பாலுறவு இல்லாமலேயே திருமண பந்தத்தில் கணவன் - மனைவி காதலோடு நீடிப்பது சாத்தியமா?

    • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
    • பதவி, பிபிசி தமிழ்

திருமணத்துக்குப் பின்னர் உங்கள் கணவருக்கோ/ மனைவிக்கோ பாலியல் உறவில் விருப்பம் இல்லை என்பது தெரிந்தால் உங்கள் நிலை என்னவாக இருக்கும்?

இந்தக் கேள்வி உங்களை நிச்சயம் திடுக்கிடச் செய்யலாம். ஆனால், தாம்பத்திய வாழ்க்கை மீதான விருப்பம் இல்லாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒருவருக்கு உடலுறவு மீது நாட்டமில்லாமல் போவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

ஒரு சிலருக்கு சிறு வயதில் பாலியல்ரீதியாகத் தாங்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்கள் உடலுறவு மீதான வெறுப்பை ஏற்படுத்துகிறது.

நட்பு, பாசம், காதல் போன்ற பிற உணர்ச்சிகள் மற்றவர்களைப் போலவே இவர்களுக்கு இருந்தாலும் உடலுறவு என்பது இவர்களுக்கு ஒருவித வெறுப்பை ஏற்படுத்துகிறது.

ஒரு சில தம்பதிகள் பாலுறவு கொள்ளாமலேயே தங்கள் பந்தம் திருப்திகரமாக இருப்பதாக உணர்கின்றனர். அதேவேளையில், வேறு சில தம்பதிகளுக்கோ உடலுறவு என்பது அவசியமாகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு அவர்களுடைய திருமண உறவில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

பாலுறவு அற்ற திருமண பந்தம் என்றால் என்ன?

திருமணமான தம்பதிகள் தங்களுக்குள் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பதும் ஆண்டுக்கு மிகச் சொற்ப அளவில் ஈடுபடுவதும் பாலுறவு அற்ற திருமண பந்தமாகக் கருதப்படுகிறது.

பாலுறவற்ற உறவைக் கணக்கிடுவதற்கு சரியான வழி எதுவுமில்லை. ஏனெனில் ஒவ்வொரு நபருக்கும் உடலுறவு தொடர்பாக வெவ்வேறு எதிர்பார்ப்புகளும் விருப்பங்களும் இருக்கும்.

எனவே, ஆண்டுக்கு இத்தனை முறைக்கும் குறைவாக உடலுறவு கொள்வது பாலுறவு அற்ற திருமண பந்தத்தின் கீழ் வரும் என்று வரையறை செய்வது கடினமானது. ஒரு சிலர் மாதத்திற்கு ஒருமுறை உடலுறவு கொண்டாலும் திருப்திகரமாக உணர்கின்றனர். ஒரு சிலர் அதிக முறை உடலுறவு கொள்வதற்கு விருப்பம் கொள்ளலாம்.

பாலுறவு அற்ற திருமண பந்தத்திற்கான காரணங்கள் என்ன?

உடல் குறித்து சிறு வயதிலேயே கற்பிக்கப்படும் கற்பிதங்களும் இதற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார் குழந்தை பிறப்பு மற்றும் பாலியல் ஆரோக்கியம் குறித்த ஆலோசகர் ஜெயஸ்ரீ ஜோதீஸ்வரன்.

"ஒரு சிலர் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பிறப்புறுப்பு குறித்து அருவருக்கத்தக்கது என்ற ரீதியில் கற்பிக்கின்றனர். இதனால், பிறப்புறுப்பைத் தொடுவதையே அருவருப்பானதாக நினைத்து அவர்கள் வளர்கின்றனர்.

உடலுறவு என்பதை அருவருக்கத்தக்கதாக அவர்கள் கருதத் தொடங்குகின்றனர். இவர்கள் திருமண பந்தத்திற்குள் நுழையும்போது, அவர்களுக்கு பாலுறவு சார்ந்த பிரச்னை ஏற்படத் தொடங்குகிறது. தங்களது துணை மீது பாசமாகவும் நெருக்கமாகவும் இருப்பதில் இவர்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், உடலுறவு என்று வரும்போது சிக்கல் ஏற்படுகிறது," என்று அவர் கூறுகிறார்.

பாலீர்ப்பு அற்றவர்கள் (Asexual) குறித்தும் நாம் புரிந்துகொள்வது இங்கு அவசியமாகிறது. பாலீர்ப்பு அற்றவர்களுக்குப் பிறர் மீது பாலியல் ரீதியிலான ஈர்ப்பு இருக்காது அல்லது மிகவும் குறைவாகவே இருக்கும்.

பாலீர்ப்பு அற்றவர்கள் தாங்களாவே விரும்பி இந்த நிலையை எடுத்துக்கொண்டதாகப் பலரும் எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் அப்படியல்ல. அவர்களின் இயல்பே அதுதான்.

