இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்குமா? தவிர்ப்பதற்கான 3 வழிகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆர்.யசிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையில் 'திட்வா' புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.
இது ஒருபுறம் மனித துயரத்தை வெளிப்படுத்தியிருக்கும் அதே வேளையில் மறுபுறம் தொடர்ச்சியான காலநிலை அதிர்ச்சிகளைத் தாங்கும் அளவுக்கு இலங்கையிடம் போதிய நிதி வசதி இல்லை எனவும், இத்தகைய தீவிர வானிலை மாற்றங்கள் 2022 பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் எட்டப்பட்ட முன்னேற்றங்களைத் தலைகீழாக மாற்றக்கூடும் எனவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் உலக நாடுகளைச் சேர்ந்த அனர்த்த முகாமைத்துவ தொழில்நுட்ப நிபுணர்கள் ஊடாக இப்பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் உலக வங்கி மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டு வருகின்றது. அம்மதிப்பீட்டின் ஊடாகக் கண்டறியப்பட்ட ஆரம்பகட்டத் தகவல்களை உள்ளடக்கிய பூர்வாங்க அறிக்கை இந்த வாரம் வெளியிடப்பட்டது.
பேரனர்த்தத்தினால் 4.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பாதிப்பு
'திட்வா' புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உலக வங்கியின் பூர்வாங்க மதிப்பீட்டு அறிக்கையின் தரவுகளுக்கு அமைய, இப்பேரனர்த்தத்தினால் ஏற்பட்ட பௌதிக ரீதியான நேரடிப் பாதிப்புகளின் பெறுமதி 4.1 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4 சதவீதம் எனவும் கணிக்கிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த அனர்த்தத்தினால் ஏற்பட்ட மறைமுகப் பாதிப்புகளின் பெறுமதி மற்றும் மீளக்கட்டியெழுப்பல் செலவினங்கள் என்பன கணிப்பிடப்பட்டதன் பின்னர் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட மொத்தப் பாதிப்பின் அளவு மேலும் உயர்வடையக்கூடும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த 4.1 பில்லியன் அமெரிக்க டாலராகக் கணிப்பிடப்பட்டிருக்கும் பௌதிக ரீதியான நேரடிப் பாதிப்புகளில் வீதிகள், பாலங்கள், புகையிரதப் பாதைகள், மின்விநியோகக் கட்டமைப்புகள், தொலைத்தொடர்புக் கட்டமைப்புக்கள், நீர் விநியோகக் கட்டமைப்புகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் பெறுமதி 1.735 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
- பொதுமக்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் பெறுமதி 985 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
- நெற்பயிர்ச்செய்கை நிலங்கள், ஏனைய விவசாய நிலங்கள், விவசாய நடவடிக்கைகளுக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகள், உள்ளூர் மீன்பிடி நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் என்பன உள்ளடங்கலாக விவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பின் பெறுமதி 814 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
- பாடசாலைகள், சுகாதார வசதிகள், வணிகங்கள், கைத்தொழில் என்பன உள்ளிட்ட வீடுகள் அல்லாத கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் பெறுமதி 562 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
"வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையே பறித்துள்ளது"

பட மூலாதாரம், Getty Images
இந்த நேரடித் தாக்கமானது இலங்கையின் பொருளாதார மீட்சிப்பாதையை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன், அடுத்த கட்ட நிலைமைகளை கையாள்வதில் அரசாங்கம் நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்துள்ளதாக இலங்கையின் முன்னணி பொருளாதார ஆய்வு அமைப்பான "அட்வகாட்டா" சுட்டிக்காட்டுகின்றது.
இது குறித்து அட்வகாட்டா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தனநாத் பெர்னாண்டோ பிபிசி தமிழிடம் பேசுகையில், "இந்த அனர்த்தம் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையே பறித்துள்ளது. இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மத்திய மலைநாட்டின் பிரதேசங்களில் மிகவும் கடினமாக உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நாசமாக்கியுள்ள நிலையில் அவற்றை மீட்டெடுக்கும் செயற்பாடுகள் மிகவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளது." எனத் தெரிவித்தார்.
மறைமுக தாக்கங்கள் குறித்து ஆராய்ந்தால் இந்த இழப்பானது மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறும் தனநாத், இலங்கை கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களின் வாழ்வாதாரம், அவர்கள் மீண்டெழும் கால எல்லை, இதனால் அடுத்ததாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படப்போகும் தாக்கங்களை கணக்கிட்டால் இந்த சேதங்கள் மற்றும் அதனால் ஏற்படப் போகும் விளைவுகள் மிக மோசமானதாக அமையப் போகின்றது." என்றார்.
அதுமட்டுமல்லாது இந்த பேரனர்த்தத்தில் அதிகளவில் பொது சொத்துகளே அழிந்துள்ளன என்றும் தனநாத் தெரிவித்தார்.
