You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி, சாந்தன் உள்பட 6 பேர் விடுதலை - யார் இவர்கள்?
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி, ஆர்.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருக்கிறது.
இதன்படி, நளினி, ஜெயக்குமார், ஆர்.பி.ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சுதேந்திரராஜா, ஸ்ரீஹரன் ஆகியோர் விடுவிக்கப்படுகின்றனர்.
இன்று மாலை நிலவரப்படி நளினி, ரவிச்சந்திரன் ஏற்கெனவே பரோலில் உள்ளனர். சாந்தன் மற்றும் முருகன் வேலூர் மத்திய சிறையில் உள்ளனர். ராபர்ட் பயஸ், ஜெயகுமார் சென்னை புழல் மத்திய சிறையில் உள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கடந்த மே 18ஆம் தேதி மற்றொரு கைதி பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு அளித்த தீர்ப்பின்படி, தற்போது அந்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் மேலும் ஆறு பேரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியா காந்தியின் கணவரான ராஜீவ் காந்தியைக் கொல்ல நடந்த சதிக்கு உடந்தையாக இருந்ததாக இவர்கள் ஆறு பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த ஆறு பேர் யார், அவர்களைப் பற்றிய சிறிய குறிப்புகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:
எஸ். நளினி
ராஜீவ் காந்தி கொலையில் பிரதான குற்றவாளிகளுடன் சேர்ந்து கூட்டு சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி ஸ்ரீஹரன்.
இந்தியாவின் மிக நீண்ட காலம் சிறை தண்டனை பெற்ற பெண் ஆக இவர் கருதப்படுகிறார்.
53 வயதாகும் நளினி, கிட்டத்தட்ட 29 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை மட்டுமே அவர் சிறைக்கு வெளியே பரோலில் வந்தார்.
2016இல் முதன் முதலாக இவர் 12 மணி நேரம் பரோலில் வந்து தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.
இரண்டாவதாக 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு 51 நாள் பரோல் வழங்கப்பட்டது. மகள் ஹரித்ராவின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி அவர் பரோலில் வெளியே வந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி தமிழக அரசு நளினியை பரோலில் விடுவிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் அவர் பரோலில் விடுவிக்கப்பட்டார்.
ஸ்ரீஹரன் என்கிற முருகன்
ஸ்ரீஹரன் என்றழைக்கப்படும் முருகன்தான் இந்தக் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் என்று இந்திய புலனாய்வுத்துறையின் சிறப்பு விசாரணைக்குழு குற்றம்சாட்டியிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்டிடிஈ) என்ற தமிழ் போராளிக் குழுவின் தீவிர உறுப்பினராக அவர் இருந்தார்.
இலங்கையைச் சேர்ந்த இவர் இளம் வயதிலேயே எல்டிடிஈ இயக்கத்தில் சேர்ந்தார்.
முருகன், இந்திய குடிமகளான நளினியை மணந்தார். 1992 இந்த தம்பதி சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
ராபர்ட் பயஸ்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான பி. ராபர்ட் பயஸ் இலங்கை குடிமகன்.
முன்னாள் பிரதமரின் கொலையுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தீவிர உறுப்பினர்களுக்கு பயஸ் அடைக்கலம் அளித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு அது புலனாய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.
பயாஸ் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்று புலனாய்வுத்துறையால் சந்தேகிக்கப்பட்டவர்.
அவர் போராளிக் குழுவின் தளங்களை அமைப்பதற்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார் என்றும் மற்ற குற்றவாளிகள் தங்கியிருந்த இடங்களை வாடகைக்கு எடுத்து ராஜீவ் காந்தி படுகொலைக்கான திட்டமிடலுக்கு உடந்தையாக இருந்தார் என்கிறது சிபிஐ.
ஜெயகுமார்
விடுவிக்கப்பட்டுள்ள மற்றொரு கைதியான ஜெயகுமார், ராபர்ட் பயஸின் மைத்துனர்.
குற்றவாளிகள் படுகொலை நிகழ்த்த ஒரு வீட்டை தமிழ்நாட்டில் ஏற்பாடு செய்ய உதவியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
ரவிச்சந்திரன்
தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு இலங்கை பிரஜை ரவிச்சந்திரன்.
இந்தியாவில் பயண நிறுவனம் ஒன்றை நிறுவி, முன்னாள் பிரதமரைக் கொல்ல விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதற்காக ஒரு வாகனத்தை வாங்கியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
டி.சுதேந்திரராஜா என்கிற சாந்தன் என்கிற சின்ன சாந்தன்
இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான சுதேந்திரராஜா விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்.
பொட்டு அம்மானால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கொலையாளிகள் குழுவில் இருந்த ஒன்பது பேரில் இவரும் ஒருவர்.
கொலை மற்றும் கிரிமினல் சதி செய்ததற்காக அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
வழக்கும் சுருக்கமான பின்னணியும்
ராஜீவ் காந்தி, 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில், இலங்கையைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தைச் சேர்ந்த பெண் தற்கொலை குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் நேரடியாக பங்கேற்றவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக ஏழு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில், ராஜீவ் காந்தியின் மனைவியும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் தலையீட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி ஸ்ரீஹரனின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2008ல் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்கு சென்று நளினியை சந்தித்தார்.
மேலும் 6 குற்றவாளிகளின் தண்டனையும் 2014-ல் குறைக்கப்பட்டது.
அதே ஆண்டு, அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடங்கினார்.
கடந்த மே மாதம் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுவிக்க உச்ச நீதிமன்றம் தனது அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்தியது.
அவரது விடுதலை தொடர்பாக மாநில ஆளுநர் முடிவெடுப்பதில் தாமதம் செய்தார் என்ற அடிப்படையில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க நேர்ந்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அந்த அடிப்படையே தற்போது மீதமுள்ள ஆறு பேரின் விடுதலைக்கும் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. முன்னதாக, குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அமைச்சரவை 2018ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநருக்கு பரிந்துரை செய்ததாகவும், அதற்கு ஆளுநர் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்