இவர்களுக்கு ஒருவர் மீது பாலீர்ப்பு ஏற்படாதே தவிர இவர்களுக்கு பாலுணர்ச்சியே கிடையாது என்று அர்த்தம் இல்லை. பாலுணர்வு ஏற்படுதல், சுய இன்பம் காணுதல் போன்றவை இவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும் இவர்களுக்குப் பிறர் மீது பாலீர்ப்பு ஏற்படுவதில்லை.

பெற்றோர்களுக்காகவும் சமூகத்திற்காகவும் இவர்கள் திருமண பந்தத்தில் நுழையும்போது அங்கு உடலுறவு என்பது கேள்விக்குறியாகிறது.

இவை மட்டுமின்றி சிறுவயதில் பாலியல்ரீதியாக ஏற்பட்ட துன்பத்தின் தாக்கமும் பாலுறவு அற்ற பந்தத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக ஜெயஸ்ரீ கூறுகிறார். "சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் நபருக்கு உடலுறவு என்றாலே ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். உடலுறவு ஒருவித அச்சத்தை அவர்களிடம் ஏற்படுத்துகிறது," என்கிறார் அவர்.

தம்பதிகளுக்கு இடையிலான உறவில் ஏற்படும் விரிசலும் அவர்களது பாலுறவை பெரிதும் பாதிக்கிறது. திருமண பந்தத்தில் மனப் பொருத்தம் என்பது அவசியமாகிறது. உணர்வுப்பூர்வமான பிணைப்பு இல்லாத பந்தத்தில் பாலுறவு என்பது படிப்படியாகக் குறைந்துபோய், ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விடும் என்று கூறுகிறார் ஜெயஸ்ரீ.

“என்னிடம் ஒரு தம்பதி சிகிச்சைக்கு வந்தனர். தனது மனைவி தன்னை அன்பாகப் பார்த்துகொள்கிறார். ஆனால் உடலுறவுக்கு மட்டும் அவர் சம்மதிப்பது இல்லை என்று கூறினார். அவரது மனைவியை அழைத்து விசாரிக்கும்போது, தனது கணவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அது தெரிந்த பின்னர் அவருடன் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தனக்கு தோன்றவில்லை என்றும் கூறினார். இத்தகைய நிகழ்வுகள் திருமண பந்தத்தில் உடலுறவை பாதிக்கிறது,” என்று குறிப்பிடுகிறார்.

குழந்தை பிறந்ததும் அதை வளர்ப்பதே சிலருக்குப் பிரதானமாக இருக்கும். ஒரு சிலருக்கு குடும்பத்தை நடத்த பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பிற எண்ணங்கள் மீது கவனம் செல்லும்.

சிலருக்கு ஆன்மீகம் மீதான ஈடுபாடு அதிகரிக்கும். இத்தகையோருக்கு இயல்பாகவே பாலுறவு மீதான நாட்டம் குறைகிறது. இவையும் பாலுறவு அற்ற பந்தத்திற்குக் காரணமாக அமைகின்றன.

சிலர் அப்செசிவ் கம்பல்சிவ் கோளாறு (OCD) காரணமாக உடலுறவைத் தாங்கள் தவிர்ப்பதாகக் கூறுகிறார்கள் என்று குறிப்பிட்ட ஜெயஸ்ரீ, “இத்தகைய கோளாறு உள்ளவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றியுள்ள இடம் சுத்தமாக, சுகாதாரமாக இருக்க வேண்டும். தங்களைச் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

அடிக்கடி கை கழுவுதல், பொருட்களை அடிக்கடி அடுக்கி வைத்தல் போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுவார்கள். என்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண் ஒருவர், "கணவருடன் உடலுறவில் ஈடுபடுவதில் எனக்கும் ஈடுபாடு இருக்கிறது. ஆனால், அதற்குப் பின்பு நான்தான் படுக்கை விரிப்பைத் துவைக்க வேண்டும், உடலுறவு கொண்ட அதே படுக்கையில் படுப்பதற்கு அருவறுப்பாக உள்ளது. இதற்காகவே உடலுறவைத் தவிர்க்கிறேன்` என்று கூறினார்.

உடலுறவு கொள்வது, மாதவிடாய் போன்றவை அசுத்தமானது என்ற தங்களின் எண்ணம் தவறானது என்று அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இத்தகையோருக்குத் தகுந்த சிகிச்சை அளிப்பது மூலம் அவர்களைச் சரி செய்ய முடியும்,” என்று தெரிவித்தார்.

பாலுறவு அற்ற திருமணத்தில் பாதிப்புகள் ஏற்படுமா?

உடலுறவு அற்ற திருமண பந்தத்தில் பரஸ்பர புரிதலுடன் இருப்பவர்களுக்குப் பெரிய அளவில் பிரச்னை ஏற்படுவதே இல்லை. அவர்களும் பிற தம்பதிகளைப் போலவே இருக்கிறார்கள். ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்கின்றனர். மனரீதியாக நெருக்கத்துடன் உள்ளனர். நட்பாகப் பழகுகின்றனர், கட்டிப்பிடித்தல், கை கோர்த்து நடத்தல் என நெருக்கமாக இருக்கிறார்கள். உடலுறவு மட்டும் அவர்களிடையே நிகழ்வதில்லை.

