You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண் வயிற்றுக்குள் அறுவை சிகிச்சை கருவியை வைத்து தைத்த மருத்துவர்கள் - 18 மாதம் கழித்து என்ன நடந்தது?
- எழுதியவர், கெல்லி என்ஜி
- பதவி, பிபிசி நியூஸ்
உணவருந்தப் பயன்படுத்தப்படும் தட்டின் அளவுள்ள ஒரு உபகரணத்தை நியூசிலாந்து மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றுக்குள் வைத்துத் தையல் போட்ட 18 மாதங்களுக்குப் பின்னர் தான் உண்மை தெரியவந்துள்ளது. ஆக்லாந்து மருத்துவமனை ஒன்றில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்ணின் வயிற்றில் இது போன்ற உபகரணத்தை வைத்து மருத்துவர்கள் அதை எடுக்காமலேயே தையல் போட்டுள்ளனர்.
இந்த 18 மாத காலத்தில் அந்தப் பெண்ணுக்கு பலமுறை கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் பல மருத்துவர்களை அணுகிய போது இறுதியில் ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது வயிற்றுக்குள் இந்த உபகரணம் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்துப் பேசிய சுகாதாரத் துறை அலுவலர்கள், அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை, ஒரு அப்பாவி நோயாளியை ஏமாற்றிவிட்டதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் டீ வாட்டூ ஓரா ஆக்லாந்து மருத்துவமனையின் தரப்பில் தொடக்கத்தில் இது குறித்துப் பேசிய மருத்துவர்கள், மருத்துவர்கள் கவனக்குறைவாகச் செயல்படவில்லை என்று தெரிவித்தனர்.
ஆனால் நியூசிலாந்து சுகாதாரத்துறை ஆணையர் அதை ஏற்கவில்லை என திங்களன்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அந்த மருத்துவமனை வழக்கமான தரங்களுக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. ஏனென்றால் அந்த உபகரணம் வயிற்றுக்குள் வைக்கப்பட்டது, அதன் பின் அந்தப் பெண் தொடர் மருத்துவப் பரிசோதனைகளுக்கு வந்த போதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த உபகரணம் தொடர்ந்து பெண்ணின் வயிற்றுக்குள்ளேயே இருந்துள்ளது," என மொராக் மெக்டோவெல் கூறினார்.
"இந்த அறுவை கிசிக்கை மேற்கொண்ட மருத்துவர்களிடம் இருந்தும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அறுவை சிசிச்சைக்குப் பின்னர் தையல் போடும் போது அது ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதற்கு அவர்களிடம் பதிலும் இல்லை," என்றார் அவர்.
அலெக்ஸிஸ் வூண்ட் ரெட்ராக்டர் என்பது உணவு அருந்தப் பயன்படுத்தும் தட்டுக்கு இணையான இரு வளையங்கள், குழாய் போன்ற மெல்லிய பிளாஸ்டிக்கால் இணைத்து, உருவாக்கப்பட்டுள்ள ஒரு உபகரணமாகும். குழந்தை பிறப்புக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது உடலுக்குள் அந்த வளையத்தை வைத்த மருத்துவர்கள் தையல் போடுவதற்கு முன்பாக அதை வெளியே எடுக்கத் தவறிவிட்டனர்.
அந்த வளையம் ரேடியோ அலைகளை எதிரொலிக்காது என்பதால் எக்ஸ் ரே எடுத்தபோது அது குறித்த எந்த விவரமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், முதலில் பெரிய உபகரணத்தைப் பயன்படுத்தினாலும், பின்னர் அதை அகற்றிவிட்டு சிறிய உபகரணத்தைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், இறுதியில் அதை வெளியில் எடுக்கத் தவறியுள்ளளனர்.
ஆக்லாந்து நகர மருத்துவமனையில் இப்படி ஒரு உபகரணத்தை உடலுக்குள் வைத்து விட்டு மருத்துவர்கள் எடுக்கத் தவறிய சம்பவங்கள் ஒரே ஆண்டில் இரண்டு முறை நிகழ்ந்துள்ளதை மருத்துவத்துறை ஆணையர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் பயனுள்ள நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என மெக்டோவெல் கூறினார்.
