You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு மூலம் பாஜகவுக்கு வழிவிடுகிறதா அதிமுக?
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
அ.தி.மு.க-வின் தொடர் தோல்விகளுக்கு மத்தியில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது, தமிழக அரசியல் அரங்கில் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சில நாட்களிலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது ஏற்கத்தக்கதா? இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் வெல்லும், பணப்பட்டுவாடா அதிகம் நடக்கும் என்பதுதான் தமிழக தேர்தல் களத்தின் வரலாறா? போட்டியில் அ.தி.மு.க இல்லாதது யாருக்கு சாதகமாக இருக்கும்?
2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றார். அவர் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் காலியான அத்தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புறக்கணிப்பு ஏன்?
இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, பா.ம.க மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஹோமியோபதி மருத்துவர் அபிநயா களம் காண்கிறார்.
ஆனால், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.
“தி.மு.க-வினரும் அமைச்சர்களும் ஆட்சி அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவதோடு, பணபலம் மற்றும் படைபலத்துடன் பல்வேறு அராஜக மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள்”, “மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க மாட்டார்கள்” என்பதால், இந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக, எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தபோது, நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இத்தகைய பணப்பட்டுவாடா மூலம் அக்கட்சி வென்றதாக எடப்பாடி பழனிசாமி சில உதாரணங்களையும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோதும் இதே வார்த்தைகளை அவர் பிரதிபலித்தார். “இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற எல்லா ஆட்சி அதிகார பலத்தையும் தி.மு.க பயன்படுத்தும். பணத்தை வாரி இறைப்பார்கள், பரிசுப்பொருட்களை வழங்குவார்கள். அமைச்சர்கள் பூத் வாரியாக சென்று பண மழை பொழிவார்கள். ஜனநாயக படுகொலை நடக்கும். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது,” எனக் கூறினார்.
பாஜகவுக்கு வழிவிடுகிறதா அதிமுக?
இந்தத் தேர்தல் புறக்கணிப்பின் மூலம் நல்ல வாய்ப்பை அ.தி.மு.க இழந்துவிட்டதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
“இந்தத் தேர்தலில் அ.தி.மு.க நின்றிருந்தால் அக்கட்சிக்கு இரண்டாம் இடம் கிடைத்திருக்கும். இந்தப் புறக்கணிப்பால், தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகள் பா.ம.க, நாம் தமிழர் கட்சிக்குப் பிரிய வாய்ப்புகள் உண்டு,” என்கிறார் ப்ரியன்.
இப்படிப் பிரியும் வாக்குகளில் கணிசமாக 60% வாக்குகள் பா.ம.க-வுக்குச் செல்ல வாய்ப்புகள் உண்டு என்கிறார் அவர். அதற்கு, விக்கிரவாண்டி தொகுதியில் கணிசமாக வன்னியர் வாக்குகள் பா.ம.க-வுக்குச் செல்லும் என்பதே காரணம் என்கிறார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி அடங்கியுள்ள விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் நின்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், 70,703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்கு சதவிகிதம் 41.39%. இரண்டாம் இடத்தை அ.தி.மு.க-வின் பாக்யராஜ் (35.25%) பிடித்தார். பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் முரளிசங்கர் (15.78%) வாக்குகளைப் பெற்றார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர் புகழேந்தி 49% வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 43% வாக்குகளைப் பெற்றார்.
விக்கிரவாண்டி தொகுதியில் தங்கள் இருப்பை நிலைநிறுத்த வாய்ப்பு கிடைத்தும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போன்ற வலுவான தலைவர்கள் அம்மாவட்டத்தில் இருந்தும் அ.தி.மு.க தவறவிட்டுவிட்டதாக ப்ரியன் கூறுகிறார்.
அ.தி.மு.க-வின் தேர்தல் புறக்கணிப்பை பிரதான அரசியல் கட்சி எனும் முறையில் ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறும் ப்ரியன், தி.மு.க தேர்தல் அத்துமீறலில் ஈடுபட்டால் அதை களத்தில் நின்று மக்களிடம் கொண்டு செல்வதுதானே எதிர்க்கட்சியின் வேலையாக இருக்கும் என்றும் கூறினார்.
“பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த தேர்தலையொட்டி அத்தொகுதிக்குச் சென்று தொடர்ந்து பேசுவார். அதன்மூலம் கவனம் பெறுவார். அப்போது அ.தி.மு.க எங்கு இருக்கும், என்ன செய்யும்?” என அவர் கேள்வி எழுப்புகிறார்.
முந்தைய தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமியின் மீது குறை கூறினாலும், இடைத்தேர்தலில் நின்று தோற்றிருந்தாலும் மக்கள் அவ்வாறு பேச மாட்டார்கள் என்கிறார் ப்ரியன்.
'தோல்வி பயம்'
அ.தி.மு.க, தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே தேர்தலை புறக்கணித்துள்ளதாகக் கூறுகிறார், தி.மு.க செய்தித்தொடர்பாளர் ரவீந்திரன் கான்ஸ்டன்டைன்.
“தி.மு.க மீது விமர்சனங்களை எழுப்பும் அ.தி.மு.க, முன்பும் இடைத்தேர்தல்களில் நின்றிருக்கக் கூடாது. இந்தத் தேர்தல் நியாயமான முறையிலேயே நடக்கும்,” என்றார்.
அ.தி.மு.க எனும் கட்சியை நிலைநிறுத்தியதே தி.மு.க ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல் தான் என, 1973-இல் நடந்த திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தலை நினைவுகூர்கிறார் அவர்.
1972-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கி சில மாதங்களில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில், அ.தி.மு.க சார்பில் முதன்முறையாக இரட்டை இலை (தனிச்சின்னம்) சின்னத்தில் போட்டியிட்ட கே. மாயத்தேவர் 2.60 லட்சம் வாக்குகள் பெற்று அ.தி.மு.க-வின் முதல் வெற்றியைப் பதிவு செய்தார். தி.மு.க-வின் பொன் முத்துராமலிங்கத்தால் மூன்றாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. சிண்டிகேட் காங்கிரசின் வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தன் இரண்டாம் இடம் பெற்றார். தமிழக இடைத்தேர்தல்கள் வரலாற்றில் ஆளுங்கட்சி அல்லாத ஒரு புதிய கட்சி பெற்ற இந்த வெற்றி இன்று வரை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க இடைத்தேர்தலை புறக்கணிப்பது இது புதிதல்ல. 2009-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், தி.மு.க ஆட்சியிலிருந்தபோது நடந்த இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலையும் அப்போதைய அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா புறக்கணித்தார்.
“ஆனால், முன்பு 5 இடைத்தேர்தல்களை புறக்கணித்த ஜெயலலிதா தான், தருமபுரி பென்னாகரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டார்,” என்கிறார், கான்ஸ்டன்டைன்.
2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிட்டதைத்தான் கான்ஸ்டன்டைன் குறிப்பிடுகிறார். ஆனால், அந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் இன்பசேகரன் சுமார் 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ம.க சார்பில் போட்டியிட்ட தமிழ்க்குமரன் இரண்டாமிடம் பெற்றார். ஆனால், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட அன்பழகன், டெபாசிட் இழந்தார்.
தொடர் தோல்விகளுக்கு மத்தியில் இந்த இடைத்தேர்தலிலும் தோற்றால், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு யாரும் வர மாட்டார்கள் என்ற அச்சத்திலேயே அ.தி.மு.க புறக்கணித்துள்ளதாக கான்ஸ்டன்டைன் கூறுகிறார்.
