"போப் உதவியுடன் அமைதி ஒப்பந்தம்" - ரஷ்யா-யுக்ரேன் குறித்து டிரம்ப் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அந்தோணி ஸுர்ச்சர்
- பதவி, வட அமெரிக்க செய்தியாளர்
கடந்த ஆண்டு, டொனால்ட் டிரம்ப் யுக்ரேன் போரை "24 மணி நேரத்தில்" முடிவுக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்தார்.
கடந்த வாரம், தானும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் நேரில் பேசி தீர்வு காணும் வரை இதற்கு முடிவு கிடைக்காது என்று டிரம்ப் கூறியுள்ளார்.
ஆனால் திங்கட்கிழமையன்று, இந்த நிலைப்பாட்டில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டது.
புதினுடன் நடந்த இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, ரஷ்யாவும் யுக்ரேனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் மூலம் மட்டுமே அமைதி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை தீர்மானிக்கக் கூடும் என்றும், ஒருவேளை போப்பின் உதவியுடன் அது நடக்கலாம் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இருப்பினும், அமைதி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்னும் கைவிடவில்லை.
போரில் ஈடுபட்டுள்ள தரப்பினர், போர் நிறுத்தம் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை "உடனடியாகத் தொடங்குவார்கள்" என்று சமூக ஊடகங்களில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
ஆனால் டிரம்பின் நம்பிக்கை ரஷ்யாவின் நிலைப்பாட்டுக்கு சற்று முரணாக உள்ளது.
"எதிர்காலத்தில் நடக்க வாய்ப்புள்ள அமைதி ஒப்பந்தம் தொடர்பான குறிப்பாணையை" உருவாக்க யுக்ரேனுடன் இணைந்து பணியாற்ற தனது நாடு தயாராக உள்ளதாக மட்டுமே புதின் கூறியுள்ளார்.
ஒப்பந்தங்கள் அல்லது "எதிர்கால அமைதிக்கான சாத்தியம்" பற்றி மட்டுமே பேசுவது, நீண்ட கால ஒப்பந்தங்களை விரைவாக உருவாக்குவதற்கான வலுவான அடித்தளமாகத் தெரியவில்லை.

இதற்கிடையில் எந்தவொரு தீர்மானமும், போரின் "மூல காரணங்களை" நிவர்த்தி செய்ய வேண்டும் என்று புதின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
யுக்ரேன் ஐரோப்பாவுடன் நெருக்கமாக இருக்க விரும்புவது அதற்கான காரணங்களில் ஒன்று என ரஷ்யா முன்பு கூறியிருந்தது.
சமீபத்தில் நடந்த தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, ரஷ்யாவும் யுக்ரேனும் போர்நிறுத்தம் குறித்து "உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும்" என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் பதிவிட்டார். மேலும், "அதற்கான நிபந்தனைகள் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார் .
ஆனால் யுக்ரேன் போர் குறித்து சமீபத்தில் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து, அமெரிக்கா இறுதியில் பேச்சுவார்த்தையைக் கைவிடும் என்பதற்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.
திங்களன்று, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இருந்து தான் விலகப் போவதில்லை என்று டிரம்ப் கூறினார். ஆனால், தனது மனதில் அதற்கு ஒரு "எல்லை" இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"கடும் நிலைப்பாடு உடையவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படும் என நினைக்கிறேன்," என்று கூறிய டிரம்ப், "அது நடக்கவில்லை என்றால், நான் பின்வாங்கி விடுவேன்; அவர்கள் தான் தொடர வேண்டியிருக்கும்." என்றார்.
ஆனால், அத்தகைய நடவடிக்கை சில கேள்விகளையும், அபாயங்களையும் கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Bloomberg via Getty Images
துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகிய இருவரும் அச்சுறுத்தியது போல், அமெரிக்கா போர் தொடர்பான விஷயங்களில் இருந்து விலகி கொண்டால், அது யுக்ரேனுக்கு வழங்கப்படும் அனைத்து ராணுவ மற்றும் உளவுத்துறை ஆதரவையும் முடிவுக்குக் கொண்டுவரும் என்று அர்த்தமாகுமா?
அப்படியானால், அமெரிக்க ஆதரவை இழந்த யுக்ரேனுடன் ஒப்பிடும் போது அதிக வளங்கள் கொண்ட ரஷ்யா, இந்த சூழலை வரவேற்கக்கூடிய ஒன்றாகக் காணும்.
மறுபுறம் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை கவலையடையச் செய்வதற்கும் அச்சூழல் போதுமானது.
"அமெரிக்கா, பேச்சுவார்த்தைகளிலும் அமைதிக்கான முயற்சிகளிலும் பங்கேற்பதில் இருந்து விலகிக் கொள்ளாமல் இருப்பது நம் அனைவருக்கும் முக்கியமான விஷயம்," என்று டிரம்புக்கும் புடினுக்கும் இடையேயான உரையாடலுக்குப் பிறகு திங்களன்று ஸெலென்ஸ்கி கூறினார்.
மூன்று வருடங்களாக நீடிக்கும் மோதலைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் இழுபறியாகி வரும் நிலையில், புதின் மற்றும் செலென்ஸ்கி ஆகிய இருவரிடமும் டிரம்ப் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் நடந்த ஒரு சந்திப்பு சூடான விவாதமாக மாறியது. அந்தச் சந்திப்பில், யுக்ரேனியத் தலைவர் ஸெலன்ஸ்கி "மூன்றாம் உலகப் போருடன் சூதாட்டம்" செய்வதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில், அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முடங்கியதை அடுத்து, புதின் மீது "மிகவும் கோபமாக" இருப்பதாகவும், "எரிச்சலடைந்ததாகவும்" டிரம்ப் கூறினார்.
திங்கட்கிழமை நடந்த பேச்சுவார்த்தைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால், யுக்ரேனும் ரஷ்யாவும் ஏதோ ஒரு வகையான பேச்சுவார்த்தையைத் தொடரத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
கிட்டத்தட்ட மூன்று வருட போருக்குப் பிறகு எந்த வடிவத்தில் இருந்தாலும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயராக இருப்பதே ஒரு வகையான முன்னேற்றம் தான்.
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை இஸ்தான்புல்லுக்குச் சென்று யுக்ரேனியர்களைச் சந்தித்த கீழ்மட்டக் குழுவை விட, ரஷ்யா அதிக அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க வருமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
ரஷ்யா மீதான தடைகள் குறைக்கப்படும் என்ற வாக்குறுதியையும், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் பொருளாதார முதலீடுகளையும் பயன்படுத்தி புடினை சமாதான உடன்படிக்கைக்கு இழுத்துச் செல்ல டிரம்ப் முயற்சி செய்கிறார்.
தொலைபேசி உரையாடலுக்குப் பின்பு வெளிப்படுத்திய கருத்துக்களிலும், டிரம்ப் மீண்டும் அவற்றைக் குறிப்பிட்டார்.
அதே சமயத்தில், ரஷ்ய வங்கி மற்றும் எரிசக்தி ஏற்றுமதிகளுக்கு எதிரான புதிய தடைகள் போன்ற எதிர்மறையான விளைவுகள் எதுவும் அந்த உரையாடலில் விவாதிக்கப்படவில்லை.
கடந்த மாதம், புதின் "என்னை ஏமாற்றுவதை" பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று டிரம்ப் எச்சரித்திருந்தார்.
மேலும் ரஷ்யா பொதுமக்கள் பகுதிகளை குறிவைக்கக்கூடாது என்றும் கூறியிருந்தார்.
ஆனால் , இதுவரை நடைபெற்ற போரில் மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதல்களை, யுக்ரேனின் பல நகரங்களில் ரஷ்யா நேற்று மேற்கொண்டது.
மேலும் இரு உலகத் தலைவர்களுக்கிடையே திங்கட்கிழமை நடந்த பேச்சுவார்த்தை, போர்நிறுத்தம் அல்லது சமாதான ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாத தூரத்தில் தான் உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












