You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடுகளில் பதுங்கிய 5 தொழிலதிபர்கள்
தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, சிபிஐயின் வேண்டுகோளின் பேரில், பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை ஆல் இந்தியா ரேடியோ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி மற்றும் அவரது உறவினர் நீரவ் மோதி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
ஆனால் பல்வேறு வழக்குகளில் பண மோசடி செய்த வேறு சில தொழிலதிபர்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் உண்டு. இந்தத் தொழிலதிபர்கள் நாடுகடத்தப்படுவதற்காக இந்தியப் புலனாய்வு அமைப்புகள் காத்திருக்கின்றன.
அதில் மெஹுல் சோக்ஸியும் இன்னும் பலரும் உண்டு. இந்தக் கட்டுரையில் அப்படிப்பட்ட தொழிலதிபர்களில் 5 பேரைப் பற்றி பார்க்கலாம்.
1. மெஹுல் சோக்ஸி
2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் அந்த வங்கி மெஹுல் சோக்ஸி, நீரவ் மோதி மற்றும் பலர் மீது புகார் அளித்தது.
குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் அனைவரும், வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து சதி செய்து, வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த வங்கி கூறியது.
2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உள் விசாரணை முடிந்த பிறகு, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்த மோசடி குறித்து மும்பை பங்குச் சந்தைக்குத் தெரிவித்தது.
மெஹுல் சோக்ஸி ஒரு காலத்தில் இந்தியாவின் வைர வணிகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நபராக இருந்தார்.
2. நீரவ் மோதி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு நபர் நீரவ் மோதி. இவர் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவை விட்டு வெளியேறினார்.
2019 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 19 ஆம் தேதி அன்று, லண்டனில் உள்ள ஹோபர்னில் உள்ள மெட்ரோ வங்கி கிளையில் வங்கிக் கணக்கைத் திறக்கச் சென்றபோது, நீரவ் மோதி அங்கே கைது செய்யப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு மே மாதத்தில், நீரவ் மோதி நாடு கடத்தும் வழக்கு லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது.
நீரவ் மோதியின் குடும்பம் பல தலைமுறைகளாக வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் பொதுமக்களுக்கு நகைகளை விற்கும் நிறுவனமான கீதாஞ்சலி குழுமத்தின் தலைவரான மெஹுல் சோக்ஸியுடன் நீரவ் மோதி சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.
நீரவ் மோதி இந்தியாவில் ஃபயர்ஸ்டார் டயமண்ட் என்ற நிறுவனத்தையும் தொடங்கினார்.
3. விஜய் மல்லையா
கிங்ஃபிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளுக்கு ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன்பாக்கி வைத்துள்ளதாக இந்திய அரசு கூறுகிறது.
மல்லையா தனது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக வங்கிகளில் இருந்து கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நிலைமை மோசமானபோது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மூடப்பட்டது.
விஜய் மல்லையா 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரிட்டனுக்குச் சென்றார். அதன் பின்னர் அவர் லண்டனில் வசித்து வருகிறார். மல்லையாவை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்காக இந்திய நிறுவனங்கள் பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
உண்மையில், இந்தியாவும் பிரிட்டனும் 1992 ஆம் ஆண்டில் ஒரு நாடுகடத்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, ஆனால் அதன் பின்னர் ஒருவர் மட்டுமே நாடு கடத்தப்பட்டுள்ளார்.
4. லலித் மோதி
ஐபிஎல் அதாவது இந்தியன் பிரீமியர் லீக்கின் முன்னாள் தலைவரான லலித் மோதி 2010 ஆம் ஆண்டு முதல் பிரிட்டனில் வசித்து வருகிறார்.
ஐபிஎல் தலைவராக இருந்த காலத்தில் ஏலத்தில் மோசடி செய்ததாக லலித் மோதி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை எப்போதும் மறுத்தே வந்திருக்கிறார். இதற்கிடையில், அவரை நாடு கடத்த இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியடைந்தது.
உண்மையில், 2008 ஆம் ஆண்டில் ஐபிஎல் நிறுவப்பட்டதில் லலித் மோதி முக்கிய பங்கு வகித்தார். இது இப்போது பில்லியன் டாலர் தொழிலாக மாறியுள்ளது.
லலித் மோதிக்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டுகள் 2010 ஆம் ஆண்டில் இரண்டு அணி உரிமையாளர்களின் ஏலத்தின் போது அதில் தலையிட்டுக் கையாண்டது தொடர்பானதாகும். ஒளிபரப்பு மற்றும் இணைய உரிமைகளை அனுமதியின்றி விற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
2013 ஆம் ஆண்டில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் லலித் மோதி கிரிக்கெட் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு வாழ்நாள் தடை விதித்தது.
5. நிதின் சந்தேசரா
குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபரான நிதின் சந்தேசரா, ரூ.5,700 கோடி வங்கி மோசடி மற்றும் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளார்.
ஸ்டெர்லிங் பயோடெக் உரிமையாளர் நிதின் ஜே. சந்தேசரா தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹிதேஷ் நரேந்திரபாய் படேல், தீப்தி சந்தேசரா மற்றும் சேதன் சந்தேசரா ஆகியோரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு இரண்டு நிறுவனங்களும் (சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு) விசாரணையைத் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவை விட்டு வெளியேறி துபாய் வழியாக நைஜீரியாவுக்குத் தப்பிச் சென்றது அந்தக் குடும்பம் அப்போதில் இருந்து சந்தேசரா குடும்பம், நைஜீரியா மற்றும் அல்பேனியா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமைகளைப் பெற்றுள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு