தது. இத்தகைய சூழலில் புதிய ஜனாதிபதி அடுத்து என்ன செய்ய போகின்றார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த சூழலில், நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு
அத்துடன், நாடாளுமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11-ஆம் தேதி வரை நடைபெறும். வாக்குப்பதிவு நவம்பர் 14-ஆம் தேதி நடத்தப்படும். தேர்தலுக்குப் பிறகு புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21-ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 மக்கள் பிரதிநிதிகள் மக்கள் ஆணை ஊடாகவும், 29 பிரதிநிதிகள் தேசிய பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்படுவது வழக்கம். ஆட்சியிலுள்ள கட்சியொன்று ஆகக் குறைந்தது 113 உறுப்பினர்களைத் தன்வசப்படுத்த வேண்டும். அப்படியென்றால்தான், ஆட்சியை சுமூகமாக நடத்திச் செல்ல முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
தேசிய மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்குமா?
இலங்கையில் இதுவரை இல்லாதளவு சவால் மிகுந்த ஆட்சியாகவே இந்த ஆட்சி காணப்படுகின்றது என மூத்த நாடாளுமன்ற செய்தியாளர் ஆர்.யசி பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை ஆசனங்களை வெற்றி கொள்ள முடியுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ''வெல்ல வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு உண்டு. தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் கூட்டணி சேராதுள்ள ஒரே கட்சி இந்தக் கட்சி மாத்திரம் தான். இனிவரும் காலத்திலும் தாம் யாருடன் இணைந்து கூட்டணியாக போட்டியிட போவதில்லை என இவர்கள் அறிவித்துள்ளார்கள்,” என்கிறார்.
“என்னவாக இருந்தாலும் 113 ஆசனங்களை இவர்கள் நாடாளுமன்றத்தில் கைப்பற்ற வேண்டும். ஜனாதிபதியொருவர் வெற்றி பெற்றதன் பின்னர் அவரைச் சூழ்ந்த அரசாங்கங்கள் அமைவது தான் வழக்கமாக இருந்தது. 57 லட்சம் வாக்குகளை அநுர குமார திஸாநாயக்க பெற்றதைப் போன்று, நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையைப் பெற வாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். ஆனால் அந்தளவு வாக்குகளை எடுப்பது நிச்சயமாக சவாலாகவே இருக்கும். அப்படியென்றால், ஒரு கட்சியுடன் கூட்டணி சேர வேண்டிய கட்டாயம் வரும்," என யசி குறிப்பிடுகின்றார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை சேர்ந்த மற்றும் சிங்கள அரசியல்வாதிகளை ஒன்றிணைத்துக்கொண்டு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற பெரும்பான்மையை கைப்பற்ற முயற்சிக்கும் என அவர் கூறுகின்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)