ப.சிதம்பரம் விமர்சனம்
அ.தி.மு.க குறித்த தி.மு.க-வின் இத்தகைய விமர்சனங்கள் குறித்து பதிலை அறிய அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர் கோவை சத்யனிடம் பேசினோம். அப்போதும், “தி.மு.க-வின் எட்டு அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதியை முகாமிட்டுள்ளனர். பணப்பட்டுவாடா அதிகளவில் நடக்கும். தேர்தல் புறக்கணிப்பு குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் தெளிவாக விளக்கியுள்ளார், அதைத்தவிர சொல்வதற்கு வேறொன்றுமில்லை,” என்றார்.
இதையே அ.தி.மு.க-வின் மூத்தத் தலைவர் வளர்மதியும் எதிரொலித்தார். “தேர்தலைப் புறக்கணித்துவிட்டதால் இதுகுறித்து கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை,” என்கிறார் அவர்.
இதனிடையே, காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்காக, மேலிட உத்தரவின் பேரிலேயே அ.தி.மு.க இத்தேர்தலை புறக்கணித்துள்ளதாக,” எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு கட்சியும் அதன் முடிவுகளை தானாக எடுப்பதாகவும் பா.ஜ.க இதில் ஒன்றும் செய்யவில்லை என்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல்களும் பணப்பட்டுவாடா புகாரும்
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்கள் என்றாலே ஆளுங்கட்சித் தரப்பில் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்கள் எழுவது வழக்கம்.
“தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் வெற்றி கௌரவப் பிரச்னையாக பார்க்கப்படுவதாலேயே ஆளுங்கட்சியின் மீது பணப்பட்டுவாடா புகார்கள் எழுகின்றன,” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம்.
தி.மு.க-வுக்கு ‘திருமங்கலம் ஃபார்முலா’வும், அ.தி.மு.க-வுக்கு 'கும்மிடிப்பூண்டி ஃபார்முலா'வும் உள்ளது எனக்கூறுகிறார் ஷ்யாம்.
2009 -ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா மூலம் தி.மு.க வெற்றியடைந்ததாகக் கூறப்படும் நிகழ்வின் தொடர்ச்சியாகத் தேர்தலில் பணம் வழங்கி வெற்றி பெறும் முறைக்குத் 'திருமங்கலம் ஃபார்முலா' எனப் பரவலாக அறியப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடந்த சுமார் 35 இடைத்தேர்தல்களில் 30 இடைத்தேர்தல்களை ஆளுங்கட்சியே வென்றிருப்பதாக அவர் கூறுகிறார்.
“இடைத்தேர்தல் புறக்கணிப்பு எப்போதுமே அரசியல் நகர்வுதான். அடுத்த தேர்தலில் கூட்டணிக்கு அது கட்டியம் எனும் ரீதியில்தான் அ.தி.மு.க-வின் புறக்கணிப்பைப் பார்க்க முடியும்,” என்கிறார் ‘தராசு ஷ்யாம்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அவருடைய ஆர்.கே. நகர் தொகுதிக்கு 2017-ஆம் ஆண்டு, டிசம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குக்கர் தனிச்சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி தினகரன், அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வின் மதுசூதனனை சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ் டெபாசிட் இழந்தார். இத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக ‘டோக்கன்’ வழங்கியதாக டிடிவி தினகரன் மீது புகார் எழுந்தது. எனினும் அப்புகாரை தினகரன் மறுத்திருந்தார்.
2019-இல் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து 22 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் தி.மு.க-வும் 9 தொகுதிகளில் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவும் வெற்றி பெற்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா இறந்ததையடுத்து, 2023-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தி.மு.க சார்பில் பணிமனை அமைத்து, பட்டியில் கால்நடைகளை அடைப்பது போல அடைத்து அங்கேயே மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு, பணமும் வழங்கப்பட்டதாக அ.தி.மு.க புகார் எழுப்பியது. அதேபோன்று, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எண்ணற்ற பரிசுப்பொருட்கள் வழங்கியதாகவும் புகார் எழுந்தது.
இதுபோன்று, பல இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி மீது புகார் எழுவதும் அதனை அக்கட்சி மறுப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)