You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சனாதனம் - இந்து மதம் என்ன தொடர்பு? ஆன்மீகவாதிகள் கூறுவது என்ன?
- எழுதியவர், பிரபாகர் தமிழரசு
- பதவி, பிபிசி தமிழ்
“சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா- இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் சனாதனமும்,”
இது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ் நாடு விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது.
கடந்த வெள்ளியன்று (செப்டம்பர் 1) சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்தகொண்ட உதயநிதி ஸ்டாலின், இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்களிப்பு என்ற தலைப்பில் இருந்த கேலிச்சித்திரங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் மாநாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த பெயரை வாழ்த்தி பேசினார். “சனாதனத்தை எதிர்ப்பதைவிட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் ஆகும். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமாக தலைப்பு வைத்துள்ளீர்கள். அதற்கு எனது வாழ்த்துகள்,” என்றார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு தற்போது தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. அவர் பேசியதற்கு மறுநாளான சனிக்கிழமையன்று (செப்டம்பர் 2), பாஜக ஐடி பிரிவுத் தலைவர் அமித் மால்வியா உதயநிதி ஸ்டாலின் பேசிய காணொளியை பகிர்ந்து, சனாதன தர்மத்தை பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய உதயநிதி அழைப்பு விடுப்பதாக குற்றம் சாட்டினார்.
அதற்கு பதிலளித்த உதயநிதி, தான் இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுக்கவில்லை என மறுத்தார். மேலும், தான் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், சனாதன தர்மத்தின் பொருள் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
சனாதனம் ஒரு வாழ்வியல் முறையா ?
ஆன்மீகத்தில் சனாதன தர்மத்தின் பொருள் குறித்து தெரிந்துகொள்ள பிபிசி சார்பில், கோயம்புத்தூர் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரிடம் பேசினோம்.
அப்போது அவர், சனாதனம் என்பது ஒரு பழமையான வாழ்வியல் முறை என்றும், அதற்கும் சாதிய படிநிலைகளால் ஆன சமுதாயத்திற்கும் தொடர்பு இல்லை என்றார்.
“சனாதன தர்மம் என்பது ஒரு பழமையான பண்பாடு, ஒரு வாழ்வியல் நெறிமுறை. தாய் தந்தையை மதிக்க வேண்டும், இறைவனை மதிக்க வேண்டும், அனைவரிடமும் அன்புடன் இருக்க வேண்டும்” என்றார்.
மேலும், சனாதனம் என்பது திருக்குறள் உட்பட பல்வேறு அறநெறி நூல்களில் உள்ளதாகக் குறிப்பிடும் மருதாச்சல அடிகளார், சனாதனத்தின் நீட்சி தான் இந்து மதம் என்றார்.
“அதில் சாதி என்பதெல்லாம் பிற்காலத்தில் வந்தது தான். சனாதனதர்மத்தின் நெறிமுறை, ஒவ்வொரு மதத்திலும், அவர்கள் எப்படி கடவுளை பார்த்தார்களோ, அதன் அடிப்படையில் அதைக் கூறியுள்ளனர், எழுதியுள்ளனர்,” என்றார்.
வாழையடிவாழையாக பின்பற்றப்பட்டு வரும் நெறிமுறைகளைத் தான் சானதனதர்மம் எனக்கூறுவதாக அவர் தெரிவித்தார்.
சனாதனம் தமிழர் நெறிமுறையா ?
ஆனால், சனாதனம் தமிழ் மக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள மக்களின் வாழ்வியல் முறை இல்லை என்று வாதிடுகிறார் தமிழ் சைவப் பேரவையின் தலைவர் கலையரசி நடராஜன்.
“சனாதனம் முழுக்கமுழுக்க ஆரியர்களின் வாழ்வியல் முறை. சனாதனத்திற்கும் தமிழர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. இந்திய ஒன்றியத்தில் உள்ள மக்களுக்கே எந்த தொடர்பும் இல்லை,” என்றார் அவர்.
சனாதனத்தை எதிர்ப்பதற்கான காரணம் குறித்து பேசிய அவர், “அவர்கள் வாழ்வியல் நெறிமுறை என்றுதான் பேசுவார்கள். ஆனால், அதில் தான் அவர்கள் வர்ணாசிரம அடிப்படையில் மக்களைப் பிரிப்பார்கள். அதை அவர்கள் சொல்லமாட்டார்கள். இந்த சனாதனதர்மம், வர்ணாசிரம தர்மம், மனுதர்மம் என எந்த வகையில் கூறினாலும், அது மனித குலத்திற்கு எதிரானது தான்,” எனக் கூறினார் அவர்.
அதற்காக அதனை ஒழிக்கலாமா எனக் கேட்டபோது, “எது ஒன்றும் திணிக்கப்பட்டால், அவற்றை ஒழிப்பது தான் நல்லது. ஆரியர்கள் மட்டும் பின்பற்றிய ஒரு முறையை தற்போது அனைவர் மீதும் திணித்திருக்கிறார்கள். அதனை ஒழிப்பது தான் தீர்வு,” என்றார்.
ஆனால், அதனை அவ்வளவு எளிதாக ஒழிக்க முடியாது என்றும் அவர் கருதுகிறார்.
“இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் இரவு பகலாக இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, போராடினால் மட்டுமே இவர்கள் சொல்லும் இந்த மதத்தையும், சாதியையும் நம்மால் ஒழிக்க முடியும்,” என்றார் கலையரசி நடராஜன்.
"எல்லா மதத்திலும் சமூகப்பிரச்சனை உள்ளது"
ஆனால், கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி இந்த சாதி சமூகப்பிரச்சனைகள் இந்து மதத்தைப் போல பிற மதங்களிலும் இருக்கிறது எனக் கூறினார்.
“பல்வேறு பிற மதங்களைப் போலவே, இந்து மதத்தைப் பின்பற்றும் சமூகங்களில் பல பிரச்னைகள் இருந்துள்ளன. இந்த சமூகப் பிரச்னைகளை பல காலகட்டங்களில் மதத் தலைவர்கள் கையாண்டு, மாற்றங்களைப் புகுத்தியுள்ளனர். பலர் இந்து மதத்தை நிராகரித்து வெளியேறி, புது மதங்களை உருவாக்கியுள்ளனர். அல்லது ஏற்கெனவே இருக்கும் பிற மதங்களில் சேர்ந்துள்ளனர்,” என்றார் பத்ரி சேஷாத்ரி.
மேலும், இது ஆரியர்களின் வாழ்வியல் முறை எனச் சொல்லப்படுவதற்கு பதில் கூறிய அவர், ஒரு மதம் எங்கு தோன்றினாலும் யாருக்கு பிடிக்கிறதோ அவர்கள் அந்த மதத்தைப் பின்பற்றிக்கொள்ளட்டும் என்றார்.
“இது ஆரியர்களின் வாழ்க்கை நெறியா என்றால், வெளியிலிருந்து வந்ததா, அந்நியமானதா என்ற கேள்வி எழுகிறது. பௌத்தமும் ஜைனமும் வட இந்தியாவில் தோன்றிய மதங்கள்தாமே? இஸ்லாம் அரேபியாவிலும் கிறிஸ்தவம் மேற்கு ஆசியாவிலும் தோன்றியவைதானே?,” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “ஒரு மதம் எங்கு தோன்றினால் என்ன? அது யாருக்குப் பிடிக்கிறதோ அவர்கள் அந்த மதத்தைப் பின்பற்றிக்கொள்ளட்டும். தமிழர்களின் மிக ஆரம்பக்கால இலக்கியங்களான சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் தொட்டு, சிவனும் திருமாலும் பேசப்படுவதனை நாம் காண்கிறோம்,” என்றார்.
சனாதனத்தை பின்பற்றினால் பிரதமரும், ஆளுநரும் படித்திருக்க முடியாது- ஆதவன் தீட்சண்யா
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் பிபிசி பேசியது.
அப்போது அவர், பழமையான வாழ்வியல் முறை என்றால், இன்றைய ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ் நாடு ஆளுராகியிருக்க முடியாது, பிரதமர் மோதி அந்த பொறுப்புக்கு வந்திருக்க முடியாது, எனக் கூறினார் ஆதவன் தீட்சண்யா.
“நெருப்பு மேல்நோக்கியே சுடர்வதும் நீர் கீழ்நோக்கியே பாய்வதும் எப்படி எப்போதும் மாறாத இயற்கை விதியோ அப்படி இன்னின்னவாறு தான் வாழவேண்டும் என்றுள்ள நிலையான சமூகவிதிகளின் படி மனிதர்கள் வாழ்வதே சனாதன தர்மம்.
ஆனால், இந்த வாசகமே அறிவியல் உண்மைக்கு மாறானது. எப்போதும் மாறாத இயற்கை விதிகள் சமூக விதிகள் இருக்க முடியாது,” என வாதிடும் அவர், அப்படி எதுவும் மாறாவிட்டால், பிரதமர் மோதியும், ஆளுநர் ஆர்.என் ரவியும் படித்திருக்க முடியாது என்றார்.
ஆய்வு நூல் சொல்வது என்ன ?
சனாதனம் குறித்து 1916 ஆம் ஆண்டு பனாரஸில் உள்ள மத்திய இந்து கல்லூரியின் நிர்வாகக்குழு சார்பில் வெளியிட்ட ஆய்வு நூலில் சனாதனம் ஆரியர் மதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“சனாதன தர்மா என்பது, நித்ய மதம், பண்டையக் காலச் சட்டம். அது ஆண்களுக்கு பல வருடங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட வேத மற்றும் புனித நூல்களை மையப்படுத்தியது. இந்த மதம் ஆரிய மதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால், இது தான் ஆரிய இனத்தினருக்கு கொடுக்கப்பட்ட முதல் மதம்,” என அந்த ஆராய்ச்சி நூல் குறித்த அறிமுகத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சனாதனத்தின் அடிப்படையே ஸ்ருத்தி என்றும் அவை தேவர்கள் முழங்கக் கேட்ட முன்னோர்களால் ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் என்றும் சனாதனம் குறித்த இந்த ஆய்வு நூலில் குறிப்பிடுகின்றனர்.
“ஸ்ருத்தி நான்கு வேதங்களைக் கொண்டது. வேதம் என்றால் அறிவு. அதுதான் இந்து மதத்தின் அடிப்படை. அவை(அந்த அறிவு) மதத்தின் ஆண்களுக்கு நான்கு வேதங்களில் வழங்கப்படுகிறது. அவை, ரிக்வேதா, சமர்வேதா, யஜுர்வேதா, அதர்வேதா,” என அந்த நூலில் குறிப்பிடுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்