"இவற்றை மீள் கட்டமைக்க அரச நிதியே முழுமையாக செலவாகும். ஆகவே அரசாங்கத்தின் ஏனைய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இவற்றை முதலில் கையாள வேண்டியுள்ளமையானது மிகப்பெரிய கடினத்தன்மையை உருவாக்கப் போகின்றது" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பட மூலாதாரம், Dhananath Fernando
'வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை மேலும் அதிகரிக்கக் கூடும்'
இப்பேரனர்த்தத்தின் விளைவாக விவசாயத்துறை வெகுவாகப் பாதிப்படைந்தமையினால் வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை என்பன மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக வங்கியின் பூர்வாங்க அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 'திட்வா' சூறாவளியினால் சுமார் 277,000 விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மீன்பிடித்துறையில் 20.5 முதல் 21.5 மில்லியன் இலங்கை ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
மேலும் 2026-ஆம் ஆண்டின் பெரும்போகத்தை எதிர்பார்த்து பயிர்ச்செய்கையை மேற்கொண்ட மற்றும் பயிரிடுவதற்கு உத்தேசித்திருந்த விவசாயிகள் இப்பேரனர்த்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பேரனர்த்தத்தினால் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு
அதேபோன்று, இப்பேரனர்த்தத்தினால் தொழிலாளர்கள் மத்தியிலும், தொழிற்சந்தையிலும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பில் மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டிருக்கும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம், அதனூடாகக் கண்டறியப்பட்ட அடிப்படைத் தகவல்கள் அடங்கிய பூர்வாங்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
'அந்த அறிக்கையில் 'திட்வா' புயலை அடுத்து ஏற்பட்ட பேரனர்த்தமானது 16 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை அச்சுறுத்தல் நிலைக்குள் தள்ளியிருக்கிறது. இதன் பெறுமதி சுமார் 16 பில்லியன் டாலராகும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 374,000 தொழிலாளர்கள் வசிப்பதாகவும், இதன் விளைவாக அவர்கள் தமது வாழ்வாதாரம் மற்றும் குடும்ப வருமானத்தை இழந்திருப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் 244,000 ஆண்களையும், 130,000 பெண்களையும் உள்ளடக்கிய இத்தொழிலாளர்களின் மாதாந்த வருமான இழப்பு சுமார் 48 மில்லியன் அமெரிக்க டாலராகும்.

பட மூலாதாரம், Getty Images
துறை ரீதியாக நோக்குமிடத்து இவர்களில் 85,000 பேர் விவசாயத்துறை சார்ந்தும், 125,000 பேர் கைத்தொழில்துறை சார்ந்தும், 164,000 பேர் சேவைத்துறை சார்ந்தும் தொழில்களில் ஈடுபட்டவர்களாவர் என்ற தரவுகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது.
விவசாயம் மற்றும் மீன்பிடி என்பன இந்நாட்டுப் பொருளாதாரத்தின் இரு பிரதான துறைகளாகும். மொத்த வேலைவாய்ப்பில் நான்கில் ஒரு பங்கானவை இவ்விரு துறைகளையும் சார்ந்தவையாகும்.
குறிப்பாக மத்திய மலைநாட்டில் மேற்கொள்ளப்படும் தேயிலைப் பயிர்ச்செய்கை மூலம் 2.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதுடன், அத்துறையானது வருடாந்திதிர ஏற்றுமதிகளில் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் பங்களிப்பைக் கொண்டிருக்கின்றது.
தற்போதைய பேரனர்த்தத்தினால் இத்துறை பரந்துபட்டளவில் பாதிப்படைந்திருக்கின்றது. அதேவேளை ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் பிரகாரம் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும் பகுதிகளில் 23 சதவீதமானவை வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படக் கூடிய அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன என்ற காரணிகளை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் வெளிப்படுத்தியுள்ளது.
அத்தியாவசிய பொருள் விலையேற்றம் மக்களுக்கு நெருக்கடி தருமா?
இந்த அனர்த்தத்தின் விளைவாக நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் வரி உயர்வுக்கு பொதுமக்கள் முகங்கொடுக்க நேரிடலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.
"பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதேநேரத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காத வகையில் பொருளாதாரத்தையும் கையாள வேண்டும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் மக்கள் அதிக பணம் கொடுத்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது. எனினும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்போகின்றதா என்ற சந்தேகம் எழுதுள்ளது," என அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்குமா?
இந்நிலையில், பேரனர்த்தத்தின் பின்னர் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்ரிக்ளிற்ஸ் உள்ளிட்ட 121 சர்வதேசப் பொருளாதார நிபுணர்கள் இலங்கையின் நிலைமையை தெளிவுபடுத்திய கூட்டறிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளனர்.
இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் நாட்டின் கடன் நெருக்கடிக்கு நிலையான தீர்வைத் தரவில்லை. 'திட்வா' சூறாவளி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்க வருமானத்தில் 25 சதவீதத்தை வெளியகக் கடன் செலுத்தலுக்குப் பயன்படுத்துவது உலகிலேயே மிக உயர்ந்த அளவாகும் என அந்த அறிக்கையின் ஊடாக அவர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.
மேலும், "இது நாட்டின் மீள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பெரிதும் பாதிக்கிறது. மீண்டும் ஒரு கடன் நெருக்கடி ஏற்பட 50 சதவீத வாய்ப்புள்ளதாகச் சர்வதேச நாணய நிதியமே எச்சரித்துள்ள சூழலில், தற்போதைய கடன் செலுத்தலை உடனடியாக இடைநிறுத்திவிட்டு, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய புதிய கடன் மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்ல வேண்டும்." என அவர்கள் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
"நாட்டை மீட்டெடுக்க அரசாங்கத்திடம் நிதி உள்ளது"

பட மூலாதாரம், Anil Jayantha
இவ்வாறான சவால்கள் குறித்து சர்வதேச மற்றும் தேசிய அளவில் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நிதி அமைச்சர் அனில் ஜயந்த பிபிசி தமிழிடம் விவரித்தார்.
"தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்கும் போது பொருளாதார ரீதியாக முழுமையாக வீழ்ச்சியடைந்த நாட்டையே பொறுப்பேற்றோம். ஆகவே நெருக்கடியில் இருந்த நாட்டை முதலில் மீட்டெடுக்கும் சவாலுக்கே முகங்கொடுக்க நேர்ந்தது. இம்முறை அரசாங்கம் முன்வைத்த வரவு செலவு திட்டமானது நாட்டின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தும் வகையிலான வரவு செலவு திட்டமாகவே அமைந்தது." என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் "அதில் படிப்படியாக வெற்றிகண்டு வந்திருந்த நிலையில் தான் எதிர்பாராத விதமாக இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. ஆனால் இந்த அனர்த்தம் அரசாங்கத்தின் வெற்றிகரமான பயணத்தை தடுத்துள்ளது என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. கடந்த ஆண்டு அரசாங்கம் கையாண்ட அரச நிதி முகாமைத்துவம் மற்றும் அனாவசிய செலவுகளைக் குறைத்து சேமித்த பணத்தில் ஒரு பங்கினை மக்களுக்காக செலவு செய்யக்கூடியதாக உள்ளது," என்றார்.
சர்வதேச நாடுகளின், அமைப்புகளின் நிதி உதவிகள் மற்றும் நீண்டகால கடன் அடிப்படையிலான நிதி உதவிகள் கிடைத்து வருகின்ற நிலையில் இந்த மோசமான நிலைமைகளை கையாள இலகுவாக உள்ளது என்று அனில் ஜயந்த தெரிவித்தார்.
முதலில் மக்களின் வாழ்வாதாரத்துக்கும், நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்கினை வகிக்கும் துறைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை சீர்செய்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுதுவதற்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை முன்னுள்ள 3 வழிகள்
தற்போது செலவு செய்வதற்கான நிதி தம்மிடம் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இந்த நிதி தற்போதைய பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு போதுமானதாக இருந்தாலும் அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முன்னெடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட வேலைத் திட்டங்களுக்கு இந்த நிதி போதுமானதாக இருக்காது என்பதை பொருளாதார ஆய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
இலங்கையின் பிரதான பொருளாதார ஆய்வு அமைப்புகளான 'அட்வகாட்டா' மற்றும் 'வெரிடே', பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை சாதாரண நிலைமைக்கு கொண்டுவர மேலும் சில ஆண்டுகள் கட்டாயமாக தேவைப்படும், அதுவரையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படப் போகும் தாக்கங்களை சமாளிக்க மிகக் கடினமாக இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.
விவசாய நிலங்கள் பாரிய அளவில் சேதமடைந்துள்ள நிலையில் உணவு தட்டுப்பாடு மற்றும் உற்பத்தியில் பின்னடைவுகளுக்கு முகங்கொடுத்தே ஆகவேண்டிய சூழ்நிலை உருவாகும் என வெரிடே ஆய்வு மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நிஷான் டி மெல் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"இந்த காலகட்டத்தில் சகல பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கே முன்னுரிமை கொடுக்கும் நிலைமை ஏற்படும்., இந்த நெருக்கடிகளை சமாளிக்க அரசாங்கம் புதிதாக பணத்தை அச்சடிக்க வேண்டும் அல்லது கடன் பெற வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் வரிகளை அதிகரிக்க வேண்டும். இது மூன்றும் இல்லாத மாற்றுவழி அரசாங்கத்திடம் இல்லை," என்கிறார் தனநாத் பெர்னாண்டோ.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












