You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டாடாவும் தமிழ்நாடு அரசும் சேர்ந்து 'டைட்டன்' நிறுவனத்தை தொடங்கிய கதை - அந்த பெயர் வந்தது எப்படி?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
டாடா நிறுவனமும் தமிழ்நாடு அரசின் டிட்கோவும் இணைந்து துவங்கிய ஒரு கை கடிகார நிறுவனம், இன்று நகை, புடவைகள், கண் கண்ணாடிகள் ஆகியவற்றையும் விற்பனை செய்யும் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது. இந்த வெற்றிக் கதை துவங்கியது எப்படி தெரியுமா?
இந்தியாவில் கை கடிகாரங்களையும் டிசைனர் நகைகளையும் விரும்பக் கூடியவர்களில், டைட்டன், தனிஷ்க் என்ற பெயரைக் கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது.
அந்த அளவுக்கு பிரபலமான பிராண்ட்கள் இவை. டாடா நிறுவனமும் தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டுக் கழகமும் (டிட்கோ) இணைந்து ஆரம்பித்த ஒரு நிறுவனம் இன்று மிகப் பெரிய ஆலமரமாக, உலகளாவிய பிராண்டாக உருவெடுத்திருக்கிறது.
டைட்டனும் தனிஷ்கும் உருவான கதைகள் மிக சுவாரஸ்யமானவை. பத்திரிகையாளர் வினய் காமத் எழுதிய Titan: Inside India's Most Successful Consumer Brand என்ற புத்தகமும் டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சி.கே. வெங்கடராமன் எழுதிய The Tanishq story: Inside India’s no.1 Jewelry Brand இந்தக் கதைகளை விரிவாகவே சொல்கின்றன.
70களில் 'லைசன்ஸ் ராஜ்' உச்சத்தில் இருந்த நேரம். இந்தியாவில் அந்த காலகட்டத்தில் மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் மட்டுமே கடிகாரங்களைத் தயாரிக்க உரிமம் பெற்றிருந்தது. சிறிய நிறுவனங்கள் உள்ளூர் அளவில் தயாரித்துக்கொள்ளலாம். பெரிய நிறுவனங்கள் எதற்கும் கடிகாரம் தயாரிக்க அனுமதி கிடையாது.
தமிழ் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஐராவதம் மகாதேவனுக்கு சிந்துச் சமவெளி நாகரீகம் மீது தீராத ஆர்வம் உண்டு. ஒரு கட்டத்தில் சிந்து வெளிக் குறியீடுகள் முழுமையையும் தொகுத்தார் 1977வாக்கில் தில்லியில் பணியாற்றிவந்த அவர், அந்தத் தொகுப்பை அச்சிடுவதற்கு டாடா பிரஸ்ஸை அணுகினார். அப்போது டாடா பிரஸ்ஸின் உயரதிகாரியாக இருந்தவர் அனில் மான்சந்தா. இருவருக்கும் இடையில் ஒரு நல்ல அறிமுகம் ஏற்பட்டது.
பிறகு, ஒரு நாள் தில்லி உத்யோக் பவனில் இருந்த மகாதேவனின் அலுவலகத்திற்குச் சென்றார் அனில் மான்சாந்தா. அப்போது, தனியார் துறை பங்களிப்போடு புதிதாக என்னென்ன உற்பத்தியில் ஈடுபடலாம் எனப் பேச்சு வந்தது.
பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் சாத்தியங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். அந்த விவாதத்திற்குப் பிறகு, டாடா பிரஸ்ஸின் மற்றொரு உயரதிகாரியான ஜெர்ஜெஸ் தேசாயிடம் பேசினார் அனில்.
முடிவில் கைக் கடிகாரங்களைத் தயாரிப்பது சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு இருவரும் வந்தார்கள். அந்தத் தருணம்தான், இந்தியாவின் ஒரு மகத்தான நிறுவனத்தின் துவக்கப் புள்ளியாக அமைந்தது.
இந்த நேரத்தில்தான் டாடா நிறுவனம் கைக் கடிகாரத் தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்தது. ஆனால், மத்திய அரசின் உரிமங்கள் கிடைக்கவில்லை. ஆகவே, டாடாவின் கைக்கடிகாரம் தயாரிக்கும் முயற்சியில் இரண்டு சவால்கள் இருந்தன.
ஒன்று அரசின் அனுமதியைப் பெறுவது. மற்றொன்று, அதற்கான தொழில்நுட்பத்தைப் பெறுவது. அந்தத் தருணத்தில் இதற்கான தொழில்நுட்பத்தைத் தரும் வகையில் உலகில் ஐந்து பெரிய நிறுவனங்களே இருந்தன. 1. சிட்டிஸன், 2. சீகோ, 3. டைமெக்ஸ், 4.கேசியோ, 5. ASUAG என்ற SWATCH.
இதில் சிட்டிசென் நிறுவனம், மத்திய அரசின் எச்எம்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. சீகோ, ஆல்வின் நிறுவனத்துடன் பேசிக்கொண்டிருந்தது. டைமெக்ஸ் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்தது.
அப்போதுதான் கடிகாரம் தயாரிக்க ஆரம்பித்திருந்த கேசியோ, டிஜிட்டல் கடிகாரங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தத் துவங்கியிருந்தது. SWATCH தங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை யாரிடமும் பகிர தயாராக இல்லை.
அதே தருணத்தில் தமிழ்நாடு புதிய தொழிற்சாலைகளை மாநிலத்திற்குக் கொண்டுவர தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மூலம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
அந்தத் தருணத்தில் மத்திய அரசுப் பணியில் இருந்த ஐராவதம் மகாதேவன், மீண்டும் தமிழ்நாட்டிற்கே திரும்பி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராக பொறுப்பேற்றிருந்தார்.
அப்போது, கை கடிகாரங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை அமைக்க, பிரான்சின் France Ebauches SA என்ற நிறுவனத்துடன் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்காக டிட்கோ பேசிக் கொண்டிருந்தது.
டாடாவுக்கும் கை கடிகார தயாரிப்பில் ஆர்வம் இருப்பதைக் கவனித்த மகாதேவன், ஒரு நாள் ஜெர்ஜெஸை அழைத்தார். "நாங்கள் ஃப்ரான்சின் கடிகார நிறுவனமான France Ebauches உடன் பேசிக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒரு கூட்டாளி தேவை. டாடாவுக்கு இதில் ஆர்வம் இருக்கிறதா?" என்றார்.
இப்படி ஒரு தருணத்திற்காகக் காத்திருந்த டாடா அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. முதலில் France Ebauchesவும் டாடாவும் ஒப்பந்தம் செய்துகொண்டன.
பிறகு, மத்திய அரசிடம் கைக்கடிகார தயாரிப்பு உரிமத்திற்காக டிட்கோ விண்ணப்பித்தது. இதில் கூட்டாளியாக டாடா நிறுவனம் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டது. ஆனால், டிட்கோவுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படும் என்றும் டாடாவின் பங்களிப்பு இதில் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டது மத்திய அரசு.
இதையடுத்து, டாடாவின் பெயரையே குறிப்பிடாமல் Quester Investments என்ற பெயரில் மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டது. ஒருவழியாக உரிமங்கள் வழங்கப்பட்டன.
பிறகு, அந்தக் கடிகாரத்திற்கான பிராண்ட் பெயரை யோசித்தபோது, Tata Industries என்பதிலிருந்து T, I என்ற எழுத்துகளையும் Tamilnadu என்பதிலிருந்து T,A,N என்ற எழுத்துகளையும் இணைத்து, TITAN என பெயர் சூட்ட முடிவெடுக்கப்பட்டது.
1986-ஆம் ஆண்டு ஓசூரில் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1987-ஆம் ஆண்டு பிப்ரவரியில் உற்பத்தி துவங்கியது. அடுத்த மாதமே கைகடிகாரங்கள் விற்பனைக்கு வந்தன. ஏப்ரல் 1989க்குள் பத்து லட்சம் கைக்கடிகாரங்கள் விற்றுத் தீர்ந்தன.
ஜே.ஆர்.டி. டாடாவுக்குப் பிறகு, ரத்தன் டாடா 90களின் துவக்கத்தில் டாடா குழுமத்தின் தலைவரானார். 1992 ஆம் ஆண்டு முதல் முறையாக ஓசூரில் உள்ள டைட்டன் நிறுவனத்திற்கு விஜயம் செய்தார் அவர்.
துவக்கத்திலிருந்தே, இந்திய கடிகாரச் சந்தையில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்திய டைட்டன், வெகு சீக்கிரத்திலேயே கடிகாரச் சந்தையில் முதலிடத்தைப் பிடித்தது.
டைட்டன் ஒரு வெற்றிகரமான பிராண்டாக உருவாகிக் கொண்டிருந்தபோதே, தனிஷ்க்கிற்கான விதையும் விதைக்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த ஒரு நகை கண்காட்சிக்குச் சென்றிருந்தார் ஜெர்ஜெஸ் தேசாய். ஐரோப்பியச் சந்தையில், உயர் ரக கடிகாரங்களையும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நகைகளையும் ஒன்றாக விற்றால் எப்படியிருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. தனிஷ்க்கிற்கான துவக்கப்புள்ளி இதுதான்.
விரைவிலேயே காரியங்கள் சூடுபிடித்தன. டைட்டனின் ஆரம்பத்திலிருந்தே ஜெர்ஜெஸ் தேசாயுடன் இருந்த அனில் மான்சந்தா இதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
ஆனால், அவருக்கு நகை விற்பனையெல்லாம் சரிப்பட்டுவருமா என்ற எண்ணம் ஆரம்பத்திலிருந்தே இருந்தது. விரைவிலேயே இந்தக் கருத்து வேறுபாட்டால், டைட்டன் நிறுவனத்தில் இருந்தே விலகிக்கொண்டார் அவர்.
ஆனால், ஜெர்ஜெஸ் தேசாய் இந்தத் திட்டத்தில் உறுதியாக இருந்தார். முடிவில் 65 கோடி ரூபாய் முதலீட்டில் ஓசூரிலேயே நகைக்கென தனியாக ஒரு பிளான்ட் துவங்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் நகைகளை ஏற்றுமதி செய்வதுதான் திட்டமாக இருந்தது. சிறிய அளவில் இந்தியாவிலும் விற்கலாம் என முடிவுசெய்யப்பட்டிருந்தது.
1994 ஆம் ஆண்டு உற்பத்தி துவங்கியது. ஆனால், ஐரோப்பிய, அமெரிக்கச் சந்தைகளுக்கு ஏற்றுமதி பெரிய அளவில் சாத்தியமில்லை என்பது ஜெர்ஜெஸ் தேசாய்க்கு புரிந்துபோனது. பிறகு உள்ளூர் சந்தையின் மீது பார்வையைத் திருப்பினார் அவர்.
ஆனால், உள்ளூர்ச் சந்தையில் ஏற்கனவே கடும் போட்டி இருந்ததோடு, ஒவ்வொரு பிராந்தியமும் ஒவ்வொரு விதத்தில் நகை அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தது.
இந்த பிராண்டிற்கு ஆரம்பத்தில் Celeste என்றுதான் பெயர் சூட்டப்பட்டிருந்தது. 1996க்குள் இந்தப் பெயர் மாற்றப்பட்டு, தனிஷ்க் என்ற பெயர் சூட்டப்பட்டது.
இந்த நகைகளுக்கான ஷோரூம்கள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட வேண்டும் என்பதில் ஜெர்ஜெஸ் மிகக் கவனமாக இருந்தார்.
அதன்படி வடிவமைக்கப்பட்ட முதல் ஷோரூம் சென்னை கதீட்ரல் சாலையில் 1996 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆரம்பத்தில், தனிஷ்க் பிராண்டில் 18 கேரட் தங்கத்தில்தான் நகைகள் விற்கப்பட்டன.
ஆனால், இந்திய மக்களுக்கு 22 கேரட் நகைகள் மீதுதான் ஆர்வம் என்பது விரைவிலேயே புரிந்துவிட்டது. பிறகு, 22 கேரட் நகைகளை தயாரிக்க ஆரம்பித்தது தனிஷ்க் நிறுவனம்.
இருந்தாலும் விற்பனையில் பெரிய முன்னேற்றமில்லை. தனிஷ்க் ஷோரூம்கள் படாடோபமாக இருந்ததால், அங்கே விலை அதிகம் இருக்கும் எனக் கருதிய மக்கள், உள்ளே நுழையவே பயந்தனர்.
அந்த காலகட்டத்தில் பல நகைக்கடைகளில் மாற்றுக் குறைவான நகைகள் விற்பது வழக்கமாகவே இருந்தது. அதாவது 22 கேரட் தங்க நகை எனக் கூறி, 16 கேரட் - 17 கேரட் நகைகள் விற்கப்பட்டன.
இந்த பின்னணியை பயன்படுத்த நினைத்தது தனிஷ்க். அதன்படி, தங்க நகைகளின் தூய்மையைச் சொல்லும் கேரட் மீட்டர் வைக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள் தங்கள் நகைகளைக் கொண்டுவந்து, அதன் தூய்மையை பரிசோதிக்கலாம் எனக் கூறப்பட்டது. மேலும், ஒரு வாடிக்கையாளர் 17 கேரட் தங்க நகையை கொடுத்து, அதற்கு இணையாக 22 கேரட் நகையை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால், தனிஷ்க்கின் லாபம் குறைந்தாலும், வாடிக்கையாளர் எண்ணிக்கையும் விற்பனையும் அதிகரித்தது.
இதற்குப் பிறகு பல ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதும் தொடர்ந்து முன்னேறிச் சென்றது தனிஷ்க். 2022ஆம் ஆண்டில் டைட்டன் நகை பிரிவின் விற்பனை 34 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கிறது.
இப்போது, கைக் கடிகாரங்கள், தங்க நகைகள், வைர நகைகள், கண் கண்ணாடிகள், ஆடைகள், கைப் பைகள், வாசனை திரவியங்கள் என இந்தியாவின் மிகப் பெரிய பிராண்டாகியிருக்கிறது டைட்டன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)