பாலுறவு அற்ற திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்து அந்த பந்தத்திற்குள் நுழையும் தம்பதிகளில் ஒருவருக்கு சில ஆண்டுகள் கழித்து உடலுறவு தேவையாக இருக்கலாம்.

இத குறித்து தனது துணையிடம் அவர் தெரிவிக்கும்போது, இந்த விருப்பத்திற்கு துணை மறுப்பு தெரிவிக்கும் சூழலில் அவர்களுக்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படும். சிலர் இந்த திருமண பந்தத்தை முடித்துகொண்டு வேறு திருமண பந்தத்திற்குள் செல்ல விரும்புவார்கள். ஒரு சிலர் திருமண பந்தத்திற்குள் இருந்துகொண்டே வேறு துணையை நாடுவார்கள்.

கணவன் - மனைவி ஆகியோரில் ஒருவர் தங்களது துணையிடம் பாலுறவு விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். அப்போது, மற்றவர்,` தனக்கு விருப்பம் இல்லை` என்று கூறும்போது, அவருக்கு வேறு யாரோடும் தொடர்பு இருக்கிறதோ என்று சிலர் எண்ணத் தொடங்குவார்கள்.

ஒருசிலர், தாங்கள் அழகாக இல்லை, கவர்ச்சியாக இல்லை அதனால்தான் துணைக்கு விருப்பம் இல்லை என்று தங்களைப் பற்றி தாழ்வாக எண்ணத் தொடங்கிவிடுவர்.

“ஒரு சிலருக்குள் உடல் சார்ந்த நெருக்கமும் இருக்காது உணர்வுப்பூர்வ பிணைப்பும் இருக்காது. சமூகத்திற்காக கணவன் - மனைவியாக இவர்கள் இருப்பார்கள். இது ஆரோக்கிமானது கிடையாது. இருவரின் மன நலத்திலும் இந்தப் போக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,” என்று ஜெயஸ்ரீ எச்சரிக்கிறார்.

உணர்வுப் பிணைப்புதான் உறவுகளுக்கு அடிப்படை

திருமணம் என்றில்லை, எந்தவொரு உறவுக்குமே உணர்வுப் பிணைப்புதான் அடிப்படையானது. உணர்வுப் பிணைப்பு இல்லாததால்தான் திருமண பந்தம் முறிகிறதே தவிர உடலுறவு இல்லாதது முக்கியமான காரணம் இல்லை என்கிறார் ஜெயஸ்ரீ.

"உடலுறவுதான் திருமண பந்தத்தையே பூர்த்தி செய்கிறது என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்` என்று தெரிவித்தார். 15 சதவீத தம்பதிகளுக்கு பாலுறவு அற்ற பந்தத்தில்தான் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

நமது தாத்தா - பாட்டி ஆகியோரையே எடுத்துக்கொள்வோம். தற்போது அவர்களிடம் உணர்வுப்பூர்வமான பந்தமே அதிகமாக இருக்கும். உடலுறவைவிட உணர்வுரீதியிலான நெருக்கமே முக்கியம் என்று அந்த வயதில் இருப்பவர்கள் முடிவு எடுக்கும்போது, இளைய தலைமுறையினர் இடையே அத்தகைய எண்ணம் ஏற்படுவதில் தவறு ஏதும் இல்லையே.

இதேபோல், தம்பதிகள் இருவரும் பாலீர்ப்பற்றவர்களாக இருக்கும்போது அவர்களுக்குள் பெரிய அளவில் பிரச்னை ஏற்படுவதில்லை. ஒருவருவரை ஒருவர் புரிந்துகொண்டு இருப்பதால் அவர்களுக்குள் இந்த நிலை எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

மேலும், தம்பதிகளில் ஒருவர் பாலீர்ப்பற்றவராக இருக்கும்போது, தனது துணையின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவருக்கு `செக்ஸ் டாய்ஸ்` பரிசளிப்பது போன்றவற்றைச் செய்யும்போது அது அவர்களுக்கு இடையிலான பிணைப்பை அதிகரிக்கும்.

கணவன் - மனைவி இடையிலான உறவில் நெருக்கம்(intimacy) மிக முக்கியம். ஆனால், இந்த நெருக்கம் என்பது பாலுறவு மட்டுமே அல்ல. ஒருவர் கையை ஒருவர் பிடித்து நீண்ட தூரம் நடப்பது, கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்றவையும் நெருக்கம்தான், ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்வது, உணர்ச்சிப் பிணைப்பு ஆகியவை பிரதானமாக இருக்கும்பட்சத்தில் உறவில் எவ்வித பிரச்னையும் ஏற்படப் போவதில்லை.” என்று அவர் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: