You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
4 அரசு பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைக்க உதவிய வேதியியல் ஆசிரியர்
- எழுதியவர், மு. சுப கோமதி
- பதவி, பிபிசி தமிழுக்காக
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலை பள்ளியில் வேதியியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மாலதிக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு 2023 தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தென்காசியை சார்ந்த வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலை பள்ளி அறிவியல் ஆசிரியர் மாலதி.
செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று புதுடெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்குகிறார்.
யார் இந்த மாலதி டீச்சர் ?
இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி இருக்கும் ஆசிரியர் மாலதி செங்கோட்டையில் பிறந்தவர். இவர் தனது பள்ளி பருவம் முழுவதும் அரசு பள்ளியிலேயே படித்தார். வேதியியலில் முதுநிலை மற்றும் உளவியலில் முதுநிலை பட்டங்கள் பெற்றுள்ள ஆசிரியர் மாலதி, வேதியியலில் முனைவர் பட்டமும் பெற உள்ளார்.
2008 ஆம் ஆண்டு முதல் திருப்பூர் பெருமாத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் 3 ஆண்டுகள் பணியாற்றிய அவர், பின்னர் பணி மாறுதல் செய்யப்பட்டு தென்காசி அரசு மேல்நிலை பள்ளியில் ஓர் ஆண்டு பணியாற்றினார். அதன் பின் 2012 முதல் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலை பள்ளியில் பத்து ஆண்டுகளாக முதுநிலை பட்டதாரி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
பல்வேறு அமைப்புகள் ஆசிரியர் மாலதியை பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளன. 26 மணி நேரம் தொடர்ந்து ஆன்லைன் வகுப்பு எடுத்து உலக சாதனையும் படைத்துள்ளார். 2020- 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆசிரியர் மாலதிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணா விருது வழங்கி பாராட்டியது.
மேலும் தன் மாணவர்களில் 4 பேர் உலக சாதனை புரிய உறுதுணையாக இருந்துள்ளார்.
மாணவர்களுக்கு ஆசிரியர் மாலதி என்ன செய்தார் ?
ஆசிரியர் மாலதி ஒரு அறிவியல் ஆசிரியர். அறிவியலை மாணவர்களில் விருப்பப் பாடமாகத் தேர்வு செய்யவேண்டும் என்று அவர் விரும்புகிறார். கடினமான பாடங்களைக் கூட எளிதில் கற்று கொடுப்பவராக ஆசிரியர் மாலதி விளங்குகிறார். வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், பாடல், நடனம், கதை என பல வடிவங்களில் அறிவியல் பாடங்களை மாணவர்களுக்கு அவர் கற்பித்து வருகிறார்.
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அவர் கற்பித்தல் பணியை இடைவிடாமல் தொடர்ந்தார். ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுடன் எப்போதும் இணைந்தே இருந்தார். கிராமப்புறங்களில் மொபைல் போன் வசதி இல்லாதவர்களுக்கும், பார்வையற்ற மாணவர்களுக்கும் ஆடியோ மூலம் பாடங்களை கற்பித்தார்.
மாணவர்களில் ஆர்வங்களை புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளித்தார். சிலம்பத்தில் ஆர்வம் கொண்ட மாணவி ஒருவருக்கு சிலம்பம் சுற்றி கொண்டே நவீன தனிம அட்டவணையில் இருக்கும் 118 தனிமங்களையும் சொல்லி உலக சாதனை புரிய உறுதுணையாக இருந்தார்.
அறிவுசார் இயலாமை மாணவர்களுக்கு தனி கவனம்
ஆசிரியர் மாலதி, தான் பணியாற்றும் பள்ளியில் பயிலும் அறிவுசார் குறைபாடு உள்ள மாணவர்கள் மீதும் தனி கவனம் செலுத்தி வருகிறார். அவர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களுக்குள் உள்ள திறமைகளை மேம்படுத்துவதிலும் தன்னால் இயன்ற அளவுக்கு பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார். இதே போல் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை தற்கால மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதிலும் தனிக்கவனம் செலுத்திவருகிறார்.
"நம் பாரம்பரிய கலைகளை இப்போதைய தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முயற்சி தான் வில்லுப்பாட்டு மூலம் அறிவியலை கற்பிக்கும் முறை. மாணவர்களுக்கு வாழ்வியலோடு அறிவியலை கற்பிக்க வேண்டும் என்பது என் ஆசை. அறிவியல் பாடத்தில் உணவும் மருந்தும் போன்ற பாடங்களை வில்லுப்பாட்டின் மூலம் கற்று கொடுப்பதன் மூலம் மாணவர்களுக்கு அது எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது," என்கிறார் ஆசிரியர் மாலதி.
சைபுல் இஸ்லாம், என்ற 60 சதவிகிதம் அறிவுசார் இயலாமை உள்ள மாணவனுக்கு தனிகவனம் செலுத்தி ஆறு மாதம் பயிற்சி அளித்து 20 திரவங்களின் பெயர்களை 25 வினாடியில் சொல்லி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதில் ஆசிரியர் மாலதி உறுதுணையாக இருந்திருக்கிறார்.
இதே போல் மகேஸ்வரி என்ற 8 ஆம் வகுப்பு மாணவி, வீடியோ எடிட் செய்து கொண்டே தனிம வரிசை அட்டவனையில் இருக்கும் 118 தனிமங்களின் பெயர்களை 45 வினாடிகளில் சொல்லி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கவும் உறுதுணையாக இருந்திருக்கிறார்.
இதே போல் அவரது 8-ம் வகுப்பு மாணவரான கர்ணா என்பவர், பல பாகங்களை இணைத்து ரோபோட்டிக் காரை உருவாக்கிக்கொண்டே, தனிம அட்டவனையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 55 வினாடிகளில் சொல்லி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
சிலம்பம் சுற்றியவாறு 8 ஆம் வகுப்பு மாணவி சக்தி பிரபா தனிம வரிசை அட்டவனையில் இருக்கும் 118 தனிமங்களின் பெயர்களை 50 வினாடிகளில் சொல்லி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
தன்னுடைய மாணவர்கள் மட்டுமல்லாமல் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து தற்போது வரை 500 நாட்களுக்கும் மேலாக இலவசமாக ஆன்லைன் வகுப்புகள் எடுத்து சோழன் உலக சாதனை புத்தகத்திலும் ஆசிரியர் மாலதி இடம் பிடித்துள்ளார்.
"அரசு பள்ளி மாணவர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல" என்றார் ஆசிரியர் மாலதி.
ஆசிரியர் மாலதியின் விருதுகள்
2020- 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆசிரியர் மாலதிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணா விருது வழங்கி பாராட்டியுள்ளது. 500க்கும் மேற்பட்ட இலவச ஆன்லைன் வகுப்பு எடுத்து சோழன் புக் ஆஃ ரெகார்டஸ் உலக சாதனையில் இடம்பெற்று உள்ளார் ஆசிரியர் மாலதி. 2022 ஆம் ஆண்டு, போட்டி தேர்வுக்கு தயாராகும் தமிழ் நாட்டு மாணவர்களுக்கு 26 மணி நேரம் தொடர்ந்து ஆன்லைன் வகுப்பு எடுத்து உலக சாதனை படைத்துள்ளார். மேலும் பல அமைப்புகளிடமும் விருது பெற்று உள்ளார் ஆசிரியர் மாலதி.
கலைகள் முதல் ரோபோடிக்ஸ் வரை 6 ஆம் வகுப்பு மாணவர்களில் இருந்தே பல்வேறு விஷயங்களைக் கற்று கொடுக்க தொடங்கியிருக்கிறார் ஆசிரியர் மாலதி. டாக்டர் ராதாகிருஷ்ணா விருதில் கிடைத்த பரிசு தொகையை மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் கிட் வாங்கி கொடுத்து இருக்கிறார்.
தான் அதை கற்று கொண்டு பின்பு தன் மாணவர்களுக்கும் ரோபோடிக்ஸ் அசெம்பிள் செய்யும் முறை மற்றும் மொபைல் போன் கொண்டு அதனை இயக்கவும் கற்று கொடுத்து உள்ளார். "ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு புதிது புதிதாக கற்பிக்க தானும் தினமும் புதிதாக படித்து கொண்டே இருப்பவராக இருக்க வேண்டும்" என்கின்றார் மாலதி.
பள்ளி மாணவர்களே தயாரித்த செயலி
மொபைல் கேம்ஸில் மூழ்கிய மாணவர்களுக்கு மொபைல் போனில் அறிவியல் வினாடிவினா விளையாட்டை ஆசிரியர் மாலதி அறிமுகம் செய்தார். வேதியியலில் வரும் தனிம அட்டவணையில் இருக்கும் பெயர்களை வினாடிவினா விளையாட்டு மூலம் அந்த செயலியில் கண்டறியலாம்.
மேலும் ஆங்கிலத்தில் இருக்கும் கடினமான வார்த்தைகளை ‘வாய்ஸ் ஆப்’ மூலம் எளிதில் கற்று கொள்ளலாம். இது போன்ற செயலிகளை ஆசிரியர் மாலதியின் வழிகாட்டலின் படி மாணவர்களே வடிவமைத்துள்ளனர். "வகுப்பில் நடத்தப்படும் செயல்முறை சார்ந்த பாடங்களை வீடியோ பதிவு செய்து யூட்யூப்யில் பதிவு செய்வேன். இதன் மூலம் மாணவர்களில் செயல்பாடுகளையும் பெற்றோர்கள் பார்க்க முடிகிறது," என்கிறார் ஆசிரியர் மலாதி.
"ஆசிரியர் பணி என் மூச்சு. மாணவர்கள் என் சொத்து. மருத்துவருக்கும், ஆசிரியருக்கும் ஓய்வு என்பது இல்லை. ஓய்வு பெற்ற பின்பும் மாணவர்களுக்காக என் பணி தொடரும். மாணவர்கள் பலரும் மன ரீதியாக பாதிக்கப்படுவதால் நான் உளவியல் படிப்பும் படித்து வருகின்றேன். ஒரு ஆசிரியர் படித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே என் ஆசை" என்கின்றார் ஆசிரியர் மாலதி.
"நான் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது வாங்குவது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. என் மாணவர்களும் என் ஆசிரியர் சிறந்த ஆசிரியர் என்று பெருமை கொள்கின்றனர். வாழ்நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் கற்றல் கற்பித்தல் பணியை நான் செய்து கொண்டே இருப்பேன். இதுவே என் லட்சியம்" என்கி்றார் ஆசிரியர் மாலதி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்