"2021 ஆம் ஆண்டில் அந்த உபகரணம் [ரெட்ராக்டர்] அகற்றப்படும் வரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு குறிப்பிடத்தக்க காலப்பகுதியில் அந்தப் பெண் தொடர்ச்சியாக கடுமையான வலிகளை அனுபவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அவரது உடல்நலம், நல்வாழ்வு மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்கொண்ட மோசமான அனுபவங்கள் மற்றும் கவலைக என்னை வெகுவாகப் பாதித்துள்ளன," என்று அவர் கூறினார்.
20 வயதில் இருக்கும் அந்தப் பெண், 2020ல் குழந்தை பிறந்து 18 மாதங்களில் பலமுறை தனது மருத்துவரிடம் பரிசோதனைகளுக்காகச் சென்றுள்ளார். மேலும் வலியின் காரணமாக ஒரு சூழ்நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கும் சென்றுள்ளார். (அவருடைய தனியுரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் அவரது பெயரை வெளியிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.)
2018ம் ஆண்டு இதே போன்ற ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு பெண்ணின் அடிவயிற்றில் ஒரு சிறிய உபகரணத்தை வைத்துத் தையல் போட்ட மருத்துவர்கள் பின்னர் இரண்டாவது முறையாகவும் அதே போன்ற தவற்றைச் செய்தது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக மெக்டோவெல் கூறினார்.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் ஒரு "எண்ணிக்கைக் கொள்கையை" கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதாவது, அறுவை சிகிச்சையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் ஒவ்வொரு சிகிச்சையின் போதும், பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களுக்கும் கணக்கு வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நடைமுறைதான் அது.
ஆனால் சில அறுவை சிகிச்சை நிபுணர்கள் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த போது, அந்த கொள்கையைக் கூட முறையாகப் படித்துத் தெரிந்துகொள்ளவில்லை என்று மருத்துவ ஆணையர் கூறினார். மேலும், இதே போல் மருத்துவ உபகரணங்களை எண்ணும் போது, அதில் அலெக்சிஸ் வூண்ட் ரெட்ராக்டர்களைச் சேர்க்கவே இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் செவிலியர் ஒருவர் விசாரணை அதிகாரிகளுக்கு அளித்த பதிலில், இந்த ரெட்ராக்டரைப் பயன்படுத்தும் போது, அதன் பாதி, நோயாளியின் உடலுக்கு வெளியே இருப்பதாலும், அதை மறந்துவிடுவதற்கான ஆபத்தே இல்லை என்ற நிலையில், அது எப்படி பெண்ணின் அடிவயிற்றுக்குள் முழுமையாகச் சென்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார்.
அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது, அறுவை சிகிச்சை நிபுணர், ஒரு மூத்த மருத்துவப் பதிவாளர், நான்கு செவிலியர்கள், இரண்டு மயக்க மருந்து நிபுணர்கள், இரண்டு மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒரு அறுவை அரங்க உதவியாளர் ஆகியோர் அங்கு இருந்துள்ளனர்.
டீ வாட்டூ ஓரா மருத்துவமனையின் ஆக்லாந்து நகர இயக்குனரான மைக் ஷெஃபர்ட் இந்த சம்பவம் தொடர்பாக நோயாளியிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
"நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் நடவடிக்கைகளை நாங்கள் மதிப்பாய்வு செய்துள்ளோம். இது எங்கள் அமைப்புகள் மற்றும் மருத்துவ செயல்முறைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே மீண்டும் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்," என்று அவர் கூறினார்.
"இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதானவை என்று நாங்கள் பொதுமக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம். மேலும் எங்கள் அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு பராமரிப்பு தரத்தில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு என்ன மாதிரியான தீங்கு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து மருத்துவ ஆணையர் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், சம்பந்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியுமா அல்லது வழக்கு தொடர முடியுமா என்பது குறித்து வழக்கறிஞர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்